பிலிப்பைன்ஸ் அரசியலில் மீள ஆதிக்கம் பெறுகிறதா மார்கோஸ் குடும்ப அரசியல்? -ஐ.வி.மகாசேனன்-

உலகமயமாக்கலின் எழுச்சி எந்தவொரு அரசும் தனித்து இயங்க இயலாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் ஒரு அரசின் இராஜதந்திர நகர்வுகளை வெளியுறவுக்கொள்கைகளை வடிவமைக்கவும், ஒரு அரசின் அரசியல் எதிர்கால போக்குகளை அணுகுவதற்கும் சர்வதேச நாடுகளின் அரசியல் நடத்தைகள் பற்றிய புரிதலும் அவசியமாகிறது. அதுசார்ந்தே சர்வதேச அரசியல் கற்கையும் வளர்ச்சி பெற்றுள்ளது. இலங்கை அரசியலில் ஏறத்தாழ இருவருடங்களுக்கு முன்னர் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ராஜபக்ஸாக்களின் ஆட்சி 20வருடங்களுக்கு அசைக்க முடியாத நிலை பெறப்போகின்றது என்ற ஆரூடங்கள் இலங்கை அரசியல் பரப்பில் உரையாடப்பட்டது.  எனினும் தற்போது இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினைகளுக்கு ராஜபக்ஸாக்கள் ஆட்சியின் எதேச்சதிகாரப்போக்கே காரணமென சுட்டிக்காட்டி மக்கள் ராஜபக்சாக்களுக்கு எதிராக வீதியில் இறங்கியுள்ளனர். அவர்களை அதிகாரத்தை விட்டு வெளியேறக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக காலிமுகத்திடலில் முகாமிட்டு போராட்டம் நடாத்தி வருகின்றார்கள். மே-09அன்று பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் காலிமுகத்திடல் போராட்டம் கலவரமாக மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஸா உடனடியாக தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். எனினும் மக்கள், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸாவும் பதவி விலக கோரி தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், கலவரத்தில் போராட்டக்காரர்கள் ராஜபக்ஸாக்களுக்கு வெளிப்படுத்தியுள்ள எதிர்வினைவுகளை நோக்கும் அரசியல் பார்வையாளர்கள் ராஜபக்ஸாக்களின் அரசியலை வர்ணிக்கும் தெமட்டகொட அரசியல் முடிவுக்கு வந்துள்ளதாக உரையாடப்படுகிறது.

இச்சமகாலத்தில் சர்வதேச அரசியலில் பிலிப்பைன்ஸில் 36ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதிகாரியாக மக்களால் நிராகரிக்கப்பட்ட பெர்டினாண்ட் மார்கோஸின் (மார்கோஸ் சீனியர்) மகன் பாங்பாங் மார்கோஸ் (மார்கோஸ் ஜூனியர்) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெளியிட்ட அறிவிப்பில், 'தனது குடும்பத்தின் கடந்த காலத்தை வைத்து தன்னை மதிப்பிட வேண்டாம்' என உலகைக் கேட்டுக்கொண்டுள்ளார். இது இலங்கையின் எதிர்காலத்திலும் இன்று நிராகரிக்கப்படுபவர்கள் நாளை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய வாய்ப்புகளும் உண்டு என்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது. இக்கட்டுரை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மார்கோஸ் ஜூனியரின் அரசியல் நகர்வுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மே-09அன்று பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி மற்றும் பிரதி ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. குறித்த தேர்தலில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான 17வது ஜனாதிபதியும், 17வது பிரதி ஜனாதிபதியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி தெரிவில் பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் சர்வதிகாரியான பெர்டினாண்ட் மார்கோஸின் ஒரேயொரு மகனான பொங்பொங் மார்கோஸிம் தற்போதைய பிரதி ஜனாதிபதி லெனி ரொப்ரெடோவும் முன்னிலை வகித்திருந்தனர். மே-11அன்று 98சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பொங்பொங் மார்கோஸ் 31 மில்லியன் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது நெருங்கிய போட்டியாளரான பிரதி ஜனாதிபதி லெனி ராப்ரேடோ சுமார் 14 மில்லியன் வாக்குகளையே பெற்றிருந்தார். இதனூடாக 1986ஆம் ஆண்டிற்கு பின்னரான தேர்தலில் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாக முறையே பொங்பொங் மார்கோஸ் மற்றும் லெனி ரொப்ரெடோல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், இத்தேர்தலூடாக மக்கள் அதிகாரப்புரட்சிக்கு பிறகு முதல்முறையாக மார்கோஸ் குடும்பம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது.

