எதற்காக அவசரகால சட்டம்? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் கொரோனா வைரஸின் பரவுகையும் மரணங்களும் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்து வருகிறது. இதன்விளைவாக அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக இலங்கை அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இலங்கை அரசாங்கம் கொரானா வைரஸினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கட்டுப்படுத்த இயலாத சூழலில், அரசாங்கத்துக்கு எதிராக மக்களிடம் எழும் விமர்சனங்களை எதிர்ப்புணர்வுகளை திசைதிருப்பும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. பஸில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மீள்வருகை, அமைச்சரவை மாற்றம் என்பன அவ்வாறன பொறிமுறையே ஆகும். அதன் தொடர்ச்சியாகவே தற்போது உணவு தட்டுப்பாடு தொடர்பிலான அவசரகால நிலையை பிரகடனமும் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி அதனுள் இலங்கைக்கு சமகாலத்தில் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளை நீர்த்து போகச்செய்யும் நிகழ்ச்சி நிரலும் ஒருங்கு சேர்க்கப்பட்டிருந்தன. அவ்வாறனதொரு சர்வதேச நெருக்கடியையும் உள்நாட்டு நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கான உத்தி அவசரகால சட்ட அமுலில் காணப்படுகிறதா என்பதை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், ஆகஸ்ட்-30(2021) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிகவிலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரண பொது மக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்பு செய்வதற்காக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன் ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமுல்படுத்த பாராளுமன்றம் ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது. பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டமானது அவசரகாலம் என்பதனை விதிவிலக்கான அச்சுறுத்தல், ஆபத்து அல்லது அனர்த்தம் தெளிவானதாகக் காணப்படுகின்ற சந்தர்ப்பம் எனக் கூறுகின்றது. இச்சந்தர்ப்பங்களில், அச்சுறுத்தலைக் கையாளும் பொருட்டு, சாதாரண சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படாத விசேட அதிகாரங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. இத்தகைய சந்தர்ப்பமானது, தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் என்பனவற்றை பேணும்பொருட்டு அவசரகால நிலைமையினைப் பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியினை அனுமதிக்கின்றது.
இந்த அவசரகாலச் சட்டம் காலனித்துவ காலத்திலிருந்து காணப்படுகின்ற போதிலும், காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் போன்ற காரணிகளினால் அவசரகால சட்டம் தொடர்ந்தும் பல தடவைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, 1983ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 2011ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தால் ரத்து செய்யப்படும் வரையில் 28 ஆண்டுகள் தொடர்ச்சியாக பேணப்பட்டது. பின்னர், 2018ஆம் ஆண்டு கண்டி கலவரம், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை மீள 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்-30 நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்றில் இலங்கையில் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டமைக்கான தூண்டுதல்களை மூன்று தளங்களில் அவதானிக்கலாம்.
ஒன்று, மார்க்சிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கம் உள்ள அரசியல் ரீதியாக செயல்படும் தொழிற்சங்கங்கள், 1940களின் பிற்பகுதியிலிருந்து 1960களில் பெருகியதால் தொழிலாளர் வேலைநிறுத்தங்களைச் சமாளிக்க வேண்டிய அழுத்தம் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை (இப்போது பொதுப் பாதுகாப்பு கட்டளை) இயற்ற அரசாங்கத்தை தூண்டியது. அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில், உணவுப் விநியோகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் போன்ற பொதுச் சேவைகள் நாட்டின் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதவை. மேலும் அவசரகாலச் சட்டத்தின் மூலம் சிவில் உரிமைகளை மீறுவதை நியாயப்படுத்துதல். என்ற அடிப்படைகளில் அக்கால அரசாங்கம் அவசரகால சட்டத்தை சட்டப்பூர்வமாக்கியது. எனினும் 1959இல் அவசரகால சட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்த சில மாற்றங்கள் தொழிற்சங்கங்களின் அரசியல் வேலைநிறுத்தங்களை ஊக்குவித்தன. 1968இல் பல அரசுத் துறைகள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டன. இது வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை எளிதாக்கியது. இருப்பினும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக அவசரகால சட்டம் ஜூலை 1971 வரை செயல்படுத்தப்பட்டிருக்கவில்லை. காலப்போக்கில், இன-தேசியவாத மற்றும் அரசியல் செயல்பாடுகள் தொழிற்சங்க நடவடிக்கைளில் இணைந்த போது அவசரகால சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான முக்கிய காரணமாக மாற்றியது.
இரண்டு, 1964இல் உருவான சிங்கள மார்க்சிஸ்ட் புரட்சிகரக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவால் (ஜேவிபி) தூண்டப்பட்ட பொது வன்முறையைத் தடுப்பதற்காக அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது கிளர்ச்சியாளர்களை விரைவாகவும், சித்திரவதை மற்றும் சட்டத்திற்கு புறம்பான காணாமல் போதல் போன்ற கேள்விக்குரிய வழிமுறைகள் மூலம் ஒடுக்கவும் உதவியது.
மூன்று, சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையேயான பதற்றத்திலிருந்து அதிகரித்து வரும் கலவரங்களை ஒடுக்க அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இது தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சமான அரசாங்கக் கொள்கைகளின் காரணமாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான பொதுவான காரணமாகவும் மாறியது. 1983ஆம் ஆண்டிலிருந்த ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் தமிழ் மக்களை ஒடுக்கும் ஆயுதமாக தொடர்ச்சியாக அவசர காலச்சட்டம் இலங்கையில் நிலைப்படுத்தப்பட்டது. இது அவசரகால சட்டத்தின் பார்வையையே தமிழருக்கு எதிரானது என்ற எண்ணப்பாட்டை அரச இயந்திரத்திலும் பிணைத்து கொண்டது. 2019ஆம் ஆண்டு சர்வதேச தீவிரவாத குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலின் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் பாதக விளைவுகளை அதிகம் தமிழர்களே எதிர்கொண்டார்கள் என்பதே நிதர்சனமாகும்.
