ஜெனிவாவின் தோல்விக்கு தமிழ் தலைமைகளின் ஏமாற்றுத்தனமான அரசியலே காரணம் -ஐ.வி.மகாசேனன்-

 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து வருடந்தோறும் மார்ச், செப்டெம்பர் மாதங்களில் ஜெனிவாவை மையப்படுத்தி இலங்கை அரசியல் களம் முட்டி மோதுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையூடாக ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் தம் தேசிய நலனுக்கு ஏற்ப வளைத்து கையாண்டு வருகின்றனர். 2015ஆம் ஆண்டு வரை ஈழத்தமிழர்களுக்கு சாதமாக இருந்த ஜெனிவா களம், 2015ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான களமாக மாறியது. இம்மாற்றத்திற்கு ஈழத்தமிழரசியல் தரப்பும் பங்களிப்பு நல்கியமை குறிப்பிடத்தக்கது. இவ்ஒழுங்கில் 2019ஆம் ஆண்டு இறுதியில் மீள ராஜபக்ஷாக்களின் ஆட்சி இலங்கையில் துளிர் விட்டதும் ஜெனிவா களம் ஈழத்தமிழருக்கு சாதகமான மாற்றத்தை காண்பித்தது. இப்பின்னணியிலேயே 2021 மார்ச் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியானதாகவே செப்டெம்பர்-13 48வது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் 2021 செப்டெம்பர் ஜெனிவா கூட்டத்தொடர் யாருக்கு சாதகமான களநிலைமைகளை வெளிப்படுத்துகின்றது என்பதை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேவையின் 48வது கூட்டத்தொடர் செப்டெம்பர்-13 முதல் ஒக்டோபர்-08 வரை மெய்நிகர் வழியாக இடம்பெற உள்ளது. தற்போததைய நிகழ்ச்சி நிரலின் படி கூட்டத்தொடரின் முதல் நாள் செப்டெம்பர்-13 அன்று கடந்த கால ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வாய்மூல அறிக்கையாக சமர்ப்பிக்க இருப்பதுடன், மறுநாள் செப்டெம்பர்-14 அன்று விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர்-07 அன்று இலங்கை தொடர்பான தீர்மான முடிவு அறிவிக்கப்படும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் பதிவு வெளிப்படுத்துகிறது.

ஜெனிவா களம் என்பது தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்துக்கான ஆயுத முனைப்பு மௌனிக்கப்பட்டதன் பின்னான இலங்கை அரச இயந்திரத்துக்கும் தமிழரசியல் தரப்புக்குமான இராஜதந்திர மோதல் களமாக காணப்படுகிறது. எனினும் கடந்த ஒரு தசாப்தங்களாகவே இக்களத்தை இலங்கை அரசாங்கங்களே வெற்றிகரமான இராஜதந்திர நகர்வுகளூடாக நகர்த்தி வந்துள்ளளனர். இலங்கை அரசாங்கங்கள் ஒரு சில நெருக்கடிகளை சந்தித்த போதிலும் அவை தற்காலிக நெருக்கடிகளாகவே அமைந்துள்ளன. மாறாக ஈழத்தமிழரசியலுக்கு சாதகமான நன்மைகளை ஜெனிவா களத்தூடாக ஈழத்தமிழரசியல் தரப்பினர் இதுவரை பெறத்தவறியே வந்துள்ளனர். மேலும் கடந்த மைத்திரி-ரணில் அரசாங்க காலப்பகுதியில் அரசாங்கத்தால் கையாளப்பட்டு அரசாங்க நலனுக்காக செயற்பட்ட தரப்பாக தமிழரசியல் தரப்பு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2021 மார்ச் ஜெனிவா கூட்டத்தொடரின் தீர்மானங்கள் சில ஈழத்தமிழரசியலுக்கு சாதமான விளைவுகளை வெளிப்படுத்தி இருந்ததுடன் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடியினையும் உருவாக்கியும் இருந்தது. இந்நிலையில் 2021 செப்டெம்பர் ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஈழத்தமிழருக்கு மேலும் சாதமான களநிலையை உருவாக்குமென எதிர்பார்த்த போதிலும், ஜெனிவாவை மையப்படுத்திய சர்வதேச நெருக்கடியை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டுள்ளன என்பதையே நிலவரங்கள் பறைசாற்றுகிறது. பிரதானமாக அண்மைய மூன்று விடயங்கள் ஜெனிவா களம் இலங்கை அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடியை வழங்காது என்பதற்கான சான்றாக அமைகின்றது.