1986ஆம் ஆண்டில், மார்கோஸ் ஆட்சியின் மீதான பொதுக் கோபத்தால் பெர்டினாண்ட் மார்கோஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பிலிப்பைன்ஸிலிருந்து தூக்கி எறியப்பட்டு வெளியேற்றப்பட்டனர். 1965இல், பெர்டினாண்ட் மார்கோஸ் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று பிலிப்பைன்ஸின் 10வது ஜனாதிபதியாகி 1986 வரை 20ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்தார். அவரது 20 ஆண்டுகால ஆட்சியின் தொடக்கத்தில் வளர்ந்த பொருளாதாரத்திற்கு தலைமை தாங்கினார். அவரது முதல் பதவிக்காலம் அதிகரித்த தொழில்மயமாக்கல் மற்றும் வடக்கு லூசன் எக்ஸ்பிரஸ்வே மற்றும் மஹர்லிகா நெடுஞ்சாலை போன்ற நாடு முழுவதும் திடமான உள்கட்டமைப்புகளை உருவாக்கியது. வெளிநாட்டுக் கடனால் நிதியளிக்கப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு தீவிரமான திட்டத்தைத் தொடர்ந்தார். இது அவரது முதல் பதவிக்காலத்தில் அவரை பிரபலமாக்கியது. இருப்பினும் இது பணவீக்க நெருக்கடியைத் தூண்டி இரண்டாவது பதவிக்காலத்தில் சமூக அமைதியின்மைக்கு வழிவகுத்தது. மார்கோஸ் தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவதற்கு சற்று முன்பு, செப்டம்பர் 23, 1972அன்று பிலிப்பைன்ஸை இராணுவச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார். 1973இல் ஒரு மோசடியான வாக்கெடுப்பு மூலம் இராணுவச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. அரசியலமைப்பு திருத்தப்பட்டது. ஊடகங்கள் மௌனமாக்கப்பட்டன. அரசியல் எதிர்க்கட்சிகள், முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் சாதாரண குடிமக்களுக்கு எதிராக வன்முறை மற்றும் ஒடுக்குமுறை பயன்படுத்தப்பட்டது. அவரது ஆட்சியை 'அரசியலமைப்பு சர்வாதிகாரம்' என்று முத்திரை குத்தினார். 20ஆம் நூற்றாண்டின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான மார்கோஸின் ஆட்சி அதன் ஊழல், ஊதாரித்தனம் மற்றும் மிருகத்தனம் ஆகியவற்றால் பிரபலமடைந்தது. பாரிய ஏமாற்றுதல், அரசியல் கொந்தளிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் பிப்ரவரி 1986இல் மக்கள் அதிகாரப் புரட்சிக்கு வழிவகுத்தது. அது மார்கோஸை அதிகாரத்திலிருந்து நீக்கியது. அத்துடன் மார்கோஸ் குடும்பம் பிலிப்பைன்ஸிலிருந்தே துரத்தப்பட்டது.

