மாணவர் எழுச்சியை வலுப்படுத்துவது தமிழ் சமூகத்தின் பொறுப்பு! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியலில் தமிழ்த்தரப்பு தங்கள் உரிமை சார்ந்து முன்னெடுக்கும் முனைப்புக்கள் யாவும் ஏதொவொரு வகையில் சிதையுறும் நிலையே சமீபகால பதிவுகள் நீள்கிறது. இது தமிழ் தரப்பின் உரிமைசார் போராட்டத்தை தொய்வுற செய்யும் எண்ணங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 23.04.2021 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் திறந்து வைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கொரு புத்துணர்ச்சியான பதிவொன்றை நிகழ்த்தியுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீளவும் நிறுவியுள்ளமை தமிழர்களுக்கு கிடைத்துள்ள அரசியல் வாய்ப்பினை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இலங்கை அரசாங்க தரப்பினரின் கடும் அழுத்தத்தின் மத்தியில் கடந்த ஜனவரி-08ஆம் திகதி இரவோடு இரவாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அன்று இரவே பல்கலைக்கழக சூழலில் பதட்ட நிலை உருவாக்கம் பெற்று மாணவர்களோடு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் சமூக ஆர்வலர்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மறுநாள் இலங்கை காவல்துறை கொரோனாவை காரணங்காட்டி போராட்டத்தை முடக்க முற்பட்டனர். எனிலும் போராட்ட உணர்வோடு மாணவர்கள் உணவு தவிர்ப்பில் இறங்கியவுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு விவகாரம் சர்வதேச அளவில் பூதாகரமாகியது. சரவதேச ரீதியாக சர்வதேச தலைவர்களால் இலங்கை அரசாங்கத்துக்கு கண்ணடனங்கள் தெரிவிக்கப்பட்டதுடன்இ தமிழர்கள் பரந்து வாழும் தேசங்கள் யாவும் இளையோரின் போராட்ட களங்களாக மாற்றமுற்றது. இறுதியில் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் ஜனவரி-11 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல்-23அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடிக்கல் நாட்டப்பட்டு திறந்து வைக்கப்படும் வரையிலுமேயே இது முழுமையாக சாத்தியப்படுமா என்ற அரசியல் சர்ச்சையும் மறுதளத்தில் பூதாகரமானதாகவே காணப்பட்டது. தூபி பல்கலைக்கழக துணைவேந்தரால் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உத்தேசிக்கப்பட்ட தினத்திற்கு முதல்நாள் துணைவேந்தர் மாரடைப்பில் வைத்தியசாலையில் ஆனுமதிக்கப்பட்டமை மற்றும் உத்தேசிக்கப்பட்ட தினத்தில் மாணவர்கள் எவ்வித பிரம்மாண்ட ஏற்பாடுகளுமின்றி திடீரென காலை 7.00 மணிக்கு தூபி திறக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கான செய்தியூடாக அறிவித்தல்விடுத்தமையும்இ தூபி திறப்பதில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்கொண்டுள்ள அரசாங்க தரப்பின் அழுத்தங்களையே நாசுக்காக வெளிப்படுத்தி நிற்கின்றது. எனிலும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கட்டமைப்பட்ட ஒரு ஒழுங்குவிதிமுறையின் கீழ் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அரசாங்க தரப்பின் அழுத்தங்களை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். தூபி உடைப்பின் போது திரண்ட சர்வதேச அழுத்தங்களை ஒன்றினைத்து தொடர்ந்து நகர்த்தி செல்வதில்இ தூபி மீள நிர்மாணிக்கப்பட்டமையை தடுப்பது தொடர்பிலே அரசாங்க தரப்பால் முன்னெடுப்பட்ட அழுத்தங்கள் பொதுவெளிக்கு கொண்டுவர வேண்டியது முக்கியமானதாகும்.
இலங்கையில் 70களின் இறுதிப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழரின் உரிமை போராட்டங்களை நசுக்குவதற்கு இலங்கை அரசாங்கங்களால் தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் பார்வைகளும் தமிழர்களை அதிகம் குறிவைத்து பழகி விட்டது. 2019ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் இலங்கை மீதான உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் ஐ.எஸ்.ஐ.எஸ் செயற்பாட்டாளர்களை தேடிய போதும் அத்தேடல் காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தினுள் அதிகம் அகப்பட்டவர்களாயும் இலங்கை தமிழர்களே காணப்படுகிறார்கள். இக்காலப்பகுதியிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பல்கலைக்கழக கற்கை காலம் முடிவடைந்த நிலையிலும் இன்றும் அவர்கள் பிணையிலேயே வெளியே உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய அழுத்தங்களே மாணவர்களின் சுதந்திரமான உரிமை கோசங்களை இலங்கையில் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்நிலையில் அரசாங்க அழுத்தத்தால் உடைக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மாணவர் போராட்டத்தால் மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளமை மாணவர் போராட்டத்துக்கான ஆரோக்கியமான முன்னோடியாகவே காணப்படுகிறது.
