அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தையாவது கையாளுமா தமிழ் அரசியல் தரப்பு? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியலில் ஜூன் மாத முதல் வாரத்தில் ஆதிக்கம் செலுத்திய அரசியல் உரையாடலாக அமெரிக்க காங்கிரஸில் ஈழத்தமிழர் நலன் சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை காணப்படுகின்றது. 2021 மே-18 அன்று அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் குறித்த பிரேரணை பிரேரிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசியலில் இலங்கை அரசாங்கம் ஜூன் முதல் வாரத்திலேயே அதற்கு எதிர்வினையாற்ற ஆரம்பித்துள்ளது.  மறுமுனையில் தமிழ் அரசியல் தரப்பின் அமெரிக்க காங்கிரஸ் பிரேரனை தொடர்பான செயற்பாடுகளை தேடுகையில் அதில் அபிவிருத்தியான நகர்வுகளை காண முடியவில்லை. மேலும் தமிழ் ஊடகப்பரப்பும் அமெரிக்க பிரேரனையை வலுவற்றதொரு செயற்பாடாய் உதறித்தளும் போக்கே தமிழ் ஊடக செய்தி பரப்புக்களில் அவதானிக்க முடிகிறது. இவற்றை மையப்படுத்தியே இக்கட்டுரை தமிழ் சமூகத்தின் உரிமைப்போராட்டத்தில் அமெரிக்க பிரேரனையின் வகிபாகத்தையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

'இலங்கையில் போர் நிறைவடைந்து 12 வருடங்களை அங்கீகரித்தல், உயிரிழந்த உயிர்களை கௌரவித்தல்.;  நீடித்த அமைதியான அரசியல் தீர்வை உறுதி செய்வதற்காக இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், புனரமைப்பு, இழப்பீடு மற்றும் சீர்திருத்தத்திற்கான ஆதரவை வெளிப்படுத்துதல் மற்றும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலம்' எனும் தலைப்பில் 2021 மே18 அன்று அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட ர்.சுநுளு.413 தீர்மானம் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான சபைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அமெரிக்க காங்கிரஸின் வடக்கு கரலைனாவின் பிரதிநிதியான டெபோரா கே. ரோஸினால் என்பவரால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. குறித்த பிரேரணையை பில் ஜோன்சன், டேனி கே. டேவிஸ், பிரெட் ஷெர்மன் மற்றும் கேத்தி மெனிங் ஆகிய நான்கு பிரதிநிதிகளும் ஆதரித்து முன்மொழிந்திருந்தனர். இது இலங்கை தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு ஆரோக்கியமானதொரு முன்னேற்றத்தை வழங்கியுள்ளது. 

குறிப்பாக இப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு விடயங்கள் ஈழத்தமிழர்களின் நீண்டகால அரசியல் அபிலாசைக்கான சர்வதேச ரீதியிலான ஓர் பலமான அங்கீகாரமாக காணப்படுகின்றது. 

முதலாவது, குறித்த பிரேரணையில் தமிழர் தாயகம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பகுதியை தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்று குறிப்பிட்டிருக்கின்றது. நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதி அதிகம் இராணுவமயப்படுத்தப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு பகுதியானது வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பகுதியாக இருக்கின்றது என்பதும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. முன்னைய சமாதான நடவடிக்கைளில் தமிழர் தாயகக்கோட்பாட்டை அங்கீகரித்தே அமெரிக்க ஆசிர்வாதத்துடன் நோர்வே மத்தியஸ்தம் செய்தது எனினும் 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் நிறைவுற்ற பின்னர் சர்வதேச ரீதியான தீர்மானம் ஒன்றில் தமிழர்களின் தாயகக்கோட்பாட்டை முதன்மையாக அடையாளப்படுத்தி இருப்பது தமிழர் உரிமைப்போராட்டத்தினோர் ஆரோக்கியமான முன்னகர்வே ஆகும்.

இரண்டாவது, இந்தப் பிரேரணையில் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் என்பதில் ஆயுத இயக்கங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதில் விடுதலைப்புலிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இதுவரையான அணுகுமுறைகளோடு ஒப்பிட்டால், இது சற்று மாறுபட்ட ஒன்றாக உள்ளது. 1997இல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அமெரிக்க தடை செய்தது. 2008இல் விடுதலைப்புலிகள் அமைப்பு உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் மோசமான இயக்கம் என்று அமெரிக்காவின் உளவுப்பிரிவான குடீஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், உலகில் ஜனநாயகத்தை அதிகமாக உரையாடும் அமெரிக்காவில் அதன் மக்கள் பிரதிநிதிகள் உளவுப்பிரிவால் அதிபயங்கரவாதியாக எச்சரித்தவொரு அமைப்பை 'ஆயுதம் தாங்கிய சுதந்திற்கான இயக்கம்' என பிரேரனை முன்வைக்கப்படுகின்றமை இலங்கை தமிழருக்கு சாதகமானதொரு முன்னேற்றமாகவே காணப்படுகிறது. பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்குமாறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ள சூழலில் அமெரிக்க காங்கிரஸில் இவ்வாறான பிரேரணை முன்னகர்த்தப்பட்டுள்ளமை வலுவானதாகும்.

