போலிகளை அதிகம் கொண்ட இராஜதந்திர செயற்பாடற்ற தமிழரசியல்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழரசியல் தரப்பு காலம் காலமாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிட்டு செல்லும் இராஜதந்திரமற்ற அரசியல் அணுகுமுறையினையே கையாண்டு வருகின்றனர். அண்மையில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது மற்றும் அதுசார்ந்து திரண்டுள்ள சர்வதேச ஆதரவு என்பவற்றை தமிழ் தரப்பு சரியாக கையாளும் நுட்பத்;தை கொண்டுள்ளனவா? என்பது தொடர்பான தேடலும் தமிழ் சமூகத்திடையே அவசியமாகிறது. அதனை மையப்படுத்தியே யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது புலப்படுத்தும் செய்தி மற்றும் கைதுக்கு எதிராக திரண்டுள்ள சர்வதேச ஆதரவை பேணுவதும் பலப்படுத்துவதும் தொடர்பாக இக்கட்டுரை தேட முற்படுகிறது.


யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்கும் பொறிமுறைகளுக்கு பொறுப்பாக தண்டப்பணம் அறவிடும் உத்தியோகத்தர்களை மாநகரசபை கட்டளைச்சட்ட ஏற்பாடுகளின்படி பாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் நியமித்திருந்தார். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மெல்லிய நீல நிற சீருடையானது விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்படையின் சீருடையை ஒத்திருந்ததாக சமூகவலைத்தளங்களில் இடம்பெற்ற உரையாடலை மையப்படுத்தி யாழ்ப்பாண பொலிஸாரால் 09.04.2021 அன்று அதிகாலை 2.00 மணியளவில் பயங்கரவாத தடைச்சட்ட ஏற்பாடுகளின் கீழ் கைது செய்து மேலதிக விசாரணைக்காக வவுனியாவிற்கு அனுப்பப்பட்டிருந்தார். பின்னர் தண்டனைச்சட்ட கோவையின் கீழ் வழக்கை பதிவு செய்து அன்றைய தினமே இரவு 8.00 மணிக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி மணிவண்ணன் அவர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டிருந்தது. 

யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது மற்றும் பிணை என்பது ஒரு நாள் சம்பவமாக இருந்தாலும் அதனை மையப்படுத்திய அரசியல் உரையாடல் தமிழர் உரிமைப்போராட்டத்துக்கு கணதியான பலத்தை கொடுத்துள்ளது. அதனை பேணுவதிலும் பலப்படுத்துவதிலுமேயே தமிழரசியல் தலைமைகளின் வல்லமை பொதிந்து உள்ளது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் என்பது அரசியல் பிரதிநிதித்துவம் என்ற ரீதியில் அரசியல் இலாபங்களை தேடி தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது தொடர்பான உரையாடல்களை தொடர்வதை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. இது தமிழரசியலுக்கு ஆரோக்கியமற்ற செயற்பாடாகும். இவ்ஆரோக்கியமற்ற உரையாடல்களை கட்சி தலைமைகள் கவணிக்கவில்லை என புறந்தள்ளி விட்டு செல்ல இயலாது. நிச்சயமாக தலைமைகளுக்கு அறிந்தே இவ்ஆரோக்கியமற்ற அரசியல் களம் தமிழ் சமூகத்திடையே உலா வருகிறது. தமிழரசியல் களம் சமூக வலைத்தளங்களை உத்தியோகபூர்வமற்ற ஊடகமாக கடந்து செல்ல இயலாது. மாநகர முதல்வருக்கான கைதே சமூக வலைத்தள உரையாடல்களை மையப்படுத்தியே இடம்பெற்றுள்ளதெனில் சமூக வலைத்தளங்களின் உரையாடலின் கணதியை அறிந்து தமிழ்த்தரப்பு சமூக வலைத்தளங்களில் உரையாட வேண்டும். 

