வடகொரியாவின் க்ரூஸ் ஏவுகணை பரிசோதனை அமெரிக்காவுக்கான இராஜதந்திர பொறியா? -ஐ.வி.மகாசேனன்-
கொரிய தீபகற்பமானது சர்வதேச அரசியலில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக ஏவுகணைப்பரிசோதனைகளால் நிலைத்த கொதிநிலையை கொண்ட புவிசார் பிரதேசமாகும். எனினும் சமீபத்தில் கொரிய தீபகற்பம் அமைதியை வெளிப்படுத்தி வந்தது. எனினும் நீண்ட இடைவெளிக்கு பின்பு வட கொரியா நடத்திய இரண்டு ஏவுகணை சோதனைகள் அதன் தலைமை மீதும், வெளியுறவுக் கொள்கை மீதும் அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இக்கட்டுரை வடகொரிய ஏவுகணை பரிசோதனை சார்ந்த சர்வதேச அரசியல் நகர்வுகளை தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களாக வளர்ச்சியில் இருந்த க்ரூஸ் ஏவுகணைகள் (Cruise Missiles) கடந்த வாரம் செப்டெம்பர்11,12 ஆகிய தினங்களில் வடகொரிய பிராந்திய கடலில் 1,500 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியதாக வடகொரிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) செப்டெம்பர்-13 அன்று உறுதிப்படுத்தியுள்ளது. க்ரூஸ் ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை. குறிப்பாக இந்த வகை ஏவுகணைகள் 1,600 கி.மீ வரை சென்று தாக்கக்கூடியவை என கூறப்படுகிறது. ஆனால், பரிசோதனையில் அவை சுமார் 1500 கி.மீ தூரம் பயணித்ததாக கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. இக்கணிப்பு உண்மையாக இருந்தால், தென் கொரியா மற்றும் ஜப்பானை புதிய வட கொரிய கப்பல் ஏவுகணைகளால் எளிதாக குறிவைக்க முடியும். வட கொரியாவின் ஆய்வாளர் அங்கித் பாண்டாவின் கருத்துப்படி, இது வடகொரியாவின் முதல் நீண்ட தூர பயண ஏவுகணையாகும். இது ஒரு அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறனுடையதாக அமையலாமெனவும் கூறியுள்ளார்.
வடகொரிய ஆயுத சோதனைகளுக்கு பிராந்தியரீதியில் அபாய எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டள்ளன. ஜப்பானின் பிரதம மந்திரி யோஷிஹிட் சுகா, வட கொரியாவின் சோதனைகளை 'மூர்க்கத்தனமானது' என்று கண்டனம் செய்தார். 'ஆறு மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டது நமது நாடு மற்றும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது' என்று சுகா கூறினார். அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்ட் ஒரு அறிக்கையில், 'வடகொரியா தனது இராணுவத் திட்டத்தை வளர்ப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துவது அதன் அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது' என்று கூறியுள்ளது. தென் கொரியா மற்றும் ஜப்பானின் பாதுகாப்பிற்கான அமெரிக்க உறுதிப்பாடு 'இரும்புக் கம்பி' என்பதை அது வலியுறுத்தியது. அமெரிக்க உளவுத்துறையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் ஆழமான பகுப்பாய்வு நடைபெற்று வருவதாகவும் ஆனால் விவரங்களை உறுதி செய்ய மறுத்துவிட்டதாகவும் தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள்(JCS) கூறியுள்ளனர்.
2019ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் நிறுத்தப்பட்ட அணுவாயுதம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வடகொரியா தனது இராணுவத் திறனை விரிவுபடுத்தி வருகின்றது. ஆகஸ்ட் இறுதிப்பகுதியில், 2018ஆம் ஆண்டிற்கு பின்னர் தனது யோங்பியான் அணுஉலையினை மீள ஆரம்பிக்கும் அறிகுறிகள் தெரிவதாக கொரிய தீபகற்பத்திலிருந்து செய்திகள் வெளிவந்தன. தற்போது ஆறு மாத இடைவெளியில் ஒரு புதிய நீண்ட தூர தாக்குதல் ஏவுகணையின் தொடர்ச்சியான வெற்றிகரமான சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. வடகொரியாவின் இவ்ஆயுத முனைப்பு அமெரிக்காவிற்கு எதிரான செயற்பாடாக வடகொரிய செய்தி ஊடகங்களே முதன்மைப்படுத்தி தெரிவித்து உள்ளன. இதனை ஆழமாக அவதானிக்க வேண்டியது அவசியம்.