நாடுகடத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மார்கோஸ் குடும்பம் மீள பிலிப்பைன்ஸிற்கு திரும்பியதுடன், உடனடியாக அரசியல் செயற்பாடுகளிலும் இணைந்து கொண்டனர். மார்கோஸின் மனைவி இமெல்டா மற்றும் மகள் இமி உட்பட அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் பிலிப்பைன்ஸுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அரசியல் அலுவலகங்களை வகித்துள்ளனர். இமெல்டா 1992இல் மீண்டும் வந்து ஒரு வருடம் கழித்து ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். அத்துடன் பாங்பாங் வெளிநாட்டில் இருந்த நேரத்தைத் தவிர்த்து, 23 வயதிலிருந்தே கிட்டத்தட்ட தொடர்ந்து பதவியில் இருக்கிறார். ஜனாதிபதி பதவியை வெல்வது என்பது அவர் வாழ்நாள் முழுவதும் தயாராகிக் கொண்டிருந்த ஒன்றாகவே காணப்படுகிறது. 

பாங்பாங்கின் அரசியல் நீண்ட வரலாற்றை கொண்டது. தந்தை மார்கோஸின் சர்வதிகார ஆட்சிக்காலத்திலே மாகாணங்களின் துணை ஆளுநர் மற்றும் ஆளுநர் பதவிகளை வகித்துள்ளார். 1980ஆம் ஆண்டில், 23 வயதான பாங்பாங் இலோகோஸ் நோர்ட்டின் துணை ஆளுநரானார். அந்த நேரத்தில் பிலிப்பைன்ஸை இராணுவச் சட்டத்தின் கீழ் ஆட்சி செய்த அவரது தந்தையின் கிலுசாங் பாகோங் லிபுனான் கட்சியின் கீழ் போட்டியின்றி அதிகாரத்தை பெற்றார். பின்னர் அவர் 1983இல் இலோகோஸ் நோர்ட்டின் ஆளுநரானார். மக்கள் சக்தி புரட்சியால் அவரது குடும்பம் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படும் வரை அந்த பதவியை வகித்தார். 1989இல் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ஜனாதிபதி கொராசன் அகினோவின் அனுமதியுடன் பிலிப்பைன்ஸுக்குத் திரும்பியவர், 1992 முதல் 1995 வரை இலோகோஸ் நோர்ட்டின் இரண்டாவது காங்கிரஸ் மாவட்டத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998இல் மீண்டும் இலோகோஸ் நோர்ட்டின் ஆளுநராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் 2007 முதல் 2010 வரை தனது முந்தைய பதவிக்கு திரும்பினார். பின்னர் 2010 முதல் 2016 வரை நேஷனலிஸ்டா கட்சியின் கீழ் செனட்டரானார். பாங்பாங் 2016 தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். 263,473 வாக்குகள் மற்றும் 0.64 சதவீத வித்தியாசத்தில், கேமரைன்ஸ் சுர் பிரதிநிதி லெனி ராப்ரெடோவிடம் தோல்வியடைந்தார். இதற்கு பதிலடியாக, ஜனாதிபதி தேர்தல் தீர்ப்பாயத்தில் தேர்தல் எதிர்ப்பை தாக்கல் செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களான நீக்ரோஸ் ஓரியண்டல், இலோய்லோ மற்றும் கேமரைன்ஸ் சுர் ஆகியவற்றின் பைலட் மறு எண்ணுதலின் விளைவாக, ராப்ரெட்டோ 15,093 கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.

2021இல், பாங்பாங் 2022 தேர்தலில் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக போட்டியிடுவதாக அறிவித்தார்.  2016ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவரையே முதன்மை போட்டியாளராக எதிர்கொண்டு பாங்பாங் வெற்றியை உறுதி செய்துள்ளார். இவ்வெற்றியின் பின்னால் பாங்பாங்கின் அரசியல் அரசியல் நகர்வுகளே பிரதான நிலை பெறுகிறது. மார்கோஸ் குடும்பம் கடந்தகால துஷ்பிரயோகங்களுக்கு மன்னிப்பு கேட்கவில்லை. அல்லது தேசிய பணப்பையில் இருந்து திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட புதையலை திரும்ப கொடுக்கவில்லை. பாங்பாங்க்கு எதிரான தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த கால குடும்ப குற்றச்சாட்டுகள் முதன்மை பெற்றிருந்தன. எனினும் முன்னைய மார்கோஸ் சகாப்தத்தின் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலுக்காக பிரச்சாரம் செய்த தரப்பினருக்கு பாங்பாங்கின் வெற்றி ஒரு அதிர்ச்சியூட்டும் அடியாகவே அவதானிக்கப்படுகிறது. 

