ஈழத்தமிழர்களிடமிருந்து தமிழக மக்கள் திட்டமிட்டு அந்நியப்படுத்தப்படுகிறார்களா? -ஐ.வி.மகாசேனன்-

 தமிழக மக்கள் விலகிச்செல்லும் வகையில், ஈழத்தமிழர்களின் தமிழக அரசியல் செயற்பாடுகள் சமீபத்தில் அதிகரித்து வருவதனை  அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை விவகாரம் இந்திய அரசியலை ஈழத்தமிழர்களிமிருந்து தூரமாய் நகர்த்திய போதிலும் தமிழக மக்கள் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தில் இறுக்கமான ஒத்துழைப்பையே வழங்கி வந்தார்கள். எனினும் இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் மற்றும் போராட்ட வீரர்கள் பற்றிய எதிர்மறையான கொச்சைப்படுத்தல் கருத்தியல்கள் தமிழக மக்களிடம் அதிகமாக உரையாடப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவை தமிழக மக்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஆதரவு தளத்திலிருந்து விலகிச்செல்கின்றார்களோ என்ற ஐயப்பாட்டை உருவாக்குகின்றது. இதனை மையப்படுத்தியே இக்கட்டுரை ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் தொடர்பிலே தமிழக மக்கள் இன்று கொண்டுள்ள கரிசனையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் தடம் புரண்ட காலங்களிலெல்லாம் தமிழக அரசியல் பார்வையில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போராட்டங்களை நகர்த்தியதில் தமிழக மக்களின் உன்னத போராட்டங்கள் கனதியான இடத்தை வரலாற்றில் பெற்றுள்ளது. உரிமைப்போராட்டத்தில் ஈழத்தமிழன் உயிர்த்தியாகம் செய்வன்பது, தனது மக்களின் விடுதலைக்காக அம்முடிவை வரித்து கொள்கிறான். ஆயினும் தமிழ் என்ற ஒற்றை உறவில் ஈழத்தமிழர்களின் துயரம் கண்டு தமிழக மக்களின் உயிர்த்தியாகங்கள் தமிழக மக்கள் ஈழத்தமிழருடன் கொண்ட உன்னத உறவையே பறைசாற்றுகிறது. அதிலுள்ள உண்மை மற்றும் உணர்வு ஒருமைப்பாடு  காரணமாகத்தான் தமிழகத்தில் இதுவரையிலும் 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளில் ஈழம் என்கிற வார்த்தை உச்சரிக்கப்படாமல் ஒரு தேர்தல்கூட நடந்ததில்லை. 2009ஆம் ஆண்டு இனப்படுகொலைக்குப் பிறகு, அது இன்னும் வீரியமடைந்தது. 2009, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் 2011, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் என நான்கு தேர்தல்களில் ஈழம் பிரதான பேசுபொருளாக இருந்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் கூட வெற்றியீட்டியுள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழத்தமிழர் நலனை ஓர் அத்தியாயமாகவே இணைத்திருந்தது. மேலும் தி.மு.க கூட்டணியில் ஈழத்தமிழர் நலனை முன்னிலைப்படுத்தும் கட்சிகளும் ஒன்றிணைந்திருந்தன. தமிழக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, 'தமிழகத் தேர்தலில், சாதியைத் தாண்டி தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம் என்றால் அது இலங்கைத் தமிழர் விவகாரம் மட்டும்தான்.' என்கின்றார். இவை தமிழக ஆட்சியை தீர்மானிப்பதிலும் ஈழத்தமிழர் நலன்சார்ந்த அக்கறையை தமிழக மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையை உணர்த்தி நிற்கின்றது.

இந்நிலையில், ஈழத்தமிழர் நலனுடன் இணைந்து செயற்படும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான திராவிட கழகத்தின் தலைவர் கி.விரமணி அவர்கள், ஈழத்தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்குமிடையிலான உறவில் அண்மைக்காலத்தில் விரிசல் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இவ்விடயத்தை சில தமிழக சாமான்ய மக்களின் முகநூல் பதிவுகளில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போராட்டம் தொடர்பிலே முன்வைக்கப்படும் பதிவுகளும் உறுதிப்படுத்துகின்றது. இத்தகைய மாற்றத்துக்கான காரணங்களை தேடுவது ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டக்கு மிக அவசியமானதாகும்.

