ஜெனிவா களத்தில் தமிழர் உரிமை போராட்டம் முடிவுக்கு வருகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

2009ஆம் ஆண்டு உள்நாட்டு ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பிற்பாடு தமிழர் சர்வதேச சக்திகளால் இலங்கை அரசியலிலுள் தம் இருப்பை உறுப்படுத்துவதற்கான ஊடகமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை களத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இலங்கையில் தமிழர்களின் உரிமைக்கான கோரிக்கையை முதன்மைப்படுத்தி இலங்கை அரசியலை கையாளும் பொறிமுறையை கட்டமைத்து வந்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களால் இலங்கை அரசாங்கங்கள் நெருக்கடிகளை எதிர்கொண்ட போதிலும் தென்னிலங்கை அரசியல் அதனை சரியான தடத்தில் நகர்த்தி கொண்டு சென்றுள்ளமையையே கடந்த கால வரலாறுகள் உறுதி செய்துள்ளன. இந்நிலையில் 48வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை மற்றும் அது தொடர்பாக உறுப்பு நாடுகளின் ஆதங்கங்கள் வெளிப்படுத்தும் அரசியல் நகர்வுகளை மற்றும் களநிலைமைகளை தேடுவதாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது.

செப்ரெம்பர்-13அன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் மிசெல் பச்லெட் தனது வாய்மூலமான அறிக்கையில் இலங்கை தொடர்பான விவகாரங்களையும் முதன்மைப்படுத்தியிருந்தார். மிசெல் பச்லெட்ன் வாய்மூல அறிக்கையில், இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் இராணுவமயமாக்கலின் மோசமான தாக்கத்தை வெளிக்காட்டியமையுடன், இலங்கையில் அடிப்படை உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளி, ஜனநாயகக்கட்டமைப்புக்கள், நிலைபேறான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் வலு இழந்துள்ளமையினையும் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளார். மேலும் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐ.நாவுடன் இணைந்து நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வோமெனக் கடந்த ஜூன் மாதம் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியைக் குறிப்பெடுப்பதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தந்திருக்கும் தகவல்களை ஆமோதிப்பதாகவும்(யஉமழெறடநனபந) மிசெல் பச்லெட் குறிப்பிடுவது இரட்டை அணுகுமுறையாகவே தெரிகிறது.

மிசெல் பச்லெட்ன் இரட்டை அணுகுமுறை கருத்தாடல் பல தளங்களின் அரசியல் விளைவுகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஈடுசெய்துள்ளது என்பதனையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக சர்வதேச அமைப்புக்கள் சர்வதேச சக்திகளின் நலனை முதன்மைப்படுத்துவது யதார்த்தமாகும். இவ்வடிப்படையில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டை சர்வதேச சக்திகள் கொண்டுள்ள பார்வை, தென்னிலங்கை அரசியலிற்கு ஏற்பட்டுள்ள விளைவு மற்றும் தமிழ் மக்களிற்கு ஏற்பட்டுள்ள விளைவுகளை அவதானிக்க வேண்டியது அவசியமாகும்.

