அரசியல் பொருளாதார நெருக்கடியில் மகாசங்கங்களின் ஈடுபாடு; ராஜபக்ஷாக்களை பாதுகாக்கும் உத்தியா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி இலங்கையின் அரசியல் கலாசாரத்திலும் நேரிடையாக மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் முதன்மையானதாக இருந்து வந்துள்ளது. எனினும் காலிமுகத்திடலில் கூடியுள்ள இளைஞ்ஞரணி இனவாத ஆதிக்கத்தால் இலங்கையில் இடம்பெற்ற சீரழிவுகளை அடையாளப்படுத்துபவர்களாக காணப்படுகிறார்கள். குறிப்பாக, ஏப்ரல்-29அன்று 'கொடகோகம' போராட்ட தளத்தில் நிற்கும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் காலிமுகத்திடலில் உள்ள முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்காவின் கண்களை கறுப்புத்துணியால் மூடி கழுத்தில் கயிற்றை தொங்கவிட்டார்கள். அதனூடக சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக அளிக்கப்ட்ட அங்கீகாரத்தை சுட்டிக்காட்டி, இனவாதத்தின் ஆரம்ப கர்த்தாவாக பண்டாரநாயக்காவை அடையாளப்படுத்தி இளையோர் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்கள். இது பௌத்தத்தினூடாக அதிகாரத்தை தக்கவைத்துள்ள மகா சங்கங்களுக்கு பேரிடரை ஏற்படுத்துவதாகவே அமைகிறது. இதனை சுதாகரித்துகொள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப காலத்தில் அதிக மௌணத்தை வெளிப்படுத்திய மகா சங்கங்களும் தற்போது அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை முதன்மைப்படுத்தி உள்ளது. இக்கட்டுரை இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடியில் பௌத்த சங்கங்களின் தலையீட்டு விளைவுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்காக ஆறு யோசனைகளை முன்வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷhவுக்கு நான்கு பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் ஏப்ரல்-04அன்று கடிதம் அனுப்பியிருந்தனர். கூட்டு கடிதத்தில் மல்வத்து பிரிவின் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர், சியமோபாலி மகா நிகாய அஸ்கிரிய பிரிவின் கலாநிதி வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ ஞானரதாபிதான மகாநாயக்க தேரர், ஸ்ரீ கேளயநிவாஸவின் தொடம்பஹல சந்திரசிறி மகா நாயக்க தேரர், அமரபுர மகா நிகாய மற்றும் ராமண்ணா மகா நிகாயாவின் மகுலேவே விமலபிதான மகாநாயக்க தேரர் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர். குறித்த கடிதத்தில், அமைச்சரவையை கலைத்தல் மற்றும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது உள்ளிட்ட பல யோசனைகளை முன்வைத்திருந்தனர். எனினும் ஜனாதிபதி உரிய பதிலளிக்காத நிலையில், ஏப்ரல்-20(2022)அன்று மூன்று முக்கிய பௌத்த பிரிவுகளான மல்வத்து பீடம், அஸ்கிரிய பீடம் மற்றும் அமரபுர மகா நிகாயாவின் பிரதம பீடாதிபதிகள் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். குறித்த அறிக்கையில், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அரச தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களின் முன்மொழிவுகளை வெளிப்படுத்துமாறு பிரதம தேரர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் 20வது திருத்தத்தை நீக்கி 19வது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்படாவிடின், 'சங்க மாநாட்டை' பிரகடனப்படுத்துவோம் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர்.
சங்கப் பிரகடனம் எனப்படுவது சிங்களத்தில் 'சங்க ஆக்ஞாபய' என்று அழைக்கப்படுகிறது. ஆட்சியாளன் சரியானபடி ஆட்சி செய்யவில்லை என்றால் அந்த ஆட்சியை எதிர்த்து மகாசங்கம் ஒரு பிரகடனத்தை செய்யும். அப்பிரகடனத்தின்படி குறிப்பிட்ட ஆட்சியாளன் ஆட்சி செய்யும் தகுதியற்றவன் என்று கருதப்பட்டது. அதாவது, அந்த ஆட்சியாளன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மகாநாயக்கர்கள் அல்லது ஏனைய மகா சங்கத்தின் பிரதிநிதிகள் பங்குபற்ற மாட்டார்கள். பிக்குகள் பங்குபற்றும் மத நிகழ்ச்சிகளில் அந்த ஆட்சியாளன் பங்குபற்ற முடியாது. மேலும் பௌத்த விகாரைகளுக்குள் குறித்த ஆட்சியாளன் அனுமதிக்கப்பட மாட்டார். இச்செயற்பாடு ஆட்சியாளனை பௌத்த மதத்திலிருந்து நீக்குவதற்கு ஒப்பானதாகும். இப்பிரகடன நடைமுறை மன்னர்களின் காலத்தில் பிரயோகத்தில் இருந்த சிங்கள இலக்கிய குறிப்புகள் காணப்படுவதாக சிங்கள அறிஞர்கள் கூறுகிறார்கள்.