அரசியல் கட்சிகள் முட்டிமோதுவது போன்று யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது எத்தகைய அரசியல் நாடகமாய் காணப்படினும், கைதுக்கு கூறப்பட்டுள்ள காரணத்தில் தமிழ்த்தேசிய அரசியல் நலனை முற்படுத்தி செயற்பட ஏதுவான வாய்ப்பு காணப்படுகின்றது. அதாவது மார்ச் மாதம் முடிவடைந்த ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரிலும் தமிழர்களுக்கான அதிகார பங்கீடு தொடர்பில் 1987களில் இந்தியா - இலங்கை ஒப்பந்த்தின் மூலம் முன்மொழியப்பட்ட மாகாண சபை அதிகாரங்களை சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனும் உரையாடல் காணப்பட்டது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாகவும் மாகாணசபை அமுலாக்கமே பிரதான உரையாடலாக சர்வதேசரீதியாகவே காணப்படுகின்றது. இலங்கை அரசாங்கமும் மாகாண சபை தேர்தலை விரைந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக சர்வதேசத்துக்கொரு செய்தியையும் வழங்கியிருந்தது. ஆயினும் யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது என்பது தமிழ் பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களையே தமிழர்கள் சுதந்திரமாக பயன்படுத்த முடியாது என்ற செய்தியையே வெளிப்படுத்தியுள்ளது. தமிழரசியல் கட்சிகள் இச்செய்தியினையே கருவாக கொண்டு செயற்பட வேண்டும். யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் என்பது அச்செய்திக்கான ஓர் அடையாளம் மாத்திரமே அன்றி அவர் பிரதான பொருளன்று. எனிலும் அரசியல் கட்சிகளே தமிழரசியல் நலனை புறந்தள்ளி மணிவண்ணன் என்ற நபரை முதன்மைப்படுத்தி அரசியல் பாராட்டுக்களையும் அரசியல் விமர்சனங்களையும் உரையாடி வருகின்றார்கள். இது தமிழரசியில் கட்சிகள் தமிழ் மக்கள் நலனிலும் பார்க்க தமது சுயநலன்களையே முதன்மைப்படுத்துகின்றார்கள் என்பது தெளிவாகிறது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆரம்பத்தில் தமிழரசியல் தலைமைகள் வெளியிட்ட கருத்துக்கள் யாவும் ஆழமான உரையாடல்களாகும். ஆயினும் அவற்றை வழமை போன்றே உயர்ந்தபட்ச அரசியல் செயற்பாடாக 2/3 இனவாத பெரும்பான்மை பெற்ற பாராளுமன்றில் நீதிக்குரல்களாகவும், ஊடகங்களில் அறிக்கைகளாகவுமே எழுப்பியிருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களான சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், சரவணபவன், சுமந்திரன் ஆகியோர் யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணனின் கைது அரசாங்கம் தமிழ் மக்களை ஒடுக்கி அரசியல் இலாபம் தேட முயல்வதாகவும் ஜனநாயகத்தை சிதைக்கும் செயலாகவும் தங்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அவ்வாறே தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது பாசிச ஆட்சியின் வெளிப்பாடு எனும் சாரப்பட தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். யாவும் தெளிவான கருத்துக்களாகும். அத்துடன் அரசியல் பாரபட்சமின்றி தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் யாவும் ஒருமித்து குரல்கொடுத்தமை ஆரோக்கியமான செயற்பாடுமாகும். எனிலும் அதுசார்ந்த வளர்ச்சிக்கட்டத்தை ஆராயுமிடத்தேயே தமிழ்த்தேசிய கட்சிகளின் இராஜதந்திர தோல்வியின் தொடர்ச்சியை அறிய முடிகிறது.

குறிப்பாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது தொடர்பாக வலுத்த சர்வதேச எதிர்ப்பை தமிழ் மக்களின் நலன்சார்ந்து திரட்டுவதற்கான செயற்பாட்டு பொறிமுறையை தமிழ் தேசிய கட்சிகள் தொடர தவறிவிட்டார்கள். யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலாவ ஆரம்பித்தததுமே குறுகிய நேரத்தில் கனேடிய நாடளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, தனது ருவிட்டர் பக்கத்தில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உட்பட தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் தன்னிச்சையான கைதுகள் முடிவுக்கு வர வேண்டும்.' என மணிவண்ணனின் கைது தொடர்பாக கருத்திட்டிருந்தார். கனேடிய பிராம்டன் நகரின் மேஜர் பற்றிக் பிறவுன் மற்றும் டொரோன்டோ மேஜர் ஜோன் டொரியும் தமது கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள். மேலும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெப்லிஸ்ற்-உம் யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது தொடர்பாக தனது கவலையை தெரிவித்திருந்தார். மேலும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைதை தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுiறாயக கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். எனிலும் இச்சர்வதேச ஆதரவை தமிழர்களின் உரிமை போராட்டத்தின் ஒரு பலமாக திரட்ட தமிழரசியல் தலைமைகள் தவறவே விட்டுள்ளாரகள். 

