பிரதமர் உரையில்; இலங்கை தேசியவாதத்தை சீன தேசியவாதமாக்க முயற்சிக்கிறாரா? -ஐ.வி.மகாசேனன்-
பல நாடுகள் சீன முதலீடுகளை மறு மதிப்பீடு செய்தாலும், இலங்கையில் ராஜபக்ஷாக்களின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை சீனாவுடனான பொருளாதார ஈடுபாட்டை இரட்டிப்பாக்கி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காலப்பகுதியிலும் போது கூட, பெய்ஜிங்கின் இலங்கைக்கான கருத்துக்கள் ஒரு விழிப்புணர்வோடு தொடர்கின்றன. ராஜபக்ஷாக்களின் நிர்வாகத்தின் முழு கட்டுப்பாட்டில்;, சீன செல்வாக்கை செலுத்துவதற்கான ஒரு தனித்துவமான தருணமாக கருதப்படுகிறது. எனினும் இலங்கையர்கள் மத்தியில் சீனாவுடனான இலங்கை அரசாங்கத்தின் உறவு தொடர்பில் அதிருப்தியான எண்ணங்களும் சந்தேக பார்வைகளும் ஒருதளத்தில் காணப்படவே செய்கிறது. இது ராஜபக்ஷாக்களிற்கான ஆதரவை மக்களிடம் குறைப்பதாக விமர்சனம் உண்டு. இந்நிலையை சீர்செய்ய ராஜபக்ஷாக்களின் நிர்வாகம் சீனா தொடர்பான நேரான எண்ணங்களை இலங்கையின் பெரும்பான்மை இன சிங்கள பௌத்த தேசியவாத மக்களிடையே பரப்புரை செய்வதில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றது.
அந்த வகையிலானதோர் செயற்பாடாகவே சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் மெய்நிகர் வழியூடாக இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷா அவர்கள் ஆற்றிய உரை காணப்படுகிறது. அதனடிப்படையில் அவ்உரையில் இலங்கை மக்களை சீனா சார்பில் ஈர்க்கும் வகையிலான அரசியல் உரையாடலை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) 100வது ஆண்டு விழாவை ஜூன்-15 அன்று இணையவழி தொழில்நுட்பம் மூலம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பங்குபற்றினார்கள். மேலும் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவா நானாயக்கார, உதய கம்மன்பிலா, முன்னாள் அமைச்சர் டி.வி. குணசேகர மற்றும் திஸ்ஸா விதானே, மற்றும் இலங்கையின் 14 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷா அவர்கள் இலங்கை – சீனா உறவின் ஆழமான வரலாற்று உறவை சிங்கள பௌத்த தேசியவாதத்தை இணைத்தும், சீனா மீதான இலங்கையர்கள் கொண்டுள்ள எதிரான எண்ணங்களை களையும் வகையிலான வரலாறுகளை குறிப்பிட்டும் பிரச்சார வகையிலேயே உரையை நிகழ்த்தியிருந்தார்.
முதலாவது, இலங்கையில் பௌத்தத்தை நிறுவிய வரலாற்று நாயகன் தேவம்பிய தீசன் காலத்து வரலாற்று தொன்மையோடு சீனாவின் வரலாற்றை தொடர்புபடுத்தி உள்ளார். சீனாவின் அடையாளமாகிய சீனப்பெருஞ்சுவர் நிறுவப்பட்ட காலப்பகுதியில் சமாந்தரமாக தேவநம்பிய தீசன் அநுராதபுரத்தில் மஹமேவனா உயனவினை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இவ்வரலாற்று தொடர்பு சக்திவாய்ந்ததாக சிறப்பிக்கின்றார். இதனூடாக சிங்கள பௌத்த தேசியவாத மக்களின் மனங்களில் சீனா பற்றிய ஓர் கவர்ச்சியை ஏற்படுத்த பிரதமர் முயலுவது புலப்படுகிறது. புதிய அரசாங்கம் சிங்கள பௌத்த தேசியவாதத்தை அதிகம் உரையாடியே ஆட்சியிலேறி ஆட்சியை தொடருகின்றனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா அவர்களும் பதவிப்பிரமான நிகழ்வை சிங்கள பௌத்த தேசியவாத நாயகனாய் புகழாரம் சூடப்படும் துட்டகைமுனுவினால் நிறுவப்பட்ட ருவான்வெலிசாய விகாரையில் ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது, இலங்கையும் சீனாவும் பௌத்தத்தை பேணும் தேசங்களாய் தொடர்புபடுத்தியுள்ளார். 