ஜி-20 மகாநாடும் அமெரிக்க-சீன-ரஷ்சிய தலைவர்களின் அரசியல் தந்திரோபாயமும் -ஐ.வி.மகாசேனன்-
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அதிகரித்த சர்வதேச வர்த்தக போட்டிச்சூழல் உலக நாடுகள் தனித்து இயங்க முடியாத நிலைமையை உருவாக்கியுள்ளது. இது புவிசார் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டமைப்பை அதிகரிக்க வைத்ததோடு மறுதலையாக பொருளாதார முன்னிலை பெறும் நாடுகளின் கூட்டுக்களையும் உருவாக்கியுள்ளது. அரசியல் கொள்கைகள் முரண்நகையாக உள்ள போதிலும் சர்வதேச வர்த்தகத்தை மையப்படுத்தி பல முரண்நகை நாடுகள் ஓரு கூட்டுக்குள் பயணிக்கும் நிலைமைகள் காணப்படுகிறது. அவ்வாறானதொரு ஒத்துழைப்பு கூட்டாகவே ஜி-20 நாடுகளும் காணப்படுகின்றது. பல்வேறு அரசியல் முரண்நகைகளை உடைய தலைலவர்கள் ஜி-20 மாநாட்டுக்காக உரோமில் கூடிய போது சர்வதேச அரசியல் அவதானிப்புக்களும் உரோமை சூழ்ந்தது. அதேநேரம் சீன மற்றும் ரஷ்சிய தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்ளாமை சர்வதேச அரசியலில் விவாதப்பொருளாகி உள்ளது. இக்கட்டுரையும் சீன, ரஷ்சிய தலைவர்கள் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கான அரசியல் காரணிகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி பொருளாதார சக்திகளின் கூட்டாகிய ஜி-20இன் 2021ஆம் ஆண்டுக்கான மாநாடு கடந்த ஒக்டோபர் 30-31ஆம் திகதிகளில் இத்தாலியின் தலைநகரான உரோமில் நடைபெற்றது. ஜி-20 குழுமத்தின் உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். கொரோனா பெருந்தொற்று நெருக்கடிகளின் தளர்வில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நேரடியாக சந்தித்துள்ள ஜி-20 தலைவர்கள் காலநிலை மாற்றம், கொவிட் தொற்றுநோய் தடுப்பூசிகள் உதவிகள், முக்கிய வரி ஒப்பந்தம் மற்றும் உலகளாவிய பொருளாதார கவலைகள் உள்ளிட்ட முழு நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தனர். குறிப்பாக புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளுக்குக் கட்டுப்படுத்தும் முக்கிய பாரிஸ் உடன்படிக்கையின் இலக்குக்குத் தலைவர்கள் உறுதியளித்தனர். இச்சூழலியல் உரையாடல் கிட்டத்தட்ட 200 நாடுகளின் தலைவர்களின் பங்களிப்புடன் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் தொடர்ந்து நடைபெற்ற ருN ஊழி-26 காலநிலை கூட்டத்தொடருக்கு முன்னோடியாக அமைந்தமை இக்குழுவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
உலக அரசியல் தற்போது வர்த்தகத்தை மையப்படுத்தியது என்ற அடிப்படையில் உலக பொருளாதாரத்தில் முன்னிலையில் வகிக்கும் நாடுகள் ஜி-20எனும் பொதுக்கட்டமைப்பில் ஒன்றாகிய போதிலும், உறுப்பு நாடுகளிடையே அரசியல் முரண்பாடுகள் நிறைந்து வருகின்றது. ஆக்கஸ் ஒப்பந்தத்தை மையப்படுத்தி பிரான்ஸிற்கும் அமெரிக்க, ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளிடையே முரண்பாடு நிலவுகிறது. மேலும், ஏப்ரல் மாதம் (2021) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆர்மேனிய இனப்படுகொலையை அங்கீகரித்த முதல் அமெரிக்க ஜனாதிபதியானார். இது துருக்கியை அந்நியப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியது. முரண்பாடுகள் காணப்படினும் குறித்த நாடுகளில் தலைவர்கள் உரோமில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்டு சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தனர். எனினும் சீனா, ரஷ்சியா, ஜப்பான் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்ளாது காணொளி வடிவிலேயே இணைந்து கொண்டார்கள். இதில் சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின் பிங் மற்றும் ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் நேரடியாக கலந்து கொள்ளாமை சர்வதேச அரசியல் வெளியில் பல விவதாங்களை உருவாக்கியுள்ளது.
