மியான்மர் முன்னுதாரணமாகிறதா இலங்கைக்கு? -ஐ.வி.மகாசேனன்-
சர்வதேச அரசியலில் கொரோனா கொடூர தாண்டவமாடுகின்றது. சதிக்கோட்பாடுகளுக்கு அப்பால் கொரோனா பேரழிவை இயற்கையின் கொடூரம் என்று மனம் நோகும் அதேவேளை செயற்கையாய் கோர தாண்டவமொன்று மியான்மரில் ராட்சகர்களால் நிகழ்த்தப்படுகின்றது. அமைதியையும் சாந்தியையும் நேசித்த சித்தார்த்தனை நேசிக்கும் தேசங்களின் ஆட்சியார்களுக்கு இரத்த வாடை மீது நேசமிருப்பது கலியுகத்தின் புதிராகவே காணப்படுகின்றது. மியான்மரின் இராணுவ ஆட்சியில் தினம் தினம் உயிர்கள் கொத்தாக மடிக்கப்படுகின்றது. சர்வதேசமும் கண்கெட்டா பிறகு சூரிய நமஸ்காரத்தை செய்ய காத்துள்ளனர். இக்காட்சிகள் யாவும் ஈழத்தமிழர்களிடம் 2009ஆம் ஆண்டு நினைவுகளையே மீட்டுகிறது. இந்நிலையிலேயே இக்கட்டுரை மியான்மர் கொடூர அழிவின் அரசியல் போக்கை இலங்கைக்கான அனுபவத்திற்கான தேடலாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மியான்மரின் அரசியல் களநிலை பற்றிய புரிதல் அவசியமாகிறது. கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி மியான்மர் இராணுவம், அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, அடுத்த ஓராண்டு காலத்துக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. அப்போதிலிருந்து ஜனநாயகத்துக்கு ஆதரவாக, மியான்மர் முழுக்க மக்கள் போராட்டம் நடந்து வருகின்றன. ஆட்சி அதிகாரத்தில் தன் பிடியை அதிகரித்துக் கொள்ள, மியான்மர் இராணுவம் அதிகப்படியான வன்முறையைக் கையில் எடுத்திருக்கிறது. மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு குழந்தைகள் பெரியவர்கள் என்ற பாரபட்சமின்றி 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஆயினும் மியான்மார் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் என அரசியல் கைதிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பு எனும் கண்காணிப்புக் குழு கூறியுள்ளது. 'இது இனப்படுகொலை போன்றது. அவர்கள் ஒவ்வொரு நிழலையும் சுடுகிறார்கள்' என மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் யே ஹடுட் கூறியதாக, மியான்மர் நவ் செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
700பேர் தானே இறந்துள்ளார்கள் என உதாசீனப்படுத்தி செல்வோமாயின், விரைவில் அவ்எண்ணிக்கை 70, 000ஜயும் தொடலாம். இராணுவத்தினரின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் அவ்வாறானதொரு செய்தியையே வழங்குகின்றது. ஈழத்தவர்களுக்கு இது புதிதுமில்லை. மியான்மாரின் கொலைகளுக்கு பின்னால் சர்வதேச அரசுகளின் அரசியல் கனதியான வகிபாகத்தை வழங்குகின்றது. அதனாலேயே சர்வதேச நிறுவனங்களும் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரத்துக்காக காத்துள்ளனர்.
சர்வதேச அரசுகள் தங்கள் நலன்களை முன்னிலைப்படுத்தியே மியான்மர் விடயத்தை அவதானிக்கின்றன. மியான்மார் அரசியலில் இராணுவத்தின் ஆட்சியுரிமையை சீனாவும் ரஸ்சியாவும் அங்கீகரித்துள்ளன. இதனால் மியான்மரின் இராணுவ ஆட்சியை தகர்ப்பதென்பது சீனாவைக் கடந்து ரஸ்சியாவையும் எதிர் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் அத்தகைய ஆட்சியை அகற்றுவதென்பது கடினமான இலக்காகவே தெரிகிறது. மியான்மரின் இராணுவத்திற்கு புதிய இராணுவ உபகரணங்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை ரஸ்சியா செய்துள்ளது. மியான்மருக்கு புதிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் தனது வர்த்தக நலனை பெருக்க ரஸ்சியா விரும்புகிறது. இதனையும் மனதில் வைத்தே ரஸ்சியா தற்போது மியான்மரின் இராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது. மியான்மர் இராணுவம் பயன்படுத்தும் பெரும்பாலான டாங்கிகள் ரஸ்சியாவின் ஏற்றுமதியாகவே காணப்படுகிறது. இந்த இராணுவ புரட்சியை ரஸ்சியா வர்த்தக நலனாக பார்க்கும் போது இன்னொரு பக்கம் சீனாவோ இதை தெற்காசிய பிராந்திய அரசியலுக்கு மிக அவசியமான விடயமான பார்க்கிறது. மியான்மர் இராணுவ புரட்சி மூலம் அந்த நாட்டில் ஆளுமை செலுத்த சீனா நினைக்கிறது. இதனால் அமெரிக்க அதிபர் பிடன் வெளிப்படையாக மியான்மர் இராணுவ புரட்சியை எதிர்த்து பேசி உள்ளார். மியான்மர் இராணுவ ஆட்சியை முறியடிப்பதனை பிடன் நிர்வாகம் முக்கியமான விடயமாக பார்க்கிறது. அமெரிக்கா ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து மியான்மார் இராணுவத்தின் நகர்வினை கண்டித்ததுடன் மீண்டும் பொருளாதாரத் தடையை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இங்கு அமெரிக்காவும் மியான்மார் மீது தனது ஆதிக்கம் நிலைப்பட வேண்டும் என்ற நலனுடனையே செயற்பட்டு வருகிறது.
