லெனின் புரட்சியின் நாயகன்! -ஐ.வி.மகாசேனன்-

 'ஒரு புரட்சிகர நிலைமை இல்லாமல் ஒரு புரட்சி சாத்தியமற்றது. மேலும், ஒவ்வொரு புரட்சிகர சூழ்நிலையும் புரட்சிக்கு வழிவகுக்காது.' 

-விளாடிமிர் லெனின்-


2021 ஏப்ரல் 22 அன்று, புரட்சியை ஒரு வாழ்வாய் வகுத்து வென்றவர் மண்ணில் அவதரித்து 151 ஆண்டுகளாகிறது. ஆம், கார்ள் மாக்ஸ் கண்ட சோசலிச கனவை புரட்சியின் மூலம் நிஜமாக்கிய விளாடிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22, ரஷ்சியாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் பிறந்தார். தொழிலாளர் புரட்சியை நிலைநாட்டி மாக்ஸிச சித்தாந்தத்துக்கு லெனினிச வடிவம் கொடுத்த லெனினின் அரசியல் கருத்தியல்களை தேடுவதனூடாக லெனினை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் உரிமைக்காக போராடும் ஒவ்வொருத்தரும் லெனின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவோ பாடங்களை கற்றுக் கொள்ளலாம். நாட்டில் நடக்கும் அநீதிகளைக் கடந்து போகும் மனிதர்களுக்கு மத்தியில் லெனின் என்ற சாதாரண மனிதன் மக்களை ஒன்றுதிரட்டி ஆதிக்கத்தை எதிர்த்து வென்று காட்டியுள்ளார். அடக்குமுறைகள் எப்போதுமே இந்த சமூகத்துக்காக, மக்களுக்காக உழைக்கப் பிறந்த புரட்சியாளர்களை அடையாளம் காட்டும். அந்த வகையில் ரஷ்சியாவில் நிலவிய ஆதிக்கத்துக்கு எதிராக போராடி, 1917 நவம்பர் 7இல் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல், வன்முறை நிகழாமல் சோவியத் ஆட்சி மலரக் காரணமாக இருந்த வரலாற்று நாயகன் லெனினை வரலாறு நமக்கு அடையாளம் காண்பித்துள்ளது.

லெனின் புரட்சிகரமானவனாக வளர அவரது குடும்பச்சூழலே காரணமாயிருந்துள்ளது. லெனினின் தாய் மாயா உல்யானவ் அன்பே உருவானவராய் விளங்கினார். தந்தை இல்யா உல்யனாவ் கல்வி அதிகாரியாக இருந்தார். குடும்பமே தெய்வப் பற்று உடையவர்களாக இருந்தாலும் லெனினும் அவர் சகோதரர் அலெக்சாண்டரும் ஆலயம் செல்ல விரும்பாதவர்களாக இருந்தனர். லெனினின் பெற்றோரும், குழந்தைகளின் சுதந்திரத்தில் தலையிடவில்லை. அதனால், லெனினும் அலெக்சாண்டரும் சிறுவயது முதலே, சுதந்திரமாகச் செயல்படுதல், சுயமாகச் சிந்தித்தல் என்று இருந்தனர். லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர் முற்போக்குக் கொள்கை உடையவராகவும், அப்போதைய ரஷ்ய ஆதிக்க அரசுக்கு எதிரான தீவிரவாத சிந்தனை கொண்டவராகவும் இருந்தார். இதனால் அலெக்ஸாண்டர் 1887ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அதே ஆண்டு மே 8ஆம் தேதி ஜார் மன்னரின் காவல்துறையால் மரண தண்டனை வழங்கப்பட்டு உயிரிழந்தார். பின்னாளில் லெனின் உலகம் மறவா புரட்சியளானாய் மிளிர இச்சம்பவங்களே ஆணிவேராய் அமைந்திருந்தது.