முதலாவது, கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியாவின் எதிர்துருவங்களாகிய அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முக்கிய அணுசக்தி பேச்சுவார்த்தையாளர்கள் டோக்கியோவில் சந்தித்து வடகொரியாவுடனான முட்டுக்கட்டை வழிகளை ஆராய்வதற்கான கூட்டத்தை ஒழுங்கு செய்த தினத்திற்கு ஒரு நாள் முன்பு இந்த ஏவுகணை சோதனை அறிவிப்பை வடகொரியா வெளியிட்டுள்ளது. இது வடகொரியாவின் ஆயுத முனைப்பு முயற்சிகளை கட்டுப்படுத்த முடியாது என்ற செய்தியை வழங்குவதற்கான அறிவிப்பாகவே அவதானிக்க முடியும்.
இரண்டாவது, க்ரூஸ் ஏவுகணை பரிசோதனை வடகொரியாவின் மூலோபாயாய நகர்வாக அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்ஏவுகணை பரிசோதனைகள் வடகொரியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மற்றும் வடகொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்று சொல்லப்படும் எதிரி சக்திகளின் முயற்சியை தடை செய்யும் பொறிமுறையாக நாட்டின் இராணுவ வலிமையை வலுப்படுத்த தலைவர் கிம் ஜாங் உன்னின் அழைப்பைச் சந்திக்கும் 'பெரும் முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய ஆயுதம்' என்று கே.சி.என்.ஏ குறிப்பிட்டுள்ளது. இவ்அடையாளப்படுத்தல் நேரடியாக வடகொரியாவின் ஆயுத முனைப்புகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் பிரதான எதிரி சக்தியாகிய அமெரிக்காவிற்கான பதிலாகவே அவதானிக்கப்படுகிறது. பியோங்யாங்கின் கடைசியாக அறியப்பட்ட ஏவுகணை சோதனை மார்ச்(2021) மாதத்தில் ஒரு புதிய தந்திரோபாய குறுகிய தூர ஏவுகணை ஏவப்பட்டது. அவ்வாறே ஜனவரி(2021) மாத இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு வடகொரியா ஒரு கப்பல் ஏவுகணை சோதனையையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 'வட கொரியாவில் ஒரு மூலோபாய பாத்திரத்தை வெளிப்படையாகக் குறிப்பிடும் முதல் கப்பல் ஏவுகணை இதுவாகும்' என்று அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மெண்ட்டின் மூத்த உறுப்பினர் அங்கித் பாண்டா கூறினார்.
மூன்றாவது, க்ரூஸ் ஏவுகணைகளின் இயல்பின் அடிப்படையில் கொரிய தீபகற்கத்தில் நிலைபெற்றுள்ள அமெரிக்க கூட்டுக்களுக்கு அச்சுறுத்தலானது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தென்கொரியாவின் சியோலில் உள்ள ஹான்குக் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பகுதி ஆய்வுகளின் பேராசிரியர் மேசன் ரிச்சி, 'வடக்கின் புதிதாக உருவாக்கப்பட்ட கப்பல் ஏவுகணை ஒரு அணு மற்றும் வழக்கமான போர்க்கப்பலை கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இருப்பதாக' தி டிப்ளோமாட்டுக்கு (The Diplomat) தெரிவித்தார். மேலும், 'இது போன்ற குரூஸ் ஏவுகணைகள் ரேடார் மற்றும் பிற சென்சார்களால் கண்டறியப்படுவதைத் தவிர்க்க குறைந்து பறக்கின்றன. இதனால் ஏவுகணை பாதுகாப்பைத் தவிர்ப்பதற்கான அதிக நிகழ்தகவை வழங்குகிறது. எனவே இது பியோங்யாங்கின் கருவித்தொகுப்பில், ஒருங்கிணைந்த அமெரிக்க-தென்கொரிய கூட்டு தடுப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கான மற்றொரு கருவியாக இருக்கும்' என்றும் ரிச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
நான்காவது, 9/11 பயங்கரவாத தாக்குதலின் 20வது ஆண்டு நிறைவை அமெரிக்கர்கள் நினைவு கூறும் போது, செப்டெம்பர் 11-12ஆம் திகதிகளில் வடகொரியா ஏவுகணைகளை சோதனை செய்தது. செப்டெம்பர்-09 அன்று நடைபெற்ற கொரிய கட்சியின் 73ஆண்டு விழா கொண்டாட்ட இராணுவ அணிவகுப்பில் வழமைக்கு மாறாக வட கொரியா தனது புதிய ஆயுதங்களை அறிமுகப்படுத்தியிருக்கவில்லை. ஆனால் செப்டம்பர்-11 வரை காத்திருக்கத் தேர்ந்தெடுத்தமையானது அமெரிக்காவிற்கான சமிக்ஞையாகவே ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டது என்பது உறுதி செய்கிறது.
