"ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம்" ஐரோப்பா-அமெரிக்க முரண்பாட்டை அதிகரித்துள்ளது? -ஐ.வி.மகாசேனன்-

சர்வதேச அரசியலில் கடந்த வாரம் பூதாகரமாகிய விடயம் நேட்டோ பங்காளி நாடுகளிடையே ஏற்பட்ட பூசலாகும். அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து அவுஸ்ரேலியாவுடன் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தத்தை மேற்கொண்டதையடுத்து பிரான்ஸ் தனது ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக பகைமை நாடுகளிடையே கையாளப்படும் தூதரர்களை மீளழைக்கும் செயற்பாட்டை பிரான்ஸ் அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக நகர்த்தி இருப்பது பிளவின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது. இதனை அமெரிக்க ஐரோப்பிய உறவில் அதிகரிக்கும் முறுகலின் ஓர் பகுதியாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர். இக்கட்டுரையும் அதிகரிக்கும் அமெரிக்க - ஐரோப்பா முறுகலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்கஸ்(AUKID) பாதுகாப்பு உடன்பாட்டு அவுஸ்ரேலியா(AUS), அமெரிக்கா(UK), பிரிட்டன்(US) ஆகிய நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்பிரகாரம் பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை அவுஸ்ரேலியாவுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் வழங்க இருக்கின்றன. முதல் முறையாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளும் அவுஸ்ரேலியாவுக்குக் கிடைக்க இருக்கின்றன. உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த உடன்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்க்கிக் கப்பல்கள்தான் முக்கியமானவை. அவை தெற்கு அவுஸ்ரேலியாவில் அடிலெய்டில் கட்டப்பட உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் அவுஸ்ரேலியாவிற்கு வழங்க இருக்கின்றன. நீர்மூழ்கி கப்பலை மையப்படுத்தியே ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா உடனான பிரான்ஸின் மோதலை உருவாக்கி உள்ளது.

அவுஸ்ரேலியாவுக்காக டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைப்பதற்கு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான உடன்பாட்டை பிரான்ஸ் ஏற்கனவே செய்து கொண்டிருந்தது. இந்த ஒப்பந்தம் நிமித்தமாக 2016ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ், அவுஸ்ரேலிய நாடுகளிடையே பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே கடந்த செப்டெம்பர்-15 அன்று இணையவழி சந்திப்பினூடான ஆக்கஸ் ஒப்பந்தம் பொதுவெளியில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆக்கஸ் உடன்பாட்டால் பிரான்ஸின் உடன்பாடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆக்கஸ் உடன்பாடு பொதுவெளியில் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான் அது பற்றி பிரான்சிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது பிரான்ஸை கொதிப்படையச் செய்திருக்கிறது. உடனடியாக அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். மேலும், பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் லே ட்ரியன், அமெரிக்காவின் செயல் 'இரட்டை நிலைப்பாடு, நம்பிக்கைத் துரோகம்' எனவும், 'நாங்கள் நம்பிக்கை கொண்ட உறவை ஆஸ்திரேலியாவுடன் வைத்திருந்தோம். அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது' என்றும், பிரிட்டன்  'தொடர்ச்சியான சந்தர்ப்பவாத நாடு' எனவும் குற்றம்சாட்டினார்.

பிரான்ஸ்-அமெரிக்க முரண்பாட்டை இலகுவாக தனித்து இரு அரசுகளிடையிலான முரண்பாடாக கடந்து செல்ல முடியாது. பிரான்ஸ் அமெரிக்காவின் பிரதான பங்காளிகளைகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் உறுப்புரிமை அரசாகும். ஐரோப்பிய ஒன்றிய கோட்பாட்டில், ஐரோப்பிய ஆணையம் 27 உறுப்பு நாடுகளின் சார்பாக வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான பிரத்யேக அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படையான பிரெஞ்சு எதிர்ப்பை எதிர்கொண்டு நகர்வது சாத்தியமில்லை. வெளிப்படையான பகைமை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக நிகழ்ச்சி நிரலை பிரான்ஸ் கடந்த காலங்களில் மாற்றி உள்ளது. 2016ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் வாஷிங்டனுடனான டிரான்ஸ் அட்லாண்டிக் டிரேடு அண்ட் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஷிப் பேச்சுவார்த்தையை திறம்பட முறியடித்தார். மேலும் தென்அமெரிக்க நாடுகளுடனான மெர்கோசர் ஒப்பந்தம் நடைமுறைக்கு வர அனுமதிக்க மாட்டேன் என்று மக்ரோன் தெளிவுபடுத்தினார். எனவே அமரிக்காவுடனான பிரான்சின் முரண்பாடு அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய உறவின் நெருக்கடியையே உறுதி செய்கிறது. 