மியான்மர் மக்களின் துயரை எவ்அரசுகளும் முதன்மைப்படுத்துவதாக இல்லை. மியான்மரை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டு வரும் சீனா எதிர் அமெரிக்கா எனும் போராட்டம் தவிர்க்க முடியாத நெருக்கடியை மியன்மர் மக்களுக்கு ஏற்படுத்துகிறது. அந்த நாட்டு மக்களது இயல்பான போராட்டத்தையும் இது பாதிப்பதாக அமைந்துவருகிறது. இந்நிலையில் சர்வதேச நிறுவனங்களும் மியான்மர் அழிவுகளை பார்வையாளர்களாகவே பார்க்கும் நிலைப்பாடே உருவாகியுள்ளது.
மியான்மரின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துரைத்துள்ள சர்வதேச மனித உரிமைகளுக்கான ஐ.நா தூதர் மைக்கல் பேச்செலட், 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக கவலை தெரிவித்துள்ளார். அதாவது 'சிரியாவில் 2011-ம் ஆண்டு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது, சில தனிநபர்கள் ஆயுதங்களை எடுக்க வழி வகுத்தது. பின்னர் அது நாடு முழுவதும் விரிவடைந்து உள்நாட்டு போராக மாறியது. அப்போது சர்வதேச சமூகம் முறையான பதிலை வழங்காதது சிரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது மியான்மரின் நிலைமை ஒரு முழுமையான மோதலை நோக்கி நகர்கிறது. சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது' எனக் கூறியுள்ளார். மைக்கல் பேச்செலட் சர்வதேச அரசியல் மோதுகைக்குள் ஐ.நா வலுவற்ற அமைப்பு என்பதையே தனது கருத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
சிரியாவின் அழிவின் பின்னால் அன்றைய ஏகாதிபத்திய அரசாகிய அமெரிக்க உந்துசக்தியாக அமைந்தது போலவே இன்றும் மியான்மாரின் கொடூர அழிவின் பின்னால் சீனாவின் ஆதிக்கம் வலுவாக காணப்படுகின்றது. அமெரிக்காவை பகைத்து கொள்ள இயலாத ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம், அன்று சிரியாவுக்கு சரியான பதிலை வழங்கி இருக்கவில்லை. அதனை ஒத்த சூழலியே இன்றும் சீனாவை முழுமையாக பகைத்து கொள்ள இயலாது, மியான்மருக்கும் சரியான பதிலளிக்க முடியாது நகர்ந்து செல்லும் நிலையிலேயே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் காணப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மியான்மார் விடயத்தை கொண்டு செல்ல எடுத்த முயற்சிக்கு ரஸ்சியாவும் சீனாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
மியான்மார் விடயத்தை ரஸ்சியாவும் சீனாவும் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் அங்கீகரித்துள்ளமை எதிர்காலம் ஆபத்தானதாக மாற வாய்ப்புள்ளமையையே தெளிவாக காட்டுகிறது. மியான்மரில் ஏற்பட்ட சதிப்புரட்சிகள் ஏனைய நாடுகளில் ஏற்படும் போதெல்லாம் ரஸ்யாவினதும் சீனாவினதும் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. இரு நாடுகளது அதிகார ஆட்சி முறைமை உலக நாடுகளில் பரவ வாய்ப்புள்ளது. உலகளாவிய அதிகாரப் போட்டியின் விளைவாக சிறுபான்மைத் தேசியங்களும் பல்லினத் தேசிய அரசுகளும் அதிக நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றன. இலங்கையும் அவ்அபாய வலயத்துள்ளேயே காணப்படுகின்றது. நிறைவடைந்த 46வது ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு எதிராக பிரித்தானிய தலைமையிலான கோர் நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாகவே சீனாவும், ரஸ்சியாவும் செயற்பட்டிருந்தன. அத்தடன் இலங்கையின் அரசியலும் சமகாலத்தில் அதீதமாக இராணுமயப்படுத்தலை மையப்படுத்தியே காணப்படுகின்றது. மியான்மார் அரசியல் நிலவரம் முழு இலங்கைக்கும் ஓர் அபாய எச்சரிக்கையையே விடுக்கின்றது.
Comments
Post a Comment