பாங்பாங்கின் இவ்வெற்றிகளுக்கு பின்னுந்தலாக சமூக ஊடக செயற்பாடுகளே செல்வாக்கு செலுத்தியுள்ளதாக ஆய்வாரள்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். பாங்பாங் சமூக ஊடக பிரச்சாரத்தூடாக கடந்த காலங்களை மறுசீரமைத்துள்ளார். பழைய மார்கோஸ் சகாப்தத்தை இராணுவச் சட்டத்தின் காலம் என்று மறுபெயரிடுவதற்கு சமூக ஊடக பிரச்சாரம் இருந்தது. அதன் பயங்கரமான மனித உரிமை மீறல்கள், ஊழல் மற்றும் பொருளாதார சரிவு ஆகியவற்றுடன் குற்றமற்ற செழிப்பின் பொற்காலமாக அக்காலம் காணப்பட்டதாக சித்தரிக்கப்பட்டது. இது குறைந்தது ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொடங்கியது. நூற்றுக்கணக்கான ஏமாற்றும் வகையில் திருத்தப்பட்ட வீடியோக்கள் யுடியுப்பில் பதிவேற்றப்பட்டன. பின்னர் அவை அனுதாபமான பேஸ்புக் பக்கங்களில் மறுபதிவு செய்யப்பட்டன. மில்லியன் கணக்கான பிலிப்பைன்வாசிகளை, அவர்கள் வீழ்ச்சியடைந்த பின்னர் மார்கோஸ்களை இழிவுபடுத்துவது நியாயமற்றது என்றும், நிகரற்ற பேராசையின் கதைகள் உண்மையற்றது என்றும் அவர்கள் நம்ப வைத்தனர். 'இந்த வீடியோக்களில் பொய்கள் மற்றும் திரிபுகளின் ஸ்பெக்ட்ரம் உள்ளது' என்று பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக தகவல் தொடர்பு ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த பாத்திமா காவ் கூறுகிறார். 

எனவே, பிலிப்பைன்ஸின் அண்மைய வரலாறு இலங்கையருக்கும் எதிர்காலத்துக்கான பல செய்திகளை சொல்வதாகவே காணப்படுகின்றது. இவ்சர்வதேச அனுபவத்தினூடாக இலங்கையர்கள் தமது அரசியல் செல்நெறியை சரியாக நெறிப்படுத்துவார்களாயேனே கோட்டா கோ கம போராட்டக்காரர்களினதும், மைனா கோ கம போராட்டக்காரர்களினதும் போரட்ட வரலாறு எந்த திரிபுகளுமின்றி எதிர்காலத்தில் நிலைக்க வாய்ப்பாக அமையும். மாறாக எதிர்காலத்தை சரியாக நெறிப்படுத்த தவறுவார்களாயின் 36ஆண்டுகளின் பின் பிலிப்பைன்ஸில் சர்வதிகாரி மார்கோஸின் வாரிசுகளின் அரசியல் மீள துளிர் விட்டதுபோன்றே இலங்கையிலும் 2022இல் இளைஞர் போராட்டங்களால் விரட்டப்பட்டவர்கள் மீளவும் தங்களை புனிதர்களாக அடையாளப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை அலங்கரிப்பதற்கான வாய்ப்புகளே உருவாகக்கூடியதாகும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-