தமிழகத்துடன் இராஜதந்திர உறவை பலப்படுத்துமா; இலங்கை தமிழ் அரசியல் தரப்பு? -ஐ.வி.மகாசேனன்-
தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைள் வரலாறு தோறும் இலங்கையில் குறிப்பாக தமிழர்களிடையே நெருக்கமான தாக்கங்களை ஏற்படுத்தி வந்துள்ளன. தமிழகம் தொடர்பான நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் கூட இலங்கை தமிழரிடையே அதிகமாக இருந்து வந்துள்ளது. அவ்நம்பிக்கையை தமிழக மக்களும் நீண்ட காலமாக பாதுகாத்தே வந்துள்ளனர். 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்ட காலப்பகுதியில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகத்தில் 17 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இன்றும் அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆழமான எதிர்பார்ப்புக்களுன் ஈழத்தமிழர் காத்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரித்துள்ள மு.கஸ்டாலினின் ஆரம்பகால அதிரடி நடவடிக்கைகள் சிலது இலங்கை தமிழரிடையே ஓர் புத்துணர்வையும் நம்பிக்கையும் ஏற்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் இக்கட்டுரை தமிழக முதல்வரின் இலங்கை தமிழர்களுக்கு சாதகமான அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும், அதுசார்ந்த இலங்கை தமிழ் தரப்பின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கும் ஈழத்தமிழர் அரசியல் பிணக்குகளுக்கும் nருக்கமான வரலாறு காணப்படுகிறது. இதனை அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு மிகத்தெளிவாக ஆராய்ந்து விளக்கியும் உள்ளார். இன்று ஈழத்தமிழர்களை சிங்கள பேரினவாதம் ஒடுக்குவதற்கு பிரதான காரணமே, தமிழகத்துடன் பண்பாட்டு ரீதியில் இணைவை கொண்டுள்ள ஈழத்தமிழர்களூடாக இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கம் ஏற்படுவதை தடுப்பதே ஆகும். இதனை மகாவம்ச உருவாக்க வரலாற்றுகளை சான்றாக கொண்டு விளக்கியுள்ளார். இந்நிலையில் இலங்கையில் இடம்பெறும் தமிழர்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் இனஅழிப்புக்கு நீதியையும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசிற்கு வரலாற்று ரீதியாக காணப்படுகிறது. தமிழக அரசின் பொறுப்பையும் கடமையையும் தமிழக அரசியல் தரப்பினருக்கு புரிய வைத்து செயற்படுத்த வேண்டியது ஈழத்தமிழ் அரசியல் தரப்பின் இராஜதந்திர நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது.
தமிழக தேர்தல் தொடர்பான உரையாடல் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலாகவே, தமிழக தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழர்களிடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்தன. முகநூல்களில் கட்சிகளாய் பிரிந்து இளையோர் பலரும் கருத்துக்களால் மோதிக்கொண்டனர். தமிழக அரசியலை உன்னிப்பாக அவதானிக்கும் இளையோர் அரசியல் ஆர்வம் வரவேற்கத்தக்கது. எனினும் அரசியல் ஆழமற்று தமிழகத்தின் ஒரு கட்சி ஆதரவு நிலைப்பாட்டில் செல்வது ஆரோக்கியமற்றதாகும். இளையோர்களையும் தனித்து குறைகூறிட முடியாது. அரசியலை நுணுக்கமாக ஆராய்ந்நது இராஜதந்திரரீதியிலே காய்நகர்த்த வேண்டிய இலங்கை தமிழ் அரசியல் தரப்புக்கள் சிலரே சிறுபிள்ளைத்தனமாக ஒரு கட்சி ஆதரவை வெளிப்படுத்தி ஏனைய கட்சிகளுடனும் முரண்பட்டனர். தமிழக தேர்தல் தொடர்பிலான முகநூல் சண்டைகள் பலவற்றிலும் இலங்கை தமிழர் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுக்க திராவிட முன்னேற்ற கழகம் தவறியதாக கூறி எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். திராவிட முன்னேற்ற கழகத்தை குறை கூறுபவர்களே, முள்ளிவாய்க்கால் பேரவல காலத்தில் இலங்கையில் தமிழ்த்தேசிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் போரை தடுக்க ஆரோக்கியமான நகர்வுகளை முன்னெடுக்காத தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு தொடர்ச்சியாக தேர்தலில் வாக்களித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தான் எம் இளையோரிடம் காணப்படும் ஆழமற்ற அரசியலறிவுடனான அரசியல் ஆர்வம்.