ஒன்று, ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை முன்னகர்த்தும் பிரித்தானிய ஜெனிவா கூட்டத்தொடர் அண்மிக்கும் காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்து இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் இதனை மகிழ்ச்சிகரமாக வரவேற்றுள்ளதுடன் பிரித்தானியாவை முன்மாதிரியாக கொண்டு ஏனைய நாடுகளும் செயற்பட வேண்டுமென்ற அறைகூவலையும் விடுத்துள்ளார். பிரித்தானியா இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை நகர்த்துவதில் பின்னின்று செயற்பட்டவர்களாக புலம்பெயர் தமிழர்களே காணப்படுகின்றார்கள். அவ்வாறான புலம்பெயர் செயற்பாட்டாளர்களை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளாக குறிப்பிட்டு தடைப்பட்டியல் அறிவித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச பரப்பில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பது என்பது சர்வதேச சூழலில் இயங்கும் புலம்பெயர் அமைப்புகளுக்கு நெருக்குவாரத்தை வழங்கக்கூடியதேயாகும். பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு நலனான செயற்பாட்டை முன்னெடுத்து ஜெனிவா கள கொதிநிலை தளர்வடையும் சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது.

இரண்டு, பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவின் இத்தாலிக்கான விஜயம். அடுத்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் காலப்பகுதியில் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளனர். இத்தாலி பொலொக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் மாநாடொன்றில் ஆரம்ப உரை நிகழ்த்துவதற்கே பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்விஜயத்தின் போது ஐரோப்பிய நாடாளுமன்ற முக்கிய பிரதிநிதிகளையும் பிரதமர் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடருக்கு சமாந்தரமான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றின் பல்கலைக்கழக மாநாட்டில் ஆரம்ப உரைக்கு இலங்கை பிரதமர் அழைக்கப்படுவதும், ஐரோப்பிய நாடாளுமன்ற முக்கியஸ்தர்களின் சந்திப்புக்களும் ஜெனிவா நெருக்கடியில் ஐரோப்பிய நாடுகளின் தளர்வையே அடையாளப்படுத்துகிறது. 

