மாறிவரும் சீன-இலங்கை உறவு நெருக்கடிக்குள் தள்ளப்படுமா? -ஐ.வி.மகாசேனன்-
சீனாவின் பொறி அரசியல்(Trap Politics) தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் நீண்டகாலமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. அது உலக வல்லாதிக்க போட்டியின் எதிர்ப்பிரச்சாரமாக காணப்படுகின்ற போதிலும், அதில் காணப்படும் உண்மைகளும் மறுக்க முடியாதது என்பதனையே இலங்கையின் அண்மைய செய்திகள் நிரூபிக்கின்றன. இலங்கையின் முதன்மையான அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்தல் மற்றும் இறக்குமதி செய்யப்படாத உரத்துக்கு ரஷ்ட ஈடாக எட்டு மில்லியன் டாலர்களை சீனா கோருவது என்பன மறுதலையாய் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை காங்கிரஸில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இலங்கையில் சீனா இராணுவத்தளம் அமைக்க திட்டமிட்டுள்ளது என்பது மெய்ப்பிக்கப்படக்கூடியது என்ற சந்தேகத்தை அரசியல் ஆய்வளார்களிடையே உருவாக்கி வருகிறது. இக்கட்டுரையும் இலங்கையில் மாறிவரும் சீன உறவை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிகம் சீன சார்பு கொள்கையையே ஆரம்ப காலப்பகுதியில் மேற்கொண்டு வந்தது. சீனாவுடன் அதிகமாக ஒப்பந்தங்களை மேற்கொண்டதுடன், மறுதலையாக சீனாவுடன் பகைமை பாராட்டும் இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிராகரித்து வந்தன. ஒப்பந்தங்களை நிராகரித்தமைக்கு இலங்கை மக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு போராட்டங்கள் காராணமாக கூறப்பட்டது. எனினும், 2021ஆம் ஆண்டின் பின்னரைப்பகுதியில் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன், சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மக்களின் எதிர்ப்பை காரணங்காட்டி நிராகரிக்கும் நிலை காணப்படுகிறது. தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் மத்தியிலும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட யுகதகனி மின்நிலைய ஒப்பந்தம் செயற்பாட்டில் காணப்பட,10 மறுபக்கத்தில் நீதிமன்ற தீர்ப்பினூடாக சீனாவின் உரம் இறக்குமதி செய்யப்படாது இடைநடுவில் தடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுடனான உறவு என்பது இலங்கை அதிகார சமநிலையை பேணி வருவதாகவே ஆரம்ப நிலையில் நோக்கப்பட்டது எனினும், சீனாவின் உரம் இறக்குமதி இலங்கை நீதிமன்ற தீர்ப்பினூடாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமையும், சீனா அதற்கு மேற்கொள்ளும் எதிர்வினைகளும் இலங்கை-சீனா உறவு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் செய்திகளாக அமைகின்றது. இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை காங்கிரஸில் வெளியிடும் சீனாவின் இராணுவ வளர்ச்சி தொடர்பான வருடாந்த அறிக்கையில், இவ்வருடம் இலங்கையில் சீனா இராணுவத்தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அடையாளப்படுத்தியுள்ளமை இலங்கை அரசியலில் அதிக குழப்பத்தை உருவாக்கி வருகின்றது. இது சீனாவின் பொறி அரசியல் தொடர்பிலான சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது. அதற்கான வாய்ப்புக்களை கவனமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரகம் சீன நிறுவனத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் நெருக்கீடுகள் தொடர்பில் எவ்வித கருத்துக்களுமின்றி மௌனமாக உள்ளது. இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரகமானது இலங்கைக்கும், சீனாவுக்குமான உறவில் நெருக்கீடுகளை உருவாக்கும் வகையிலான கருத்துக்கள் உலாவவிடும் வகையில் டுவிட்டர் தளத்தினூடாக தமது விளக்கங்களை அதிகமாக முன்வைத்து வருகின்றது. அமெரிக்கா பாதுகாப்பு துறை காங்கிரஸில் வெளியிட்ட அறிக்கைக்கும், 'திருடன் ஒருவன் அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றார்கள்' எனக்காட்டமாக டுவிட்டர் பதிவூடாக எதிர்ப்பை பதிவு செய்தது. சர்வதேச விமர்சனங்களுக்கு மாத்திரமின்றி இலங்கை அரசியல்வாதிகள் சீனா-இலங்கை உறவு தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் கடந்த காலங்களில் அதிக எதிர்வினைகளை ஆற்றியுள்ளார்கள். எனினும் சீனா நிறுவனம் உரம் இறக்குமதி தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியுள்ள நெருக்கீடுகளில் சீனா தூதரகம் தலையிட்டு சுமூகமான நிலையை உருவாக்காது மௌனித்திருப்பது சீனா இலங்கைக்கு பொறி ஒன்றை உருவாக்கும் நோக்குடன் செயற்படுகின்றதா என்ற சந்தேகத்தை உருவாக்குவதை நியாயப்படுத்துவதாகவே அமைகிறது.