ஜி-20 மாநாடு மற்றும் ஸ்கொட்லாந்தில் காலநிலை உச்சிமாநாட்டில் ஷி ஜின் பிங், புடின் நேரடியாக கலந்து கொள்ளாமைக்கு அறிவிக்கப்பட்ட காரணம், கொவிட் பெருந்தொற்று நோய் பரவால் ஆகும். ரஷ்யாவில் பரவல் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மேலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் 21 மாதங்களாக ஷி ஜின் பிங் சீனாவை விட்டு வெளியேறவில்லை. இருப்பினும் உலகின் முதன்மையான இராஜதந்திர நிகழ்வுகளில் ஒன்றை கைவிடுவதற்கான முடிவுக்கு எளிதான காரணங்கள் காணப்பட வாய்ப்பில்லை. உலக அதிகார போட்டியில் முதன்மையாக காணப்படும் சீனா மற்றும் ரஷ்சியா உலக அதிகாரத்துக்கு வலுவான பொருளாதார முக்கியத்துவத்தை மையப்படுத்திய ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளாமைக்கான அரசியல் காரணங்களை ஆழமாக அவதானிக்க வேண்டியுள்ளது.
ஒன்று, பிடனின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சீன, ரஷ்சிய தவைர்கள் புறக்கணிக்க முற்படுகின்றார்கள். பிடன் அமெரிக்கா மற்றும் சீனா, ரஷ்சியா இடையே ஏற்கனவே நிகழும் பதட்டமான உறவுகள் மேலும் மோசமடைவதைத் தடுக்க தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சந்திப்புக்களில் ஈடுபட வேண்டும் என்று தீவிரமாக நம்புகிறார். ஜி-20 போன்ற மாநாடுகளை அதற்கான களமாகவே அவதானிக்கின்றார். எனினும் ஜி-20 மநாட்டில் சீன, ரஷ்சிய தவைர்கள் கலந்து கொள்ளாது அவர்களது பிரதிநிதிகள் கலந்து கொண்டமையானது பிடனை ஏமாற்றியது. அதிகாரமிக்க தலைவர்களுக்கு பதிலாக, அவர்களின் அடிவருடிகள் அரச தலைவர்களுடன் இணைந்து முக்கிய முடிவுகளை எடுக்க அதிகாரம் பெறுவது சாத்தியமில்லை. இது பிடனின் இராஜதந்திர நகர்வுகளை நிராகரிக்கும் செயலாகவே அவதானிக்கப்படுகிறது.
இரண்டு, ரஷ்சிய மற்றும் சீனா சைபர் தாக்குதல்கள், இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அண்மைக்காலங்களில் உலக நாடுகளிடையே குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே கடும் விசனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் நேரடி சந்திப்புக்களில் இவ்விடயங்கள் தொடர்பான உரையாடல்கள் மேலெழுகையில் அரசியல் நெருக்கடிகளால் பொது ஒப்பந்தங்களூடாக வர்த்தகங்களில் தடைகள் உருவாக்கப்படலாம். இவற்றினை இயன்றளவு தவிர்த்துக்கொள்ளவே சீன, ரஷ்சிய தலைவர்களும் முதன்மையான இராஜதந்திர நிகழ்வுகளினை கைவிடுவதற்கான முடிவுகளை மேற்கொள்ள வாய்ப்பு காணப்படுகிறது.
மூன்று, அமெரிக்கா மற்றும் ரஷ்சியா, சீனா ஆகியவற்றுக்கிடையில் சமீபத்தில் அதிகரித்து வரும் முரண்பாடுகளும் ஜி-20 மாநாட்டில் நேரடி பிரசன்னத்தை ரஷ்சிய, சீன தலைவர்கள் தவிர்க்க வாய்ப்பு காணப்படுகிறது. ஜி-20 மாநாட்டுக்கு முந்தைய வாரத்தில், ரஷ்சிய போர்க்கப்பல்கள் 2014இல் மாஸ்கோவால் இணைக்கப்பட்ட உக்ரைனில் உள்ள கிரிமியாவில் ஒரு போலி தரையிறக்கத்தை நடத்தியுள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டு வெற்றிகரமாக அமெரிக்க கூட்டாட்சி முகவர்களை ஊடுருவிய ரஷ்சிய இணைய ஊடுருவிகள் சமீபத்திய மாதங்களில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்க வலையமைப்புகளுக்குள் ஊடுருவ முயன்றது தெரியவந்தது. இவ்வாறே சீனாவும், தைவானின் வான்வெளியில் இராணுவ விமானங்களை அதிகப்படுத்தியுள்ளது. தீவு தேசத்தின் நிலை மற்றும் அமெரிக்காவுடனான அதன் உறவு சீனா-அமெரிக்காவிடையே பதட்டத்தையே பேணி வந்துள்ளது. இந்நிலையில் தற்போது அதிகரித்து வரும் பதட்டமான அமெரிக்க-சீனா உறவில் கருத்து வேறுபாடுகள் நிறைந்த புள்ளிகளில் ஒன்றாக உள்ளது.