தமிழர்களின் உரிமை ஒடுக்கப்படும் போது அதற்கெதிராக ஒலிக்கும் சர்வதேச குரல்களை திரட்டி தமிழர்களின் உரிமை போராட்டத்தை பலம்சேர்க்கும் செயற்பாட்டு பொறிமுறையொன்று ஈழத்தமிழரசியல் பரப்பில் என்றும் நிலவியதில்லை. தமிழரசியல் கட்சிகள் தமது அறிக்கை போன்றே சர்வதேச அறிக்கைகளையும் பயனற்றதாய் உதறி செல்லும் அரசியல் பொறிமுறையையே பின்பற்றி வருகின்றார்கள். சர்வதேசத்திலிருந்த ஓர் ஆதரவு குரல் வருகையில் அதனை தொடர்ந்து பின்பற்றி அதனை வலுப்படுத்துவதற்கான எவ்உத்திகளையும் செய்ய தமிழரசியல் தரப்பு தயாராகவில்லை. யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது உள்ளூராட்சி சபை அதிகாரங்களையும் தமிழர்கள் பயன்படுத்த அனுமதியளிக்க மாட்டோம் என்ற அரசாங்கத்தின் வக்கிரமான நிலையையே வெளிப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது தொடர்பான சர்வதேச கண்டனங்களும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாகவே ஒலித்துள்ளது. இதற்கு அரசியல் சாயம் பூசாது தமிழரசியல் தலைமைகள் ஓரணியாய் சர்வதேசத்தின் ஆதரவுக்கு நன்றியையும் தங்கள் கையறு நிலைமையையும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டிய காலமிது.

மேலும், பயங்கரவாத தடைச்சட்ட உருவாக்க நோக்கத்தை இன்றும் அரசாங்கம் தொடர்ச்சியாக பேணி வருகின்றது, என்ற செய்தியையும் யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைதின் ஆரம்ப முன்னகர்த்தல் செயற்பாட்டில் பயங்கரவாத தடைச்சட்ட ஏற்பாடுகளை முன்னெடுத்ததில் புலப்படுத்தி உள்ளது. ஓர் அரசாங்கம் எவ்வகையில் தனது அதிகாரத்தினூடாக போராட்டங்களை முடக்குகின்றது என்பது தொடர்பில் ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் குறிப்பிட்டுள்ளதாவது, 'போராட்டங்கள் அல்லது கிளர்ச்சிகளுக்கெதிராக அரசுகள் உபயோகிக்கும் நவீன யுத்திகளின் (modern counter insurgency techniques) முக்கிய நோக்கம் எந்த அரசியல் வெளியிலிருந்து அந்தக் கிளர்ச்சி அல்லது போராட்டம் தன்னைத்தக்க வைத்துக் கொள்கின்றதோ, எந்த அரசியல் வெளியிலிருந்து தனது போராட்டத்தை விரிவுபடுத்துகின்றதோ அந்த வெளியை மூடுவதாகும்.' என்கின்றார். இலங்கை அரசாங்கங்களும் தொடர்ச்சியாக பயங்கரவாத தடைச் சட்டத்தினை தமிழ்  அரயசியல்  மற்றும் கருத்தியல் வெளியை முற்றாக மூடுவதற்கான கருவியாகவே பயன்படுத்தி வந்துள்ளது. இச்செய்தியும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது வெளிப்படுத்தியுள்ளது. இச்செய்திகளேயே தமிழரசியல் காவிச்செல்ல வேண்டும் உரையாட வேண்டும்.

இல்லாததை உள்ளது போல் காட்டி, தமிழ் மக்களை ஒடுக்க எடுக்கப்படுகின்ற முயற்சிகளை தமிழரசியல் தரப்புகள் சமயோசிதமாக சிந்தித்தே கட்டுப்படுத்த வேண்டும். மாறாக தமது கட்சிகளின் அரசியல் இலாபங்களை குறிவைத்து கருத்தியலாய் உரையாட வேண்டிய விடயங்களுக்கு அரசியல் சாயங்களை பூசி எள்ளி நகையாடுவார்களாயின் தமிழர்கள் ஒடுக்கப்படுவது தவிக்கப்பட முடியாததாகவே காணப்படும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-