மூன்று, ஜி.எல்.பீரிஸ் ஜெனிவா விவகாரத்தை கையாளும் திறன். பீரிஸின் கடந்தகால முன்அனுபவங்களில் முதிர்ச்சியாலும் ஜெனிவாவில் தமிழ் அரசியல் தரப்பின் அணுகுமுறைகளை புரிந்து கொண்டவர் என்ற அடிப்படையிலும் வெளிவிவகார அமைச்சர் என்ற தகுதிக்கு அப்பால் ஜெனிவா விவகாரத்தை கையாள முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இதனை பீரிஸிம் நேர்த்தியாகவே செய்துள்ளார். கடந்த 27ம் திகதி ஐ.நா. மனித உரிமைமைகள் ஆணையாளருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான புள்ளிவிபரங்கள் உள்ளடங்கிய அறிக்கையினை சமர்ப்பித்திரந்தது. அதன் சுருக்கத்தை பதின்மூன்று பக்கங்களில் கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு 31ம் திகதி அனுப்பிவைத்திருக்கிறது. இவ்அறிக்கை இலங்கை தேசிய இனப்பிரச்சினையை மனிதாபிமான பிரச்சினையாக முன்னிறுத்தி அப்பிரச்சினைகளை தீர்ப்பதோடு, அரசியல் நல்லிணக்க ஒற்றுமைப்பாட்டை ஏற்படுத்தவதற்கான உள்ளக பொறிமுறைகளை இலங்கை அரசாங்கம் வினைத்திறனாக செயற்படுவதாக காண்பித்துள்ளது. இது கடந்த மைத்திரி-ரணில் அரசாங்கம் எந்தவகையில் ஐ.நா. பொறிமுறைகளுடன் ஒத்து இயங்கியதோ அதே அளவிலே தாமும் இயங்கப்போவதான ஒரு செய்தியை சர்வதேச சமூகத்திற்கு வெளியிட்டுள்ளது. மேலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கையை தொடர்ந்து வாய்மூல அறிக்கையிடலில் கடும் தொனியை மிகவும் குறைத்த ஒரு நிலையிலேயே கருத்து வெளியிட இருப்பதாக பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளதாக கூர்மை இணைத்தளம் செய்தியிட்டுள்ளமையும் அவதானிக்கப்பட வேண்டியவிடயமாகும்.  

அரச இயந்திரம் நுட்பமான இராஜதந்திர காய்நகர்த்தலூடாக சர்வதேச நெருக்கடியை நீர்த்து போக செய்துள்ளது. எனினும் ஜெனிவா களமானது தமிழர்களுக்கே சாதகமான தன்மைய ராஜபக்ஷாக்களின் மீள்வருகை கொடுத்திருந்தது. இந்நிலையில் தமிழருக்கு  சாதகமாக காணப்பட்ட சூழலை தமிழரசியல் தரப்பினர் எவ்வகையில் இழந்துள்ளார்கள் என்பதனையும் அறிதல் அவசியமாகும்.

முதலாவது, தமிழரசியல் தரப்பின் இராஜதந்திரமற்ற செயற்பாடு. இலங்கை அரச இயந்திரம் சர்வதேச நெருக்கடிக்கு எதிராக நிதியமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரின் முக்கூட்டாக பயணிக்கையில், தமிழரசியல் தரப்பின் சர்வதேச உறவுகள் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனித்து கையாளுவது தமிழ்த்தேசிய அரசியலின் பலவீனமாகவே காணப்படுகிறது. எம்.ஏ.சுமந்திரன் கடந்த பத்தாண்டுகளாக தமிழ்தேசிய அரசியலின் சர்வதேச உறவுகளை தனித்தே கையாண்டு வந்துள்ளார். அதன் விளைவுகள் பூச்சியமாகவே காணப்படுகிறது. மேலும் சுமந்திரனின் கடந்தகால சர்வதேச நகர்வுகள் தென்னிலங்கையில் செயற்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்(Nபுழு'ள) செயற்பாடுகளை ஒத்ததாகவும், அவர்களோடு இணைந்ததாகவுமே இருந்து வந்துள்ளது. தமிழ்த்தேசியத்திற்கான தனித்துவமான இராஜதந்திர நகர்வுகளையோ அதற்கான முன்முயற்சிகளோ மேற்கொள்ளவில்லை. இந்நிலைமைகள் கடந்த காலங்களில் படிப்பினைகளை வழங்கிய போதும் மீள மீள ஒருவரிடமே சர்வதேச உறவுகளை தனித்து கையாள ஒப்படைப்பது தமிழரசியல் தரப்பின் பலவீனத்தின் சான்றே ஆகும்.

