பைடன் - புடின் சந்திப்பு அமெரிக்க மீள் எழுச்சிக்கான உத்தியாகுமா? -ஐ.வி.மகாசேனன்-
அரசியல் இராஜதந்திரத்தில் சந்திப்புக்களும் உரையாடல்களும் கனதியான பெறுமதி பெறுகிறது. ஆயினும் கொரோனா பெருந்தொற்று முடக்கங்கள், பயணத்தடைகள் தலைர்களுக்கிடையிலான நேரடியான சந்திப்புக்களை தவிர்த்து வந்தது. தற்போது நேரடியான சந்திப்புக்களுக்கான களங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும் முழுவிச்சில் இடம்பெறவியலாத நிலை நிலவுகிறது. இந்நிலையில், சர்வதேச அரசியலில் நிகழ்நிலை சந்திப்புக்கள் ஓர் அங்கமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திப்பு இராஜதந்திர பொறிமுறையில் அதிக நாட்டத்தை செலுத்துகின்ற போதிலும், சந்திப்புக்கள் இறுதியில் அமெரிக்கா எதிர்பார்த்த விளைவுகளை தருபவைகளாக அமைவதில்லை. எனினும் தொடர்ச்சியாக ஜோ பைடன் தனது பிரதான போட்டி அரசுகளின் தலைவர்களுடன் சந்திப்புக்களை திட்டமிட்டு வருகின்றார். சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடனான நிகழ்நிலை சந்திப்புக்கு பின்னர் தற்போது ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடினுடான சந்திப்புக்களுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. இக்கட்டுரை பைடன்-புடின் சந்திப்புக்கான சர்வதேச அரசியல் சூழல் காரணிகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் கடந்த ஜீன்-16(2021) அன்று பைடன்-புடின் இடையே முதலாவது நேரடி சந்திப்பு மகாநாடு ஜெனிவாவில் இடம்பெற்றது. குறித்த மாநாட்டில் இரு தலைவர்களதும் சந்திப்பின் ஆரம்பத்திலிருந்து நிறைவுபகுதி வரை நிகழ்ந்த அனைத்து விடயங்களையும் அவதானிக்கும் போது நெருக்கமில்லாத இருநாட்டு தலைவர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக அவர்களது உடல்மொழி காட்சிப்படுத்தியது. அத்துடன் மாநாட்டு நிறைவிலும் இரு தலைவர்களும் இணைந்து அறிக்கை வெளியிடுவதனையும் தவிர்த்திருந்தனர். அம்மாநாட்டுக்கு முன்னர் ரஷ்சியா ஜனாதிபதியை கொலைகாரன் என்றும் ரஷ்சியாவின் நடவடிக்கைகளை ஆக்கிரமிப்புக்கள் என்றும் எச்சரிக்கைகளை வெளிப்படுத்திவிட்டு அவ்வகை தலைவரை பேச்சுவார்த்தை மேசையில் நேருக்கு நேர் சந்திப்பது என்பது ஜோ பைடன் உள்ளார்ந்த ரீதியில் பலவீனமான தலைவர் என்பதை அடையாளப்படுத்தும் செயலாகியது. அதேநேரம் விளாடிமிர் புடின் அமெரிக்காவை பொதுவெளியில் விமர்சிக்கும் போது முதிர்ச்சியோடும் சரியான அளவுகோலோடும் செயற்பட்டது மட்டுமன்றி ஜோ பைடன் மீதான அவதூறான எந்த வார்த்தை பிரயோகத்தையும் மேற்கொள்ளாது தவிர்த்து வந்தமை ஜெனீவா சந்திப்பில் புடின் பலத்தை முதன்மைப்படுத்தி இருந்தது.