சர்வதேச அரசியலில் நீண்டகால பங்காளிகளாக காணப்படும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான உறவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் காலத்திலிருந்து சில நெருக்கடிகள் உருவாகியது. 'அமெரிக்கா முதன்மை' கொள்கையை மையப்படுத்;திய ட்ரம்பின் வெளியுறவுக்கொள்கை செயற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அமெரிக்க உறவை பலவீனப்படுத்தியது. புதிய ஜனாதிபதி ஜோ பிடனின் வருகையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வரவேற்றிருந்தது. மேலும், ஜோ பிடன் ஜனாதிபதியாகி தனது உத்தியோகபூர்வ முதல் பயணத்தை ஐரோப்பிய கண்டத்திற்கு மேற்கொண்டிருந்தமை மற்றும் ஜி-7, நேட்டோ மாநாடுகளில் மீளப்புதுப்பிக்கப்படும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் பற்றியும் உரையாடப்பட்டது. இவை சர்வதேச அரசியலில் அமெரிக்க-ஐரோப்பிய உறவு மீள புத்துணர்வு பெறுவதாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பிடன் நிர்வாகத்தின் அண்மைய செயற்படுகாளும் எழும் விமர்சனங்களும் பிடனின் நிர்வாகமும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உறவிலிருந்து விலகி செல்லும் போக்கின் சாட்சியமாகவே அமைகிறது. இதனை கவணமாக அவதானித்தல் வேண்டும்.

முதலாவது, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் திட்டத்தை அமெரிக்க எதேச்சதிகாரமாக முன்னெடுத்த போதே பிடன் நிர்வாகம் மீதான ஐரோப்பிய நாடுகளின் நம்பிக்கை சிதைய ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தான் தலிபான்களினால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, ஐரோப்பிய எல்லைகளில் இடம்பெயரும் அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலதரப்புவாதம் மற்றொரு வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும் அமெரிக்க திரும்பப் பெறும் பதிவு அதிகரித்த போது உலகின் பல பகுதிகளில் உறுதியற்ற தன்மை அதிகரித்தது. ஆனால், பாரம்பரியமாக அட்லாண்டிக் உறவுகளை ஊக்குவிக்கும் ஒரு வழக்கமான சொல்லாட்சியைத் தவிர்த்து, புதிய அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்பின் பதவியில் இருந்து அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மாற்றியமைக்க பெரிதாக எதுவும் செய்யவில்லை. இப்போது, அமெரிக்க விலகல் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் எழுச்சியைத் தொடர்ந்து, ஐரோப்பா இரண்டு வௌ;வேறு அமெரிக்க நிர்வாகங்களுக்கிடையில் ஒரு சங்கடமான தொடர்ச்சியான உணர்வை எழுப்புகிறது என்ற கருத்தே ஐரோப்பிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது, கடந்த செப்டெம்பர்-15ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நாடான பிரான்சுடன் அவுஸ்ரேலியா மேற்கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் வடிவமைப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முறியடித்து ஆக்கஸ் எனும் புதியதொரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா, பிரிட்டன் கூட்டு அவுஸ்ரேலியாவுடன் மேற்கொண்டமையானது அமெரிக்க மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் பிடன் நிர்வாகமும் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவில் வெளிப்படைத்தன்மை மற்றும் விசுவாசத்தை நிராகரித்துள்ளது என்ற உரையாடலையே ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடையே எழுப்பியுள்ளது.  ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒரு பிளாக்பஸ்டர் ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா ரத்து செய்து அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் புதிய இந்தோ-பசிபிக் மூலோபாயம் பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசிக்கத் தவறியதன் மூலம், ஜூன் மாதம் பிரிட்டனில் நடந்த பு-7 உச்சிமாநாட்டில் பல மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு தலைவர்கள் எட்டிய ஒப்பந்தத்தை பிடன் நிராகரித்ததாக கூறினார். மேலும், 'கூட்டணிக்கான அடிப்படை கொள்கைகள் விசுவாசம் மற்றும் வெளிப்படைத்தன்மை. வெளிப்படையான தன்மை மற்றும் விசுவாசத்தின் தெளிவான பற்றாக்குறையை நாங்கள் கவனிக்கிறோம்.' என்றும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவின் வெளியேற்றம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பிடன் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சிதைத்தது. ஐரோப்பிய அதிகாரிகள் தங்கள் தொனியை கூர்மையாக்கினர், இருப்பினும் அவர்கள் உறுதியான நடவடிக்கையை நிறுத்திவிட்டனர். எனினும் பிரான்ஸ்-அவுஸ்ரேலியா ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டு அவுஸ்ரேலியாவுடன் அமெரிக்க பிரிட்டன் கூட்டு மேற்கொண்டுள்ள ஆக்கஸ் ஒப்பந்தம் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய உறவில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஓன்று, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவிற்குமான வர்த்தக உறவுகளே கடும் நெருக்கடிக்கு செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. சி.என்.என்(CNN) உடனான நேர்காணலின் போது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தனது சொந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதில் அவர் பிடன் 'நிறைய திறந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எங்கள் உறுப்பு நாடுகளில் ஒன்று ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நடத்தப்பட்டுள்ளது, எனவே என்ன நடந்தது, ஏன் என்று நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். எனவே நீங்கள் வழக்கம்போல வியாபாரத்தைத் தொடர்வதற்கு முன்பு அதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.' என்று கோரியுள்ளார். மேலும், ஐரோப்பிய இராஜதந்திரிகள் தற்போது வரவிருக்கும் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் பற்றிய கூட்டு கொள்கைகளை விவாதிக்க உள்ள EU-US உச்சி மாநாட்டை ரத்து செய்யலாமா அல்லது தள்ளிவைக்கலாமா என்று ஆலோசித்து வருகின்றனர். வர்த்தக மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் முதல் கூட்டம் பிட்ஸ்பர்க்கில் செப்டம்பர் 29ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இராஜதந்திர நெருக்கடியால் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பாலிடிகோ(Politico) செய்தி தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இரண்டு, உலக ஆதிக்கத்தில் நெருக்கமான நட்பு நாடுகளாய் காணப்பட்ட இரு நாடுகளின் அரசியல் உறவில் பெரும் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அமெரிக்காவிற்கான தனது தூதுவரை மீள அழைத்தமை உச்சபட்ச அமெரிக்காவுடனான பகைமையை வெளிப்படுத்தும் செயலாகவே காணப்படுகிறது. இரண்டு நூற்றாண்டை கடந்த பிரான்ஸ்-அமெரிக்க உறவில் முதன்முறையாக பிரான்ஸ் தனது தூதரை மீளழைத்துள்ளது. மற்றும் 'முதுகில் குத்தியுள்ளது'இ 'துரோகம்' எனும் சொல்லாடல்கள் அரசியல் உரையாடலில் கணதியான பெறுமதிகளை கொண்டதாகும். இந்நிலையில் பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவை சுட்டி குறித்த சொல்லாடல்களை பிரயோகித்துள்ளமையானது அமெரிக்க-பிரான்சின் பிளவின் உறுதிப்பாட்டையே வெளிப்படுத்துகிறது.

