காலிமுகத்திடல் போராட்டமும் பழைய அரசியல் கலாசாரத்தின் நீட்சியும் மாற்றத்துக்கு வழிகோலுமா? -ஐ.வி.மகாசேனன்-
மார்ச் மாத(2022) இறுதியில் இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடியினை குறித்து அரசாங்கத்துக்கு எதிராக சாத்வீக வழியில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் மே-09(2022)அன்று கலவரமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையின் 74 ஆண்டு கால சுதந்திர அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக காலத்துக்கு காலம் தமிழ்-சிங்கள மற்றும் முஸ்லீம்-சிங்கள இனக்கலவரங்கள் இலங்கையின் அரசியல் பொருளாதார அமைதியை சீர்குலைத்துள்ளது. எனினும் மே-9 காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டு தென்னிலங்கை முழுமையாக வியாபித்துள்ள கலவரமானது, இலங்கையின் கலவர வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைகிறது. குறிப்பாக இக்கலவரம் சிங்கள மக்களிடையே வியாபித்துள்ளது. அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கும், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையிலேயே கலவரம் இடம்பெற்றுவருகிறது. இதனடிப்படையில் பாஸிச பேரினவாதத்திற்கு எதிராக ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி முற்போக்கானவர்களாக அடையாளப்படுத்தும் இளைஞர்கள் போராடுவது இலங்கையின் அடுத்த தலைமுறையின் மாற்றத்தை வெளிப்படுத்துவதாக உரையாடப்படுகிறது. இக்கட்டுரையும் காலிமுகத்திடல் கலவர சம்பவங்கள் வெளிப்படுத்தும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மே-09 அன்று பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷாக்கு ஆதரவாக ஒன்றுகூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டவர்கள், காலிமுகத்திடலில் 'கோட்டா கோ கம' போராட்ட திடலில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகள் மற்றும் நூலகங்களை எரித்தார்கள். குறித்த நிகழ்வு தொடர்பில் அங்கு இலங்கை தேசியக்கொடி விற்பனை செய்த பெண் ஒருவர் கூறுகையில், 'போரட்டம் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து இந்த இடத்தில் சிறியதாக ஒரு கடையை அமைத்து தேசிய கொடியை விற்று வந்தேன். வட்டிக்கு பணம் வாங்கியே இந்த தொழிலை செய்து வந்தேன். என் இரு பிள்ளைகளும் கணவரும் நானும் இங்கேதான் முழுநாளையும் கழித்து வந்துள்ளோம். சில நிமிடங்களில் இந்த இடம் முழுவதையும் அழித்து விட்டார்கள். காலில் விழுந்து கெஞ்சினேன். காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. பெற்றோல் ஊற்றி பார்த்துக்கொண்டிருக்கவே எரித்து சாம்பலாக்கி விட்டார்கள்' எனத்தெரிவித்துள்ளார்.
ஏப்ரல்-03ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட சாத்வீக போராட்டம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அமைதியாக இடம்பெற்று வந்தது. எனினும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் வன்முறையை தொடர்ந்து போராட்டம் கலவரமாக பரிணமித்தது. காலிமுகத்திடலில் மே-09அன்று மதியம் ஆரம்பமான கலவரம் அன்றைய தினம் இரவுக்குள்ளேயே தென்னிலங்கை முழுவதும் வியாபித்தது. அரசாங்கத்தின் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினாலும் கலவரத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. ஆரம்பத்தில் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களது வன்முறைகள் மேலோங்கி இருந்தாலும், விரைவில் தங்களை கட்டமைத்துக்கொண்ட போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை முழுநிர்வாணமாக்கி தாக்கினார்கள். அவர்களது பேருந்துகளை எரியூட்டினார்கள். மேலும், கலவரத்தின் போது காலிமுகத்திடலிற்கு வருகை தந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தாக்கப்பட்டிருந்தார். ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசாநாயக்காவும் கலவர களத்திற்கு வருகை தந்திருந்தார். அன்றைய தினம் இரவு அரச ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் வீடுகள் தென்னிலங்கையில் பரவலாக தீக்கிரையாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவின் பூர்வீக வீடு மற்றும் ராஜபக்ஷாக்களின் தந்தை டி.எம்.ராஜபக்ஷாவின் நினைவு இல்லம் மற்றும் அருங்காட்சியகம் சேதமாக்கி எரிக்கப்பட்டது. இவ்வாறாக போராட்டக்காரர்கள் வன்முறைக்கு வன்முறை ஊடான பதிலிலேயே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். முதல் நாள் செய்தி தகவல்களின் அடிப்படையில் குறித்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்பவர்கள் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
இலங்கையின் 74ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் முன்னரும் பல கலவரங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகளும் மிலேச்சத்தனமாக பதிவாகியுள்ளன. அவை, பெரும்பான்மையினத்தை சேர்ந்த பேரினவாத காடையர்களால் அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழர்கள் அல்லது முஸ்லீம்களே தாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது சொத்துக்களை சூறையாடியுள்ளார்கள். தீ வைத்துள்ளார்கள். ஆண்கள் பெண்கள் என்ற பாரபட்சமின்றி சிறியோர் முதல் பெரியோர் வரை முழுநிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தி கொலைசெய்துள்ளார்கள். எனினும் 2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் கலவரம் வேறுபடுகிறது. காலிமுகத்திடலிலும் பேரினவாத காடையர்களாலேயே அரசாங்கத்தின் ஆதரவுடனேயே கலவரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இம்முறை தாக்கப்படுபவர்களாகவும் சிங்களவர்களே காணப்படுகிறார்கள். ஆதலால் அரச இயந்திரம் தன் எஜமானர் சார்பான தளத்துக்கு ஆதரவு வழங்கி தாக்காது அதிகம் கலவரத்தை தவிர்த்துவிடும் உத்திகளையே கையாண்டார்கள். ஆதலாலேயே முன்னைய கலவரங்களுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்புக்களும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
ஆயினும், 2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் கலவரத்தில் அரசாங்கத்தின் ஆதரவு காடையர்களையும், அதை நிகழ்த்த தூண்டிய அரசியல்வாதிகளையும் போராட்டக்காரர்கள் தாக்கி பதிலடி கொடுத்த விதங்களை வைத்து, இலங்கையின் அடுத்த தலைமுறை புதிய மாற்றங்களை உள்வாங்குவதாகவும், கடந்த காலங்களில் பேரினவாத காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட இனவாத கலவரங்களின் இழப்புக்களையும் புரிந்து கொள்வார்களென சிலாகிக்கப்படும் அரசியல் உரையாடல்கள் பொதுவெளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்உரையாடல்கள் இலங்கையின் அரசியல் கலாசாரம் பற்றிய ஆழமான தேடல்கள் இடம்பெறவில்லை என்பதையே உறுதிசெய்கின்றது. வன்முறைகளத்தில் அமைதிவழி நிச்சயம் போராட்டக்காரர்களின் சேதங்களை அதிகரித்திருக்கும். ஆகவே அந்த களத்தில் எதிர்வன்முறை ஒன்று தேவையாகவே காணப்பட்டது. அதாவது மரங்களை வெட்டுவது தவறாயினும், காட்டுத்தீ பரவலை தடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட பரப்பில் மரங்களை வெட்டுவது காலத்தின் அவசியம். அதுபோன்றதே, காலிமுகத்திடலின் போராட்டக்காரர்களின் வன்முறை தவிர்க்க முடியாத தெரிவாக இருக்கலாம்;. எனினும் போராட்டக்காரர்களின் எதிர்வன்முறை மிலேச்சத்தனமாக கடந்தகால சிங்கள பேரினவாத தரப்பினரின் கலவரங்களின் வரலாற்று பாரம்பரியத்தையே 'அன்பின் போராட்டம்' என தம்மை அடையாளப்படுத்தி கொண்டவர்களும் தொடர்கின்றார்களா என்ற சந்தேகங்களையே கலவர நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றது. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகும்.