கார்ள் மாக்ஸின் தத்துவங்களை உள்வாங்கிய லெனின், 'சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டாமல் சமூகப் புரட்சி சாத்தியமில்லை' என்பதை உணர்ந்தார். இதற்காக தான் படித்த சட்டத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்தார். வாழ்வில் தான் கற்றுக்கொண்ட பாடங்களைப் புத்தகமாக எழுத ஆரம்பித்தார். மக்களை அணி திரட்டும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கினார். அதற்காக, விடுதலைக்கான போராட்டக் கழகம் என்ற ஓர் அமைப்பையும் 1895ஆம் ஆண்டு தோற்றுவித்தார். அதனை தொடர்ந்து கைதுகளும் நாடுகடத்தல்களும் லெனினை தொடர்ந்த போதும் லெனின் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்ட புரட்சிக்கான விதையை விருட்சமாக்குவதில் கடும் பிரயத்தனத்துடன் செயற்பட்டார். அதன் பலனையே 17917 நவம்பர்-07 ரஷ்சிய புரட்சியின் மூலம் அறுவடையும் செய்திருந்தார்.

லெனின் தனது புரட்சியில் சுயநிர்ணய உரிமை தொடர்பான உரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவராக காணப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியானது முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், தேசிய விடுதலை போராட்டம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த சகாப்தமாய் காணப்பட்டது. இதன் பின்னணியிலே தேசங்களின் பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை லெனின் வடிவமைத்திருந்தார். தேசியவாதம், தேசிய விடுதலை போராட்டம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை சோசலிச சித்தாந்தத்தின் துணை அம்சங்களாகவே லெனின் நோக்கினார். லெனின் கோட்பாட்டுவாதியாக மட்டுமன்றி நடைமுறை செயற்பாட்டளாராகவும் திகழ்ந்தார். சோவியத் குடியரசில் அந்தந்த குடியரசின் தாய்மொழி எதுவோ, அதுதான் நிர்வாக மொழியாகவும், போதனை மொழியாகவும் இருக்க வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார். ரஷ்சியர்கள் பெரும்பான்மையராக இருப்பதால், ரஷ்சிய மொழியைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் ஒரு ரஷ்சியர் ஆனால், பேரினவாதத்தை அறவே வெறுத்தார். மொழி விஷயத்தில் மிகத்தெளிவான கொள்கையைக் கொண்டிருந்தார். எந்த தேசிய இனமும் இதில் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதுவே லெனினின் மக்கள் புரட்சி வெற்றி பெறவும் காரணமாகியது.

லெனினின் புரட்சி வெற்றி பெற பிரதான காரணமாயுள்ள மற்றொரு விடயம், வரலாற்றை ஆய்ந்து கற்றமையாகும். ரஷ்சிய இளம் கம்யூனிஸ்டு கழகத்தின் மூன்றாவது மாநாடு 1920 அக்டோபர் 02இல் துவங்கியது. அந்த மாநாட்டில் லெனின் இளைஞர்களிடம் பேசுகையில், 'மனித குலம் சேகரித்து வைத்துள்ள அறிவுச் செல்வத்தை எல்லாம் ஜீரணிக்காமல் ஒருவர் கம்யூனிஸ்டாகி விடலாம் என நினைப்பது மிகப் பெரும் தவறாகும். கம்யூனிச கோஷங்களையும், கம்யூனிச விஞ்ஞானத்தின் முடிவுகளையும் பற்றி மட்டும் அறிவது போதுமானது. கம்யூனிசத்தை தந்த அறிவு மூலத்தொகுப்பை அறிய வேண்டிதில்லை என நினைப்பது தவறாகும். மனித குல அறிவுத்தொகுப்பிலிருந்தே கம்யூனிசம் பிறக்கிறது என்பதற்கு மாக்சியமே நல்ல உதாரணம் ஆகும். இந்த அரிய கருத்தை, அற்புத கொள்கையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் வரட்டு வாதம், புனிதத்துவம் பயன்படாது.' என்கின்றார். லெனின் வலியுறுத்தும் வரலாற்றை ஆய்ந்து கற்க வேண்டும் என்பது மாக்ஸிஸத்துக்கு மட்டுமானதல்ல. அது புரட்சிக்கான சித்தாந்தமாகும். உரிமைக்காக போராடும் ஒவ்வொரு சமூகமுமே தமது வரலாற்றை வரட்டுவாதம், புனிதத்துவம் என்ற மாயைகளை நீக்கி ஆழமாக அறிதல் அவசியமாகிறது.