மாணவர்களுக்கு உள்ள சவால்களையும் எளிதாக கடந்துவிட முடியாது. இன்றும் பிணையிலேயே உள்ள மாணவர்களின் கைதானதுஇ தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டு பங்காளிகளான ரணில்-மைத்திரி அரசாங்க காலப்பகுதியிலேயே இடம்பெற்றதாகும். ஓரளவு ஜனநாயக வெளி காணப்பட்ட அக்காலப்பகுதியிலேயே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் இன்று ஜனநாயகத்தை முற்றாக சிதைக்கும் வகையில் சிறுபான்மையினங்கள் மீது ஒடுக்குமுறைகளை கட்விழ்த்துவிட்டுள்ள அரசாங்கத்தின் கீழ் மாணவர்களின் பாதுகாப்யு கேள்விக்குறியானது என்பதில் ஐயமில்லை. யாழ் மாநகரசபை முதல்வர் பயங்கரவாத தடைச்சட்ட ஏற்பாட்டில் கைது செய்யப்ட்டு பின்னர் அன்றைய தினமே சாதாரண வழக்கில் பிணை பெறும் ஆளுமை காணப்படுமாயின் அவ்ஆளுமை நுட்பங்கள் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதிலும் முன்னிற்க வேண்டும். அவ்வாறு மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதே மாணவர்களின் பலம் தொடர்ச்சியாக தமிழர் உரிமைசார் போராட்டத்திற்கு பலம் சேர்ப்பதற்கு வாய்ப்பாக அமையும்.
மாணவர் சக்தியானது வரலாற்றில் என்றும் மாபெரும் சக்தியாகவே அமைந்துள்ளது. மாணவர் புரட்சியின் பலத்தை ஆசிய நாடுகளில் வென்ற புரட்சிகள் பலவற்றின் வரலாற்றிலேயே தெளிவாக அறியலாம். ஆசிய வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனை சீனப் புரட்சி. குறித்த சீனப்புரட்சிக்கு காரணமான சீன கொம்யூனிச கட்சியின் தோற்றம் என்பதுஇ 1919 மே 4ஆம் நாள் சீனாவிலுள்ள எல்லா பல்கலைக்கழகங்களிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் ஒன்று திரண்ட மாணவர்களால் அரச துரோக ஒப்பந்தத்தைக் கண்டித்து நடாத்தப்பட்ட மாபெரும் பேரணியின் விளைவானதாகும். இந்த பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் அன்றைய சீன அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவி அடக்க முயற்சித்த போதும் மாணவர்களின் இந்த போராட்டம் சீன மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதில் கலந்தகொண்ட பல தலைவர்கள்தான் பின்னால் சீன கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினர். மேலும் இந்தோனேசியாவின் 1968இல் இராணுவ ஆட்சியை நிறுவிய சுகர்டோவின் 30ஆண்டுகால அடக்குமுறை ஆட்சிக்கு முடிவு கட்டியதிலும் மாணவர் பங்கு கணதியானது. 1998ஆம் ஆண்டில் இந்தோனேசியா முழுமையிலும் இருந்த மாணவர்கள் சுகர்டோவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட துவங்கினர். முதலில் மாணவர்கள் மீது அரசு கடுமையான அடக்குமுறையை ஏவியது. ஆனால் மாணவர்களுக்கு ஆதரவாக மக்கள் திரளுவதைக் கண்ட சுகர்டோ பெரும் சவாலைச் சந்தித்து பதவியிலிருந்தும் தூக்கி எறியப்பட்டார். இவனைத் தொடர்ந்து பதவியேற்ற ஹப்பி என்பவனும் சுகர்டோவின் பாதையிலேயே பயணம் செய்ய முற்பட்டபோது மறுபடியும் மாணவர்களின் போராட்டத்தால் அவனது அடக்குமுறை கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வகையில் மாணவர் புரட்சியின் வரலாறுகள் உலக அரசுகளின் வரலாறுகளின் ஏதோவொரு மூலையில் நிச்சயம் பிணைந்தே காணப்படும். ஈழத்தமிழ் பரப்பிலும் ஆயுத போராட்டத்துக்கான முனைப்பு மாணவர் இயக்கங்களாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது.
உரிமைப்போராட்டங்களில் மாணவர்களின் கனதி என்றும் பெறுமதியாகவே காணப்பட்ட வந்துள்ளது. அதன்வழி ஒடுக்குமுறை அரசாங்கங்கள் ஒரு சமூகத்தின் உரிமை போராட்டத்தை நசுக்க முதலெடுக்கும் நகர்வும் மாணவர் முன்னெடுப்புக்களை கட்டுப்படுத்தவதாகவே அமையும். இந்நிலையில் நிச்சயம் தமிழர்களின் உரிமை போராட்டத்தில் ஆரோக்கியமான புத்துணர்ச்சியை கொடுத்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிர்மாணமத்திற்கு பின்னால் உள்ள மாணவர் எழுச்சியின் உற்சாகத்தை வலுவிலக்க செய்யும் வகையிலான நடவடிக்கைகளை நிச்சயமாக இலங்கை அரசாங்க தரப்பும் முன்னெடுக்க முயலும். அம்முன்னெடுப்பை வெற்றி கொண்டு மாணவர்களுக்கான பாதுகாப்பை அளித்து தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் இன்றைய பிரதான கடமையதாகும். குறிப்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தங்கள் சுயஇலாப அரசியல் நலன்களை களைந்து மாணவ சக்தியை பலமான சக்தியாக கட்டமைக்க ஒன்று திரள வேண்டும்.
Comments
Post a Comment