சீனாவின் மென் அதிகார முகத்தை சிதைக்கும் பென்டகனின் அறிக்கை! -ஐ.வி.மகாசேனன்-

அமெரிக்கா எதிர் சீனா என்ற அதிகார போட்டியை மையப்படுத்தியதாகவே நடப்பு சர்வதேச செய்திகள் யாவும் சுழலகின்றது. இந்தவரிசையில் நவம்பர் முதல் வாரங்களில் அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவாகிய பென்டகன் சர்வதேச அரசியல் பரப்பில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா காங்கிரஸில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பென்டகனின் அறிக்கை மீது சீனா தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இது வர்த்தகப்போரில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா எதிர் சீனா அதிகாரப்போட்டியில் பலப்பரீட்சைக்கான களத்தை உருவாக்குகின்றதா என்ற சந்தேகத்தை சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரை சீனாவின் இராணுவ செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்புத்துறை காங்கிரஸில் சமர்ப்பித்துள்ள அறிக்கையையும் அது சர்வதேச அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின் பென்டகன் அதன் பிரதான எதிர்த்தரப்பாகிய சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின்(பி.எல்.ஏ) முன்னேற்றங்களைப் பற்றி விவாதித்து ஒர் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு அறிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மாதங்கள் தாமதமானது. ஆனால் குறித்த அறிக்கை சீனாவின் இராணுவத்தைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் சுருக்கங்கள் நிறைந்ததாக இருப்பதால் காத்திருக்க வேண்டியது அவசியம் என்பது சர்வதேச அரசியல் தரப்பின் கருத்தாடலாக காணப்படுகிறது. அமெரிக்க கடற்படைப் போர்க் கல்லூரியின் வியூகப் பேராசிரியர் ஆண்ட்ரூ எரிக்சன் சர்வதேச ஆசிய செய்தித்தளத்துக்கு(ANI) வழங்கிய நேர்காணலில், 'கடந்த இரண்டு தசாப்தங்களாக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவமானது; அமைப்பு, ஒருங்கிணைப்பு, நுட்பம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் நிலவும் பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கான வியத்தகு சீர்திருத்தங்களுடன் கூடிய வேகமான வன்பொருள் உருவாக்கம் அளவு மற்றும் அதிகரிக்கும் தரத்தை அடைந்துள்ளது. சீனா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக வந்துவிட்டது. இது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம், பாதுகாப்பு பட்ஜெட் மற்றும் உலகின் மிகப்பெரிய நிலையான தரைப்படை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதன் மூன்று கடல் படைகளில் (கடற்படை, கடலோர காவல் படை மற்றும் கடல் போராளிகள்) ஒவ்வொன்றும் உலகில் அதிக எண்ணிக்கையிலான கப்பல்களினை கொண்டுள்ளது. இது இந்தோ-பசிபிக்கின் மிகப்பெரிய விமானப்படையையும், உலகின் மிகப்பெரிய துணை-மூலோபாய ஏவுகணைப் படையையும், விவாதிக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிநவீன தரையிலிருந்து அனுப்பும் வான் ஏவுகணைப் படையையும் கொண்டுள்ளது.' என உலக அரசியலில் சீனாவின் இராணுவ முக்கியத்துவத்தை விபரித்தார்.

சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்-2021 அல்லது சுருக்கமாக சீனாவின் இராணுவ அதிகார அறிக்கை (CMPR) என அழைக்கப்படும் சீனா இராணுவம் தொடர்பான பென்டகன் அறிக்கை 192 பக்க ஆவணமாக நவம்பர்-3(2021)அன்று வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையானது 2020 இறுதி வரையிலான முன்னேற்றங்களை மட்டுமே உள்ளடக்கியது. இது ஒரு வருடத்திற்கு முந்தைய சிறந்த பகுதியாகும். இவ்வருடத்தின் அண்மைய சீனாவின் இராணுவ ஆயுத பரிசோதனைகள் பற்றிய தகவலை முந்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்அறிக்கை ஆரம்பத்திலேயே,  சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வளர்ந்து வரும் திறன்கள் மற்றும் கருத்துக்கள், 'பலமான எதிரிக்கு' எதிராகப் போரிட்டு வெற்றிபெறும் சீனாவின் திறனைத் தொடர்ந்து வலுப்படுத்துகின்றன என்ற எச்சரிக்கையை குறிப்பிட்டுள்ளது. மேலும், பிராந்திய தகராறுகளில் தைவான் மற்றும் போட்டி உரிமைகோருபவர்களை வற்புறுத்தவும், சீனாவின் சுற்றளவில் ஒரு மோதலில் மூன்றாம் தரப்பினரின் தலையீட்டை எதிர்க்கவும் மற்றும் உலகளவில் அதிகாரத்தை திட்டமிடவும் சீன மக்கள் விடுதலை இராணுவம் உயரளவில் வலுப்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் அறிக்கைக்கு சீனா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் வு கியான் நவம்பர்-5(2021)அன்று தனது அரசாங்கம் 'அதிக அதிருப்தியில் உள்ளது மற்றும் உறுதியாக எதிர்க்கிறது' என்று கூறினார். மேலும், 'அது உண்மைகளை புறக்கணித்தது மற்றும் பாரபட்சம் நிறைந்தது. சீனாவின் தேசிய பாதுகாப்பு கொள்கை மற்றும் இராணுவ மூலோபாயம் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளது. சீன இராணுவ அச்சுறுத்தல் என்று அழைக்கப்படுவது புனையப்பட்டது' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பென்டகனின் சீனாவின் இராணுவ அதிகாரம் தொடர்பான அறிக்கை நேரடியாக சீனாவின் வளர்ந்துவரும் இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சியை வெளிப்படுத்துவதுடன், உலகிற்கு ஒரு அபாய செய்தியை வெளிப்படுத்துகின்றது. எனினும் இதில் புதைந்துள்ள அமெரிக்காவின் அரசியல் நலனை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியுள்ளது.

ஒன்று, அணுவாயுத அதிகரிப்பு தொடர்பாக குறிப்பிட்டு சீனாவை உலக ஒழுங்கில் தனிமைப்படுத்த அமெரிக்கா முயலுகின்றதா என்ற சந்தேகம் அமெரிக்காவின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளால் உருவாகுகிறது. பென்டகனின் அறிக்கை அதிகம் சீனாவின் அணு ஆயுதக்கிடங்கை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. பென்டகனின் 2020ஆம் ஆண்டு அறிக்கை சீனாவின் அணு ஆயுதங்கள் இரட்டிப்பாகும் என்று எச்சரித்திருந்தது. ஆனால் 2021ஆம் ஆண்டு முடிவுகள் மிகவும் நிதானத்தைக் குறைக்கின்றன. 2030ஆம் ஆண்டிற்குள் சீனா தனது அணு ஆயுதங்களை 1,000 ஆயுதங்களாக நான்கு மடங்காக உயர்த்தும் என்று உறுதியளிக்கிறது. மேலும், 2020ஆம் ஆண்டு அறிக்கை சீனா அணுசக்தி முக்கோணத்தை 'தொடர்கிறது' என்று குறிப்பிட்ட நிலையில், இந்த ஆண்டு அது 'ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கலாம்' என்று மாற்றியுள்ளது. சர்வதேச ரீதியாக அணுவாயுதம் தொடர்பான அச்சம் காரணமாக அதன் பயன்பாடு தொடர்பாக சர்வதேச சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே சீனா அதிவேகமாக அணுவாயுதங்களை அதிகரிப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுவதனூடாக சர்வதேச ரீதியாக சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா முயலுகின்றதா என்ற எண்ணம் உருவாக்கம் பெறுகிறது. முன்னைய காலங்களில் ஈராக்கில் சதாம் ஹிசைனுக்கு எதிரான போருக்கும் அணுவாயுத அதிகரிப்பையே பிரச்சாரமாக முன்னெடுத்திருந்தது. அவ்வாறே வடகொரியாவை சர்வதேச வெளியில் தனிமைப்படுத்தவும் இன்றளவும் அமெரிக்கா அணுவாயுத அதிகரிப்பு பிரச்சாரத்தையே முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது, சீனாவின் அபரிமித வளர்ச்சி என்பது பொருளாதார ரீதியாக கட்டமைக்கப்பட்டதாக காணப்படுகின்றது. இவ்பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு சீனாவின் மென் அதிகாரமே காரணமாய் அமைந்துள்ளது. இந்நிலையில் சீனாவின் வளர்ச்சியை தடுக்கவே அமெரிக்கா சீனாவின் மென் அதிகார முகத்தை சிதைக்கும் வகையில் வன் அதிகார தோற்றப்பாட்டை உருவாக்குகிறதா என்பதுவும் சர்வதேச அரசியல் உரையாடலை அதிகரித்துள்ளது. சீனாவின் மென் அதிகாரம் என்பது பொருளாதார முதலீட்டாளர்களுக்கு அதிக பாதுகாப்பு உத்தரவாதத்தை கொடுக்கக்கூடியதாகும். அதனடிப்படையிலேயே அமெரிக்கா பங்காளியான ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவை எதிர்க்க தயாரில்லாது சீனாவுடன் பொருளாதார உறவை வளர்த்து வருகின்றனர். இவ்முதலீட்டு பாதுகாப்பு நம்பிக்கையை சிதைப்பதற்கான முயற்சியாகவே சீனாவின் வன் அதிகார தோற்றப்பாட்டை அமெரிக்கா முதன்மை பிரச்சாரமாக களமிறக்கியுள்ளது.