'இரு நாடுகளும் அன்றிலிருந்து ஒரே மாநிலம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றைப் பேணுகின்றன' என்கின்றார். இது சிங்கள பௌத்த பெரும்பான்மையின மக்களை கவர்வதற்காக ராஜபக்ஷாக்கள் தேர்தல் கால பிரச்சாரங்களில் பயன்படுத்தும் 'ஒரு தேசம்; ஒரு நாடு' என்பதை ஒத்திருப்பதாக சுட்டுகின்றார். எனினும் 'ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்' என்பது சீன மக்கள் குடியரசின் அரசியலமைப்பு கொள்கையாகும். இது முறையே 1997 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் ஹாங்காங் மற்றும் மக்காவு சீனாவின் சிறப்பு நிர்வாக பிராந்தியங்களாக ஆனதிலிருந்தான ஆட்சியை விவரிக்கிறது. 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாகவே ஒரு நாடு, இரண்டு அமைப்புகள் கொள்கை 'பூஜ்ய மற்றும் வெற்றிடமாக' அறிவிக்கப்பட்டது. ஆக சீன நீண்டகாலம் ஒரு நாடு இரு தேச கொள்கையை அங்கீகரித்த நடைமுறைப்படுத்திய தேசமாகும். இலங்கையிலும் தனித்து சிங்கள பௌத்தம் மாத்திரம் காணப்படுவதில்லை.இலங்கையில் நீண்டகாலமாய் சிங்கள பௌத்தத்தை தாண்டி வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் இனங்களை பிரதம மந்திரி மறந்துள்ளார். மேலும் சிங்கள பௌத்த தேசியாவதிகள் சீனாவுடனான உறவை ஆதரிப்பதற்காக 'கடந்த காலத்தில், பௌத்தமே சீனா மற்றும் இலங்கையை இணைத்தது.' என இலங்கையுடனான சீனா தொடர்புக்கு பௌத்த காரணத்தை அதிகமாக உரையாடலில் முன்னிலைப்படுத்தி உள்ளார்.
மூன்றாவது, சீனா இலங்கையை ஆக்கிரமிப்பு செய்வதாக எதிர்க்கட்சிகள் இலங்கையரிடையே விதைத்து வரும் எண்ணத்தை நிராகரிக்க முயலுகின்றார். 'சீனா ஒரு நாடு மட்டுமல்ல, சீனா ஒரு பெரிய நாகரிகம். சீனா பல்வேறு நாடுகளால் படையெடுக்கப்பட்டது, ஆனால் சீனா ஒருபோதும் மற்ற நாடுகளுக்கு படையெடுக்கவில்லை.' என்ற கருத்தினூடாக சீனா இலங்கையை ஆக்கிரமிப்பு செய்வதாக அதிகரித்துவரும் சீனா மீதான எதிர்மறையான கருத்துக்களை முற்றாக நிராகரிக்கும் வகையில் உரையாற்றி உள்ளார்.
நான்காவது, இலங்கையர்கள் மற்றும் சீனர்கள் பொருளாதார கட்டமைப்பிலும் ஒன்றித்தவர்கள் என நிறுவுகின்றார். சீனாவின் பொருளாதார பலமாக விவசாயத்தை முதன்மைப்படுத்துகின்றார். 'இது உலகின் மிகப்பெரிய மக்களை ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தில் நம்ப வைக்கும் ஒரு நாடு. அது மட்டுமல்லாமல், சீனா தனது நம்பிக்கையின் அடிப்படையில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் சீனா மிகப்பெரிய நாகரிகம் என்று நான் சொல்கிறேன். அந்த கம்யூனிஸ்ட் கட்சி அந்த நாகரிகத்தின் அடையாளத்தை அங்கீகரித்ததால் சீனா இன்று உலக சக்தியாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது' என்றார். இலங்கையும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடு என்ற ரீதியில் சீனர்கள் வேறுபட்டவர்கள் அல்ல. அவர்களும் இலங்கையர்களின் பண்பாட்டை ஒத்தவர்கள் தான். ஆதலால் இலங்கையர்களால் சீனாவை ஏற்க முடியும் நேசிக்க முடியும் என்பதை நிறுவுகின்றார்.