இரண்டாவது, தமிழரசியல் தரப்பு தமிழ்த்தேசிய நலனை புறந்தள்ளி தமிழ் மக்களிடத்தில் போலிகளை காட்சிப்படுத்தி தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலையே நகர்த்தி வருகின்றனர். குறிப்பாக மேலே குறிப்பிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர நகர்வாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையினை மறுதலித்து, தமிழினத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறைகளை ஆதாரபூர்வமான தகவல்களுடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்ப்பிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த்தேசிய அரசியல் தரப்பிடமே காணப்படுகிறது. எனினும் அத்தரப்பு அதனை வினைத்திறனாக செய்ய தவறியுள்ளது. குறிப்பாக, தமிழ்த்தேசிய அரசியலின் பிரதான தரப்பாக அடையாளப்படுத்தியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறிக்கை சார்ந்து பிளவுபட்டுள்ளதுடன், இறுதியில் அனுப்பப்பட்ட அறிக்கையும் எவ்வித்திலும் தமிழர்களின் சமகால பிரச்சினைகளுடன் தொடர்பற்றதாக காணப்படுகிறது. சம்பந்தன் மாத்திரம் கையெழுத்திட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக்கட்சி மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு மறுதலிப்பின்றி ஒரு தசாப்தத்துக்கு முற்பட்ட ஐ.நா செயலாளரின் அறிக்கையை சுட்டி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான அரசியல் நகர்வேயாகும். தமிழ்த்தேசிய அரசியல் நலனுக்கானதாக இல்லாது எதிரிக்கு சேவையாற்றுவற்கான நடவடிக்'கையாகவே தென்படுகிறது.

மூன்றாவது, தமிழரசு கட்சியின் ஆதிக்கமும் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிளவும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எனும் பெயரில் தமிழ்த்தேசிய கட்சிகள் 2001ஆம் ஆண்டு முதல் ஒற்றுமையை காட்டிய போதிலும் 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம், ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளை ஓரங்கட்டி தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் செயலை அரங்கேற்றி வருகிறது. அதன் உச்சமாகவே இம்முறை ஜெனிவா கூட்டத்தொடருக்காக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தயாரித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அறிக்கையை பங்காளி கட்சிகள், தமிழ் தேசியத்துக்கு விரோதமானதெனக்கூறி  நிராகரித்து தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து அறிக்கை அனுப்பி உள்ளனர். தமிழரசுக்கட்சியும் தனித்து அனுப்பியுள்ளது. தமிழரசை புறம்தள்ளி பங்காளிக் கட்சிகள் தனித்து கையொப்பமிட்டது தவறு என்றால் அவர்களின் விருப்பம் இல்லாமலும், அவர்களுக்கு தெரியாமலும் தமிழரசு அரசாங்கத்துடன் பேசுவது எந்த வகையில் கூட்டணி தர்மத்தின்பாற்பட்டது? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழரசுக்கட்சியின் ஒரு சில உறுப்பினர்களின் ஆதிக்க சிந்தனையே தமிழ்தேசிய கட்சிகளின் ஒன்றினைவை நிர்மூலமாக்கியுள்ளது. 

எனவே, மீளவுமொரு சர்வதேச தளத்தில் காணப்பட்ட வாய்ப்பை தமிழரசியல் தரப்பு பலவீனப்படுத்தி உள்ளது. இராஜதந்திரத மோதலுக்கான ஜெனிவா களத்தில் இராஜதந்திரமற்ற தமிழரசியல் தரப்பை நுட்பமான இராஜதந்திர நகர்வுகளூடாக இலங்கை அரசாங்கம் வெற்றி கொண்டுள்ளதற்காக களநிலவரங்களே காணப்படுகிறது. இனிவரும் காலங்களிலாவது தமிழரசியல் தரப்பு சர்வதேச உறவில் இராஜதந்திரத்தின் முக்கியத்தை உணர்ந்து கையாள்வதற்கு தனியானதொரு கட்டமைப்பை கட்டமைத்து செயற்படுவார்களா? அல்லது இன்னுமொரு தசாப்தமும் இவ்வாறே கடந்து செல்வார்களா என்பது தமிழரசியல் தரப்புகளின் மீதான கேள்வியாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-