தி.மு.க கட்சியின் ஈழத்தமிழர் உறவு வரலாற்றில் 2009ஆம் ஆண்டு பக்கங்களை நீக்கி விட்டு ஆராய்வோமாயின், இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது. 13ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 1989 நவம்பரில் ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் ஆட்சி, 1991 ஜனவரியில் கலைக்கப்பட்டது. அதற்கு பின்னணியில் தி.மு.கா-இன் ஈழப்போராட்ட ஆதரவே காணப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்றும் விடுதலைப் புலிகளுக்குத் தி.மு.க அரசு உதவிசெய்கிறது என்றும் அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி குறிப்பு எழுதினார். அதையடுத்து, ஜனவரி 30ஆம் திகதியன்று கருணாநிதி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இலங்கை தமிழர்களின் வாக்குககளை பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு செல்லும் தரப்பினரே மக்களின் நலன்களை புறந்தள்ளி கட்சி நலன், தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி செயற்படுகையில் பிராந்திய நாட்டில் காணப்படும் அரசியல் கட்சி இலங்கை தமிழர் நலனை முன்னிறுத்தி மாத்திரம் செயற்பட வேண்டும். இல்லையேல் முழுமையாக எதிர்ப்போம் என்பது பாமர சிந்தனையாகும். பிராந்திய நாடுகளில் காணப்படும் அரசியல் கட்சிகளை ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு ஏற்ப பயன்படுத்தும் வகையில் கையாள வேண்டியது இலங்கை தமிழ் அரசியல் தரப்பின் இராஜதந்திர நகர்வுகளிலேயே தங்கியுள்ளது.
முதலில் இலங்கை தமிழ் அரசியல் தரப்பானது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே ஒற்றை இலக்கு எனும் இதய சுத்தியுடனும் வைராக்கியத்துடனும் காணப்படல் வேண்டும். அவ்வாறான இதயசுத்தியுடன் செயற்படுவார்களாயினேயே எதற்கும் விலைபோகாது பிராந்திய தேசங்களின் கையாள்கைக்குள் அகப்பட்டு தமிழர் உரிமைகளை அடகு வைக்காது ஈழத்தமிழர் நலன்களுக்கு ஏற்ப அவர்களை கையாளும் நுட்பத்தை தேட முயலுவார்கள். வரலாறு தோறும் எவ்வித இராஜதந்திர கையாள்கையுமின்றியே பிராந்திய அரசாகிய இந்தியாவின் நலன்களை ஈடேற்றுவதற்காக ஈழத்தமிழர்களின் நலன்களை இந்திய அரசாங்கங்கள் கையாள தமிழ் அரசியல் தலைமைகளும் துணை போயுள்ளனர். இந்நிலையில் மாற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்தியாவை தாண்டி பெற்றிட முடியாது. ஆதலால் இந்தியாவை பகைக்கவும் கூடாது. இந்தியா தமது நலன்களை ஈடேற்ற முற்படும் போது ஈழத்தமிழ் அரசியல் தரப்பு ஈழத்தமிழர் நலன்களையும் ஈடேற்றும் வகையில் உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் இந்தியாவை மிகத்தந்திரமாக கையாண்டு வருகிறது. ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் 2019ஆம் ஆண்டு உருவாகுகையிலேயே அது சீன சார்புடையதாகவே கட்டமைக்கப்படும் என்பது இந்தியா மற்றும் மேற்குலகத்தின் அச்சமாகவே காணப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் சீனாவின் உறவு முதிர்ச்சி அடையும் வரை இந்தியாவை தந்திரோபாயமாக கையாளவேண்டிய அவசியம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் காணப்பட்டது. அந்த காலப்பகுதியில் அதனை சாதுரியமாக கையாளவே, இந்தியாவுக்கென அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு வெளிநாட்டு தூதரை (மிலிந்த மொரகொட) இலங்கை அரசு நியமித்தது. இவ்இராஜதந்திர செயற்பாடுகளுக்கு பின்னால் இலங்கை அரசாங்கத்தின் மூளையாய் இராஜதந்திரிகள், செயல்முறை பணித்துறை நிபுணர்கள், இராணுவ வல்லுநர்கள் என நிபுணத்துவம் வாய்ந்த குழுவாகிய 'வியத்கம' செயற்பட்டு வருகிறது. அரசு எனும் மீயுயர் இறைமையை தன்னகத்தே கொண்ட அரசாங்க தரப்பே தன்னை கட்டமைத்து செயற்பட அறிவியல் குழுக்களை பேணுகையில், உரிமைக்காக போராடும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் பிரதிதிநித்துவத்தை வழங்கும் தமிழ் அரசியல் தரப்பு சொந்த அறிவுமின்றி, அறிவூட்டல் அறிவை பெறக்கூடிய கட்டமைப்புமின்றி செயற்படுவது இராஜதந்திர பாதையில் தமிழினத்தை தொடர்ந்தும் தோற்கடிக்க கூடியதாகவே காணப்படும்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் இலங்கை தமிழர் தி.மு.க சார்ந்து கொண்டிருந்த எண்ணங்களை சிதைக்கும் வகையில் இலங்கை தமிழர்கள் நலன்சார்ந்து அதிரடியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். இதற்கு தமிழக மக்கள் ஈழத்தமிழர் நலனை இன்றும் முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதே நிதர்சனம். அதன் வெளிப்பாடே ஈழத்தமிழர்களின் நலன் பற்றிய உரையாடல்களை அதிகம் முக்கியத்துவப்படுத்தும் நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு வங்கியின் அதிகரிப்பும். இவ்அச்சமே தேர்தல் காலத்திலேயே தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளுமான தி.மு.க மற்றும் அ.தி.மு.க தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களையும் உள்ளீர்த்திருந்தனர். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகமும் ஈழத்தமிழர் நல்வாழ்வு எனும் தலைப்பின் கீழ் ஈழத்தமிழர்கள் நலனை உறுதிபடுத்தும் என்ற அடிப்படையில் 4 விடயங்கள் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை வழங்கும் பொருட்டு பொது வாக்கெடுப்பு நடத்த கோரி மத்திய அரசை வலியுறுத்தல் போன்றன பிரதானமாகும்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தனது புதிய அமைச்சரவயில், இதுவரையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலன் என்ற துறையை மாற்றி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் என புதிய துறையை உருவாக்கியுள்ளமை ஈழத்தமிழர் நலன் சார்ந்ததாகவும் அமையப்பெறுவதாக காணப்படுகிறது. எனினும் ஈழத்தமிழ் பரப்பில் இயங்கும் அரசியல் கட்சிகள் இதனை வாய்ப்பாக கொண்டு தமிழகத்துடனான உறவை ஆழப்படுத்த இதுவரை முயலாமை விசனத்துக்குரிய இராஜதந்திர நிலைமையாகும்.