மேற்குறித்த தளங்களின் சேர்க்கையின் பரிணாம உந்தல் தற்போதைய 'உணவு தட்டுப்பாடு தொடர்பிலான அவசரகால நிலை பிரகடனத்தில்' வெளிப்படுகிறது. மேலும் நடைமுறையில் அரசியல், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் அவசர கால சட்டத்தை புதியதொரு பரிணாமத்தில் அமுல்படுத்தப்படுவதன் தேவைப்பாட்டை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, இலங்கையின் அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டங்களின் பயன்பாட்டு நோக்கம் தொடர்பில் சர்வதேசரீதியாக கடுமையான விமர்சனம் காணப்படுகிறது. குறித்த சட்டங்கள் இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மலினப்படுத்துவதாகவும், தமிழர்களினை ஒடுக்கும் ஆயுதமாhகவே இலங்கை அரசாங்கத்ததால் அவசரகாலச்சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. ஆயுதப்போராட்டம் 2009ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட பின்னரும் சர்வதேசரீதியான அழுத்தத்தின் பேரிலேயே அவசரகாலச்சட்டம் 2011ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ஷா தலைமையிலான அரசாங்கம் நீக்கியது. இன்றும் இலங்கையில் அமுல்படுத்தப்படும் அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத சட்டங்கள் தொடர்பில் சர்வதேசரீதியில் கடும் அதிருப்தி காணப்படுகிறது. மாற்றங்களை ஏற்படுத்துமாறே கோரி வருகின்றனர். இச்சூழலில் 'உணவு தட்டுப்பாடு தொடர்பிலான அவசரகால நிலை பிரகடனம்' என்ற பெயரில் அவசர கால பிரகடனம் தொடர்பிலான மாறுபட்டதொரு வடிவத்தை இலங்கை அரசாங்கம் காண்பிக்க முயலுவது அவசரகால நிலைச்சட்டத்திற்கு மாறுபட்டதொரு வலுக்குறைந்த விம்பத்தை சர்வதேசத்திற்கு காட்ட முயலும் செயலாகவே அவதானிக்கப்படுகிறது. சர்வதேச நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் இலங்கை அதனை நீர்த்துபோகச்செய்ய இத்தகைய பொறிமுறையை ஆட்சியாள் கையாள முற்பட்டுள்ளனர்.
இரண்டாவது, இலங்கையில் அண்மைக்காலங்களில் தொழிற்சங்கங்களின் போராட்டம் இலங்கை அரசாங்கத்துக்கு உள்நாட்டில் கடும் நெருக்கடியை அதிகரித்து வருகிறது. அதனை சீர்செய்ய முடியாத நிலையில் அவசரகால சட்டத்தின் ஆரம்ப வரலாற்றை இலங்கையின் தற்போதைய ஆட்சியாயர்கள் பரீட்சிக்க முற்படுகின்ற தன்மை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் இலங்கை பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவு வலியுறுத்தும் தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் என்பனவற்றுள் பிரத்தியேகமாக அத்தியாவசிய உணவு விநியோகத்தை மையப்படுத்தி அமுல்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது தொழிற்சங்கங்களுக்கான நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான உத்தியாகவே காணப்படுகிறது.
மூன்றாவது, பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் கிடைக்கப்பெற்ற ஆதரவு திரட்சி சரிவதான தோற்றப்பாடு காணப்படுகிறது. இதனை சீர்செய்யவும் தற்போதைய அவசர கால கட்ட அமுலாக்கத்தை ஆட்சியாளர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. பொதுமக்கள் மத்தியில் ஆதரவு தளம் வீழ்ச்சியடைவதற்கு அரசாங்கம் தொடர்பான எதிர்மறையான விமர்சனங்கள் அதிகரிக்கப்படுவதே பிரதான காரணமாகிறது. இந்நிலையில் அவசரகால சட்ட நடைமுறையை பயன்படுத்தி எதிர்மறையான விமர்சனங்களை ஒடுக்குவது இலங்கை ஆட்சியாளர்களுக்கு புதிய விடயமில்லை.
எனவே இலங்கை அரசாங்கம், தற்போது அமுல்படுத்தியுள்ள அவசரகால சட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவம் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சீர் செய்வதற்கான பொறிமுறையையே உருவாக்கி உள்ளது என்பது தெளிவாகிறது. இலங்கையின் எதிர் அரசியல் தரப்பினர், அமுல்படுத்தப்பட்டுள்ள அவரகாலச்கட்டமானது ஜனநாயகத்தை சிதைப்பதாகவும், ஜனாதிபதியின் அதிகாரம் அதிகரிக்கப்படுவதாகவும் கண்டன அறிக்கைகளை முன்வைக்கின்றனர். இக்குற்றச்சாட்டு மறுப்பதற்கில்லை. எனினும் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி அதிகார முறைமையைக்கொண்ட 1978ஆம் அண்டு அரசியலமைப்பின் கீழ் வாழ்ந்து கொண்டு அவசரகால சட்டம் ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்கிறது, ஜனநாயகத்தை சிதைக்கிறது எனும் கண்டன அறிக்கைகளை விடுவது அரசியல் மலினச்செயற்பாட்டையெ வெளிப்படுத்துகிறது. இவற்றை கடந்து அவசரகாலச் சட்டத்தை விளங்கிக் கொள்வது அவசியமானது.
Comments
Post a Comment