பைடன்-ஜின்பிங் சந்திப்பு போரற்ற உலக அமைதிக்கு வழிவகுக்குமா? -ஐ.வி.மகாசேனன்-
சர்வதேச அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்கில் மோதிக்கொள்ளும் இரு வல்லரசுகளின் தலைவர்கள் மெய்நிகர்வழியில் முதல்முறையாகச் சந்திப்பை மேற்கொண்டுள்ளமையே சமீபத்திய சர்வதேச அரசியலில் முதன்மையான தேடல் பகுதியாகக் காணப்படுகிறது. கொரோனாத்தோற்றம் தொடர்பான அமெரிக்க அறிக்கைகள், சீனாவின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்கா சர்வதேச நிறுவனங்களில் ஏற்படுத்திவரும் நெருக்கடி, தைவான் தொடர்பில் அமெரிக்கா-சீனாவிடையே எழும் கருத்து மோதல்கள் மற்றும் வர்த்தகப்போட்டி என அமெரிக்க-சீன இடையிலான முரண்பாட்டு நிலைமை பனிப்போருக்கான அறிகுறிகளுடன் உக்கிரம் பெற்றுள்ளதொரு சூழலில் இரு நாடுகளினதும் தலைவர்கள் மெய்நிகர்வழியாகச் சந்திப்பை மேற்கொள்வது சர்வதேச அரசியல் பரப்பில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்திப்பு தொடர்பான அரசியல் தாக்கங்களைத் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஷி ஜின்பிங் மற்றும் ஜோ பைடன் ஏற்கனவே பைடன் உப ஜனாதிபதி என்ற அறிமுகத்துடன் நேரடியாகச் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர். எனினும் கடந்த ஜனவரி(2021) ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று 11 மாதங்களாகின்ற போதிலும் இரு நாட்டு வல்லாதிக்க நாட்டின் அரச தலைவவர்களாக ஷி ஜின்பிங் மற்றும் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்கள் சாத்தியமில்லாமலே இருந்து வந்துள்ளது. இது சார்ந்த அதிருப்தியை பைடன் ஜி-20 மாநாட்டு நிறைவின் பின்னரான ஊடக சந்திப்பிலும் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையிலேயே கடந்த நவம்பர்-16(2021) அன்று மெய்நிகர்வழியாக ஷி ஜின்பிங் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவருக்கும் இடையே சீன மற்றும் அமெரிக்க நாட்டின் அரச தலைவர்களாக முதல்முறையாக சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரண்டு போட்டி வல்லரசுகளின் தலைவர்கள் அன்பான வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு கடந்தகால சந்திப்புக்களை மீளநினைவூட்டி தமது உரையாடலை ஆரம்பித்தார்கள்.
பைடன்-ஜின்பிங் சந்திப்பு பரந்த நோக்கங்களுடன் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. குறித்த சந்திப்பில் உரையாடப்படும் என சர்வதேச அரசியல் பரப்பில் முக்கியத்துவமளிக்கப்பட்ட விடயங்களிற்கும் சந்திப்பில் உரையாடப்பட்டுள்ள விடயங்களுக்குமிடையிலான முரண்நகைகளை அறிதல் அவசியமாகிறது.
முதலாவது, தைவான் விவகாரம் முதன்மை பெற்றது. அமெரிக்க-சீன தலைவர்களின் சந்திப்புக்கு ஒரு வாரங்களுக்கு முன்னர் நவம்பர்-09(2021) அன்று, அமெரிக்க காங்கிரஸின் தூதுக்குழு அமெரிக்க இராணுவ விமானத்தில் தைவானுக்குச் சென்றது. இந்தப்பயணம் சீன பாதுகாப்பு அமைச்சகத்தால் விரைவாக கண்டனம் செய்யப்பட்டது. தைவானை மையப்படுத்தி அதிகமாக அமெரிக்க-சீனாவிடையே போர் உரையாடல்கள் நடைபெறுவதால் சந்திப்பில் அதன் பிரதிபலிப்பு எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, நீடிக்கப்பட்ட விவாதத்தின் தலைப்பு தைவான் என்பதாகவே காணப்பட்டது. தைவான் நீரிணை முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் குழி தோண்டிப் பார்க்கும் நிலைமையை மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகளை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்று பைடன் தெரிவித்துள்ளார். அதாவது, தைவானின் சுதந்திரத்தை அங்கீகரிக்காத ஆனால் தீவின் பாதுகாப்பை ஆதரிக்கும் நீண்டகால அமெரிக்கக் கொள்கையை வெள்ளை மாளிகை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மறுதலையாய் சீனாவும் தனது மாறாத நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. அமெரிக்க அரசியல்வாதிகள் மத்தியில் ஆதரவை அதிகரிக்க, தைவானின் முயற்சிகளை ஜின்பிங் நிராகரித்ததுடன் அமெரிக்கா தைவானின் சுதந்திரத்தை ஊக்குவிப்பதை நெருப்புடன் விளையாடுவதற்கு ஒப்பிட்டார். மேலும், 'தைவான் சுதந்திரம் தொடர்பில் பிரிவினைவாத சக்திகள் எங்களைத் தூண்டினால், எங்களை வற்புறுத்தினால் அல்லது சிவப்புக் கோட்டைத் தாண்டினால் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறுவழியில்லை' என்று ஜின்பிங் மோதலின் மறைக்கப்படாத அச்சுறுத்தலில் கூறினார்.
