ஈழத்தமிழர்கள் சிறுபான்மைக் குழுவா தேசிய இனமா? -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழர்கள் அரசியலில் தேசியம் அதிகம் முதன்மைப்பெறும் உரையாடலாக காணப்படுகின்ற போதிலும் தேசியம் தொடர்பான சரியான பார்வையை செலுத்த தவறியே வருகின்றார்கள். தமிழ்த்தேசியம் தொடர்பாக, சுயநிர்ணய உரிமைகள் தொடர்பாக தேர்தல் காலங்களில் பிரச்சார மேடைகளில் முழங்கும் தமிழரசியல் தரப்பினரே மறுபுறம் ஈழத்தமிழர்களை சிறுபான்மைக்குழு என்ற சொல்லினூடாகவும் விழித்து பொதுவெளியில் உரையாடி வருகின்றார்கள். இக்கட்டுரை ஈழத்தமிழர்கள் சிறுபான்மைக்குழுவா? அல்லது தேசிய இனமா? என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவினுடான சந்திப்பு பற்றிய விபரத்தை வெளியிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவு மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் பணியகம் ஆகியன ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கையின் சிறுபான்மைக் குழுவின் (Minority Group) விவகாரமாக அடையாளப்படுத்தியிருந்தனர். அத்துடன் இச்சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இதனை மறுதளிக்காமையானது தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஈழத்தமிழரை சிறுபான்மைக்குழுவாக தான் பொதுவெளியில் உரையாடுகின்றனர் என்பதையே உறுதி செய்தது. இவ்அடையாளப்படுத்தல் ஈழத்தமிழர்களின் தேசிய அந்தஸ்தை பாதிக்கும் செயலாக தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களிடையே கடுமையாக வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் கருத்தாளர்களின் அழுத்தங்களை தொடர்ந்து நவம்பர்-24(2021)அன்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள பிரிவுகள் தங்களது டுவிட்டர் தள பதிவுகளில் சிறுபான்மைக் குழுக்கள் என்ற பதிவை தமிழ் மக்களாக மாற்றம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். எனினும் குறித்த நிகழ்வு தமிழ்த்தேசிய பரப்பில் தேசியம் தொடர்பான சரியான புரிதல் இன்மையையும் அடையாளப்படுத்தியுள்ளது.  

தேசியம் என்பது மனித குலம் இதுவரை காலமும் கண்ட வாழ்வு முறைக்குள் ஓர் உயர்ந்த சிந்தனையாகும். ஒரு காலத்தில் குழு அல்லது கிராம எல்லைக்குள் தனது வாழ்வின் தேவைகளை மனிதன் நிறைவு செய்து கொண்டான். அக்காலத்தில் அவனது தேவைகளும் நுகர்வுகளும் குறைவாகவே இருந்தன. தனித்து செயற்படக்கூடிய சூழ்நிலைகளும் காணப்பட்டது. வரலாற்றில் கைத்தொழில் யுகம் மனித நாகரீக வளர்ச்சியின் தேவைகளையும் நுகர்வுகளையும் அதிகரிக்கையில் குழுக்களிடையே பன்முகத்தன்மைகளை வளர்த்தது. பன்முகத்தன்மை மாறுபட்ட கலாசாரங்கள் ஒன்றுபட்ட குழுக்களிடையே கூட்டுச்செயற்பாட்டையும் அதுசார்ந்த கட்டமைப்புக்களின் தேவையையும் உணர்த்தியது. அதுசார்ந்தே தேசியம், தேசிய இனம் ஆகிய சிந்தனைகள் உருவாக்கம் பெற்றுள்ளது.