முதலாவது, தமிழக மக்களின் பொதுசன அபிப்பிராயத்தை ஈழத்தமிழர்கள் புறக்கணித்து மலினப்படுத்துகிறார்கள் என்ற எண்ணப்பாடு தமிழக மக்களிடம் காணப்படுகிறது. தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒப்பீட்டளவில் புனிதமானவை. தற்கொலை தியாகங்கள் அதற்கு சாட்சியாகிறது. ஆனால் இந்த சாதாரண தமிழக மக்கள்தான் ஈழத்தமிழர்களால் விரும்பப்படுகின்ற அல்லது வெறுக்கப்படுகின்றவர்களை தமிழகத்தின் தலைவர்களாக தெரிந்தெடுக்கிறார்கள். அது அவர்களுடைய சுயாதீன விருப்பாகும். அதனை ஈழத்தமிழர்கள் மதிக்க வேண்டும்.  தமிழகத்தின் தலைவர்களை குறித்து கருத்து கூறும் பொழுதும் தமிழக தலைவர்களை அணுகும் போதும் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்தே நகர வேண்டும். தமிழக மக்களின் பொதுசன அபிப்பிராயத்தை புறந்தள்ளி பகைநிலைக்கு தள்ளாத ஒரு போக்கை ஈழத்தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும். எனினும் சமகாலத்தில் ஈழத்தமிழர் அப்போக்கை இழந்து தமிழக மக்களிடமிருந்து விலகிச்செல்கிறார்களோ என்ற எண்ணப்பாடே ஈழத்தமிழர்களின் தமிழகம் சார்ந்த அரசியல் நிலைப்பாடு உருவாகுகிறது. 

இரண்டாவது, ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் ஒரு கட்சியை தங்களது கட்சியாக அடையாளப்படுத்த முற்படுவதும், அந்த கட்சியின் செயற்பாடுகளாலும் ஈழத்தமிழரிடமிருந்து தமிழக மக்கள் விலகிச்செல்லும் நிலை உருவாகுகிறது. பொதுவாக எல்லாத் தமிழகக் கட்சிகளுமே ஈழத்தமிழர் பிரச்சினையில் களத்தில் அக்கறை காட்டியுள்ளனர். விதிவிலக்காக சிலசந்தர்ப்பங்களில் அரசியல் சூழ்நிலைக்கைதிகளாக தனிப்பட்ட நலன்களுக்கு முக்கியத்தவமளித்தாலும் இது அரசியல்கட்சிகளினதும் அரசியல்வாதிகளினும் பொது இயல்பாகும். இந்நிலையில் ஈழத்தமிழர் தமிழக அரசியலில் ஓர் கட்சியை தமது கட்சியாக அடையாளப்படுத்தி அவர்களது செயற்பாடுகளை மாத்திரம் ஈழத்தமிழர் நலன்சார்ந்ததாக அடையாளப்படுத்த முற்படுவதும் தவறான அரசியல் செயற்பாடாகும். குறிப்பாக புலம்பெயர் தரப்பு அக்கட்சியுடன் அதிகமான இணக்கத்தையும் பொருளாதார உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இது ஈழத்தமிழர்களின் நலனுக்கு பாதமானதாகும். தமிழக அரசியல் என்பது ஈழத்தமிழ் அரசியலில் இருந்து வேறுபட்டது என்பதுடன் தனித்துவமானதாகும். அவ்அரசியல் செயற்பாட்டில் ஈழத்தமிழர் ஒரு தரப்பை மாத்திரம் தங்களது பிரதிநிதியாக அடையாளப்படுத்தும் போது அக்கட்சிக்கு எதிரான தமிழக அரசியல் செயற்பாடுகள் யாவும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே திருப்பப்படுவதாக காணப்படும்.

மூன்றாவது, இந்திய சினிமா தளத்தினூடாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் கொச்சைப்படுத்தி மற்றும் குறைமதிப்பீடு செய்து தமிழக மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. அமேஷன் ப்ரைம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 'தி பேமிலி மேன்-2' இணையத்தொடர் மற்றும் பிரபல தென்னிந்திய சினிமா நட்சத்திரத்திரமாகிய தனுஷ் நடிப்பில் வெளியிடப்பட்டுள்ள 'ஜகமே தந்திரம்' எனும் திரைப்பிடங்கள் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி மற்றும் தவறான கற்பிதங்களை முன்வைத்து இம்மாதத்தில் (ஜூன்) வெளியாகிய திரைப்படங்களாகும். 'தி பேமிலி மேன்-2' இணையத்தொடர் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை தீவிரவாத போராட்டமாக அதிலும் உலக தீவிரவாத குழுக்களுடன் உறவை பேணி தீவிரவாதத்தை முன்னெடுத்ததாக கொச்சைப்படுத்தி உள்ளது.  'ஜகமே தந்திரம்' எனும் திரைப்படம் ஈழத்தமிழர்களின் அகதி வாழ்வின் துயரை குறிப்பிட்டிருந்த போதிலும் மறுமுனையில் புலம்பெயர் ஈழத்தமிழர் இன்றும் புலம்பெயர் தேசங்களில் ஆயுதக்குழுக்களாக செயற்படுவதாக சித்தரித்துள்ளது. புலம்பெயர் ஈழத்தமிழரை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளாக சித்தரிப்பதற்கு இக்கரு வலுச்சேர்ப்பதாக காணப்படுகிறது. 'தி பேமிலி மேன்-2' இணையத்தொடர் தொடர்பிலே தமிழக ஆளும் திராவிட முன்னேற்ற கழக அமைச்சர்கள் மத்திய அரசுக்கு தமது எதிரப்பை வெளிக்காட்டிய போதிலும், குறித்த இணையத்தொடரை நிறுத்த முடியவில்லை. தமிழக மக்களை குறித்த இணையத்தை விட்டு நீங்கி எதிர்ப்பை வெளிப்படுத்த ஈழத்தமிழர் நலன்சார் தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்த போதிலும் அப்போராட்டத்திற்கு தமிழக மக்களிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கப்பெறவில்லை. முழுமையான ஆதரவு கிடைக்கப்பெறவில்லை என்பதுவே தமிழக மக்கள் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திலிருந்து அதிகம் விலகிச்சென்று விட்டார்கள் என்பதனையே உறுதி செய்கிறது. 

