தென்னிலங்கையில் எழுச்சிபெறும் போராட்டத்தை கையாள்வதில் தமிழ்த்தரப்பின் தோல்வி! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் நிலவும் அரசியல் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக ஆட்சி மாற்றத்தை கோரிய மக்கள் போராட்டங்கள் தென்னிலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனினும் ஆட்சித்தலைவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை இறுக்கமாக பற்றிக்கொள்வதிலேயே குறியாக உள்ளனர். அதேநேரம் வடஇலங்கையில், நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை கடந்த போர்க்கால நெருக்கடிகளுடன் ஒப்பிட்டு விலையேற்றங்கள் தட்டுப்பாடுகளுக்கு வரிசையில் நின்று இயைந்து பயணிக்கிறார்கள். எனினும் நெருக்கடிக்கு சரியான தீர்வுடன் கடந்து செல்ல இயலாத நிலைப்பாடுகளே காணப்படுகிறது. வடக்கு-கிழக்கின் அரசியல் பிரதிநிதிகளும் இந்நெருக்கடியை கடந்து செல்வது தொடர்பில் தம்மக்களுக்கு சரியான வழிகாட்டல்களை செய்ய தவறியுள்ளார்கள் என்ற விமர்சனமே பொதுவெளியில் காணப்படுகிறது. இக்கட்டுரை இலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடியில் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் அரசியல் நகர்வுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஜோன்ஸ் ஹொப் கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கியின் கூற்றுப்படி, உலகில் வருடாந்த பணவீக்க வீதத்தில் சிம்பாப்வே மற்றும் லெபனானை தொடர்ந்து இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்நெருக்கடியின் வெளிப்பாடு தென்னிலங்கையில் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றது. இருவாரங்களுக்கு மேலாக காலிமுகத்திடலில் அரசாங்கத்தை அதிகாரத்தைவிட்டு வெளியேறுமாறு கோரி இளையோர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளிலும் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்குவாரங்கள் பிரதிபலிக்கப்படுகின்றது. எனினும் வடக்கு-கிழக்கில் இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினைக்கு பரந்த அளவிலான எதிர்வினைச்செயற்பாடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படை காரணியே இலங்கை தேசிய இனப்பிரச்சிரன என்ற அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கும் தமிழ்த்தரப்பு தமது அரசியல் கோரிக்கைகளையும் சரியான முறையில் நகர்த்த தவறியுள்ளார்கள். இது தமிழ் மக்களை நெறிப்படுத்தும் சரியான தலைமையின்மையையே வெளிப்படுத்துகின்றது. தமிழ் மக்கள் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் பல அரசியல் தீர்மானமெடுக்கம் தருணங்களில் மேய்ப்பானற்ற மந்தைகளாக செயற்பட்டே வாய்ப்புக்களை தவறவிட்டு வருகின்றனர். அவ்வாறானதொரு நகர்வே தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கீட்டிலும் காணப்படுகின்றது.
தமிழ்மக்களை நெறிப்படுத்த வேண்டிய அரசியல் பிரதிநிதிகள், பாராளுமன்ற அரசியலுக்குள் வெறும் அரசியல் பிரதிதிகளாகவே தங்கள் செயற்பாடுகளை முன்னெத்து வருகின்றனர். தேர்தல் காலங்களில் தமிழ்த்தேசத்தை தமது உரைகளை அதிகம் முதன்மைப்படும் தமிழ்க்கட்சிகள் தேசம் மற்றும் தேசியம் என்பதை தமது கட்சிகளின் இணைப்பு பெயராகவே கடந்து செல்கின்றனர். தேசியத்துக்குரிய பண்புகளுடன் தம்மை கட்டமைக்க தவறியுள்ளனர். தம்மை தேசமாக கருதுவார்களாயின் தமக்கான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை நேர்த்தியாக கட்டமைத்து செயற்பட்டிருப்பார்கள். எனினும் தமிழ்க்கட்சிகள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி தமிழர்களுக்கும் பொதுவானது என்ற எண்ணங்களுடன் செயற்படுவதனையே அவதானிக்க முடிகின்றது. அத்துடன் அரசியல் பொருளாதார பிரச்சினைக்குள் பொதிந்துள்ள தமிழர்களுக்கான வாய்ப்புக்களை பயன்படுத்தும் வகையிலான அரசியல் உரையாடல்களையும் முன்னகர்த்த தவறியுள்ளனர்.