ஒருமைப்பாட்டுணர்வாலும், பொதுப்பண்பாட்டாலும் தேசிய பிரக்ஞையாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கள் திரளைக்கொண்ட சமூப்பிரிவையே தேசிய இனமாக அரசறிவியல் அறிஞர்கள் குறிக்கின்றனர். தேசியம்சார் சிந்தனைகளை மாக்ஸியவாதிகள் அதிகம் முதன்மைப்படுத்தப்படுகின்ற போதிலும், இன்று சுயநிர்;ணய உரிமைக்காக போராடும் ஈழத்தமிழர்களை சிறுகுழுவாக அடையாளப்படுத்தும் அமெரிக்க தேசமே தமது சுயநிர்ணய உரிமை போராட்டத்தினூடாக தேசியம் சார் எண்ணங்களை அரசியலில் முன்னிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசிய இனமாக உருவெடுத்த மனித குழுக்கள் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் தேசியத்தை உருவாக்கியுள்ளன. குழுக்களின் தேசியப் பரிமாணம் தேசியங்களின் கூட்டு நடவடிக்கையின் பிரதிபலிப்'பாகிறது. இத்தகைய இனக்கலாச்சார பன்முகத்தன்மையை அதிகரிக்கும் உலகளாவிய போக்கானது கலாச்சார, மொழியியல் மற்றும் பிராந்திய அடையாளங்களைக் கொண்ட தேசியவாத இயக்கங்களின் வெடிப்புக்கு காரணமாகியது. தேசியங்களின் அரசியல் அணிதிரட்டலின் அடையாளங்களாக தேசியவாத இயக்கங்கள் கபாணப்படுகின்றன.

சுயாட்சி கோரிக்கையின் வெளிப்பாடானது இறையாண்மை தேசிய இனங்களுக்கே உரித்துடையதாகும். சிறுகுழுக்கள் இறையான்மை கட்டமைப்பை நிறுவ இயலாத பலவீனமான சமூகப்பிரிவாகவே விளங்கக் கூடியவை. இறையாண்மை என்பது தேசங்களுக்குரியது. 'தேசம்' என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல் அன்று. அது மக்களிடம் இருக்கிறது. மக்கள்தான் இறையாண்மை உடையவர்கள் என்பது 18ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய சிந்தனையிலும் நடைமுறையிலும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. தேசிய இனங்கள் தேசங்களை உருவாக்கும் திறன் கொண்டவை என்பதும், அந்த தேசிய இன மக்களுக்கே இறையாண்மை உடைமையானது என்பதும் தான் இன்றைய உலகளாவிய அரசுமுறைகளின் சாரம் ஆகும். 1924ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் 26 நாடுகள் இருந்தன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் அதன் எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது. முன்பு இருந்த பல்தேசிய இன நாடுகளிலிருந்து மொழியடையாளத்துடன் தேசிய இனங்கள் பிரிந்து சென்று தங்கள் தாயக நிலப்பரப்பின் மீது தனித்தேசங்களைப் படைத்துக் கொண்டது. அந்த தேசங்கள் இறையாண்மை கொண்ட தேசியங்களாக விளங்குகின்றன. பல தேசிய இனங்கள் ஒன்றாக வாழும் நாடுகளில், ஒரு தேசிய இனம் தனது மொழி, பண்பாடு, இனம் ஆகியவை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால், தன் இறையாண்மையைக் கையிலெடுத்துக் கொண்டு தன் தாயகத்தை அந்த பல்தேசிய நாட்டிலிருந்து பிரித்துத் தனிதேசத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ள உலகப் போக்கினை காணமுடிகிறது. இது ஐரோப்பாவில் தோன்றி உலகம் முழுவதும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக விளங்குகிறது. 