தமிழக தேர்தலின் பின்னர் அதிகபட்சமாக அறிக்கையூடான வாழ்த்துக்களே ஈழத்தமிழ் அரசியல் தரப்பின் இராஜதந்திர நகர்வாக காணப்படுகிறது. இன்று பெரும்போர்களுக்கான முன்னறிவித்தல்களே டுவிட்டர் தளத்தில் பதிவுகளூடாக இடம்பெறுகையில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பு பண்டைய கால அறிக்கை அரசியலுடனேயே முதிர்ச்சியற்று இருப்பது ஈழத்தமிழரின் சாபமாகவே காணப்படுகிறது. கொரோனா அபத்தம் பயணங்களை தடைசெய்யினும் இணையவழியூடாக தமிழக முதல்வருடன் சந்திப்பை ஈழத்தமிழ் பரப்பில் இயங்கும் கட்சிகள் முன்னெடுத்திருக்கலாம். தமிழகத்தில் ஈழத்தமிழர் நலன்சார் முன்னெடுப்புக்கள் நடைபெறுகையில் கண்டுகொள்ளாது செல்லாது ஈழத்திலிருந்து அதற்கு எதிர்வினையாற்றி தொடர்புகளை பேணுகையிலேயே ஈழத்தமிழர்களின் தேவைகளும் சரியாக பிரதிபலிக்க கூடியதாக காணப்படும். இல்லையேல் இது தமிழகத்தில் ஈழத்தமிர்களின் பிரச்சினையை வைத்து அரசியல் கட்சிகள் தமக்கு தேடிக்கொள்ளும் நலனாகவே முடிந்துவிடும்.
தமிழக அரசியல் கட்சிகளானது மத்திய ஆளுகைக்கு உட்பட்டதே ஆகும். எனினும் தமிழகத்தின் அரசியல் ஆதிக்கம் மத்திய அரசியலில் தவிர்க்க முடியாத இடத்திலேயே காணப்படுகிறது. ஆதலால் தமிழக அரசுடன் உறவை வலுப்படுத்தவது என்பது இந்திய மத்திய அரசினை ஈழத்தமிழர் நலன் சார்ந்து சிந்திக்க வைக்க ஏதுவான காரணியேயாகும். தமிழகம் மாநில அரசு தானேனு புறந்தள்ளாது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சியில் கிடைக்கப்பபெறும் ஈழத்தமிழர் நலனை சாதாகமாக பயன்படுத்தி கொள்ளும் அரசியல் நகர்வுகளை ஈழத்தமிழரசியல் தரப்பு முன்னெடுக்க முன்வரவேண்டும். சிங்கள பௌத்தப்பேரினவாத ஆளும் தரப்பு புவிசார் அரசியல் நுட்பங்களைப் புரிந்து கொண்டு தனது இன அழிப்பு நிகழ்ச்சி நிரலுக்கேற்ப உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி காண்கிறது. குறிப்பாக இந்திய அரசின் ஆதரவைப் பெற்று சிங்கள பௌத்தப் பேரினவாதம் இனப்படுகொலையை நடத்தியோடு தம்மைப்பாதுகாத்துக் கொள்ளவும் செய்கிறது. புவி அமைவு என்ற வகையில் சிங்களவர்களுக்கு இருக்கும் அதே சாத்தியப்பாடுகள் ஈழத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் உண்டு. ஆனால், சரியான தலைமை மற்றும் இராஜதந்திர செயற்பாடுகள் இல்லாத காரணத்தால் சாதகமாக அம்சங்களைப் பயன்படுத்த முடியாத இடத்திலேயே தமிழர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் எற்பட்டுள்ள தமிழக ஆட்சியுடன், ஏக பிரதிநிதித்துவம் சிதைக்கப்பட்டு ஈழத்தமிழ்த்தேசிய பரப்பின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழர்களுக்கான வாய்ப்பை பலப்படுத்தவார்களா? என்பது காலத்தின் பதிலாகவே உள்ளது.
Comments
Post a Comment