முழுமையாக ஜெனிவா மாநாடு அமெரிக்காவிற்கு எதிர்வினையான விளைவுகளையே ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையிலான மெய்நிகர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நவம்பர்-17அன்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். அன்றைய தினம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் ரஷ்சிய பாதுகாப்பு அதிகாரி நிகோலாய் பட்ருஷே இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்னின், 'இருவரும் அமெரிக்க-ரஷ்சிய உறவு தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்களைப் பற்றி விவாதித்ததாகவும், ஆனால் சந்திப்புக்கான தயாரிப்புகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை' என்றும் தெரிவித்துள்ளார். எனினும் பெஸ்கோவ், 'இரு அதிகாரிகளும் உக்ரைன், இணைய பாதுகாப்பு மற்றும் போலந்துடனான பெலாரஸின் எல்லையில் புலம்பெயர்ந்தோர் நெருக்கடி குறித்து விவாதித்ததாகவும், இது அனைத்தும் உயர் மட்ட தொடர்புக்கான தயாரிப்பின் கட்டமைப்பில் இருந்தது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பைடன்-புடின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில் அமெரிக்க-ரஷ்சிய உறவின் சூழமைவை அறிந்து கொள்ளல் அவசியமாகிறது.
முதலாவது, உக்ரைன் சார்ந்து அமெரிக்க-ரஷ்சியா உறவு கடுமையான நெருக்கடியில் காணப்படுகிறது. உக்ரைனுடனான எல்லைக்கு அருகில் ரஷ்சிய இராணுவ உபகரணங்களை குவிப்பது குறித்து அமெரிக்க அதிகாரிகளிடையே எச்சரிக்கைள் அதிகரித்து வருகின்றது. பல வாரங்களாக, உக்ரேனிய எல்லையில் ரஷ்சியாவின் இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்தி வருகிறார். 'ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நோக்கங்கள் என்னவென்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். உக்ரைன் அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் சில மாயையான ஆத்திரமூட்டல்களை மேற்கோள்காட்ட முயற்சிக்கும் விளையாட்டு எங்களுக்குத் தெரியும்.' என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். மாறாக ரஷ்சியாவும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீட்டை எச்சரித்துள்ளது. ரஷ்சிய வெளியுறவு அமைச்சகத்தின் கூட்டத்தில் புடின், 'கிரெம்ளினின் சிவப்புக் கோடுகளை மேற்கு நாடுகள் மதிக்கவில்லை மேற்கத்திய பங்காளிகள் உக்ரைனிற்கு நவீன ஆயுதங்களை வழங்குவதன் மூலம் நிலைமையை மோசமாக்குகிறார்கள். கருங்கடலில் ஆத்திரமூட்டும் இராணுவ சூழ்ச்சிகளை நடத்துகிறார்கள்' என்று குற்றம் சாட்டினார். இதன் விளைவான அச்சங்கள் அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் மற்றும் ரஷ்சியாவிற்கும் இடையே இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு சலசலப்பைத் தூண்டியுள்ளன.
இரண்டாவது, பெலாரஸ்-போலந்து எல்லையில் அகதிகள் வெளியேற்றும் விவகாரத்திலும் ரஷ்சியா மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்கா குற்றஞ்சுமத்துகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் நீண்டகால தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் சர்ச்சைக்குரிய வெற்றிக்குப் பின்னர் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை கைவிடுமாறு பெலாரஸ் அரசாங்கம் மத்திய கிழக்கு குடியேற்றவாசிகளை போலந்துக்கு அனுப்பியதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் பெலாரஸின் ஒரே முக்கிய கூட்டாளியும், முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவாளருமான ரஷ்சியா நெருக்கடியைத் திட்டமிட்டதாகக் கூறுகிறது. மேலும், பதட்டமான மோதலுக்கு எதிர்வினையாக சமீபத்திய நாட்களில் பெலாரஸுடனான போலந்தின் எல்லையில் சுமார் 15,000 போலந்து வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை நேட்டோ தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. மறுமுனையில் நவம்பர்10,11(2021) அன்று பெலாரஸ் வான்பரப்பில் இரண்டு ரஷ்சியன் Tupolev Tu-22ஆ3 சூப்பர்சோனிக் நீண்ட தூர குண்டுவீச்சுகளை பறக்கவிட்டு ரஷ்சியாவின் பெலாரஷ்சிற்கான ஆதரவை உறுதி செய்தது.