சங்கப்பிரகடனம் தொடர்பான கடுமையான அறிவிப்பிற்கு பின்னரே அரசாங்கம் ஓரளவு இடைக்கால அரசாங்க உரையாடல்களுக்கு முக்கியத்துவத்தை கொடுக்க தொடங்கியது. எனினும் செயற்பாட்டில் எவ்வித முன்னேற்றகரமான தன்மைகளும் காணப்படவில்லை. இந்நிலையிலேயே மல்வத்து பீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அரசியல்வாதிகளை சந்திக்க அனுமதிக்கப்போவதில்லை என தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியில் மகாசங்கத்தின் இறுக்கமான நடவடிக்கைகள் தொடர்பான உரையாடல்கள் இலங்கையின் தற்போதைய நவீன அரசியலில் புதிய விடயமாக சிங்கள அரசறிவியலாளர்களாலும் கூறப்படுகிறது. அதாவது அந்தளவுக்கு அரசியல் நெருக்கடி ஒரு விபரீதமான, பாரதூரமான வளர்ச்சியை அடைந்து விட்டது என்கதே அதன் பொருளாக அமைகிறது. மகா சங்கங்கங்களின் இறுக்கமான உரையாடல்களுக்கு காரணமாக அமையும் போராட்;டத்தின் தன்மையையும் மகா சங்கங்களின் உரையாடல்களுக்கு புறத்தே உள்ள நகர்வுகளையும் நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.
ஒன்று, இலங்கையின் இன்றைய நிலைமை அரசாங்கமற்ற நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகின்றது. காலிமுகத்திடலில் ஒரு நிலையான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப நாட்கள் முதல் அரசாங்கம் முழுமையாக தனது ஸ்திரத்தன்மையை இழந்துள்ளது. அதன் வெளிப்பாடே ஏப்ரல்-03அன்று இரவு அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்திருந்தமையும், அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்த 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்iதை விட்டு வெளியேறி சுயாதீனமாக இயங்க போவதாக கடந்த ஏப்ரல்-05அன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளமையும் அமைகின்றது. சுயாதீன அறிவிப்பை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களை மீள இணைத்து அமைச்சரவை உருவாக்கப்பட்ட போதிலும், அதன் ஸ்திரத்தன்மை தொடர்ச்சியாக கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது. அலிசப்ரி நிதியமைச்சராக பதவி நியமிக்கப்பட்ட மறுநாளே தனது அமைச்சுப்பதவியையும் பாராளுமன்ற தேசிய பட்டியல் உரிமையும் இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒப்படைத்தார். எனினும் தொடர்ச்சியாக நிதியமைச்சருக்கான பணிகளை செய்வதுடன் நீதியமைச்சையும் அலி சப்ரியே நிர்வாகித்து வருகின்றார். இது அரசாங்கத்தின் குழப்பகரமான சூழல்களையே வெளிப்படுத்துகிறது. இந்நிலையில் மகாசங்கத்தின் தலையீடாவது, அரசாங்கம் இல்லாத ஒரு நிலைமை என்பது அதன் தர்க்கபூர்வ விளைவாக சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை பலவீனப்படுத்திவிடும் என்ற அடிப்படையிலேயே காணப்படுகின்றது. அரசாங்கம் என்பது பெயரளவில் அதிகார அமைப்பாக வெளிப்பட்டாலும், இலங்கை வரலாறு தோறும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் பாதுகாவலராகவே அரசாங்கங்கள் செயற்பட்டு வந்துள்ளனர். அதிகாரபீடமாக மகாசங்கங்களே இருந்து வருகின்றன. அரசாங்கமற்ற நிலை மகா சங்கத்தின் அதிகாரத்திற்கும், சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் இருப்புக்கும் அச்சுறுத்தம் என்ற நிலையிலேயே மகா சங்கங்கள் இறுக்கமான உரையாடல்களுடன் களமிறங்கியுள்ளன.
