அமெரிக்கா-இலங்கை உறவை பலப்படுத்துவதற்கான பொறி மகிந்த சமரசிங்காவா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை-சீனா நெருக்கமான உறவு, இலங்கை-அமெரிக்கா நெருக்கடிமிக்க உறவு பற்றிய உரையாடல்களே ராஜபக்ஷாக்களின் மீளெழுச்சியின் பின் அதிகமாக உரையாடப்பட்ட அரசியல் உரையாடலாகும். அதனை நிரூபிக்கும் வகையிலேயே ராஜபக்ஷாக்களின் ஆட்சியின் ஆரம்ப நாட்களும் காணப்பட்டது. எனினும் குறுகிய காலஅனுபவத்திலேயே ராஜபக்ஷாக்கள் நிர்வாகம் மேற்கு நாடுகளிடையே சமநிலையை பேண வேண்டிய தேவையையும் உணர்ந்துள்ளார்கள். அதிரடி மாற்றங்களாக சீனாவுடனான நெருக்கமான உறவிற்கு சமாந்தரமாகவே அமெரிக்க, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுடன் உறவை சீரமைக்கும் வகையில் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றியும் அதன் விளைவுகள் தொடர்பிலும் இப்பகுதியிலேயே முன்னைய வாரங்களில் அதிகமாக உரையாடப்பட்டுள்ளது. இவ்இராஜதந்திர நகர்வுகளில் ஒன்றாகவே பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்காவை அமெரிக்க தூதராக நியமிக்க முன்னெடுக்கப்படும் நகர்வுகளும் அவதானிக்கப்படுகிறது. இக்கட்டுரையும் மகிந்த சமரசிங்க அமெரிக்க தூதராக நியமிப்பதில் காணப்படும் இராஜதந்திர முக்கியத்தை தேடுவதாகவே அமைக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்புரிமையை  இராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த வாரம் இலங்கை செய்திகள் முதன்மைப்படுத்தியிருந்தது. செய்தி அறிக்கைகளின்படி,  அமெரிக்காவிற்கான முன்னாள் தூதுவர் ரவிநாத ஆரியசிங்ஹா ஓய்வு பெற உள்ளதால் அவருக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க அமெரிக்காவிற்கான தூதுவராக நியமிக்கப்பட உள்ளார். நியூயோர்க்கில் நடக்கும் ஐ.நா. பொதுச்சபையின் 76வது கூட்டத்தொடரைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷா நாடு திரும்பியவுடன் மகிந்த சமரசிங்க தனது இராஜினாமாவை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மகிந்த சமரசிங்கா 1988ஆம் ஆண்டு தேர்தல் அரசியல் செயற்பாட்டுக்கு வருவதற்கு முன் வெளிநாட்டலுவல்கள் சேவையிலும், சர்வதேச நிறுவனங்களின் செயற்பாட்டிலும் முதிர்ச்சியான அனுபவத்தை பெற்றவராக காணப்படுகிறார். சமரசிங்க அரசியல்வாதியாக அடையாளப்படுத்தப்பட முதல் இராஜதந்திரியாய் வரலாறு காணப்படுகிறது. இலங்கை வெளிநாட்டு சேவையில் சேர்ந்த சமரசிங்க, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளராகவும், 1980களில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை நிரந்தர தூதரகத்தின் ஆலோசகராகவும் பணியாற்றினார். அவர் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் மற்றும் உலக வானிலை அமைப்பு ஆகியவற்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ஜெனீவாவில் உள்ள இலங்கை மிஷனில் பணிபுரியும் போது, 1986 மற்றும் 1987 ல் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கிட்டத்தட்ட அனைத்து ஆளும் குழு கூட்டங்களிலும், 1985 முதல் 1987 வரை சர்வதேச தொழிலாளர் மாநாட்டிலும் அவர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.  மேலும் அரசியல் தளத்தில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா மற்றும் மகிந்த ராஜபக்ஷா அரசாங்கங்களில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து, மனித உரிமைகள், தொழிற்பயிற்சி மற்றும் நிதி உள்ளிட்ட பல அமைச்சுக்களில் பதவி வகித்தார். அவர் சமீபத்தில் பொது கணக்குகள் குழுவிலும், முன்பு வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சக ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றினார்.