முதலாவது, இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டில் உள்ள சர்வதேச சக்திகளின் பார்வை, இலங்கை மேற்கிலிருந்து விலகி செல்வதை விரும்பாதவர்களாகவும், அதேநேரம் இலங்கையை அச்சுறுத்தும் மனப்போக்கில் இல்லை என்பதையே மிசெல் பச்லெட்ன் வாய்மூல அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளியேறாத வகையிலான அரவனைப்பையும் அதேநேரம் இலங்கையில் தளரும் மேற்கின் இருப்பை உறுதி செய்வதற்கானதொரு உபாயமாகவும் இக்கூட்டத்தொடர் அறிக்கை அமைந்துள்ளது. குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் பொறுப்புகூறல்சார் விடயங்களை வரவேற்பதாகவும் தனது வாய்மொழி மூல அறிக்கையை பட்செல் முன்வைத்தார். மேலும் இலங்கை அரசாங்கம் கூறிய உள்ளகப் பொறிமுறையை ஆமோதிக்கும் தொனியில் பச்லெட் கருத்து வெளியிட்டிருக்கிறார். அதாவது, ஜனாதிபதி நியமித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவருமெனத் தான் எதிர்பார்ப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இது நேரடியாக இல்லாது விடினும், இலங்கையின் உள்ளக பொறிமுறைக்கு நம்பிக்கை தெரிவிக்கும் சமிக்ஞையே வெளிப்படுத்துகிறது. இக்கருத்துக்கள் மேற்கிலிருந்த இலங்கையை விலகி செல்ல விடாது அரவணைப்பதற்கான வழிமுறையாகவே காணப்படுகிறது. ஏனெனில் இலங்கை அரசாங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்ட செயற்பாடுகளின் நிறைவேற்றுத்தன்மைகள் கேள்விக்குறியானவை என்பதுடன், அதிலுள்ள இராணுவமயமாக்க சிந்தனைகள் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எதிரானவையாகும். இவை தொடர்பில் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொதுவில் இடம்பெறும் பல இணையவழி கலந்துரையாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளளர். ஆயினும் சிவில் சமூகங்களின் கருத்துகளிலிருந்து தகவல்களை திரட்டக்கூடிய ஐ.நா மனித உரிமைகள் பேரவை போன்ற அமைப்புக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையின் செயலற்ற தன்மை நன்றாக அறிந்திருந்தும் வரவேற்பதும், பாராட்டுவதும் இலங்கை அரசாங்கம் விலகி செல்வதை விரும்பாமையையே உறுதி செய்கிறது. அதேநேரம் முழு இலங்கை பரப்பில்; இடம்பெறும் இராணுவமயமாக்கம், ஆட்சிதுறையின் எதேச்சதிகார செயற்பாடுகள், சிவில் சமூகங்களுக்கு எதிரான கட்டப்பாடுகள் தொடர்பிலான கண்டன குறிப்புக்கள் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. இலங்கை தமது இருப்பை உறுதி செய்வதற்காக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரத்தில் தமிழர் விடயத்தை மையப்படுத்தி எழுந்த நெருக்கடிகளை தளர்த்தியுள்ளது என்பதே நிதர்சனமாகும்.

இரண்டாவது, தென்னிலங்கை அரசியலுக்கான விளைவை அவதானிக்குமிடத்து, ஜி.எல்.பீரிஸின் மாற்றம் எதிர்பார்த்த வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நெருக்கடியை தளர்த்த வழிவகுத்துள்ளது. எனினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் மிசெல் பச்லெட்ன் வாய்மூல அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ள பதிலறிக்கையை கொண்டு இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான ஜெனிவா அரங்கில் நெருக்கடியில் இருப்பதாக சில வாதங்கள் இலங்கை அரசியல் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விமர்சனம் அரசியலின் உள்ளார்ந்த பார்வை இன்மையையே உணர்த்துகிறது. ஜி.எல்.பீரிஸின் ஜெனிவாவை மையப்படுத்திய இராஜதந்திர நகர்வில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை மையப்படுத்திய நெருக்கடிகளை நீர்த்துப்போக செய்வதே பிரதான இலக்காக அமைந்திருந்தது. அவ்இராஜதந்திர நடவடிக்கையில் ஆரோக்கியமான முன்னேற்றத்தையே இலங்கை அரசாங்கம் பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இன்றுவரை தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற காணி அபகரிப்புகள், பௌத்தமயமாக்கல், மரபுரிமைப் பண்பாட்டு அழிப்புப் போன்ற இன அழிப்புக் குறித்த எதனையுமே மிசெல் பச்லெட் தனது வாய்மூல அறிக்கையில் குறிப்பெடுக்க தவறியுள்ளர். மிசெல் பச்லெட்ன் வாய்மூல அறிக்கையில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் யாவும் சிங்கள தேசியத்தில் இன்று இலங்கை அரசாங்கம் சார்ந்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களே ஆகும். எனவே சிங்கள பௌத்த தேசியவாத அலையால் கட்டடமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கத்தால் சிங்கள தேசியத்தால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தவிர்த்து செல்வது இலகுவானதாகும். அவ்வகையில் 48வது கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் மீது ஏற்பட்டுள்ள நெருக்கடி இலங்கை அரசாங்கத்தால் சுலபமாக கடந்து செல்லக்கூடிய வகையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் விவகாரத்தை ஜெனிவா அரங்கில் தளர்த்தியுள்ளமையும், இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையை ஏற்பதுடன் வரவேற்றுள்ளமையானது ஜி.எல்.பீரிஸின் வெளிவிவகார இராஜதந்திர செயற்பாட்டின் வெற்றியாகவே அமைகிறது.