மூன்றாவது, ரஷ்சியா மற்றும் அமெரிக்கா இடையே ஆயுத பயன்பாடுகள் தொடர்பிலான சச்சரவுகள் அதிகரித்து வருகின்றது. நவம்பர் மாத(2021) தொடக்கத்தில் இரண்டு வெவ்வேறு திசைகளில் இருந்து ரஷ்சியா மீது அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் அணு ஆயுதத் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்ததாக ரஷ்சியாவின் பாதுகாப்பு அமைச்சர் நவம்பர்-23அன்று குற்றம் சாட்டினார். மற்றும் ரஷ்சிய எல்லையில் இருந்து 20கி.மீ தொலைவில் விமானங்கள் வந்ததாக புகார் கூறினார். ஆனால் பென்டகன் அதன் பயிற்சிகள் அந்த நேரத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதாகவும் சர்வதேச நெறிமுறைகளுக்கு இணங்குவதாகவும் கூறியுள்ளது. மாறாக அமெரிக்க அதிகாரிகள், ரஷ்சியா அதன் தெற்கு அண்டை நாடான உக்ரைன் மீது தாக்குதல் குறித்து கவலை தெரிவிக்கின்றனர். எனினும் கிரெம்ளின் இந்த பரிந்துரையை தவறானது என்று நிராகரித்துள்ளது.
நான்காவது, பொருளாதார தடைகள் அமெரிக்க-ரஷ்சிய முரண்பாட்டை வலுவாக்கிறது. ரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே 'நார்ட் ஸ்ட்ரீம் 2 (Nord Stream 2)' எரிவாயு குழாய்த்திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் மீது அமெரிக்கா நவம்பர்-22(2021) அன்று புதிய தடைகளை விதித்துள்ளது. தடைகள் திட்டத்தை முடிக்கும் முக்கிய நிறுவனத்தை குறிவைக்கவில்லை. மாறாக ரஷ்சியாவுடன் இணைக்கப்பட்ட கப்பல் நிறுவனம் மற்றும் கப்பலை குறிவைக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், சமீபத்திய தடைகள் வுசயளெயனசயை டுவன என்ற கப்பல் நிறுவனத்திற்கும் அதன் கப்பலான மார்லின் மீதும் அனுப்பப்படும் என்றார். அமெரிக்கா, உக்ரைன் மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 'நார்ட் ஸ்ட்ரீம் 2' ரஷ்யாவிற்கு பிராந்திய அரசியலில் அதிக செல்வாக்கைக் கொடுக்கும். மற்றும் ஐரோப்பாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ளன. தடை பற்றிய அறிவிப்பில் அந்தோனி பிளிங்கன், 'நார்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைனை எங்கள் நிர்வாகம் பொருளாதாரத் தடைகள் உட்பட தொடர்ந்து எதிர்த்தாலும், நாங்கள் ஜெர்மனி மற்றும் பிற நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் இணைந்து குழாய் மூலம் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.' என்று தெரிவித்துள்ளார். எனவே ரஷ்சியா-ஜேர்மனி வர்த்தக நடவடிக்கையிடேயே பெருளாதார தடை விதித்துள்ள போதிலும், அது முழுமையாக ரஷ்சியாவை குறிவைத்த செயற்பாடு என்பது தெளிவாகிறது.
எனவே, இத்தகைய முரண்பாட்டு சூழலிலே பைடன்-புடின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மீள பைடன் நிர்வாகம் தனது பலவீனத்தை வெளிப்படுத்த முனைகிறதோ என்ற எண்ணப்பாங்குகள் சர்வதேச அரசியல் பரப்பில் எழுகிறது. எதுஎவ்வாறாயினும் இம்முறை ரஷ்சியா மீதோ அல்லது புடின் மீதோ பைடன் நேரடியாக எவ்வித முரண்பாடான கருத்துக்களையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பது முன்னைய சந்திப்பிலிருந்து மாறுபட்ட காரணியாக உள்ளது. எனினும் முன்னைய அனுபவங்கள் மற்றும் அமெரிக்-ரஷ்சிய உறவின் தற்போதைய நிலைமைகளை நோக்குகையில் புடின்-பைடன் இரண்டாவது சந்திப்பும் அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்களை ஈடு செய்யும் என்பதில் சந்தேகத்தையே உருவாக்குகிறது.
Comments
Post a Comment