வெளிநாட்டலுவல்கள் மற்றும்  மனித உரிமைகள் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவும் அதற்கு முன்னர் சர்வதேச நிறுவனங்களின் பணிகளூடாகவும் நேர்த்தியான அனுபவம் கொண்டவராய் மகிந்த சமரசிங்க காணப்படுகிறார். இவர் இலங்கை - அமெரிக்க உறவை பலப்படுத்தும் காலப்பகுதியில் அமெரிக்காவிற்கான தூதராக நியமிக்கப்படுவதன் இராஜதந்திர நகர்வை உற்றுநோக்குதல் அவசியம்.

ஒன்று, பொதுஜன பெரமுன முகாம் அதிகம் சீன சார்பு முகம் உடையதாகவே காணப்படுகின்றது. இந்நிலையிலேயே, பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னரே குறித்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றினால் சீனா உறவு நெருக்கமாகுமெனவும் அமெரிக்க உறவில் நெருக்கீடு ஏற்படுமெனவும் விவாதிக்கப்பட்டது. எனினும், இலங்கை அரசாங்கம் பொதுஜன பெரமுன முகாமுக்குள் உள்ள மேற்குடன் உறவுகளை பிணைக்கக்கூடியவர்களை  சமீபகாலமாக முன்னிலைப்படுத்தி வருகிறது. பசில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மீள்வருகை, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிற்கான வெளிநாட்டலுவல்கள்  அமைச்சு நியமனம் எனும் வரிசையிலேயே மகிந்த சமரசிங்க அமெரிக்காவிற்கான தூதராக நியமிக்கப்பட உள்ளார். மேற்குக்கான முகம்களை உள்வாங்குவதில் அதிக கரிசனையை வெளிப்படுத்தும் இவ்அரசாங்கம் பொதுஜன பெரமுன முகாமிலிருந்து மாத்திரமின்றி எதிர் முகாம்களிலிருந்தும் மேற்குக்கான முகம்களை அடையாளங்கண்டு தம் அடையாளமாக வெளிப்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்தியாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொறகொட ஐக்கிய தேசிய கட்சி முகாமுக்குள் ரணில் விக்கிரமசிங்காவால் வளர்க்கப்பட்டவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவது, ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட போதிலும், தொடர்ச்சியாக இராணுவ அதிகாரிகளை சிவில் சேவைக்குள் இணைத்து கொண்டமையால் ராஜபக்ஷாக்களின் நிர்வாகத்தை இராணுவ ஆதிக்கம் நிறைந்ததாக சர்வதேச பரப்பில் விமர்சனம் காணப்படுகிறது. இந்நிலையில் இத்தோற்றப்பாட்டை சீர்செய்ய அரசாங்கத்தினுள் உள்ள ஜனநாயக தோற்றப்பாட்டாளர்களை இலங்கை அரசாங்கம் அமெரிக்கா மற்றும் மேற்குடனான உறவில் முதன்மைப்படுத்துகிறது. மகிந்த சமரசிங்க மனித உரிமை செயற்பாட்டாளராகவும் சர்வதேச நிறுவனங்களின் செயற்பாட்டாளராகவும் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டவராவர். இலங்கையில் மனித உரிமைகளுக்கான நிரந்தர நிலைக் குழுவின் இணைத் தலைவராக உள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் (UNHCR), ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி (UNICEF) மற்றும் தொழிலாளர் அமைப்பு, சர்வதேசப் புலம்பெயர்வு அமைப்பு போன்ற இலங்கையின் முன்னர் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குடிமக்களை மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பிற்கான முயற்சிகளைத் தொடர்கின்ற சர்வதேச அமைப்புக்கள் உட்பட பல ஐ.நா அமைப்புக்களுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்றுகிறார். இவ்வாறானவரை தமது முகாமுக்குள் இருந்து வெளிப்படுத்துகையில் தம்மீதான நேர்மறையான விமர்சனங்களை தவிர்க்க இலங்கை அரசாங்கம் முற்படுகிறது.

மூன்றாவது, இலங்கை அதிகமாக ஜெனிவா நெருக்கடியை கையாளும் வகையிலேயே தனது அண்மைய இராஜதந்திர நடவடிக்கைகளுக:கு முக்கியத்துவமளித்து வருகிறது. மகிந்த சமரசிங்க ஏற்கனவே மகிந்த ராஜபக்ஷாவின் ஆட்சிக்காலப்பகுதியில் ஜெனிவா நெருக்கடியை கையாண்ட அனுபவமுடையவராக மனித உரிமைகள் அமைச்சராக செயற்பட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு ஜெனீவாவுக்கு தூதுக்குழுவிற்கு தலைமை வகித்திருந்தார். மேலும், 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொண்டார். இலங்கையின் பிரதிநிதியாக ஜெனிவாவை எதிர்கொண்ட காலப்பகுதியில்,  சமரசிங்க ஜெனிவாவில் அதிகம் நெருக்கடிகளை எதிர்கொண்ட போதிலும் முதிர்ச்சியான அனுபவத்தை பெற்றுள்ளார் என்பதும் நிதர்சனமாகும். முன்னாள் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அவரது முன்னாள் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசின்ஹாவின் நினைவுக் குறிப்பை மதிப்பாய்வு செய்து எழுதிய குறிப்பில், '2009இல் எங்கள் கூட்டணிகளின் தற்காலிக, விரைவு நிலையைப் பொறுத்தவரை, அவர்கள் விஷயங்களைச் சரியாகப் பெறுவதற்கு மூன்று முழு வருடங்களுக்கு நேரத்தையும் இடத்தையும் உறுதி செய்தனர். அந்த கூட்டணிகளின் சகிப்புத்தன்மை நமது சர்வதேச உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது. நாங்கள் அவ்வாறு செய்திருந்தால், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் 2009 இல் எங்களுக்கு தீவிரமாக ஆதரவளித்த பல அரசுகளை நாங்கள் இழந்திருக்க மாட்டோம்.' என பதிவு செய்துள்ளார். இவ்முதிர்ச்சியான அனுபவம் தற்போது எழுந்துள்ள அமெரிக்கா ஊடான ஜெனிவா நெருக்கடியை சீர்செய்ய உதவுமென இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. 

நான்காவது, பாராளுமன்ற உறுப்பினராயும் முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த மகிந்த சமரசிங்காவை தூதுவராக நியமிப்பதனூடாக இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடனான இலங்கை உறவின் முக்கியத்துவத்தை அமெரிக்காவிற்கு செய்தியாக வெளிப்படுத்த முனைகிறது. இலங்கைக்கான நெருக்கீடுகளுக்கான பிரதான காரணமே, ராஜபக்ஷாக்கள் அரசாங்கம் மேற்கின் உறவின் முக்கியத்துவத்தை புறக்கணித்து சீனாவுடன் நெருக்கமான உறவை அதிகரிப்பதாகும். இந்நிலையிலேயே மகிந்த சமரசிங்காவின் நியமனத்தினூடாக அமெரிக்காவுடனான இலங்கை உறவை இலங்கை அரசாங்கம் முதன்மைப்படுத்துகிறதென்ற செய்தியை வழங்குகிறது. முன்னர் இந்தியாவுடனான நெருக்கடியை சீர்செய்யவும் இவ்வாறான பொறிமுறையையே இலங்கை அரசாங்கம் கையாண்டிருந்தது. மிலிந்த மொறகொடவும் அதனை வெற்றிகரமாக கையாண்டுள்ளார். இப்பிண்ணனியிலேயே மகிந்த சமரசிங்காவும் அமெரிக்கா உறவை பலப்படுத்துவதை வெற்றிகரமாக முன்னெடுப்பாரென இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஐந்தாவது, தென்னிலங்கை இராஜதந்திர மட்டத்திலும் இலங்கை மேற்கு நாடுகளிடையே சமநிலையை பேண வேண்டும் என்ற கருத்தே முதன்மைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இலங்கையின் இராஜதந்திரிகளில் ஒருவரான தயன் ஜெயதிலக இலங்கையின் வெளியுறவுக்கொள்கையின் வடிவத்தை குறிப்பிடுகையில், 'சிறிய அரசாகிய இலங்கை ஒரு இலவச மிதவையாகவோ அல்லது இணக்கமான சாய்விலிருந்து வேறுபடுவதால் போட்டியிடும் சக்திகளில் பெரும் சக்தியால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது. எனவே, இலங்கை அரசாங்கம் 1961ஆம் ஆண்டில் அதன் நிறுவனர் உறுப்பினராக இருந்த அணிசேரா இயக்கத்தின் நீட்டிக்கப்பட்ட குடும்பத்தில் இருக்க வேண்டும். இதனை இலங்கையின் சிறந்த வெளியுறவு அமைச்சர் லட்சுமண கதிர்காமர் நிச்சயமாக தொடர்ந்து செய்திருப்பார். இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சர்வதேச திசைகாட்டி முழுவதும் நெகிழ்ச்சியுடன் ஈடுபட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் உறுதியுடன் இருக்க வேண்டும். மேலும் நெருக்கடி நிறைந்த இடைநிலை மற்றும் மறுசீரமைக்கும் உலகளாவிய அமைப்பின் இடைவெளிகளில் முடிந்தவரை பங்கேற்புக்கான இடத்தை திறக்க வேண்டும்.' எனக்குறிப்பிடுகின்றார்.

எனவே, இலங்கை அரசாங்கம் அமெரிக்கா மற்றும் மேற்கின் நெருக்கடிகளை இலகுவாக கடந்து செல்லும் பொறிமுறைகளை இராஜதந்திரரீதியாக உருவாக்கி செயற்படுத்தி வருகின்றனர் என்பதையே அண்மைய அதிரடி மாற்றங்கள் வெளிப்படுத்தியும் நிற்கிறது. இலங்கை அரசாங்கங்கள் கட்டமைக்கப்பட்ட அரச இயந்திரத்தின் முகவர்கள் என்ற நிலையில் அரச இயந்திரத்தின் இராஜதந்திர பொறிமுறையை தெளிவாக பயன்படுத்தி எதிர்பார்த்த இலக்குகளுக்குள் பயணிக்கின்றனர். எனினும் ஈழத்தமிழரசியல் தரப்பு தெளிவான இராஜதந்திர பொறிமுறை இன்மை மற்றும் நெறிப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கொள்கையின் மலினத்தால் தொடர்ச்சியாக வாய்ப்புக்களை நழுவ விடும் தரப்பாகவே காணப்படுகிறார்கள். அரசியலிலோர் கருத்தியல் காணப்படுகிறது. நாம் எத்தகு ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்பதாகும். தென்னிலங்கை நீண்டகாலமாகவே இலங்கை தேசம் என்கையில் ஒன்றினைவதுடன் தனது இராஜதந்திர நுட்பத்தால் நெருக்கடிகளை கடந்து செல்கின்றனர். எனினும் தமிழ்அரசியல் தரப்பு இன்னும் தமது தெரிவை தேர்வு செய்யாது கடந்து செல்வது தமிழினத்தின் விமோசனமின்மையையே வெளிப்படுத்துகிறது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-