கொரோனா தடுப்பூசி இராஜ தந்திர அரசியல் பற்றி தமிழ் தலைமைகள் விழிப்படைவார்களா? -ஐ.வி.மகாசேனன்-

கொரோனா வைரஸ் வூஹானிலிருந்து உலகிற்கு வியாபிக்கப்பட்ட நாள் முதலாய் சர்வதேச அரசியலில் கொரோனா வைரஸ் தவிர்க்கப்பட முடியாத பேசுபொருளாக மாறிவிட்டது. உலக ஒழுங்கின் மாற்றங்களினையே கொரோனா வைரஸ் நிர்ணயிப்பதாக கொரோனா வைரஸின் அரசியல் தொடர்பிலே சர்வதேச அரசியல் ஆழமான ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா அரசியல் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை மையப்படுத்தியே சுழலுகிறது. குறிப்பாக வல்லாதிக்க நாடுகள் தடுப்பூசிகளை பகீர்வதன் மூலம் நாடுகளை அணைத்து கொள்ளும் இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. இலங்கையிலும் சீனா தன் நட்பை தொடரவே சினோபார்ம் தடுப்பூசியை அனுப்பியுள்ளது. அந்த வகையில் இலங்கையில் இடம்பெறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி அரசியலையும் அதனால் ஏற்படக்கூடிய அபத்தங்களையும் தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வருகைக்கு பின்னரான உலக ஒழுங்கில் சீனா பிரதான அரசியல் சக்தியாக எழுச்சி பெற்றுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டணிகள் யாவற்றிலும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உரையாடல்களே முதன்மை பெற்று காணப்படுகிறது. பட்டி மற்றும் சாலை முன்முயற்சியில் தற்போது கொரோனா தடுப்பூசியை கொண்டே சீனா அரசியல் நகர்வை முன்னெடுக்கிறது. அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளும் சீனாவின் கொரோனா தடுப்பூசி அரசியலுக்கு எதிராக எதிர்த்தடுப்பூசி அரசியலுக்கான போர்க்களத்தை தயார் செய்கிறார்கள்.  குறிப்பாக மார்ச் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற குவாட் நாடுகளின் மாநாட்டில், சீனாவின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் குவாட் அமைப்பு புதியதொரு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஒருங்கிணைந்த நிதி முதலீட்டின் மூலம் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்த குவாட் கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன. குவாட் கூட்டமைப்பு என்பதே, சீனாவை சாராமல் பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவற்றில் மேம்படுவதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பாகும். இதில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய் நாடுகள் காணப்படுகின்றன.

எனிலும், உலக நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், தேவைக்கு ஏற்ப தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால் வளரும் நாடுகளும் பின்தங்கிய நாடுகளும் தடுப்பூசி பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. இதன் அங்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிலையைப் பயன்படுத்தி, சீனா வளரும் நாடுகள், குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளை வளைத்துப்போட முயல்கிறது. 

ஏற்கனவே தென்கிழக்காசிய நாடுகளில் சீனாவின் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வியாபித்துள்ளது போல் தென்னாசிய நாடுகள் மீதும் சீனாவின் பார்வை பரவலடைந்து வருகிறது. தென்னாசிய நாடாகிய பாகிஸ்தான் ஐந்து லட்சம் சீன கொரோனா தடுப்பு மருந்துகளை பெற்று பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது. அவ்வாறே இலங்கையிலும் ஆறு லட்சம் சீன சினோபார்ம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் பங்களாதேஷில், சீன தூதர் 100,000 டோஸ் சீன கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு வழங்க முன்வந்தார் என்று பங்களாதேஷ் பிரதமரின் பத்திரிகை செயலாளர் இஹ்ஸானுல் கரீம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி அரசியல் யுத்தத்தில் சீனா ஆசிய நாடுகளில் பரவலாக வியாபித்துள்ள போதிலும் அதன் வலு தொடர்பில் பரவலான விமர்சனங்களும் வியாபித்தே உள்ளது. பிரதானமாக சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் பலன் அளிப்பதில்லை என்ற விமர்சனம் காணப்படுகிறது. இவ்விமர்சனம் அமெரிக்க தலைமையிலான சீன எதிர்நாடுகளின் போட்டியால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டென உதாசீனம் செய்வோமாயினும் கூட அங்கீகாரம் தொடர்பான விமர்சனம் விலகி செல்ல முடியாததாகவே காணப்படுகிறது. சீனா தனது கொரோனா தடுப்பூசிகளான சினோவாக் மற்றும் சினோபார்ம்  பற்றிய தரவுகளை உலக சுகாதார அமைப்புக்கு வழங்க மறுத்து வருவதனால், உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் இல்லாமலேயே சீனா தனது கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரமற்ற பயன்பாடு என்பது சீன கொரோனா தடுப்பூசி தொடர்பான  பூதாகரமான சர்ச்சையாக உள்ளது. இந்நிலையிலேயே இலங்கையில் எதிர்க்கட்சிகளும் சுகாதார வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும் சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி மருந்தின் இறக்குமதிக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது (09.03.2021) நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.

