குவாட்-02 இஸ்ரேல்-அமெரிக்க நலனுக்குள் இந்தியா மூழ்கிப்போகுமா? -ஐ.வி.மகாசேனன்-
உலக ஒழுங்குக்கான அதிகார போட்டியில் ஈடுபடும் அமெரிக்கா - எதிர் சீனாவாக புதிய கூட்டுக்களின் உருவாக்கங்களே சமீபகால சர்வதேச அரசியலின் முதன்மையான விடயமாகக் காணப்படுகின்றது. சர்வதேச அரசியல் இந்தோ-பசுபிக்கை மையப்படுத்தி நகர்வதால் புதிய கூட்டு உருவாக்கங்களும் இந்தோ-பசுபிக் பிராந்தியங்களை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க கூட்டில் ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய அரசான இந்தியாவின் அண்மைய வெளியுறவுக்கொள்கையில் ஒரு பரபரப்பான வார்த்தையாக 'குவாட்' உருவாகியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நாற்கர உரையாடலாக உருவாக்கப்பட்ட குவாட், சமகாலத்தில் இந்தோ-பசுபிக் பிராந்திய நாடுகளிடையே பிராந்திய கட்டமைப்பாக உருவாக்கும் உரையாடல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை மேற்கு ஆசியாவை மையப்படுத்தி எழும் தென்குவாட் கட்டமைப்பு உருவாக்கத்தின் இந்திய அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மேற்கு ஆசியாவில் ஒரு புதிய நாற்கரக் குழுவை உருவாக்க முடிவு செய்துள்ளன. இது 'புதிய குவாட்' அல்லது 'குவாட்-2' 'தென் குவாட்' என அடையாளம் காணப்படுகிறது. இக்கூட்டின் முதல் சந்திப்பு வெளியுறவ அமைச்சர்கள் மட்டத்தில் அக்டோபர்-20அன்று நடைபெற்றது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் யாயர் லாபிட் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அதே நேரத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் மெய்நிகர் வழியில் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் அறிமுக சந்திப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
குவாட்-02இன் நோக்கம் குறித்து முழுமையான தெளிவு இல்லை என்றாலும், குவாட்டை பிரதிபலிக்கும் உரையாடல் சீனாவுக்கு எதிரான விரிவான கூட்டு முயற்சி என்பதை வெளிப்படுத்துகின்றது. பெருகிய முறையில் உறுதியான மற்றும் ஆக்ரோஷமான சீனாவிற்கு விடையிறுக்கும் வகையில் ஒன்றிணைந்த 'ஜனநாயகங்களின் நாற்கரமாக' கருதப்பட்ட அதன் பழைய இணை போலல்லாமல், புதிய குவாட்டின் நான்கு உறுப்பினர்கள் ஒரே மாதிரியான அரசியல் அமைப்பைப் பகிர்ந்து கொள்ளவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு முடியாட்சி உடைய நாடாகவும், மற்றைய மூன்றும் ஜனநாயக நாடுகளாவும் காணப்படுகிறது.
இந்தக்குழுவை குறிப்பிடத்தக்கதாக ஆக்குவது, நிச்சயமாக, இந்தியாவை உள்ளடக்கியதாகும். முதல் சந்திப்பின் போது, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உரையில் மூன்று நாடுகளுடனான தனது நாட்டின் உறவுகள் தொடர்பான குறிப்பில், 'நாம் அருகில் இல்லையென்றாலும், நம்மிடம் உள்ள உறவு மிக நெருக்கமானதாகும்.' என்று கூறினார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை தனது நெருங்கிய மூலோபாய பங்காளிகளாக இந்தியா கருதுவது, அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதும், பிராந்தியத்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதும், மத்திய கிழக்கில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை எவ்வளவு அடிப்படையில் மாறிவிட்டது என்பதன் பிரதிபலிப்பாகும்.