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் தமிழ்க்கட்சிகள் தமிழ்மக்களுக்கு சரியான தலைமையை வழங்க தவறியுள்ளார்கள் என்பதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு அபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளார்கள். இதனை தமிழ் கட்சிகளின் செயற்பாடுகளை நுணுக்கமாக அவதானிக்குமிடத்தேயே அறியக்கூடியதாக உள்ளது.
முதலாவது, அரசியல் பொருளாதார நெருக்கடி காலத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர்; வழங்கிய வாக்குறுதி புலம்பெயர் சமூகத்திடமும் கடுமையான கண்டங்களை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை இலங்கைக்கு அழைப்பதில் ஒருங்கிணைப்பாளராக செயற்பட தயாரென வாக்குறுதியளித்திருந்தார். இவ்உரையாடல் தமிழ் மக்களுக்கு அபத்தமானது. இலங்கையின் தற்போதைய நெருக்கடி தனித்து பொருளாதார பிரச்சினை சார்ந்தது அல்ல. மாறாக அதுவோர் அரசியல் பொருளாதார காரணிகளை கொண்டதாகும். எனவே இன்றைய நெருக்கடிக்கான தீர்வு முயற்சிகளில் தமிழர்களை ஈடுபடுத்த அரசாங்கம் முயல்வதாயின் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துவது அவசியமாகும். தமிழ்த்தரப்பின் உரையாடல்களும் அதனை மையப்படுத்தியதாகவே அமைய வேண்டும்.
இரண்டாவது, இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மான முன்மொழிவுக்கு ஆதரவான கையெழுத்து சேகரிப்பில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் சென்று கையெழுத்திட்டிருந்தனர். பொதுஜன பெரமுன அரசாங்கம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வினை முன்வைக்க தயாரில்லை மற்றும் 2009ஆம் தமிழினப்படுகொலையின் பிரதான சூத்திரதாரிகள் என அடையாளப்படுத்தப்படுவோர் குறித்த அரசாங்கத்தின் பிரதானமானவர்கள் என்ற அடிப்படையில் இவ்அரசாங்கத்தினை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவது தமிழ் மக்கள் எண்ணங்களாக இருக்கலாம். அதன் வெளிப்பாடாக நம்பிக்கையில்லா தீர்மான முன்மொழிவுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருக்கலாம். எனினும் ஆட்சி மாற்றத்தினூடாக உருவாக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கை தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் கொண்டுள்ள எண்ணங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்;. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா தனது உச்சபட்ச தீர்வாக 13ஆம் சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதே என பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார். எனவே, வடக்கில் தமிழ் கட்சிகள் 13ஐ அமுல்படுத்த கோரிய போது அதற்கெதிராக போராட்டங்களை நகர்த்திய தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனியினர், 13ஐ அமுல்படுத்துவதே உச்சபட்ச தீர்வாக முன்மொழியும் ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகம் சென்று நம்பிக்கையில்லா தீர்மான முன்மொழிவில் கையெழுத்திட்டுள்ளமையானது முரணான அரசியல் நகர்வாகவே அமைகிறது.