ஐந்தாவது, இலங்கையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் காவலர்களாக சீனாவை உயர்த்தி பரப்புரை செய்கின்றார். 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் சுதந்திரத்திற்கு சீனா செய்த சேவையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. வரலாற்றைப் பொறுத்தவரை சீனா எங்கள் பழைய நண்பர் என்று நான் எப்போதும் கூறுவேன்.' என சீனா இலங்கையின் பாதுகாப்பில் தவிர்க்க முடியாத தேசமென விளக்குகின்றார். மேலும் இலங்கையின் பாதுகாப்புக்காக பல இழப்புக்களை எதிர்கொண்ட தியாகிகளாய் சீனாவிற்கு புகழாரம் சூட்டி பரப்புரை செய்கின்றார். 'கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது கட்சிகளுடன் இணைந்து பணியாற்றிய அரசாங்கத்தின் கீழ் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாங்கள் முடிவுக்கு கொண்டுவந்தோம். போரின் போதும் அதற்குப் பின்னரும் நமது சுதந்திரத்திற்காக சீன அரசு செய்த தியாகங்களை நாங்கள் எப்போதும் பாராட்டுகிறோம். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஆசியாவில் ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு இது ஒரு பெரிய பங்களிப்பாக இருந்தது.' என்கின்றார். இதுவரை காலமும் போர் வெற்றி வீரர்களாக தியாகிகளாக இலங்கை இராணுவத்தை புகழ்ந்துரைத்த பிரதமர் தற்போது சீனாவினையும் அக்கௌரவத்துக்குள் ஒன்றினைப்பது, இலங்கை தேசியவாதத்தை சீனாவுடன் இணைக்கும் முயற்சியாகவே அவதானிக்கப்படுகிறது.
ஆறாவது, சீனாவை இலங்கையர்கள் ஏற்கும் வகையில் சீனா இலங்கையின் பிராந்திய நாடு என்பதையும் வலிந்து பிரதமர் பரப்புரை செய்வது உரையில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கையில் சீனாவின் முதலீட்டு ஆக்கிரமிப்புக்களை எதிர்க்கும் தரப்பு முன்வைக்கும் கருத்தியலாக, சீனாவினுடான இலங்கையின் நெருக்கம் இலங்கையின் பிராந்தியமாகிய இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமைவதாகும். பிராந்திய அரசை பகைத்து கொள்ளக்கூடாதென்ற கருத்து நிலை அதிகளவில் காணப்படுகிறது. இதனை சீர்செய்யும் வகையில் தெற்காசிய பிராந்திய கருத்தியலை மறுத்து பரந்த ஆசிய பிராந்திய கருத்தியலை முன்வைத்த சீனாவை பிராந்திய அரசாக, குறிப்பாக பலமிக்க பிராந்திய அரசாக பரப்புரை செய்கின்றார். 'சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும். அந்த வரலாற்று வெற்றியை சீனாவிற்கு பெற்றுக் கொடுத்தது இத்தால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1921ஆம் ஆண்டு பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆசியாவிற்கே மிகப்பெரியதும், முக்கியமானதுமான கட்சி என்று நான் கூறினேன்.' என சீனாவினை மையப்படுத்தி ஆசிய பிராந்தியம் எழுச்சியுறுவதால் ஆசியவாதத்தை மையப்படுத்தி சீனாவிற்கான இலங்கையின் உறவு நெருக்கத்தை ஆதரிக்கின்றார்.
எனவே பிரதம மந்திரியின் சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா இணையவழி உரை என்பது இலங்கையர்களுக்கான சீனா சார்ந்த பிரச்சார உரையாகவே முழுமைப்படுத்தி உள்ளார். இது எவருடைய எதிர்ப்பினாலும் ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் சீனாவை விலகி செல்லாது என்பதனையே உறுதிப்படுத்துகின்றது. இலங்கையர்களிடம் சீனாவை பற்றிய நேரான எண்ணங்களை விதைத்து சீனாவை இலங்கையின் நெருக்கமான உறவு நாடாக பிணைப்பதையே ராஜபக்ஷாக்களின் நிர்வாகம் முதன்மைப்படுத்தி உள்ளது என்பதையே பிரதமரின் உரையும் வெளிப்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment