ஈழத்தமிழர்கள் சிறுபான்மைக் குழுவா தேசிய இனமா? -ஐ.வி.மகாசேனன்-
ஈழத்தமிழர்கள் அரசியலில் தேசியம் அதிகம் முதன்மைப்பெறும் உரையாடலாக காணப்படுகின்ற போதிலும் தேசியம் தொடர்பான சரியான பார்வையை செலுத்த தவறியே வருகின்றார்கள். தமிழ்த்தேசியம் தொடர்பாக, சுயநிர்ணய உரிமைகள் தொடர்பாக தேர்தல் காலங்களில் பிரச்சார மேடைகளில் முழங்கும் தமிழரசியல் தரப்பினரே மறுபுறம் ஈழத்தமிழர்களை சிறுபான்மைக்குழு என்ற சொல்லினூடாகவும் விழித்து பொதுவெளியில் உரையாடி வருகின்றார்கள். இக்கட்டுரை ஈழத்தமிழர்கள் சிறுபான்மைக்குழுவா? அல்லது தேசிய இனமா? என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவினுடான சந்திப்பு பற்றிய விபரத்தை வெளியிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவு மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் பணியகம் ஆகியன ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கையின் சிறுபான்மைக் குழுவின் (Minority Group) விவகாரமாக அடையாளப்படுத்தியிருந்தனர். அத்துடன் இச்சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இதனை மறுதளிக்காமையானது தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஈழத்தமிழரை சிறுபான...