மூன்று, ஐரோப்பிய ஒன்றியம் தனித்து பாதுகாப்பு படை ஒன்றை உருவாக்கும் எண்ணங்களையும் அதிகரித்துள்ளது. இராணுவ நடவடிக்கைக்காக ஐரோப்பிய ஒன்றியம் வரலாற்று ரீதியாகவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியையே நம்பியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் விரைவான சரிவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சொந்த பாதுகாப்பு கொள்கையை இயக்கும் திறன் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன்விளைவாக கடந்த செப்டெம்பர்-15 அன்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரின் வருடாந்திர உரையில் வான் டெர் லேயன், 'பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தனது இராணுவ திறன்களை பலப்படுத்த முயல வேண்டும். ஆப்கானிஸ்தான் வெளியேறிய பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க தலைமையிலான நேட்டோ இல்லாமல் இராணுவ ரீதியாக தலையிட அரசியல் விருப்பம் தேவைப்பட்டது. பிரான்ஸ் அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு உச்சிமாநாட்டை நடத்தும்' என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பாதுகாப்பு படையை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய உறவில் பெரும் நெருக்கடியை ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. எனினும் இந்நெருக்கடியை அமெரிக்க வரவேற்காத போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து விலகிச்செல்லும் வெளியுறவுக்கொள்கை அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகவே காணப்படுகிறது. பனிப்போரில் ரஷ்சியாவை கட்டுப்படுத்துவதற்கும், பனிப்போருக்கு பின்னரான ஒற்றைமைய அரசியலில் அரபு வசந்தத்தை கட்டுப்படுத்தவும் அரவனைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைப்பாட்டை அமெரிக்கா சீனாவை எதிர்கொள்ள எதிர்பார்க்கவில்லை. சீனாவை கையாள இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் புதிய கூட்டுக்கான அடித்தளத்தை அமெரிக்கா திட்டமிடுகிறது. அதனோர் சான்றே ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தமும் ஐரோப்பிய ஒன்றிய நிராகரிப்புமாகும். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கோமாளியாக நளினம் செய்தாலும் அமெரிக்காவின் தற்போதைய இயலுமையையே ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார் என்பது அமெரிக்க புதிய ஜனாதிபதி பிடனின் நிர்வாக செயற்பாடுகளின் விளைவுகளிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-