இரண்டாவது, உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாகக்குற்றம் சாட்டப்பட்ட ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்களை மற்றும் ஹொங்கொங் விவகாரம் தொடர்பில் அமெரிக்கா கடுமையாக விமர்சிக்கும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் நம்பினார்கள். ஆனால், பைடன் மனித உரிமைகள் விவகாரங்கள் பற்றி கவலைகளை வெளிப்படுத்தினாரே அன்றி பரந்த அளவில் பேச்சுவார்த்தைகளில் அதிகாரப்பூர்வ முக்கியத்துவத்தை அளிக்கவில்லை. சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்த பெப்ரவரியில் நடைபெறவுள்ள பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திரரீதியாகப் புறக்கணிக்க உய்குர் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் பைடன்-ஜின்பிங் சந்திப்பில் அவ்வகை இராஜதந்திர உரையாடல்கள் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. மனித உரிமைகள் விவகாரங்களின் மூலம் ஏனைய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை சீனா தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எனவே சீனாவுடனான உறவை கட்டமைப்பதினை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா, சீனா மீதான மனித உரிமை குற்றச்சாட்டுக்களை தவிர்த்து சென்றுள்ளதா என்ற எண்ணப்பாட்டை உருவாக்குகிறது.
மூன்றாவது, போட்டிகள் மோதலாக பரவுவதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் பேச்சுவார்த்தையில் மையப்படுத்தி உரையாடப்பட்டுள்ளது. பைடன், 'தலைவர்கள் என்ற முறையில் நமது நாடுகளுக்கிடையேயான போட்டியானது, நோக்கமாகவோ அல்லது திட்டமிடப்படாமலோ மோதலாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்வது நமது பொறுப்பு. நாம் சில பொது அறிவுப்பாதுகாப்புகளை நிறுவ வேண்டும்' என்றார். அதேவேளை ஜின்பிங், 'சீனா-அமெரிக்க உறவுகள் தடம் புரளாமல் தடுக்க வேண்டும். மோதல் இல்லாதது மற்றும் மோதாமல் இருப்பது இரு தரப்பினரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்பகுதி' என்று கூறினார். குறித்த விடயப்பரப்பில், அமெரிக்கா எளிய நேரடியான போட்டியை நோக்கமாகக் கொண்டு உரையாடியிருந்தது. அதற்குப் பதிலாக சீனா, தன் மீதான அமெரிக்க கொள்கை பகுத்தறிவு மற்றும் நடைமுறைப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியது. அமெரிக்காவின் உரையாடலுக்கும் செயற்பாட்டுக்குமிடையே நிலவும் முரண்பாட்டை ஜின்பிங் நேரடியாகவே சுட்டிக்காட்டியிருந்தார்.
நான்காவது, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இரு நாட்டுக்குமிடையிலான போட்டி தொடர்பில் உரையாடப்பட்டது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பிறகு சீனாவும் அமெரிக்காவும் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் போட்டியைத் தூண்டிவிட்டன. பில்லியன் கணக்கான சீனப் பொருட்கள் மீதான வரிகள் மற்றும் சீன உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்கப் பொருட்களை அணுகுவதில் இருந்து தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. ட்ரம்ப் காலகட்டத்தின் பல நடைமுறைகளை பராமரித்து வரும் பைடன் சீனாவின் நியாயமற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார நடைமுறைகளில் இருந்து அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் தொழில்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எழுப்பி சீனா மீதான தடைகளையும் தொடர்ந்து பேணி வருகின்றார். சந்திப்பிலும் விநியோகச் சங்கிலி பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் கட்டணங்களை தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற அழுத்தமான பொருளாதார சிக்கல்களை எந்த வாசிப்பும் குறிப்பிடவில்லை. எனினும், ANZ வங்கியின் (Australia and NewZealand Bank) தலைமைப் பொருளாதார நிபுணர் ரேமண்ட் யூங் கூறுகையில், 'சீனாவும் அமெரிக்காவும் அந்தந்த உள்நாட்டுப் பொருளாதாரங்களைத் திருப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இன்றைய