முதலாவது, போராட்டாக்காரர்கள் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை முழுநிர்வாணமாக்கி தாக்கியமை போராட்டக்காரர்களின் முற்போக்கு தோற்றத்தை கேள்விக்குட்படுத்துவதாக அமைகிறது. வன்முறைகளின் போது நிர்வாணப்படுத்தி அவமதிக்கும் இயல்பு சிங்கள பேரினவாதத்தின் கலவர வரலாற்றில் நீண்ட பாரம்பரியத்தை கொண்டுள்ளது. குறிப்பாக ஜே.வி.பி கலவரத்தின் போது 'கதிர்காமத்து அழகி' எனப்பட்ட பௌத்த பாட ஆசிரியையான பிரேமாவதி மனம்பெரியை சிங்கள அரசின் இராணுவ நடவடிக்கையில் நிர்வாணமாக்கியது. அவ்வறே 1983ஆம் ஆண்டு தமிழர்கள் மீதான கலவரத்தின் போது தமிழர் இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி சிங்கள வன்முறையாளர்கள் அவமதிக்கும் புகைப்படம் தற்போதும் இணையத்தளங்களில் காணப்படுகிறது. இவற்றை விட 2009ஆம் ஆண்டு யுத்தத்தில் சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் வக்கிரத்தையே பிரயோகித்தது. இராணுவத்திடம் சரணடைந்த பெண் போராளிகள், ஆண் போராளிகள் எனப் பலர் நிர்வாண நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. போராளிகள், மக்கள் அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு இராணுவம் சரணடைய வைத்ததை கவனத்தில் கொள்வது அவசியம். சிங்கள பேரினவாதிகளிடம் நிர்வாணப்படுத்தல் ஒடுக்குமுறையின் வலிமைமிக்க ஆயுதமாக தமிழ் இன அழிப்பில் பயன்படுத்தி வருகின்றனர். தமிழின அழிப்புக்கான நீதிக்கோரிக்கையில் நிர்வாணப்படுத்தலுக்கான நீதிக்கோரிக்கைகளும் உள்ளடங்கும். அவ்வாறான சூழலில் எதிர்கால இலங்கையின் புதிய அரசியல் கலாசாரத்தின் அடையாளங்களாக சித்தரிக்கப்படும் தரப்பினரும் தம் இனப்பாரம்பரரிய நிர்வாணப்படுத்தலை இரசிப்பவர்களாயின் அதனை எவ்வாறு புதிய அரசியல் கலாசார மாற்றமாக ஏற்பது என்பதில் சலனங்களே அறிவுத்தளத்தில் காணப்படுகிறது.
இரண்டு, கடந்த காலங்களில் சிங்கள முற்போக்கு இளையோர்களின் செயற்பாடுகள் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது எத்தகைய செயற்பாடுகளை பிரதிபலித்திருந்தது என்ற தேடலை தொகுக்கும் போதும் இன்றைய இளையோரின் முற்போக்குத்தனமான செயற்பாடாக அடையாளப்படுத்துபவையும் குறுகிய காலத்தில் நீர்த்துப்போகக்கூடியவையா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. அதாவது ஜே.வி.பி கலவரத்தின் போது அன்றைய அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கையூடாக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதே சிங்கள இராணுவம் 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் இலட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த போது அதனை வெற்றியாகவே சிங்கள சமூகம் கொண்டாடியது. அன்றைய சூழலில் முற்போக்கு இளையோர் கடந்த காலங்களில் தமது சிங்கள இராணுவம் சிங்கள இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்ய நிகழ்வுகளை ஒப்பிட்டு தமிழர்களின் துன்பங்களை உணராதவர்களாகவே இருந்தார்கள். சிங்கள இராணுவத்தினூடாக அதிக இளையோரை பலிகொடுத்த ஜே.வி.பியும் தமிழர்கள் சார்பாக, தமிழர்களின் துயரத்தில் பங்காளியாகவோ கலந்திருக்கவில்லை. தென்னிலங்கை பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களில் ஜே.வி.பியின் ஆதிக்கமே அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. காலிமுகத்திடல் கலவரத்திற்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தாக்கப்பட்ட அதேவேளை அநுரகுமார திசாநாயக்க தாக்கப்படாமை குறித்த போராட்ட இளைஞர்களின் பின்னணியில் ஜே.வி.