சீனாவுடனான அமெரிக்க வெளியுறக்கொள்கையில் மேம்பாடாற்றபோக்கு பிடன் நிர்வாகத்திலும் காணப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தமது நாட்டின் உளவு அமைப்புகளிடம் கொரோனா வைரஸின் மூலத்தை 90நாட்களுக்குள் கண்டறிந்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மீளவும் கொரோனா தொடர்பிலான அமெரிக்க சீண்டல் கருத்துக்களும், சீனாவின் எதிர்வினை கருத்துக்களுமாக அமெரிக்க மற்றும் சீனாவிடையே கொரோனா அரசியல் மீளவும் சூடுபிடிக்க ஆரம்பிதுள்ளது. ட்ரம்ப்-இன் அரசியல் செயற்பாடுகளை கோமாளி அரசியலாக அதிகம் விமர்சித்து ஆட்சியை கைப்பற்றிய ஜோ பிடனும் ட்ரம்ப் ஆட்சியில் முன்னிறுத்தப்பட்ட சீனா மீதான சதிக்கோட்பாட்டு அரசியலை மீள முன்னிறுத்துகின்றார். இது அமெரிக்க சீனாவுடனான வெளியுறவுக்கொள்கையில் தன்னை மேம்படுத்த (Upgrade) தவறுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனை மையப்படுத்தியே இக்கட்டுரை உலக ஒழுங்கில் சீனாவின் வளர்ச்சியை தடைசெய்யும் வல்லமை அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் காணப்படுகின்றதா? என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இதுநாள் வரை உலக அளவில் 17.1கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 35இலட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க காணப்படுகிறது. இதுவரையில் அமெரிக்காவில் 3.1கோடி மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதுடன், 6இலட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளதாக அறியப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று அறியப்பட்ட நாள் முதலாகவே அதனை சீன வைரஸ் எனவே அழைத்து வந்தார். 2021 ஜனவரியில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்னர் சீன வைரஸ் என்ற உரையாடல் அமெரிக்க அரசியலின் உரையாடலிலிருந்து விலகியிருந்தது.
இந்நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், அமெரிக்க புலனாய்வு துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு பின்னர் உலக அரசியலில் மீளவும் கொரோனா வைரஸின் மூலம் தொடர்பிலே, சீன - அமெரிக்க இடையேயான கருத்து மோதல்கள் பூதாகரமாகி உள்ளது. கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி பிடன் மே-23 அன்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டார். அறிக்கையில், ஒரு தொற்றுநோயைத் தூண்டி கிட்டத்தட்ட 6இலட்சம் அமெரிக்கர்களைக் கொன்ற வைரஸ், சீனாவில் எவ்வாறு உருவானது என்பது குறித்து இன்னும் சி.ஐ.ஏ. மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் ஒருமித்த கருத்தை எட்டவில்லை. 90 நாட்களில் புகார் அளிக்கும்படி பிடன் தெரிவித்துள்ளார். மேலும், 'அமெரிக்கா முழுமையான மற்றும் வெளிப்படையான சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச விசாரணையில் பங்கேற்கவும், தொடர்புடைய அனைத்து தரவு மற்றும் ஆதாரங்களுக்கும் அணுகலை வழங்கவும் சீனாவை அழுத்தம் கொடுக்க உலகெங்கிலும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்' என்றும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு விலங்கினால் மனிதர்களுக்கு பரவியது என்ற நடைமுறையில் உள்ள கோட்பாட்டிற்கு அப்பால், ஒரு ஆய்வகத்திலிருந்து மனித முயற்சியால் உற்பத்தி செய்யப்பட்டது என்ற கருத்தை பிடன் நிர்வாகமும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதையே குறிக்கிறது.
சீனா, பிடனின் அறிவிப்புக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இது அரசியல்ரீதியாக திரித்து கூறப்படுவதாகவும், சீனா மீது பழிபோடும் செயல் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. மே-24 வியாழக்கிழமை அன்று, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், உலக சுகாதார அமைப்பின் மார்ச் மாத அறிக்கையின் கண்டுபிடிப்புகளை சுட்டிக்காட்டி வுஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் வந்திருப்பது மிகவும் சாத்தியமில்லை என்று கூறினார். மேலும், 'அமெரிக்காவின் நோக்கம், தொற்றுநோயைப் பயன்படுத்தி சீனாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் அரசியல் கையாளுதல்களைத் தொடர வேண்டும் என்பதேயாகும். அவர்கள் அறிவியலுக்கு அவமரியாதை செய்கிறார்கள், மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பற்றவர்கள், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சிகளுக்கு எதிர்மறையானவர்கள்.' எனக் கடுமையான அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஜாவோ, இந்த வைரஸ் மேரிலாந்தில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவ தளத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என சீனாவின் சொந்த சதிக்கோட்பாட்டை அமெரிக்காவிற்கு எதிராக ஆதாரமின்றி முன்மொழிந்துள்ளார்.
சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளிவந்திருக்கலாம் என்ற சதிக்கோட்பாடுகள் 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் சீனா முதல் கொரோனா வைரஸ் தொற்றை அறிவித்த சிறிது நேரத்திலேயே பரப்பத்தொடங்கியது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் கடைசி மாதங்களில் இறப்பு எண்ணிக்கை உயரத்தொடங்கியதால் ட்ரம்ப் மற்றும் அவரது வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டரான ஆர்கன்சாஸின் டாம் காட்டன் ஆகியோர் அதை ஊக்குவித்தனர். இந்த கோட்பாடு பெரும்பாலான விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸின் மூலம் குறித்து ஆய்வு செய்வதற்கு சீனா சென்றிருந்த உலக சுகாதார நிறுவனத்தின் குழு, ஆய்வக கசிவிலிருந்து வைரஸ் பரவியிருக்க எந்த வாய்ப்பும் இல்லை என தெரிவித்திருந்தது. சீனாவிற்கு சென்றவர்களில் ஒருவரான உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மரியம் கூப்மேன்ஸ், அமெரிக்க அதிகாரிகளுக்கு ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால் அவர்கள் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மார்ச் மாதத்தில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட 14 நாடுகள் உலக சுகாதார நிறுவனத்தின் குழுவின் முடிவுகள் குறித்து கவலைகளை வெளிப்படுத்த ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்ட பின்னர் 'அனைத்து கருதுகோள்களும் அட்டவணையில் உள்ளன' என்று கூறியிருந்தார்.
இந்நிலையிலே சீனா சார்ந்து அமெரிக்காவின் மேம்பாடற்ற வெளியுறவுக்கொள்கையை மூன்று விடயங்களை முன்னிறுத்தி சர்வதேச அரசியல் தரப்பில் விவாதிக்கப்படுகிறது.
முதலாவது, ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுடன் கொண்டிருந்த வெளியுறவுக்கொள்கையையே பிடன் நிர்வாகமும் கையாள்கிறது. 03.02.2021 அன்று, அமெரிக்காவின் புதிய வெளியுறவுக்கொள்கை சார்ந்து ஜோ பிடன் அவர்கள் ஆற்றிய உரையில், சீனா பொறுத்து பிடனின் கொள்கை சற்று வித்தியாசமாக அமைந்திருந்தது. சீனா முன்வைக்கும் சவால்களை அமெரிக்கா நேரடியாக எதிர்கொள்ளும் என்றும் அதேநேரம் அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ப சீனா செயல்படுமாயின் சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயங்காது எனவும் தெரிவித்திருந்தார். ஜோ பிடனின் கருத்து முற்றாக சீனாவை பகைத்து நின்ற ட்ரம்ப்-இன் நடத்தையிலிருந்து மாறுபட்டதாக காணப்பட்டது. எனிலும் ஜோ பிடனின் ஆட்சி 100 நாட்களை கடந்துள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் செயற்பாட்டில் சீனா மீதான டொனால்ட் ட்ரம்பின் கொள்கையிலிருந்து ஜோ பிடன் எதிர்பார்த்ததை விட அதிக தொடர்ச்சியைக் காட்டுகின்ற நிலையே அவதானிக்க கூடியதாக உள்ளது. அவற்றில் முதன்மையானதாகவே கொரோனா மூலத்தை மையயப்படுத்தி மீளெழுப்பப்பட்டுள்ள கொரோனா சதிக்கோட்பாட்டு அரசியலாகும். இது அமெரிக்க வெளியுறக்கொள்கையின் மேம்பாடற்ற நடத்தையாகவே அவதானிக்கப்படுகிறது.
இரண்டாவது, 2003ஆம் ஆண்டு ஈராக் போரில் கையாண்ட உத்தியை சீனாவிற்கு எதிராக பயன்படுத்த பிடன் முயன்றுள்ளார். 2003ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை நியாயப்படுத்த ஆதாரமற்ற உளவுத்துறை பொறிமுறையை அமெரிக்க பயன்படுத்தியிருந்தது. அந்நடைமுறை தொடர்ச்சியை இன்றும் சீனாவிற்கு எதிராக கையாளும் வகையில் கொரோனாவின் மூலத்தை கண்டுபிடிக்க உளவுத்துறையை பிடன் பணித்துள்ளார் என்ற பார்வை அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை சார்ந்த ஆய்வுகளில் முதன்மை பெறுகின்றது. இதனை சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியனும் தனது செய்திக்குறிப்பில், 'அமெரிக்க உளவுத்துறை சமூகத்தின் மோசமான தட பதிவு உலகிற்கு நீண்ட காலமாக அறியப்படுகிறது.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது ஆயினும் முடிவற்றது. சீனா சார்ந்து அமெரிக்காவிடம் வரையறுக்கப்பட்ட வெளியுறுவு கொள்கை காணப்படாமை. 2017 ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு வியூக அறிக்கையைப் பின்பற்றி சீனாவை எவ்வாறு வரையறுப்பது என்பது குறித்து இன்னும் சீரான கொள்கை உருவாக்கங்கள் வரையறுக்கப்படவில்லை. சீனாவுடன் எவ்வாறு போட்டியிடுவது அல்லது எதிர்கொள்வது, என்ன பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன தொடர்பில் சரியானதொரு பொறிமுறை அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் காணப்படவில்லை என இன்டெலிசியா நிறுவனத்தின் தலைவர் டிங்டிங் சென் 'அமெரிக்காவிற்கு ஒத்திசைவான சீனா வியூகம் இல்லாததற்கு 3 காரணங்கள்' எனும் தலைப்பில் டிப்ளோமற் இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு எதிரான அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் 'கடுமையான' என்ற வார்த்தையின் அர்த்தம் மிகவும் தெளிவாக இல்லை என்றாலும், பல்வேறு அமெரிக்க நிறுவனங்களிடையே ஒரே ஒருமித்த கருத்தாக 'சீனா மீது கடுமையாக இருங்கள்' என்பது காணப்படுகிறது. இதனை மையப்படுத்தியே பிடனும் தொடர்ச்சியாக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்.
எனவே அமெரிக்காவின் சீனாவிற்கான வெளியுறவுக்கொள்கை சரியான வரையறையுடன் மேம்பாடு அடையவில்லை என்பதேயே அண்மைய பிடன் நிர்வாகத்தின் நடவடிக்கைகளும் பதிவுகளும் தெளிவாக அடையாளப்படுத்துகின்றது. இவ்வாறே தொடருமாயின், உலக ஒழுங்கின் ஆதிக்கத்திற்கு எதிரான அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையிலான போட்டியில் கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கின் ஆதிக்கம் சீன வசமாகும் எனும் சர்வதேச ஆய்வாளர்களின் கருத்துக்களே மெய்ப்பிக்கப்படும்.
Comments
Post a Comment