இரண்டு, காலிமுகத்திடல் போராட்டம் போர் வெற்றிவாதத்தை மலினப்படுத்துவதாக அமைகின்றது. அதாவது, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது துட்டகைமுனுக்களாக போற்றப்பட்ட யுத்த வெற்றி நாயகர்கள் இன்று மிகவும் கேவலமான அவமதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ராஜபக்ஷhக்களின் அடையாளமாக சிவப்பு சால்வை காணப்படுகிறது. பூர்ணிமா ஜெயசிங்க என்றழைக்கப்படும் ஒரு ஓவியர் அன்மையில் அச்சிவப்பு சால்வையை கழிப்பறைப் பேப்பரில் வரைந்து வைத்திருந்தார். யுத்தவெற்றி நாயகர்களை அவமதிப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவாக யுத்த வெற்றியையும் அவமதிப்பதாக மாறக்கூடும் என்று மகாசங்கம் அச்சம் கொள்கிறது. யுத்த வெற்றி எனப்படுவது, அவர்களை பொறுத்தவரை சிங்கள பௌத்தத்திற்கு கிடைத்த வெற்றி. போர்வெற்றிவாதமும், சிங்கள பௌத்த மேலாதிக்கமும் ஒன்றோடொன்று இறுகப்பிணைந்தவையாகும். ஒன்றை பலவீனப்படுத்துவது மற்றையதையும் பலவீனப்படுத்தும் நிலைமையையே உருவாக்க கூடியதாகும். இந்த அச்சத்திலேயே மகா சங்கங்கள் அரசாங்கத்துக்கு எதிராக இறுக்கமான உரையாடல்களை முன்னகர்த்துகின்ற போதிலும் செயற்பாட்டு தளத்தில் நிதானமாக யுத்த வெற்றி நாயகர்களை பாதுகாக்கும் செயல்முறையையே மகாசங்கங்கள் செய்கின்றன. வரலாற்றில் மகா சங்கங்கள் தலையிடும் செயற்பாடுகள் உடனடியாக நிறைவேற்றப்படும் வரலாறுகளே காணப்படுகின்றது. தனிச்சிங்கள சட்டம் முதல் இன்றைய கொரோனா நெருக்கடியில் மகா சங்கத்தின் தலையீடு வரை சாட்சியமாகிறது. எனினும் அரசியல் பொருளாதார நெருக்கடியில் காலந்தாழ்த்தியே இணைந்த போதிலும், மகாசங்கங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சீரான பதிலாளிக்காத போதிலும் மகா சங்கங்கள் அரசாங்கத்துக்கு எதிரான இறுக்கமான செயற்பாடுகளினை முன்னிலைப்படுத்துவதில் தயக்கத்தையே வெளிப்படுத்தி வருவதையே அவதானிக்க முடிகிறது.
மூன்று, அரசியல் பொருளாதார நெருக்கடியில் மகா சங்கங்களின் தலையீடு காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆதரவுத்தளத்தை மறைப்பதற்கான செயலாகவே தோற்றமளிக்கிறது. காலிமுகத்திடலில் திரண்டுள்ள இளையோர் போராட்டம் முற்போக்கான விதத்தில் நகர்ந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, இனவாதத்துக்கு எதிரான கருத்துக்களும் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் ஏற்படுத்தப்பட்ட சீரழிவுகளும் வெளிப்படையாக உரையாடப்படுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அண்மையில் அரச இயந்திரத்தால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலளார்களுக்கு நீதிகோரி காலிமுகத்திடலில் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டத்தில் தமிழ் ஊடகவியலளார்களை இணைத்து கொண்டதோடு, இராணுவத்தால் இறுதிக்கட்ட போரில் மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படமும் காட்சிப்படுத்தியதுடன் இசைப்பிரியாவின் செயற்பாடுகளை நீதிசார்ந்ததாக சிங்கள இளைஞர் ஒருவர் கருத்துரைத்திருந்தார். சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புத்தான் மகா சங்கத்தை பாதுகாக்கின்றது. ஆனால் காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக போராடி வரும் இளைஞரணி அதே சிங்கள-பௌத்த உணர்வுகளை பின்பற்றுமா என்பதில் பெரும் சந்தேகங்கள் காணப்படுகின்றது. இந்நிலையிலேயே பௌத்த சங்கங்கங்களும் இளையோர் போராட்டம் செய்திப்பரப்பில் முதன்மை பெறுவதை மறைக்கும் விதத்தில் அரசாங்கத்தை மாற்றும் இளையோர் கோரிக்கைக்கு முரணாக இடைக்கால அரசாங்கத்தினை உருவாக்கும் கோரிக்கையுடன் மகா சங்கங்கள் போராட்டத்தை திசைதிருப்பி வருகின்றன.
எனவே, காலிமுகத்திடல் போராட்டம் ஏற்படுத்தியுள்ள அரசியல் கலாசார மாற்றத்தின் அச்சமே மகா சங்கங்களின் அரசாங்கத்துக்கு எதிரான இறுக்கமான உரையாடலுக்கு காரணமாகின்றது என்பதே ஆய்வாளர்களது பொதுவான பார்வையாக காணப்படுகின்றது. அதேநேரம் இறுக்கமான உரையாடல்களுடன் மட்டும் மகாசங்கங்கள் மட்டுப்படுவது சிங்கள பௌத்த அரச கட்டமைப்பையும் அதனோடு பிணைந்த யுத்த வெற்றிவாதத்தையும் பாதுகாப்பதனூடாக தங்கள் இருப்பை உறுதி செய்வதற்கான நகர்வாகவே வெளிப்படுகிறது. காலிமுகத்திடல் போராட்டமானது ஒரு சிறுதிரளெனிலும் அச்சிறுதிரள் முற்போக்காக நகர்வதையும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையிலேயே சிங்கள பௌத்த பேரினவாதம் காணப்படுகின்றது என்பதையே மகாசங்கங்களின் செயற்பாடுகள் உணர்த்துகிறது.
Comments
Post a Comment