அமெரிக்காவை சமிக்ஞை செய்து மேற்கொள்ளப்படும் இவ்வடகொரியாவின் ஏவுகணைகள் பரிசோதனைகளானது, தடைப்பட்டுள்ள அமெரிக்காவுடான பேச்சுக்கான மீள் உந்துதலாகவே கிம் ஜோங் கையாள முற்படுகிறார் என்ற பார்வையும் சர்வதேச அரசியல் வெளியில் காணப்படுகிறது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் யதார்த்தவாதி என்ற அடிப்படையில் அதிகம் போரியல் பொறிமுறைகளை தனது இராஜதந்திர செயற்பாடுகளாக முன்னெடுப்பது இயல்பானதாகும். சர்வதேச அணுசக்தி நிறுவனம் மற்றும் வடகொரியா பற்றிய பகுப்பாய்விற்கு அர்ப்பணிக்கப்பட்ட 38 நோர்த் (38 North) எனும் அமைப்புக்களின் அண்மைய அறிக்கையில், வடகொரியா அதன் பழமையான பாரம்பரிய இராஜதந்திரத்திற்கு ( Old-School Diplomacy ) திரும்பியுள்ளது என்ற கவலையை வெளியிட்டுள்ளது. அதாவது அதன் எதிர்த்தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் கட்டுப்பாட்டை எடுக்க அதன் 'வில்லன்' அணுகுமுறையை மீண்டும் செயல்படுத்துகிறது எனக்குறிப்பிட்டுள்ளது. மேற்கு இராஜதந்திர மட்டத்தின் வடகொரியாவின் வில்லன் அணுகுமுறை என்பது யதார்த்தவாத போரியல் எண்ணப்பாடுகளையே குறித்து நிற்கிறது. வில்லன் அணுகுமுறையில் சமாதான எத்தணிப்பை வடகொரியா முயல்வதான கருத்துநிலையின் உண்மைத்தன்மையை ஆதாரபூர்வமாக அவதானித்தல் வேண்டும்.