இரண்டாவது, சீனா சிக்கலான கடன் பொறிமுறையூடாக (Debt Trap) இலங்கை அரசாங்கத்தை கையாண்ட முன் அனுபவம் கடந்த ரணில்-மைத்திரி அரசாங்க காலப்பகுதியில் இலங்கைக்கு காணப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99வருட கால குத்தகைக்கு சீனா வசம் சென்றதும், கொழும்பு துறைமுகத்தின் ஆரம்ப திட்டமிடலிலிருந்து பரப்பளவு அதிகரித்தமையும் முன்னைய ரணில்-மைத்திரி அரசாங்கத்தை சீனா சிக்கலான கடன்பொறி அரசியலுடாக கையாண்டதன் விளைவிலானதேயாகும். ரணில்-மைத்திரி அரசாங்கம் மகிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. அதற்கு சீனா நஷ்டஈட்டை கோரியிருந்தது. சீனாவின் கடன்பொறிமுறைக்குள் சிக்குண்ட இலங்கை அரசை பாதுகாக்க ரணில்-மைத்திரி அரசாங்கம் இடைநிறுத்தப்பட்ட கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை மீள புதுப்பித்ததுடன் மேலதிகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. இலங்கை சீனாவுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாதென ஒப்பந்தம் மேற்கொண்டாலும், சீனாவின் கடல்வணிகங்கள் பெருமளவில் சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையுடன் இணைந்ததாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் சீனா வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கையிலும் துறைமுகம் சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையினாலேயே பராமரிக்கப்படுவதாக காணப்படும்.
மூன்றாவது, சர்வதேசரீதியான அனுபவத்திலும் சீனா தனது கடன் பொறி அரசியலூடாக தனது தேவைகளை நிறைவேற்றி கொண்டுள்ளமையை ஆபிரிக்க நாடுகளில் அதிகம் அவதானிக்கக்கூடிதாக உள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் இந்து சமுத்திரத்தோடு புவிசார் அரசியல் முக்கியத்துவம் பெற்ற ர்ழசn ழக யுகசiஉய என அழைக்கப்படும் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஜிபூட்டியில் (Djibouti) சீனா 2016ஆம் ஆண்டில் கடற்படைத் தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. தற்போதைக்கு சீனாவின் ஒரே வெளிநாட்டு இராணுவ வசதி மற்றும் விமானம் தாங்கி கப்பல்களைப் போன்ற பெரிய கப்பல்களுக்கு இடமளிக்கும் திறனைக் கொண்டுள்ள ஒரு கடற்படை தளம் முகாமாக ஜிபுட்டியே காணப்படுகிறது. சீனா தனது பட்டி மற்றும் சாலைக்கான அதிக முதலீட்டை ஆபிரிக்காவிலேயே மேற்கொண்டுள்ளது. அதற்கான பாதுகாப்பு முகாந்திரமாவே ஜிபுட்டி அவதானிக்கப்படுகிறது. மூலோபாய ரீதியாக அமைந்துள்ள ஜிபூட்டி நாட்டின் கடனில் பெரும்பான்மையான பங்கை சீனா கொண்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. 2018இல், கெய்சின் எனும் செய்தித்தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் படி, சீனா மற்றும் சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஜிபூட்டியில் கிட்டத்தட்ட கூ10 பில்லியன் முதலீடு செய்துள்ளன. சீனப் பணம் கொட்டிக் கிடப்பதால், ஜிபூட்டிய ஜனாதிபதி இஸ்மாயில் உமர் குயெல்லே தனது நாடு கடன் பொறி இராஜதந்திரத்திற்கு பலியாகும் என்ற அபாயத்தில் ஜிபூட்டி துறைமுகத்தில் சீன கடற்படைத்தளம் அமைக்க அனுமதித்திருக்கலாம் என்பதே அரசியல் ஆய்வாளர்களிடையே பரவலான கருத்தாக காணப்படுகிறது. இத்தகு முன்மாதிரி நகர்வுகள் இலங்கையிலும் அவதானிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கையின் அமைவிடமும் இந்து சமுத்திரத்தில் புவிசார் அரசியல் முக்கியத்துவம் பெறுவதனால் இலங்கையில் சீனா தனது இராணுவத்தளத்தை உருவாக்க திட்டமிடுவதற்கான சூழலே காணப்படுகிறது.
எனவே அமெரிக்கா பாதுகாப்பு துறை சீனா மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அமெரிக்க-சீனா வல்லாதிக்க போட்டி அரசியலாக இலகுவாக நகர இயலாத சூழலே காணப்படுகிறது. பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒப்பீட்டளவில் சீனா சார்புடையது என்ற அடிப்படையில் சீனா குறித்த அரசாங்கம் மக்களிடமிருந்து நன்மதிப்பை இழப்பதை விரும்பாது ஆகவே நெருக்கடிகளை பின்வாங்கக்கூடிய சூழல் காணப்படும் என்ற வாதமும் நிலவுகிறது. எனினும் சீனாவின் வெளியுறவுக்கொள்கை என்பது அரசாங்கங்களை தாண்டி அரசுகளுடன் பொருளாதார ரீதியிலான பிணைப்பை உருவாக்கும் வகையிலேயே உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்ற செயல்முறையூடாக தொடர்புறுகிறது. 2020இல் இலங்கைக்கான அதன் கடன்கள் 4.6 பில்லியன் டாலர்களாக இருந்தன. 2020இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 6சதவீதமாக சீனாவிற்கான இலங்கையின் வெளிநாட்டுக் கடனைக் காட்டுகிறது. சீனா ஒரு அரசியல் கட்சியின் மீதான நம்பிக்கையில் தன் நலனை கட்டமைப்பதில்லை. ஆதலால், ஆட்சி மாற்றங்களால் சீனா அரசுடன் கொண்டுள்ள உறவை துண்டிக்க இயலாது. இதனை இலங்கையில் முன்னைய ரணில்-மைத்திரி அரசாங்க காலப்பகுதியிலோ அல்லது மாலைதீவில் தற்போதைய இப்ராஹிம் முகமது சாலி அரசாங்கத்திலோ அவதானிக்கக்கூடியதாக காணப்படும். ஆகவே சீனா பொதுஜன பெரமுன அரசாங்க நலனுக்காக பின்வாங்குமென்பது அதிகம் சாத்தியமற்றதென்றாகவே காணப்படுகின்றது.
Comments
Post a Comment