சந்திப்பு தெரிவிக்கிறது.' எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஹொங்கொங், உய்குர் முஸ்லீம்களுக்கான மனித உரிமைகள் மற்றும் தென் சீனக் கடல் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு சர்வதேச அரசியல் திருப்பங்கள் சார்ந்து அதிக எதிர்பார்க்கையை ஏற்படுத்திய போதிலும், உரையாடலின் முடிவுகள் இரு வல்லரசு சக்திகளுக்கிடையிலான சந்திப்பு போலன்றி இரு தேசிய அரசுகளுக்கிடையிலான சந்திப்பு போன்றதொரு தோற்றப்பாட்டையே ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தவிர்க்கப்பட்டு இரு அரசுகளுக்கிடையிலான உறவுகளுக்கே மூன்று மணி நேர உரையாடலில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பைடன்-ஜின்பிங் இடையேயான சந்திப்பில் இரு தலைவர்களும் இரு நாட்டு உறவு வெளிப்படையான மோதலாக மாறாமல் போட்டியாக தொடர்வதனை உற்சாகப்படுத்தியுள்ளனர். இது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போரை தடுக்கிறது. ஆனால் அனைத்து துறைகளிலும் சீனாவுடன் மேலும் போட்டியை அனுமதிக்கிறது. இப்போட்டி எதிர்காலம் தொடர்பில் அதிக சந்தேகங்களையே உருவாக்குகிறது. ஏனெனில் அமெரிக்க-சீன உறவில் பல இடைவெளிகள் தொக்கி நிக்கவே செய்கின்றது. தைவான் விவகாரத்தில் தொடர்ச்சியாக சீனா இறுக்கமான பிடியிலேயே உள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ரென்மின் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க ஆய்வு மையத்தின் இயக்குநரும் அரசாங்க ஆலோசகருமான ஷி யின்ஹாங், 'தைவான் மீதான இரு தரப்பின் அடிப்படைநிலைப்பாடுகளும் இன்னும் தீவிரமோதலில் உள்ளன' என்று சுட்டிக்காட்டியுள்ளார். சந்திப்பு தொடர்பில் ஜின்பிங், 'புதுப்பிக்கப்பட்ட உரையாடல் இருந்தபோதிலும், உயர் பதட்டங்கள் கணிசமாகக் குறையவில்லை' எனக்குறிப்பிட்டுள்ளமையும் அமெரிக்க-சீன உறவில் தொடரும் இடைவெளிக்கும் காணப்படும் பதட்டங்களையே வெளிப்படுத்தி நிற்கிறது.
மேலும், இரு நாட்டுத்தலைவர்களும் தூய்மையான இதய சுத்தியுடன் சந்திப்புக்காள முன்னாயர்த்தங்களை மேற்கொண்டுள்ளார்களா என்பது தொடர்பில் சந்திப்பிற்கு புறத்தே இடம்பெற்றுள்ள நிகழ்வுகள் அதிக சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சீன ஜனாதிபதி சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் வரலாற்று சட்ட வரைபூடாக அடுத்த வருடம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தனது ஆட்சியை உறுதிப்படுத்தி சர்வதிகார விம்பத்துடனேயே சந்திப்பில் இணைந்துள்ளார். மாறாக அமெரிக்கா ஜனாதிபதி பைடனும் சந்திப்பு தினத்தன்று காலை சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சிக்கு எதிராக இருதரப்பு உள்கட்டமைப்பு ஒப்பந்த சட்டத்தை காங்கிரஸில் நிறைவேற்றியுள்ளார். அதனை வரலாற்று வெற்றியாகவும் காட்சிப்படுத்தியுள்ளார். அது தொடர்பில் தனது பேஸ்புக் பதிவில், 'இருதரப்பு உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தின் காரணமாக, அடுத்த ஆண்டு 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் உள்கட்டமைப்பு முதலீடுகள் சீனாவை விட வேகமாக வளரும் முதல் ஆண்டாக இருக்கும்.' என சீனாவுடனான எதிர்மனப்பாங்கை வெளிப்படுத்தி உள்ளார். இவ்வாறானதொரு எதிர்மனப்பாங்குடனேயே மாலை ஜின்பிங்குடனான சந்திப்பிலும் இணைந்தார்.
எனவே, அமெரிக்க-சீன நாட்டு தலைவர்களின் சந்திப்பு சர்வதேச அரசியல் திருப்பங்கள் சார்ந்த எதிர்பார்ப்புக்களுக்கு அதிகம் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ஆனால், போர் தொடர்பான இருதரப்பின் விழிப்புகான கருத்துக்கள் தைவான் விவகாரத்தை மையப்படுத்தி எழும் என எதிர்பார்க்கப்பட்ட இராணுவமோதல்களைத் தடுப்பதில் இரு தரப்பும் விழிப்புணர்வுடன் இருப்பதை உறுதி செய்கிறது. இதனை அமெரிக்க-சீனா உறவை மேம்படுத்துவதற்கான தொடக்கமாக கருதி தொடர்ச்சியான சந்திப்புக்களுக்கு வழிகோலுமாயின் முன்னேற்றகரமான மாற்றங்களை எதிர்பார்க்கக்கூடியதாக காணப்படும்.
Comments
Post a Comment