மூன்றாவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தின் பிரதான தரப்பாக காணப்பட்ட தமிழர் நலனை தேடுமிடத்து இம்முறையும் கையறு நிலையே காணப்படுகின்றது. அதிலும் இம்முறை இலங்கை விவகாரத்தில் தமிழர் பிரதான தரப்பிலிருந்து நழுவும் நிலைமையையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, திணைக்களங்களூடாக இலங்கை தமிழர்களுக்கெதிராக நிகழ்ந்துவரும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களினையோ, ஈழத்தமிழர்களுக்கான நிரந்த அரசியல் தீர்வு பற்றியோ எந்தவொரு பரிந்துரைகளையும் மிசெல் பச்லெட் தனது அறிக்கையில் வலியுறுத்தியிருக்கவில்லை. எனினும், ஏற்கனவே ஐ.நா. வேறுபட்ட இடங்களில் இருந்து 1,121 ஆதாரங்களை ஓரிடத்தில் ஒன்றுபடுத்தியிருப்பதாகவும், மேலும் புதிய ஆதாரங்களை இனிவரும் காலங்களில் 46ஃ1 தீர்மானத்துக்கு உட்பட்டு தேடவிருப்பதாகவும், இந்தச் செயற்பாடுகளுக்குரிய நிதிகளையும் உறுப்பு நாடுகளிடம் கோரி மிசெல் பச்லெட் வாய்மூல அறிக்கை சமர்ப்பித்திருப்பது தமிழர் நலனுக்குட்பட்ட விடயமாகவே காணப்படுகிறது. ஆயினும் திரட்டப்படும் ஆதாரங்களூடான விசாரணை பொறிமுறையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை சரியாக தெரிவிக்க தவறியுள்ளது. இலங்கை அரசாங்கம் மீது ஜெனீவா கடந்த ஏப்ரல் கொடுத்த அழுத்தத்துக்கு கணிசமாக அது உட்பட்டு இணங்கிவந்திருப்பதாகவும், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை வரவேற்றுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை, திரட்டப்படும் ஆதாரங்களை உள்ளக பொறிமுறையூடான விசாரணைகளுக்கு வழங்குவார்களாயின் அது தமிழர்களின் நலனை புறந்தள்ளும் செயற்பாடாகவே காணப்படும்.

எனவே, நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் இலங்கை அரசாங்கம் ஒப்பீட்டளவில் சாதகமாகவே நகர்த்தியுள்ளது. எனினும் சர்வதேச சக்திகள் இலங்கையில் தொடர்ச்சியாக இருப்பை பேண சில நெருக்கடிகளை முன்னெடுத்துள்ள போதிலும் அவை சிங்கள மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தியதனால், அதனை அரசாங்கம் விரைவில் தீர்த்துவிடும். ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறிக் கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை முன்னிறுத்தி வழிநடத்திய ஏகாதிபத்திய நாடுகள், இலங்கை ஜனநாயக கட்டமைப்பை நல்வழிப்படுத்தும் பொறிமுறைகளையே தற்போது தமது பரிந்துரைகளில் முன்மொழிந்து வருகின்றன. இது ஈழத்தமிழர் விவகாரம் ஜெனிவாவிலிருந்து ஓரங்கட்டப்படும் சூழலையே உருவாக்குகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை நிராகரிப்பதால் சர்வதேசம் இன்றும் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதாகவும், ஈழத்தமிழரசியலில் வழமையான நகர்வுகளே போதுமானவை என எண்ணுவார்களாயின், ஜெனிவா களம் தமிழர் உரிமை போராட்டத்தின் வரலாற்றை முடிவுக்கு கொண்டுவரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே கூற தோன்றுகிறது.



Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-