ஆசியாவில் தனது நலன்களை திட்டமிடும் அமெரிக்கா, ஐரோப்பாவில் ஓர் ஒன்றிணைந்த கடமைப்பை உருவாக்கியது போன்று ஆசியாவை ஒன்றிணைக்க விருப்பம் கொள்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. அதே நேரம் பிளவுபட்டுள்ள பிராந்திய கட்டமைப்புக்களூடாக பயணித்து தனது நலனை ஈடேற்றி கொள்ள திட்டமிடுகிறது. இதில் மேற்கு ஆசியாவை மையப்படுத்தி உருவாக்கப்படும் புதிய குவாட் கட்டமைப்பை நகர்த்தி செல்லும் பிராதன அரசாக இந்தியா காணப்பட்டாலும் இஸ்ரேலை சாதரணமானதாக மதிப்பிட முடியாது. எனவே, இந்தியாவின் அரசியல் நகர்வுகளை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.
ஓன்று, புதிய குவாட் ஒரு வரலாற்று வளர்ச்சியாகும். மேற்கு ஆசியாவில் பிராந்திய ஒத்துழைப்பு ஏற்பாட்டில் இந்தியா நுழைவது இதுவே முதல் முறை. இந்தப் பிராந்தியத்தில் நிலவும் கசப்பான மோதல்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா ஒரு தரப்பிற்கு எதிராக மற்றொரு தரப்பினருடன் இணைவதைக் விரும்பாததால், இங்கு எந்த ஏற்பாடுகளிலும் ஈடுபடுவதை இந்தியா இதுவரை தவிர்த்து வந்தது. எனினும், நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இதனால் இந்தியா இஸ்ரேல், சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகியவற்றுடன் வலுவான உறவைக் கொண்டிருந்தது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய புதிய குவாட் உருவாக்க முடிவு செய்ததன் மூலம், இந்தியா முந்தைய தடைகளை முறியடித்ததாக தோன்றுகிறது.
இரண்டு, புதிய குவாட் வேகம் கூடியவுடன் மேற்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் ஏற்கனவே வலுவான ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகள் வளரும். இருப்பினும், ஆபத்தான தடைகளை இந்தியா தவிர்க்க வேண்டும். மேற்கு ஆசியா பிராந்திய மோதல்களில் இந்தியா சிக்கிக் கொள்ளக் கூடாது. முக்கியமாக, புதிய குவாட்டின் முடிவுகள் ஈரானுடனான அதன் உறவை மோசமாக பாதிக்காமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். சீனாவைக் கட்டுப்படுத்த அதனுடன் தனது நல்ல உறவுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதைப் போல, ஈரானுடன் புதிய குவாட் பாலங்களைக் கட்ட இந்தியா உதவ வேண்டும். குழுக்களில் சேர்வதில் இந்தியா தனது தடைகளை குறைத்து வருகிறது. இது பிரத்தியேக உறவுகளுக்கு தடையாக வராத வரை நல்லது. புதிய குவாட் ஈரானுக்கான இந்தியாவின் வெளிப்பாட்டை கட்டுப்படுத்தக்கூடாது. ஈரான் மற்றும் இஸ்ரேலுடன் வலுவான இணையான உறவுகளை சீனா நிர்வகிக்கிறது. இந்தியாவும் அவ்வாறு செய்யுமா என்பதில் சந்தேகமே காணப்படுகிறது.
மூன்று, அமெரிக்காவின் நலனை மையப்படுத்தி மேற்கு ஆசிய அரசியலுள் நுழையும் இந்தியா நிதானித்து செயற்பட வேண்டும். ஏனெனில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா துணிந்து செல்ல முடியுமா என்பது சமீபத்திய அமெரிக்காவின் பின்வாங்கல் அரசியல்களால் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளின் வெளியேற்றமும் தலிபான்களின் ஆட்சி உருவாக்கமும் இந்தியாவுக்கு அதிக அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா இராணுவத்தின் வெளியேற்றம் இந்தியாவிற்கு நெருக்கடியை உருவாக்கக்கூடிய சூழல் என்ற போதிலும் அமெரிக்கா பிராந்திய நட்பு நாடானா இந்தியாவுடன் எந்தவொரு உரையாடலிலும் ஈடுபடாது வெளியேறியமை இந்தியாவிற்கும் இழைக்கப்பட்ட ஏமாற்றமாகவே அவதானிக்கப்படுகின்றது. சமீபத்தில் இத்தகைய ஏமாற்று அனுபவம் காணப்பட, இந்தியா தொடர்ந்தும் அமெரிக்காவினை நம்பி அமெரிக்காவின் பிரதான நலனை முன்னிறுத்தி பிளவுகள் நிறைந்த மேற்கு ஆசியாவில் ஒரு தரப்புடன் மாத்திரம் பாதுகாப்பு மூலோபாய கூட்டை உருவாக்குவது இந்தியா நலனுக்கு ஆபத்தானது என்ற சந்தேகத்தை உருவாக்குவது நியாயமானதாகவே காணப்படுகின்றது.