ஈழத்தை பற்றிய கருக்களை தமிழக சினிமா இணைக்கையில் அதன் அரசியல் அபத்தங்களையும் தெளிவாக ஆராய வேண்டி உள்ளது. தமிழக மக்களின் வாழ்வில் சினிமா என்பது உயிரோட்டமான உணர்வாகும். தமிழக ஆட்சியையே மாற்றக்கூடிய வல்லமை தமிழகத்தில் சினிமாவிற்கு காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பிரபலமான சினிமா நட்சத்திரங்களூடாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிiமைப்போராட்டத்தை தவறாக சித்தரிக்கையில் தமிழக மக்களும் அதனையே இறுப்பற்றி கொள்வார்கள். ஈழத்தமிழர்கள் மற்றும் அவர்களது சுயநிர்ணய உரிமைப்போராட்டம் தொடர்பான சினிமாவில் கூறப்பட்டுள்ள தவறான கற்பிதங்களையே உண்மையென எண்ணிக்கொள்கின்றார்கள். இந்நிலைமைகளும் தமிழக மக்களை ஈழத்தமிழர்களிடமிருந்து விலக்க காரணமாகிறது.

நான்காவது, தமிழக சிவில் சமூக கட்டமைப்புக்களுடன் ஈழத்தமிழ் சமூக சிவில் சமூக கட்டமைப்புக்கள் அரசியல்ரீதியிலானதொரு பிணைப்பை பேண தவறியுள்ளார்கள். அரசியல் கட்சிகள் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒன்றுதிரட்டும் காரணியாகின்ற போதிலும், மக்களுக்கான அரசியல் அறிவூட்டலில் மக்களுக்குள் இயங்கும் சிவில் சமூக கட்டமைப்புக்களே கணதியான இடத்தை பெறுகின்றது. இலங்கையில் ஆயுப்போராட்ட காலங்களில் ஈழத்தமிழர்களின் நிலைப்பாட்டை சீராக ஆயுத போராட்டக்குழு தமிழக மக்களுக்கு தெளிவூட்டி வந்தது. தமிழக சிவில் சமூகங்களுடன் சீரான அரசியல் உறவும் பேணப்பட்டு வந்தது. எனினும் 2009ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னர் ஈழத்தமிழ் பரப்பிலும் ஆரோக்கியமான சிவில் சமூக செயற்பாடுகளை அடையாளங்காணமுடியவில்லை. இந்நிலையில் ஈழத்தமிழர்களின் நிலைப்பாடுகள் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழக மக்களுக்கு சரியாக கொண்டு சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

இவற்றினடிப்படையிலேயே தமிழக மக்கள் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்திலிருந்து விலகிச்செல்லும் துர்ப்பாக்கியம் காணப்படுகிறது. அரசுகளும் தங்கள் நலனுக்கேற்ப இவ்விலகலை ஆதரித்து வலுப்படுத்துகின்றார்கள். இந்நிலை தொடரின் தொப்புள் கொடி உறவின் பிரிப்பு ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை ஆதரவற்ற குரலாக அமுக்கி விடக்கூடிய வாய்ப்பே உள்ளது. குர்து மக்களுக்கு மலைகள் மாத்திரமே நண்பர்களாய் உள்ளது போன்று: ஈழத்தமிழர்களுக்கு சமுத்திரங்கள் மாத்திரமே இறுதியில் நண்பனாய் இருக்கும் சூழலே ஏற்படும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-