இலங்கை அரசாங்கம் சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கத்தால் அமெரிக்க காங்கிரஸ் பிரேரனையை ஆரம்பத்தில் உதாசீனப்படுத்தியபோதிலும், ஜூன் முதல்வாரங்களில் விழிப்புற்று தீர்மானத்தை சீர்செய்வதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை அரசாங்கம் தனது பிரதிபலிப்பை வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக வெளிநாட்டு விவகாரங்கள் சபை, ஆசியா தொடர்பான துணைக்குழு சபை மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் உரையாடலை ஆரம்பித்துள்ளனர். மேலும், அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக பொறுப்புக்கூறல் சார்ந்து இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை முன்வைத்து இலங்கை மீதான தீர்மானம் குறித்து எந்தவித செயற்பாடும் வேண்டாம் எனும் அவசர கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் அமெரிக்க காங்கிரஸின் பிரேரனை நகர்விற்கு பின்னரான தமிழ்த்தரப்பின் செயற்பாடுகளை தேடுமிடத்து தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடமிருந்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் தொடர்பான செய்தியை ஜூன்-06ஆம் திகதியே அவதானிக்கக்கூடியதாக இருந்தது. தமிழ் அரசியல் பிரதிநிதிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், 'வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அரசுக்கு வந்தவினை என்பதை சுட்டிக்காட்டி அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தை வரவேற்பதாக' செய்திகளில் உலாவியது. இக்குறித்த அறிவிப்பும் செய்தியாளர்கள் அரசியல் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு அமெரிக்க பிரேரனை சார்ந்த நிலைப்பாட்டை வினாவிய போது கிடைக்கப்பெற்ற பதிலாகவே காணப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் பூச்சிய வரைபும் இலங்கை தமிழர்களின் அபிலாசைகள் பலதை பூர்த்தி செய்வதாகவே அமைந்தது. எனினும் இறுதி வரைபு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமைந்த போதிலும் தமிழர்களிற்கு மனநிறைவினை தரக்கூடியதாக அமைந்திருக்கவில்லை. இதற்கு முழுப்பொறுப்புடையோர் தமிழ் அரசியல் பிரதிநிகளே ஆவார்கள். அவர்கள் சர்வதேச தரப்புடன் இராஜதந்திரரீதியிலான நகர்வுகளை முன்னெடுக்க தவறியிருந்தார்கள். ஒரு கடிதமும், ஊடகங்களில் அறிக்கையிடலுமே தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் உச்சபட்ச இராஜதந்திர செயற்பாடாக அமைந்தது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை குறித்த காலப்பகுதி முழுவதும் சர்வதேச இராஜதந்திரிகளுடனான உரையாடல்களுடனேயே நேரத்தை செலவிட்டனர். வேறு விடயங்களுக்கு நேரத்தை ஒதுக்குவதை மார்ச்-24ஆம் திகதி வரை தவிர்த்தே வந்தனர். அதன் வெற்றியே பூச்சிய வரைபில் கூறப்பட்ட இறுக்கமான விடயங்களிலிருந்து இறுதி வரைபில் தளர்வு காணப்பட்டது. அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தை ஆரம்பத்தில் அசண்டை செய்தாலும் தற்போது இலங்கை அரசாங்கம் அத்தீர்மானத்தின் இறுக்கமான விடயங்களை தளர்வுறச்செய்வதில் இராஜதந்திர உரையாடல்களை அதிகரித்துள்ளது.

தமிழ் அரசியல் தரப்பு தமிழர் நலன்சார்ந்த அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தை பார்வையாளராக கடந்து செல்வது மீள தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்பை நழுவவிடக்கூடிய சூழலையே ஏற்படுத்துமாகும். மேலும், தமிழர் நலன்சார் தீர்மானத்தில் தமிழ் தரப்பின் பார்வையாளர் போக்கு என்பது மீள 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்த சூழலையே ஏற்படுத்தக்கூடிதாகும். ஈழத்தமிழர்களே நேரடியாக பாதிக்கப்படும் தரப்பாகும். அத்தரப்பின் ஈடுபாடில்லாமால் மத்தியஸ்த தரப்பும் ஒடுக்குமுறையை செய்கின்ற எதிர்த்தரப்புமே உரையாடலை மேற்கொள்ளுமாயின், பாதிக்கப்பட்ட தரப்பின் உண்மையான அபிலாசைகள் உணர்வுபூர்வமாக உரையாடலில் அங்கம் பெறாது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்ததில் இந்திய நலன் முன்னிலைப்பட்டு உரையாடல் இடம்பெற்றதைப்போன்றே இங்கு அமெரிக்க நலன் ஈடேற்றம் பெறுவதே முதன்மை பெறும். இங்கு ஈழத்தமிழர் உரிமைப்போராட்டம் அமெரிக்க நலனை ஈடேற்றுவதற்கான ஊடகமாக கையாளப்பட்டு தூக்கியெறியும் அவல நிலையே தொடரும். இவ்வாறான அரசியலையே தமிழ் அரரசியல் பிரதிநிதிகள் செய்து வருகின்றனர். பூகோள அரசியலை அதிகமாக உரையாடி தாமே மாற்றென பிரகடனப்படுத்திய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் சர்வதேச அரசியல் சக்திகளின் கையாள்கைக்கு எதிர்வினையாற்றும் எவ்விதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் காலப்பகுதியிலும் செய்திருக்கவில்லை. தற்போது அமெரிக்க காங்கிரஸில் மேற்கொள்ளப்படும் பிரேரணைக்கும் செய்யவில்லை.