பியின் ஈடுபாட்டை பல தரப்பினரும் சுட்டிக்காட்டுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மூன்றாவது, போராட்ட இளையோர் ஒப்பீட்டடிப்டையில் ஏனைய அரசியல் வடிவங்களிலிருந்து வேறுபடுபவர்கள் என்ற அடிப்படையில் நாளைய அரசியல் மாற்றத்தின் ஆரம்ப துளிர்களாக வரவேற்கப்படினும், அவர்களது சமூகமயப்படுத்தல் தொடர்பான அணுகுமுறைகள் அவர்களால் முழு சிங்கள சமூகத்தையும் மாற்றும் திறனை கொண்டுள்ளார்களா என்ற சந்தேகங்களையே உருவாக்குகிறது. கோட்டா கோ கம போராட்டக்களத்திலாயினும் சரி மைனா கோ கம போராட்டக்களத்திலாயினும் சரி பல்கலைக்கழக மாணவர்களினதும் நடுத்தரவர்க்கத்தினரது ஆதிக்கமே காணப்படுகிறது. அடித்தட்ட மக்களை ஈடுபடுத்தும் ஆரோக்கியமான உத்திகள் கடந்த ஒரு மாத காலத்திலும் மேற்கொண்டிருக்கவில்லை. இந்த அரகலயா (போராட்டக்களம்) என்று அழைக்கப்படுபவை, ஒரு பரந்த தேசிய ஐக்கிய முன்னணிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் கருவாகக் கொண்டு வழிநடத்தப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது பல ஆர்வங்கள், வகுப்புகள், சித்தாந்தங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் குறிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்படாத தளர்வானதாகும். இது ஒரு கடற்கரை திருவிழா போன்றது, இலவச நுழைவு மற்றும் விருப்பப்படி வெளியேறலாம். அரசியல் மாற்றங்களை வெளிப்படுத்துவதின் மையப்புள்ளிகளாக அடித்தட்டு மக்களே காணப்படுவார்கள். அரசாங்கங்களும் தங்கள் இனவாத அரசியலை அதிகம் அடித்தட்டு மக்களூடாக நகர்த்தியே பலப்படுத்தி வைத்துள்ளார்கள். வரலாற்றில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா 1950களில் தனது மேலெழுச்சிகாக பயன்படுத்திய இனவாதத்தால் அதிகம் கவரப்பட்டவர்களாக அடித்தட்டு மக்களே காணப்பட்டார்கள். குறித்த அடித்தட்டு மக்களிடம் ஏற்படுத்தாத அரசியல் கலாசார மாற்றம் எவ்விதத்திலும் பயனற்றதாகவே காணப்படும். எனவே, சிலாகிக்கப்படும் இளையோரின் அரசியல் மாற்றமும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுழலக்கூடியதாகும்.
எனவே, 2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் கலவரம் புதிய அரசியல் கலாசார மாற்றத்தை உருவாக்கப்போவதாக சிலாகிப்பது அதிக கற்பனைக்குள் மிதக்கும் செயலாக காணப்படும் என்பதே அறிவுத்தேடலுடையோர் பலரதும் கருத்தாக காணப்படுகிறது. மேலும், காலிமுகத்திடலில் உருவாக்கப்பட்ட கலவர முறைமையானது, இலங்கை அரச இயந்திரம் தன் வடிவத்தையும் எண்ணங்களையும் மாற்றவில்லை என்பதையும் உறுதி செய்கின்றது. 1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த தனிச் சிங்கள சட்டத்துக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் காலிமுகத்திடலில் நடத்திய அஹிம்சை அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் வன்முறையைக் கட்டவிழ்த்து கலைத்திருந்தது. இதன் பிரதிபலிபிலேயே கோட்டா கோ கம போராட்டத்திற்கு எதிராகவும் காலிமுகத்திடலில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவற்றில் போராட்ட இனங்களே வேறுபடுகின்றது. அரச இயந்திரம் மாறாத உத்தியையே பயன்படுத்தியுள்ளது. சிங்கள மக்களால் ஆதரிக்கப்பட்ட பாசிஸ அரசாங்கம் சிங்களம், தமிழ் இரண்டுமே தனக்கு எதிராக போராடுகையில் ஒரே உத்தியையே கையாளுகிறது. அரசாங்கங்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்துக்காகவே இனவாதத்தை முதன்மைப்படுத்துகிறார்களேயன்றி தமக்கு எதிராக மக்கள் போராடுகையில் எவ்வித பாராபட்சமுமின்றி மிலேச்சத்தனமான அடக்குமுறையையே பயன்படுத்துவார்கள் என்பதை 2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் கலவரம் உறுதி செய்கின்றது. இதனை சிங்கள இளையோர் மாத்திரமின்றி சிங்கள தேசம் முழுமையாக உணருகையிலேயே ஆரோக்கியமான அரசியல் கலாசார மாற்றத்தை எதிர்பார்க்கக்கூடியதாக காணப்படும்.
Comments
Post a Comment