மூன்றாவது, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சீனா நட்பு நாடுகளிடையே அச்சத்தை உருவாக்கி அந்த நாடுகளின் சீன உறவை பலவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. நாடுகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மையப்படுத்திய சீனாவின் வர்த்தகப்பாதை திட்டமாகிய பட்டி மற்றும் சாலை முன்முயற்சி நகர்வுகளின் போது சீனா சிக்கலான கடன் பொறிமுறை மூலமாக நாடுகளை சூறையாடுவதாக பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது. எனினும் அது அமெரிக்கா எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. பல ஆசிய, ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளும் சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியின் பங்காளிகளாக இணைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது சீனா தனது நட்பு நாடுகளின் துறைமுகங்களில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இராணுவத்தளங்களை உருவாக்க திட்டமிடுவதாக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை அறிக்கை அடையாளப்படுத்தியுள்ளது. இதற்கு இலங்கையின் சீனா தூதரகம் கடுமையான சொல்லாடல்கள் மூலமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. 'திருடன் ஒருவன் அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றார்கள்' எனத்தெரிவித்துள்ளது. 

எனவே, சீனாவின் இராணுவ வளர்ச்சி தொடர்பான பென்டகனின் அறிக்கை என்பது சீனாவின் மென் அதிகார முகத்திற்கு எதிரான பிரச்சாரமாகவே அமைகின்றது. சீனாவின் இராணுவ வளர்ச்சி என்பது மறுதலிக்க முடியாததாக அமைகின்ற போதிலும், சீனா தொடர்பாக எச்சரிக்கும் செயற்பாடுகளை அமெரிக்கா நீண்டகாலமாகவே முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. ஏவ்வித நிலத்தொடர்ச்சியுமற்ற இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்கா ஏறத்தாழ ஐந்து இராணுவத்தளங்களை நேரடியாக கொண்டுள்ளது. டியோ கார்சியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்தளத்தை அமெரிக்கா பேணி வருகிறது. 2021ஆம் ஆண்டு சீனாவின் இராணுவ வளர்ச்சி தொடர்பான பென்டகன் அறிக்கை, இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அமெரிக்க நலன்களுக்கு சீனா முன்வைக்கும் வளர்ந்து வரும் சவாலையே நிரூபிக்கிறது. இதனை அமெரிக்கா எதிர்கொள்ள அன்ட்ரூ எரிக்சன், 'அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கூட்டாளிகளும் இந்த தசாப்தத்தில் நாம் ஏற்கனவே தெளிவாக நுழைந்துள்ள மிகப் பெரிய ஆபத்தின் மூலம் பாதிப்பின் சாளரத்தை எதிர்கொள்வதற்கு உடனடியாகத் தயாராக வேண்டும். இராணுவம் மற்றும் தகவல் தயாரிப்பு ஆகிய இரண்டும் அவசரமாக தேவை. நன்கு தயாரிக்கப்பட்ட மற்றும் நன்கு விளக்கப்பட்ட அமெரிக்க அரசாங்க பதில்கள் மட்டுமே திகைப்பூட்டும் தோல்வியின் சிதைவைத் தடுக்கும் மற்றும் ஷி ஜின் பிங் போராடாமல் வெற்றி பெறுவதைத் தடுக்கும்.' எனத்தெரிவித்துள்ளார். இவ்வாறாக, அமெரிக்கா-சீனாவின் அதிகாரப்போட்டியில் இரு தரப்பினதும் இராணுவ வளர்ச்சியானது உலக அமைதியையே சீர்குலைக்கப் போகிறதா அல்லது போரை தவிர்க்கப் போகிறதா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-