லெனினின் புரட்சிக்கான சித்தாந்தங்களில் மற்றையது, புரட்சிக்கான சூழலை தீர்மானித்தல் வேண்டும். ரஷ்சியாவில் எந்த விதமான புரட்சி நடத்த வேண்டும், மாக்சிய தத்துவத்தை இங்கு எப்படி அமுல்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு நடத்தி அதில் முழுமையாகத் தேறினார். மாக்சிய தத்துவத்தை அப்படியே எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக அமுல்படுத்திட முடியாது என்பதில் அவர் உறுதியாக நின்றார். ரஷ்சியாவில் ஆரம்ப நிலையில் சமூக – ஜனநாயகக்கட்சியின் நிலைப்பாட்டில் உள்ள சில குறைபாடுகளை அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்சியாவில் நிலவும் சிறப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாக்சின் கொள்கைகளின் வடிவங்களை மாற்றி  நடைமுறைப்படுத்தினார். (தங்களின் கொள்கை ஒரு வேதமல்ல, மாறாக செயலுக்கான வழிகாட்டி என்றே மாக்சும், ஏங்கல்சும் சொல்லியுள்ளார்கள்.) 'பத்தொன்பதாம் நூற்றாண்டு மாக்ஸிசத்தை இருபதாம் நூற்றாண்டுக்குரிய மாக்ஸிசமாக ஆக்கியமைக்கு பெயர்தான்' லெனினிசம் என்கின்றார் ஸ்டாலின். ரஷ்சியாவில் புரட்சியின் அடிப்படை விவசாயப் புரட்சியே, அதுவே இந்தப் புரட்சியின் குறிப்பான தேசியத் தன்மையைத் தீர்மானிக்கிறது. என்பதை ஆய்ந்து அதன் வழியேயே புரட்சிக்கான வடிவத்தை லெனின் அமைத்த வெற்றி பெற்றார். புரட்சிக்கான வடிவம் என்பது ஒரு குறித்த நிலையில் காணப்படுவதில்லை. சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், வரலாற்று அனுபவங்களுமே சமூக போராட்டத்துக்கான வடிவங்களை தீர்மானிக்கிறது என்பதையும் லெனின் நிருபித்து காட்டியுள்ளார்.

ஆளுமைகளை தேடும் போது ஆளுமைகளின் பிறப்பு, இறப்பு என்பவற்றை வெளிப்போர்வையில் கற்பதற்கு மாறாக ஆளுமைகளின் செயற்பாடுகளையும், ஆளுமைகளின் சித்தாத்தங்களையும் உட்கிடக்கையாக ஆராய்தல் வேண்டும். அதுவே சமூகத்திற்கு பயனுறுதியாக காணப்படும். லெனினின் புரட்சியின் வெற்றிக்கு பின்னாலும் தேடல்கள் அதிகமாக இருந்துள்ளது. இலக்கியங்களை நேசித்த லெனினுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் அதிகமாக இருந்தது. அத்துடன் அவரே பல புத்தகங்களை எழுதி மக்களுக்கு கருத்தூட்டும் செயற்பாடையும் மேற்கொண்டுள்ளார். அவரது எழுத்துகள் 55 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றது.  

பெரும்பாலும் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் மாபெரும் புரட்சியாளர்களை, மக்கள் இனம் காண்பதற்கு முன்னர், சர்வாதிகாரிகளே அடையாளம் காண்கிறார்கள். அவர்களே மாபெரும் தலைவர்களை உருவாக்குகிறார்கள். அவ்வழியில் ஜார் மன்னன் லெனினை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளே லெனின் எனும் புரட்சி விதையை பெரும் விருட்சமாக்கியது. புரட்சிக்கான அயராத உழைப்பால் தூக்கத்தை தியாகம் செய்த லெனின் இறுதியில் அதுவே நோயாகி, 1924ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் தனது 54வது வயதில் விண்ணுலகில் புரட்சி செய்ய சென்றார். 151வது பிறந்தநாளையும் இன்று உலகம் போற்றுகிறதாயின், அதுவே 'லெனின், வரலாற்றில் புரட்சியின் நாயகன்' என்பதற்கான சான்றாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-