எனிலும் சீனா நட்பு இலங்கை அரசாங்கம் சீனாவின் சினோபார்ம்-ஐ இறக்குமதி செய்வதில் மும்மரமாக உள்ளது. சீன சினோபார்ம் தடுப்பூசி இலங்கை தேசிய ஒழுங்குமுறை ஆணையத்தால் (National Medicines Regulatory Authority -என்.எம்.ஆர்.ஏ) உடனடியாக அங்கீகரிக்கப்படாததால் என்.எம்.ஆர்.ஏ-இன் ஏழு உறுப்பினர்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட உறுப்பினர்களில், கோவிட்-19க்கான உலக சுகாதார அமைப்பின் முழு ஆசிய பிராந்திய பிரதிநிதியான டாக்டர் பாலிதா அபாயகூன், அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கத்தின் மக்கள் நலன் சார்ந்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்துகள், இலங்கையின் பெருந்தெருக்ககள் அமைத்தல் மற்றும் கட்டிட நிர்மானப் பணிகளுக்காக இலங்கையில் தங்கியுள்ள சீனர்களுக்கே முதலில் பயன்படுத்தப்பட போவதாகவும், தடுப்பூசியின் பாதுகாப்பை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்யும் வரை இலங்கையர்களுக்கு வழங்கப்படாது என்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். ஒருபக்கம் சுகாதார உத்தியோகத்தர்களை அச்சுறுத்தி கொண்டு மறுபக்கம் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்பே இலங்கையர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்பதையும் தொடர்புபடுத்தி சிந்திக்கும் திறனற்றவர்களாய் இலங்கை மக்களை இலங்கை ஆட்சியாளர்கள் கருதி செயற்படுவது மடமைத்தனமாகும்.

சினோபார்ம் தடுப்பூசி தொடர்பான தேடலையும் புரிதலையும் தமிழ் மக்கள் அவசியம் பெற்றிருத்தல் வேண்டும். இலங்கையில் கொரோனா ஆபத்து அலை என்பது மாவட்டங்களுக்கு மாவட்டம் மாறிவரும் நிலையை காணக்கூடியதாக உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக அடையாளம் காணப்படும் மாவட்டமாக யாழ்ப்பாணமே காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி பயன்பாடும் அதிகளவில் யாழ்ப்பாணத்துக்கே ஈடுபடுத்த கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இலங்கை ஒரே நாடு என மேடை தோறும் கூவினாலும் ஆட்சியாளர்கள், அரச உயர் அதிகாரிகள் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களை வேற்று மனிதர்களாகவே தொடர்ச்சியாக பார்ப்பதனையே நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் உலக சுகாதாரா அங்கீகாமற்ற சீன தடுப்பூசிகளை பரீட்சித்து பார்க்கும் எலிகளாக தமிழர்களை இலங்கை அரசாங்கம் பார்க்கவும் அதீத வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. 

அபத்தமொன்று வந்ததன் பின்பு குரலெடுப்பதையும் பார்க்கிலும், தன் சமூகத்திற்கு வரக்கூடிய அபத்தத்தை முற்கூட்டியே எதிர்வுகூறி அபத்தை தன் சமூகத்துக்கு வரவிடாது காப்பாற்றுபவனே ஆளுமையான தலைவனாவான். தமிழ்சமூகம் அவ்வாறான தலைமைகளை தொலைத்து நீண்ட நாட்களாகிறது. இன்றைய தலைமைகள் தங்கள் சுகபோக வாழ்க்கைக்கான அபத்தங்களை எதிர்வுகூறி அதனை பாதுகாக்கவே விழிப்புடன் செயற்படுகிறார்கள். கொரோனா தடுப்பூசி அரசியல் அதுசார் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரமற்ற சினோபார்ம் தடுப்பூசி இறக்குமதி சிக்கலை இலங்கைக்கான பிரச்சினை என கவணிக்காது செயற்பாடு, தமிழரசியல் தலைமைகள் நிலைமைகளை பகுப்பாய்ந்து எதிர்க்கட்சியுடன் இணைந்து சினோபார்ம் பயன்பாட்டிற்கான எதிர்ப்பை பலத்த குரலில் காட்டுவது அவசியமாகும்.

கொரோனா தடுப்பூசி அரசியல் நிகழ்வுகள் அரசுகள் பற்றிய சித்தாந்தங்களையே கேள்விக்குட்படுத்துவதாக காணப்படுகிறது. நவீன அரசுகளில் அரசு பற்றிய ஜனநாயக சமூக ஒப்பந்த கோட்பாடுகள் யாவும் சிதைந்து போய்விட்டது. மக்கள் நலனுக்காக அரசு என்ற காலம் மறைந்து இன்று அரசின் நலனுக்காகவே மக்கள் என்ற பாஷிச சித்தாந்தங்களே காணப்படுகிறது. ஜனநாயக போர்வையில் நவீன அரசுகள் பாஷிச செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றது. அரசுகளின் வல்லாதிக்க போட்டிக்காக மக்களை பகடைகாயாக கொண்டு இன்று இடம்பெறும் கொரோனா தடுப்பூசி அரசியல் நவீன அரசுகளின் பாஷிச செயற்பாடுகளையே தோலுரித்து காட்டுகிறது. இயல்பாகவே தமிழர்கள் விடயத்தில் பாஷிச தன்மையை முதன்மைப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் கொரோனோ தடுப்பூசி அபத்தத்திலிருந்து தமிழர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை தமிழரசியல் தலைமைகள் விரைந்து செயற்படுத்த வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-