எனவே, ஷி ஜின் பிங் மற்றும் புடின் ஜி-20 மாநாட்டின் நேரடி பிரசன்னத்தை தவிர்த்து காணொளி வழியில் கலந்து கொண்டமையானது அமெரிக்கா தனது எதிராளிகளை சர்வதேச அரங்கிற்குள் நெருக்குவாரத்தை உருவாக்க வகுக்கும் வியூகங்களையே அதிகம் மலினப்படுத்தியுள்ளது. இது பிடனின் ஏமாற்றக்குறிப்புக்களும் வெள்ளை மாளிகை அதிகாரிகளின் சமாளிப்பு குறிப்புக்களும் உறுதி செய்கின்றது.
முதலாவது, உயர்மட்ட உலகப் பொருளாதாரங்களின் குழு பல சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை அவர்கள் சில உறுதியான உறுதிமொழிகளாக மொழிபெயர்த்தாலும், ரஷ்ய மற்றும் சீன நாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு நேரில் வரவில்லை என்று பிடென் தனது 'ஏமாற்றத்தை' வெளிப்படுத்தினார்.
இரண்டாவது, வெள்ளை மாளிகை அதிகாரிகளின் செய்திக்குறிப்பு, 'இந்த வார இறுதி மாநாட்டில் புடின் மற்றும் ஷி இல்லாதது உண்மையில் இழந்த வாய்ப்பு அல்ல. மாறாக, காலநிலை மற்றும் உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது போன்ற முக்கியமான தலைப்புகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் நிகழ்ச்சி நிரலை அமைக்கவும் விவாதத்தை இயக்கவும் வெற்றிடத்தை அனுமதித்துள்ளது.' எனக்குறிப்பிட்டுள்ளது.
மூன்றாவது, அமெரிக்க வெளிநாட்டு உறவுகள் சபையின் தலைவர், தூதர் ரிச்சர்ட் ஹாஸ், 'இது அவர்களின் சொந்த முன்னுரிமைகளை ஓரளவு காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அதை யதார்த்தமாக மொழிபெயர்த்தால் மட்டுமே இது ஒரு வாய்ப்பு. உதாரணமாக, ஐரோப்பியர்கள் சீனா மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றிற்கு எதிராக தீவிரமான கொள்கையை வரிசைப்படுத்த முடியுமா அல்லது தைவானுக்கு எதிராக பலத்தை பயன்படுத்தினால் பொருளாதாரத் தடைகள் மூலம் அவர்களை அச்சுறுத்த முடியுமா? ஐரோப்பியர்கள் ரஷ்சிய ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைப்பார்களா? எனவே, பொதுவாக வாய்ப்பைப் பற்றி நாம் பேசலாம். ஆனால் கொள்கை மற்றும் யதார்த்தமாக நாம் எதை மொழிபெயர்க்கலாம் என்பதில் உண்மையான கேள்விகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.' என ஐரோப்பிய நாடுகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
எனவே, ரஷ்சியா மற்றும் சீன தலைவர்கள் ஜி-20 மாநாட்டின் நேரடி பிரசன்னத்தை தவிர்த்துக்கொண்டமை தொடர்பான அமெரிக்க விமர்சனங்கள் அமெரிக்காவின் மரபு அரசியல் பாணியை வெளிப்படுத்தி நிற்கின்றமையையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதாவது அமெரிக்க தேசிய நலனை உலக நலன் என்ற பிம்பத்தில் வெளிப்படுத்தும் அரசியல் நகர்வின் வெளிப்பாடாகவே அவதானிக்கப்படுகிறது. மேலும் அமெரிக்க நலனுக்குள் நகர்த்தப்பட்ட ஐரோப்பிய நலன் வெளியேறி சுயாதீனமாக செயற்பட முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாத அமெரிக்க மனோ நிலையும் தெளிவா புலப்படுகின்றது. உலக அதிகார போட்டியில் சீனா-ரஷ்சியா தமது புதிய பாதையை செவ்வனவே நெறிப்படுத்தி வருகின்றார்கள் என்பதே ஜி-20 மாநாட்டில் இராஜதந்திரரீதியிலான நேரடி பிரசன்னத்தை தவிர்ப்பதன் புலப்பாடாகும்.
Comments
Post a Comment