அரசியல் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் மந்தகதியில் காணப்படுகையில் அதனை மக்களிடம் சுட்டிகாட்டி அரசியல் பிரதிநிதிகளை சரியான நீரோட்டத்தில் நகர்த்த வேண்டிய ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடகமும் தமிழ்த்தரப்பில் தன் பணியை செய்ய தவறுவது மாத்திரமின்றி அரசியல் தரப்பின் பிழையான விடயங்களையும் மக்களிடம் சரியென கொண்டு செல்வது வேதனைக்குரிய விடயமாகும். இலங்கையின் தமிழ் ஊடகமொன்றில், 2012ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி மாநாட்டின் தலைமையுரையில் இரா. சம்பந்தன் கூறிய விடயத்தை சுட்டிக்காட்டி சம்பந்தன் அவர்கள் ஒன்பது வருடங்களுக்கு முன்னரே இத்தகு சூழல் வருமென ஆருடம் கூறியதாகவும், அதனை பாதுகாக்கும் வகையில் 'பொறுமை காக்க வேண்டும், அதுவும் ஐக்கிய நிலைப்பாட்டுடன் பொறுமை காக்க வேண்டும்' என பிரதானமாக கூறியுள்ளாரென தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் பார்வையாளர் தனத்தை ஆதரித்து கருத்திடுவது வேதனைக்குரியதாகும்.

மேலும், மே-18 அமெரிக்க காங்கிரஸில் தமிழர் நலன்சார்ந்த பிரேரனை முன்வைக்கப்பட்ட போதிலும் தமிழ் ஊடகங்களில் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் தொடர்பான செய்திகள் ஜூன் முதல் வாரங்களில் இலங்கை வெளியுறவு அமைச்சின் எதிர்ச்செயற்பாடுகளை செய்தியிடலிலேயே முதன்மைபெறலாயிற்று. தமிழர்நலன் சார்ந்த பார்வையாய் முக்கியத்துவத்தை அளித்திருக்கவில்லை. எனினும் இலங்கையின் ஆங்கில ஊடகங்களில் தமிழ் ஊடகங்கள் செய்தியிட முன்னரே அதற்கு முதன்மையிடம் வழங்கப்பட்டு இலங்கையின் வெளியுறவுக்கொள்கை தோல்வியுற்று வருவதாக இலங்கை அரசாங்கத்துக்கு அபாய எச்சரிக்கையை விட ஆரம்பித்து விட்டது. குறிப்பாக, அமெரிக்க காங்கிரஸ் பிரேரணை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, சிங்கள தேசியவாத பார்வை கொண்டவரான தயாகமகே என்பவர் 'ராஜபக்ஷ ஆட்சியின் மோசமான வெளிநாட்டு-கொள்கை தோல்வி: யு.எஸ். காங்கிரசில் போர்க்குற்றத் தீர்மானம்' எனும் தலைப்பில் மே-25 அன்று கொழும்பு ரெலிகிராப் (ஊழடழஅடிழ வுநடநபசயிh) தளத்தில் கட்டுரையை எழுதியிருந்தார். இது சிங்கள தரப்பு அமெரிக்க காங்கிரஸ் பிரேரனையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதையே பறைசாற்றுகிறது. 

'வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட ஒரேயொரு பாடம், நாம் வரலாற்றிலிருந்து பாடங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே' ஆகும். கன்பூசியஸின் இவ்வரிகளை மீள்நினைவூட்டுவதுபோல், இலங்கை தமிழர் அரசியல் தரப்பில் தொடர்ச்சியான நிகழ்வுகள் நடக்கின்றன. இலங்கை தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில், வல்லரசு சக்திகள் தங்கள் நலனுக்காக தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை கையாண்டு தூக்கி எறிந்தமையையும், இராஜதந்திர பூச்சியத்தால் வரைபுகளில் ஏற்பட்ட மாற்றங்களுமென நிறைய வரலாற்று பாடங்கள் தமிழரிடம் நிறைந்து காணப்படுகிறது. எனினும் வரலாற்றிலிருந்து பாடங்களை கற்காத சமூகமாகவே தமிழ்த்தரப்பு கிடைக்கப்பபெற்ற வாய்ப்புகளை எல்லாம் இழந்து சென்றுள்ளது. இம்முறையாவது தக்கவைப்பார்களா? என்பது காலத்தின் பதிலாகவே உள்ளது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-