இலங்கை விடயத்தில் இந்தியாவின் இராஜதந்திர தோல்வி மீளமைக்கப்படுமா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பது எல்லையற்ற வகையில் அதிகரித்து வருகிறது. இந்நிலைமை பிராந்திய அரசாகிய இந்தியாவிற்கு பேரிடரான விடயமாகும். எனினும் இலங்கை ஆட்சியாளர்கள் கூறிவரும் இந்தியா முதல் (India First) கொள்கையால் சற்று நிதானமாக இருந்தார்கள். எனினும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பது நெட்டிசன்களால் இலங்கை சீனாவின் காலணித்துவ நாடென கிண்டலடிக்கும் நிலைமையையே ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் அமைச்சர் ஒருவரும் சீனா மொழி கற்க வேண்டியது அவசியம் என்ற வகையில் கருத்துரைத்துள்ளார். இந்நிலையில் இலங்கையின் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷா அவர்கள் சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் மெய்நிகர் வழியில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ள விடயம் இலங்கை இந்தியா முதன்மை எனும் கொள்கையை முழுமையாக நிராகரித்து விட்டார்களா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் இலங்கையின் இந்தியா முதன்மை கொள்கை முற்றாக காலாவாதியாக நீக்கப்பட்டு விட்டதா? என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றதுமே இந்தியாவுடனான இலங்கையின் உறவு சார்ந்து இந்தியா அச்சம்கொள்ள தொடங்கியது. அதனடிப்படையிலே இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து கோத்தபாய ராஜபக்ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்ததுடன் இந்தியாவிற்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்தார். கோத்தபாய ராஜபக்ஷாவும் இந்தியாவிற்கான சாதகமான சமிக்ஞையை அளித்து தனது முதல் வெளிநாட்டு பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டு இந்திய பிரதமருடன் எவ்வித மொழிபெயர்பாளருமின்றி சந்திப்பை மேற்கொண்டார். மேலும், அங்கு த ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் அவர்களுடைய புத்தகத்தில் கோத்தபாய ராஜபக்ஷா பற்றி குறிப்பிட்டுள்ள, 'இந்தியாவுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன் என்று கோட்டபயா தனது வார்த்தையை வழங்கினார். அவர் தனது வார்த்தையை பேணினார்' என்பதை குறிப்பிட்டு தான் வெளிப்படையிலேயே இந்தியா சார்ந்து உணர்ச்சிமிக்கவர் எனக்குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ச்சியாக ஆரம்ப காலங்களில் இந்தியா சார்ந்து முரண்பாடற்ற வகையிலேயே தனது இந்தியாவுடனான உறவை கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் கட்டமைத்த வந்தது. குறிப்பாக, இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவுகளைப் பலப்படுத்துவதுடன் கோட்டபாய ராஜபக்ஷா தலைமையிலான இலங்கை அரசாங்கம், இந்தியாவுக்கான இலங்கையின் வெளிநாட்டு தூதுவராக அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு வெளிநாட்டு தூதரை (மிலிந்த மொரகொட) நியமித்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் பாராளுமன்றத்துக்கு நுழைந்த மிலிந்த மொரகொட பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார். மேலும் தீவிர அமெரிக்க சார்பானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜபக்ஷா அரசாங்கம் மீதான இந்தியாவின் சீனா சார்பு பார்வையை களைய மிலிந்த மொரகொட-இன் நியமனத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தி கொண்டது.
கடந்த ஆகஸ்ட் 2020இல் இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளியுறவுச்செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ், ஆகஸ்ட் 20 அன்று ஒளிபரப்பான டெரானா-24 செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், 'பொருளாதார மேம்பாட்டுக்காக கொழும்பு மற்ற முக்கிய நாடுகளுடன் கையாள்வதற்கு திறந்த நிலையில் உள்ளது. எனினும் மிகவும் திட்டவட்டமாக, ஜனாதிபதி எங்களிடம் ஒரு மூலோபாய பாதுகாப்பு வாரியாக 'இந்தியா முதல்' கொள்கை இருப்பதாகக் கூறியுள்ளார். ஏனென்றால் நாங்கள் இந்தியாவுக்கு ஒரு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்க முடியாது, நாம் இருக்கக்கூடாது.' என்று தெரிவித்துள்ளார். கொலம்பேஜ் இதே போன்ற கருத்துக்களை டெய்லி மிரர் செய்தித்தாளுக்கு அளித்த நேர்காணலிலும் தெரிவித்துள்ளார். 'இலங்கை இரண்டு பொருளாதார நிறுவனங்களுக்கு இடையில் உள்ளது. ஆயினும் மூலோபாய பாதுகாப்பைப் பொறுத்தவரை, இலங்கை எப்போதும் இந்தியாவின் முதல் அணுகுமுறையைக் கொண்டிருக்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். அதாவது இந்தியாவின் மூலோபாய பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் இலங்கை செய்யாது.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வெளியுறவுக்கொள்கை இந்தியா முதல் கொள்கையை மையப்படுத்தி செயற்படுவதாகவே இலங்கையின் வெளியுறவுத்துறை தொடர்ச்சியாக கூறி வந்தது. எனினும் கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் புதிய அரசாங்கத்தின் செயற்பாடகளூடாக வீழ்ச்சியடையத் தொடங்கின. அரசாங்கத்தின் பிரதானமான இரண்டு விடயங்கள் இலங்கை வெளியுறவுத்துறை கூறிவரும் 'இந்திய முதல்' கொள்கைக்கு முரணானதாக உள்ளது.