ஒன்று, பேராசிரியர் ரிச்சி வடகொரியாவின் ஏவுகனைகள் பரிசோதனை அமெரிக்காவுடனான அதன் பேச்சுவார்த்தைக்கான எத்தனமாகவே அவதானிக்கப்படுகின்றார். 'வடகொரியா அந்நிய நிலையில் இருந்து பேச்சுவார்த்தையில் நுழைய விரும்புகிறது. எனவே ஆயுத முனைப்பு சார்ந்து கூடுதல் திறனை கொண்டிருப்பதால், பேச்சுவார்த்தைக்கு வேறான எந்த பின்னணியும் இருக்காது என கருதுகிறது. இந்த பின்னணியில் பியாங்யாங்கின் சாத்தியமான கருத்துப்படி, அது அதிக வலிமையைக் கொடுக்கும் மற்றும் கடினமான பேரத்தை இயக்க அனுமதிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு, வடகொரியா மீதான சமீபத்திய தடைகள் அதன் ஆயுதத்திட்டத்தின் நிலையான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்காவின் தடைகள் நிவாரணத்திற்கு ஈடாக வடக்கின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தை தகர்க்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டொனால்ட் ட்ரம்பின் முந்தைய நிர்வாகம் பியோங்யாங்குடன் பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கத் தவறியதால், அணுவாயுத கட்டுப்படுத்தலில் வடகொரியாவை ஊக்குவிக்க எந்த நேர்மையும் காட்டாததால், வட கொரியா-அமெரிக்க பேச்சுவார்த்தை 2019 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஜோ பிடன் பதவியேற்ற பிறகு, புதிய நிர்வாகம் இந்த பிரச்சினையை மிகவும் செயலற்ற முறையில் நடத்துகிறது. 'பியோங்யாங்கின் நடவடிக்கை அமெரிக்காவிற்கு தீபகற்பத்தில் இன்னும் ஒரு வேலை இருக்கிறது என்பதை நினைவூட்டுவதாகும். பியாங்யாங் வாஷிங்டனை நினைவூட்ட ஏதாவது செய்யும்போது, அது முற்றிலும் நியாயமானதே, மேலும் இந்தப் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படாமல் இருக்க அமெரிக்கா அனுமதிக்கக் கூடாது' என்று சமூக அறிவியல் அகாடமியில் கொரிய தீபகற்ப பிரச்சினையில் நிபுணர் லியோனிங் தி குளோபல் டைம்ஸ்க்கு தெரிவித்துள்ளார்.
மூன்று, வடகொரியா மார்ச் மாதத்தில் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கடலில் செலுத்தியதன் மூலம் பாலிஸ்டிக் சோதனைகளில் ஒரு வருட இடைநிறுத்தத்தை முடித்தது. வாஷிங்டனின் பதிலை அளவிடுவதை நோக்கமாகக் கொண்ட ஆயுத ஆர்ப்பாட்டங்களுடன் புதிய அமெரிக்க நிர்வாகங்களை சோதிக்கும் பாரம்பரியத்தை தொடர்கிறது. எனினும் அணுசக்தி மற்றும் நீண்ட தூர ஏவுகணை சோதனைகளுக்கு வடகொரியா இன்னும் தன்னிச்சையாக தடை விதித்து வருகிறது. இது அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை முற்றிலுமாக முறியடிக்க விரும்பவில்லை என்பதற்கான அறிகுறியாகவே அவதானிக்கப்படுகிறது.
எனவே வடகொரியாவின் ஏவுகனைகளின் பரிசோதனை அமெரிக்காவிற்கு ஆசியாவில் ஏற்கனவே அதிகரித்துள்ள நெருக்கடியை மேலும் அதிகரிப்பதாகவே காணப்படுகிறது. அமெரிக்க உலகை ஆயுதங்களால் ஆக்கிரமித்து வந்த நிலையில், ஆயுத முனைப்பூடாக அமெரிக்காவை கையாளும் இராஜதந்திர நடவடிக்கையை கிம் ஜோங் உன் வெற்றிகரமாக நகர்த்தி வருகின்றார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிம் ஜோங் உன்னை அதிகமாக பைத்தியக்கார கோட்பாடு மூலமாக நிந்தித்து வந்தாலும,; மீள மீள உன் தனது இராஜதந்திர நடவடிக்கை மூலமாய் தனது புத்திசாலித்தன்தை உறுதிப்படுத்தி வருகின்றார். ஜோ பிடனின் நிர்வாகம், வடகொரியாவின் அணுஆயுதமயமாக்கலுக்கு இராஜதந்திர உபாயங்களை பயன்படுத்தத் தயாராக இருப்பதாக கூறினாலும் தடைகளை எளிதாக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் வடகொரியாவின் க்ரூஸ் ஏவுகணை பரிசோதனைகள் பிடன் நிர்வாகத்தின் நெருக்கடியை அதிகரித்துள்ளமை பிடன் நிர்வாக நிலைப்பாடுகளில் அதிக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவதானிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் கீழிறங்கியதை போன்று வடகொரியாவில் கிம் ஜோங் உன்னின் இராஜதந்திர நடவடிக்கைக்கும் அமெரிக்கா கீழிறங்குமா என்பதே இன்றைய சர்வதேச அரசியலின் கேள்வியாக உள்ளது.
Comments
Post a Comment