நான்கு, இந்தியா தனது அயல் பிராந்திய அரசுகளை அரவணைக்க தவறி சுயமதிப்பின்றி பரந்த அளவில் காலூன்றுகின்றதா என்ற சந்தேகத்தையும் உருவாக்குகின்றது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது ஆட்சிப்பருவ காலத்தின் ஆரம்பத்தில் தெற்காசிய பிராந்திய அரசுகளே முதன்மையானது என்ற அடிப்படையில் சாகர் திட்டத்தை (SAGAR- Security and Growth for All in the Region) முன்மொழிந்தர். எனினும் கொரோனா பெருந்தொற்று நெருக்கடி காலப்பகுதியில் இந்தியாவால் தன்னையும் தனது தெற்காசிய பிராந்தியத்தையும் பாதுகாக்க முடியாத நிலையில் சீனா ஆழமாகவே காலூன்றியுள்ளது. இலங்கையில் ஹம்பாந்தோட்ட துறைமுகம், மாலைதீவில் பெய்து பினொலு தீவு, பாகிஸ்தானில் குவாதர் துறைமுகம் என்பவற்றில் சீனா தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பங்களாதேஷ் சிட்டகொங் மற்றும் மோங்லா அகிய இரண்டு பெரிய துறைமுகங்களுக்கு சீனாவிற்கு அணுகலை வழங்கியுள்ளது. சீனா இந்தியாவை சுற்றி துறைமுகங்களூடாக ஒரு முத்துமாலை வியூகத்தை உருவாக்கியுள்ளது. இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமை தனது அயலகத்தில் காணப்பட சீனா ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் மேற்கு ஆசியாவில் இந்தியா பாதுகாப்பு மூலோபாய கூட்டை உருவாக்குவது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் பலவீனமான போக்குகளையே அடையாளப்படுத்துகிறது.
எனவே, குவாட்-2 என்பது அமெரிக்க-இந்திய அரைகுறை கூட்டணியில் ஒரு படியாகும். மேற்காசிய பிராந்தியத்தினை மையப்படுத்திய குவாட்-02இல் அங்கத்துவம் பெறும் அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை பொறுத்தவரை, அரபு அரசியலில் நீண்டகாலமாக தனது அரசியல் இராஜீக விளையாட்டை முன்னெடுத்து வருகின்ற நாடகளாகும். எனினும் இந்தியா முன்அனுபவமற்ற ரீதியில் பெரிய கூட்டு இராஜதந்திர மூலோபாய நகர்வில் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே தனது அயல் பிராந்திய ஆதிக்கத்தில் தளர்ச்சியுற்ற நிலையில் அகல பதிக்கும் அதிகார முயற்சியில் அதிக கவனம் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. துருக்கி, ஈரான், கட்டார், சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்சியா போன்ற பிராந்தியத்தில் உள்ள மற்றும் பிராந்தியத்திற்கு வெளியே உள்ள பல நாடுகளை தேவையில்லாமல் எரிச்சலூட்டுவது இந்தியாவின் நலன்களுக்கு பொருந்தாது. குவாட்-2இல் இவ்வாறான சவால்மிக்க சவாரியின் மூலம் இந்தியா எவ்வாறு பயனடைய போகிறது என்பதை விளக்க வேண்டும் என்பதே முக்கிய அம்சமாகும்.குறிப்பாக அமெரிக்க-இஸ்ரேல் நலன்களுக்கு சேவைபுரியும் இந்தியாவாக செயல்படுமா அல்லது இந்தியாவினது நலன்களுக்குள்ளால் அமெரிக்க-இஸ்ரேல் நட்பினை பயன்படுத்தப் போகிறதா என்பதே முக்கியமானது.
Comments
Post a Comment