ஒன்று, கொழும்பு துறைமுகத்தில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கொள்கலன் முனையத்தில் இலங்கை-இந்தியா-ஜப்பான் செய்துகொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்திலிருந்து இந்தியா மற்றும் ஜப்பானை இலங்கை அரசாங்கம் அகற்றியது. அதற்கு பதிலாக இது இந்தியாவிற்கு மேற்கு கொள்கலன் முனையத்தை முந்தைய அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு உடன்படிக்கை போலல்லாமல் ஒரு தனியார் ஒப்பந்தமாக வழங்கியது. எனினும் கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு அருகிலுள்ள தெற்கு முனையத்தின் 70சதவீதத்திற்கு மேற்பட்ட பங்கு சீனா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு, சீனாவால் நிதியளிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர் திட்டமான 1.4 பில்லியன் டாலர் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) திட்டம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும் களமாக மாறியுள்ளது. அதற:கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த மே மாதம், இலங்கை பாராளுமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம் மசோதாவை நிறைவேற்றியது. கொழும்பு துறைமுக நகரம் இலங்கைக்குள் ஒரு 'சீன மாகாணமாக' மாறக்கூடும் என்ற கவலையும் இருந்தபோதிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயமாகவும் காணப்படுகிறது.
குறித்த இரண்டு விடயங்களுக்கு அப்பால் இலங்கையின் வெளியுறவுக்கொள்கைசார் கருத்தியலிலும் தற்போது இலங்கை அரசாங்கம் 'இந்தியா முதல்' கொள்கையை தவிர்த்து செல்ல ஆரம்பித்துள்ளது. இலங்கையின் இந்திய முதல் கொள்கை காலவதியாகி விட்டது என்பதனை வெளிப்படுத்தும் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கையுடனான சீனாவின் உறவின் பெறுமதியை ஜூன்-15 அன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், மெய்நிகர் வழியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். குறித்த நிகழ்வில், 'சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும். அந்த வரலாற்று வெற்றியை சீனாவிற்கு பெற்றுக் கொடுத்தது இத்தால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1921ஆம் ஆண்டு பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆசியாவிற்கே மிகப்பெரியதும், முக்கியமானதுமான கட்சி என்று நான் கூறினேன்.' என தெரிவித்துள்ளார். ஆசிய நூற்றாண்டுக்கான எழுச்சியை தனதாக்க இந்தியாவும் எண்ணுகிற சூழலில் இந்தியாவின் பிராந்தியத்தில் உள்ள இலங்கையானது சீனாவின் எழுச்சியை விரும்புவது என்பது இந்தியாவை முழுமையாக ஓரங்கட்டும் எண்ணப்பாங்கிற்கே உரியதாகும்.
இந்நிலையில் காலந்தாழ்த்தி இந்தியாவின் இராஜதந்திர ஆலோசகர்கள் மத்தியில் இந்தியாவும், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதை சிந்திக்க வேண்டும் என்ற அறைகூவல் தற்போது எழுந்துள்ளது. இந்திய மூத்த இராஜதந்திரியும், இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதருமான குர்ஜித் சிங், 'ராஜபக்ஷர்களும் சீனர்களும் உண்மையில் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் திறனைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் நடத்தை மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் மாறிவிட்டது.' என்று தி பிரின்ட் (The Print) ஊடகத்திற்கு கூறியுள்ளார். மேலும் இந்தியா இலங்கையை அச்சுறுத்தும் தமிழர் விவகாரத்துக்கான 13ஆம் சீர்திருத்தமும் காலவதியாகி விட்டது என்ற எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். 'தமிழ் பிரச்சினையைப் பொருத்தவரை, அவர்கள் தங்கள் காரணத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பது கூட பயனற்றது. மாகாண சபைகள் இப்போது சோர்வடைய அனுமதிக்கப்பட்டுள்ளன.' என்று தெரிவித்துள்ளார். இது இலஙடகையுடனான இந்தியாவின் இராஜதந்திர தோல்வியை இந்திய இராஜதந்திரிகள் உறுதிசெய்வதாக அமைகிறது.
இதனடிப்படையில் த பிரின்ட் ஊடகம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜபக்ஷ சகோதரர்களான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான ஆரம்ப நல்லுறவான இலங்கை 'இந்தியா முதல்' கொள்கையை கடைபிடிப்பது இப்போது 'வேகமாக மறைந்து வருகிறது' என்பது இப்போது தெளிவாகியுள்ளது என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
2019 ஆட்சிப்பீடமேறிய மொட்டு அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு அனுபவத்தை முதிர்ச்சியாக கொண்டு புதிய அரசாங்கம் முழுமையாக நிலைப்படும் வரையிலும் மற்றும் புதிய அரசாங்கத்துடனான சீனாவின் உறவு முதிர்ச்சி அடையும் வiயிலும் இந்தியாவை 'இந்திய முதல்' கொள்கை எனும் தந்திர சொல்லாடலூடாக இராஜதந்திரமாக கையாண்டுள்ளது. தற்போது செயலாலும் சொல்லாலும் இந்தியாவை ஓரங்கட்டி சீனாவினை மையப்படுத்திய வெளியுறவுக்கொள்கையை இலங்கை வடிவமைத்து வருகிறது. இந்திய இராஜதந்திரிகளும் காலந்தாழ்த்தியாயினும் காத்;திரமான விழிப்புணர்வை பெற்றுள்ளது குர்ஜித் சிங்-இன் கருத்தூடாக அறிய முடிகிறது. இந்நிலையில் இந்தியாவின் கொள்கைவகுப்பு புதிய பரிணாமத்தில் இலங்கையை பணிய வைக்குமா? அல்லது மீள வலுவிழந்த 13ஆம் சீர்திருத்ததுடன் இலங்கையை பின்தொடர்வார்களா? என்பது காலத்தின் பதிவிலேயே தங்கியுள்ளது.
Comments
Post a Comment