மூன்றாவது, தமிழ்க் கட்சிகள் பெருமளவில் தென்னிலங்கை போராட்டங்களில் முன்வைக்கப்படும் ஆட்சிமாற்ற கோரிக்கைக்கு ஆதரவான தளத்தில் பயணிக்கும் எண்ணங்களையே வெளிப்படுத்துகின்றனர். எனினும் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆட்சி மாற்றத்துக்கு அப்பால், அரசியல் கட்டமைப்பு மாற்றங்களையும் முன்வைத்து அதுசார்ந்து தென்னிலங்கை போராட்டத்துக்கான ஆதரவு தளத்தை தமிழ் மக்கள் நகர்த்த வேண்டுமென்ற கருத்துக்களையே வெளிப்படுத்துகின்றனர். இதுவே தமிழ்மக்களின் அரசியலுக்கும் ஆரோக்கியமானது. ஆயினும் தமிழ்க்கட்சிகள் ஆட்சி மாற்றத்துடன் மட்டுப்படும் போக்கையே தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். யாழ்ப்பாணம பண்ணையில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நெறிப்படுத்திலில் தென்னிலங்கை போராட்டத்துக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டமும் அதனையே வெளிப்படுத்தியது. மேலும், தமிழ்த்தேசிய கட்சி தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முண்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்க்கட்சிகள் ஒன்றுகூடி, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தமிழ்த்தரப்பு எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் உரையாடப்பட்டது. அக்கலந்துரையாடலிலும் தமிழ்க்கட்சிகள் பெருமளவில் தென்னிலங்கை போராட்டங்களில் இணைந்து ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணங்களையே வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் சிவில் சமூக செயற்பாட்டளர்கள் ஆட்சி மாற்றம் மாத்திரம் தமிழர்களுக்கு தீர்வாகாது என்ற கருத்தினை உறுதியாக வெளிப்படுத்தியமையால் தமிழ்க் கட்சிகள் தங்கள் முடிவை வெளிப்படுத்த இயலாத சூழல் காணப்படுகிறது.
நான்காவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியில் தென்னிலங்கை மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே கடந்த கால அரசாங்களின் இனவாத செயற்பாடுகளே இலங்கையின் இன்றைய நெருக்கடிகளுக்கு காரணமானது என்ற உரையாடல்கள் அரும்ப ஆரம்பித்துள்ளது. மேலும், தமிழ் மக்களிடையேயே 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழினப்படுகொலையை இனப்படுகொலை எனக்கூறலாமா என்பது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நிகழுகையில் தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெறும் அரசியல் பொருளாதாரப் போராட்டங்களில்; தமிழினப்படுகொலை பங்காளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்படுகின்றது. இது முழுமையான மாற்றமில்லையாயினும், தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள குறித்த மாற்றத்தினை தமிழ்த்தரப்பு ஒன்றிணைக்க வேண்டிய மற்றும் அதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதனை மே-18 தமிழினப்படுகொலை நினைவேந்தல் சார்ந்து கட்டமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் காணப்படுகின்றது. எனினும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் வழமைபோன்று தங்களுக்குள்ளேயே ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது மே-18 நினைவேந்தலை அனுஷ;டிப்பது தொடர்பில் முரண்பட்டு கொண்டுள்ளமை தமிழ் மக்களிற்கான விமோசனமின்யையே வெளிப்படுத்தி நிற்கிறது.
எனவே, இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் உருவாகியுள்ள தமிழர்களுக்கான வாய்ப்பு தமிழ் மக்களிடம் தன் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கக்கூடிய தலைமையற்ற நிலையில், தவறிப்போகும் சூழலே அதிகம் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கான வாய்ப்புக்ளை சிதைக்கும் நிலைமைகளையே வெளிப்படுத்துகின்றது. ஆட்சி மாற்றமொன்றே தமிழர்களுக்கு போதுமானதாயின், சுதந்திர இலங்கையில் ஐந்து வருட இடைவெளியிலோ அல்லது 10 வருட கால இடைவெளியிலோ பல ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களும் தமிழர்களின் பிரச்சினையையே அதிகரித்து சென்றுள்ளது என்பதுவே வரலாறு வெளிப்படுத்தும் செய்தியாகும். இவ்வரலாற்று அனுபவங்களின் தொடர்ச்சியாகவும் ஆட்சி மாற்றமே தமிழர்களுக்கான தீர்வென தமிழ்க்கட்சிகள் கோருவது அவர்களின் அரசியல் விசுவாசம் தொடர்பிலான சந்தேகத்தையே அரசியல் ஆய்வுப்பரப்பில் ஏற்படுத்துகிறது.
Comments
Post a Comment