ஜேர்மனிய தேசியம் சார் சிந்தனையாளரான பிட்சே மற்றும் ஹர்டர் என்போர் தேசம் என்பது இயற்கையின் உருவாக்கம் எனவே அது புனிதமானது நிரந்தரமானது, உயிர்ப்புடையதாகியது. மனிதர்களின் உருவாக்கத்தை விட அதிகளவில் நியாயத்தன்மை கொண்டதென கூறுகின்றார். அதனடிப்படையில் அரசுக்கு முந்தையது தேசம் என்பது இயல்பாகவே அரச உருவாக்கத்திற்கு இட்டுச்செல்லும் என்பது ஐரோப்பிய கருத்தியலாகும். இதனை கீழைத்தேசங்களில் ஒத்துநோக்க முடியாது. காரணம், கீழைத்தேசங்களில் தேசங்களின் பிரக்ஞைபூர்வமான சிந்தனை எண்ணம் உருவாக முன்பே அரசு என்ற அமைப்பு உருவாகி விட்டது. அது தேசத்தின் முழுமையான வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்து விட்டது. அதாவது, அரசு உருவாகிய பின்பே கீழைத்தேசங்களில் தேசியங்களும் தேசங்களும் உருவாகின. ஐரோப்பியர் அரசுகளை தமது நலனுக்கு ஏற்ப உருவாக்கிவிட்டு பிரக்ஞைபூர்வமான புரிதலின்றி தேசியங்களை பல்தேசியங்கள் என்று அழைத்தனர். ஆனால் ஐரோப்பியர் கீழைத் தேசத்தை கைப்பற்றும் போது குறுநில வடிவங்கள் அத்தகைய தேசியங்களின் பிரதிமைகளைக் ஓரளவு கொண்டதாக அமைந்திருந்தன. அவை நவீன தேசிய  அடையாளத்திற்கான வடிவமாக கொள்ளப்படும் தன்மையை உருவாக்கியது.

இத்தகைய வல்லமைகள் தேசிய இனம் என்ற சித்தாந்தத்தின் பின் பொதிந்துள்ளமையே ஈழத்தமிழர்கள் தங்களை தேசிய இனமாக அடையாளப்படுத்தவதை பெருந்தேசியவாதிகளும் அவர்கள் நலன் சார்ந்தவர்களும் புறக்கணிக்க காரணமாகிறது. ஈழத்தமிழர்கள் தங்கள் தேசிய இனப்பண்புகளை அடையாளப்படுத்தியே சுயநிர்ணய உரிமைக்கோஷங்களை முன்னகர்த்தியுள்ளனர். குறிப்பாக தமிழ்த்தேசியத்தை நிறுவனமயமாக்கியமையில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தனித்துவமான இடத்தை பெறுகின்றார். அவர் தேசியத்தை உயிரோட்டத்தில் வளர்த்தெடுக்க தவறியிருந்தார் என்ற விமர்சனம் காணப்படினும், தேசியத்தின் தொகுக்கப்பட்ட ஒரு தோற்றப்பாட்டை வடிவமைத்ததில் அவரது பங்கு அளப்பரியது. இதன் வளர்;ச்சியாகவே 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தில், ஈழத்தமிழர்களை ஒரு தேசிய இனமாக பிரகடனனப்;படுத்தி, அவர்களின் இலக்கை அவர்களே தீர்மானித்துக்கொள்ள சுயாட்சி உரிமை உண்டென அறிவிக்கப்பட்டது. பின்னர் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் ஆயுத வழி போராட்டமாகவும் பரிணமித்திருந்தது.

இவ்வாறாக தேசிய இனமாக பிரகடனப்படுத்தி சுயநிர்ணய உரிமைக்காக போராடும் ஓர் சமூகத்தை இன்னொரு தேசம் சிறுகுழுவாக விளிப்பது தேசியத்தின் உயிரோட்டத்தன்மை இன்னும் சிதைப்பதாகவே தெரிகிறது. ஒடுக்கப்படும் தேசிய இனத்தில் தேர்தல் கட்சிகளாக இருந்து கொண்டு பாராளுமன்றம் செல்லும் பிரதிநிதிகள் ஒடுக்கும் தேசிய இனத்தின் சர்வாதிகார முகத்துக்கு ஜனநாயக முகமூடி அணிவித்து விடும் வேலையை மட்டுமே செய்கிறார்கள் அதற்கான பலனையும் பெற்றுக் கொள்கிறார்கள். தேசிய இனங்களின் வரலாற்றை சிறுகுழுக்களின் பொருள்கோடலுக்குள் இணைத்து தேசிய இனங்களின் உரிமைகளை புறந்தள்ளும் நிகழ்ச்சி நிரலையே முதன்மைப்படுத்துகிறார்கள்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-