பிரிட்டன் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில் பெற்ற வெற்றியை பிரதமர் ரணிலால் பெற இயலுமா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் ஆட்சி மாற்றம் எனும் விம்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. தேசிய பட்டியல் ஒரு ஆசனத்தினூடாக ஒரு வருடம் கழித்து பாராளுமன்றத்துக்குள் விஜயம் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுள்ளார். எனினும் ஏனைய எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவை வெளிப்படுத்திய போதிலும், தேசிய அரசாங்க உருவாக்கத்துக்குள் அமைச்சுப்பதவியை ஏற்க போவதில்லையென அறிவித்துள்ளார்கள். ஆதலால் ரணில் தலைமையில் உருவாக்கப்படும் அமைச்சரவையும் பொதுஜன பெரமுன அரசாங்கமாகவே கட்டமைக்கப்பட உள்ளது. எனிலும், மாற்றம் பெற்றுள்ள பிரதமர் பதவியினால் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி சீர்செய்யப்படுவதான விம்பம் அண்மைய நாட்களில் ஊடகப்பரப்பின் செய்திகள் உருவாக்க முனைகிறது. இக்கட்டுரை பிரதமர் மாற்றத்தால் ரணில் விக்கிரமசிங்காவினால் முன்னெடுக்கக்கூடிய அரசியல் நகர்வுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த மே-12அன்று(2022) நிறைவேற்றுத்துறை அதிகாரத்தினூடாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா ரணில் விக்கிரமசிங்காவை பிரதமராக நியமித்தார். இலங்கையின் அரசியலமைப்பு, நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைத் திரட்டும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  20வது திருத்தத்தின் அதிகாரம், செல்வாக்கற்ற ஜனாதிபதி, ஆளும் கட்சியின் ஆதரவையும் ஒப்புதலையும் பெற்றுக்கொண்டு, ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்கக்கூடியதாக இருந்தது. 1993ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது ஆறாவது தடவையாக கோட்டாபய ராஜபக்சவின் கீழ் பிரதமராக பதவி வகிக்கிறார். இங்குள்ள முரண்பாடு ஆழமான அவதானிக்க வேண்டியும் உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு 20வது சீர்திருத்தம் அமுல்படுத்துகையில் அதனை ஜனநாயக விரோதமாக பிரச்சாரப்படுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அச்சீர்திருத்தத்தின் விளைவினதாகவே இன்று இலகுவாக பிரதமர் பதவியை பெற்றுள்ளார். அத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களில் தேச நலனுக்கு விரோதமான துரோகி என்று ராஜபக்ச முகாம் கேலி செய்த அதே மனிதனை, இன்று தேசத்தை மீட்கக்கூடிய நம்பிக்கையாளராக பொதுஜன பெரமுன முகாமில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்கள். குறுகிய இரு வருட காலப்பகுதிக்குள் இரு தரப்பினரது பிரச்சாரங்களும் முற்றிலும் முரணாக மாறியுள்ளது. இது இவர்களின் கொள்கைகளை கேள்விக்குட்படுத்தக்கூடிய விடயமாகவே காணப்படுகின்றது.

ரணிலுக்கான பிரதமர் பதவி நியமனத்தினுள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் அடையாளமும் அதிக செல்வாக்கை பெற்றிருக்க கூடிய வாய்ப்புள்ளது. குறிப்பாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் அடையாளமானது கொழும்பின் மேல் மற்றும் நடுத்தர வர்க்க தாராளவாதிகள் என்பதாகவே காணப்படுகிறது. ரணிலின் அரசியல் கலாசார இயல்பும், மிக நீண்ட காலத்திற்கு முன்பு அவரிற்கு கொழும்பின் மேல் மற்றும் நடுத்தர வர்க்க தாராளவாதிகளின் அன்பையும் பாராட்டையும் பெற்றுக்கொடுத்தது. எனினும் 2020 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இந்த வகுப்பில் இருந்து அவர் பெற்ற மரியாதையை இழந்தார் என்பதையே உறுதி செய்கிறது. ஆனால் அவரது அடிப்படை அப்படியே உள்ளது. எனவே ரணிலின் அடிப்படை அரசியல் கலாசாரம் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தும் என்ற கணிப்புகளுக்குள்ளும் ராஜபக்ஷhக்கள் முகாம் சிந்தித்திருக்கும் என்ற எதிர்பார்க்கை அரசியலாய்வாளர்களிடம் காணப்படுகிறது.  எவ்வாறாயினும் தேசியவாத முகாமிற்குள்ளும், ரணிலை எதிர்ப்பவர்களின் மனதில், அவரே இப்போது இலங்கையின் கடைசி நம்பிக்கையாக மாறியுள்ளார்.

ராஜபக்ஷக்களினதும் அவர்களது முகாமினதும் நம்பிக்கையை பாதுகாக்கக்கூடிய வியூகங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கொண்டுள்ளாரா என்பதுடன் பொருளாதார மீட்பராக விளங்குவாரா என்பதை நுணுக்கமாக அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது.

ஒன்று, மேற்கு நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதில் ரணில் விக்கிரமசிங்காவின் நியமனம் பலமான சக்தியாக காணப்படும். அரசியல் துறையில் தனது போட்டியாளர்களை விட அவருக்கு அதிக அனுபவம் உள்ளது. அவரது மேற்கத்திய சார்பு மற்றும் வணிக சார்பு தனது போட்டியாளர்களிடமிருந்து ரணிலை வேறுபடுத்தி காட்டும் அடையாளமாகவே காணப்படுகின்றது. கடந்த மே-12 மாலை 6.30மணியளவில் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் நியமனத்தை பெற்ற சிறிது நேரங்களினுள்ளேயே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் ஜூலி சுங்கிடமிருந்து ஆரம்பகால வாழ்த்து ட்வீட் வந்திருந்தது. குறித்த ட்வீட்டில், 'ரணில் விக்கிரமசிங்கவுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம். பிரதமராக அவர் நியமனம், மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குவது ஆகியவை நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதல் படிகளாகும். அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஐஆகு மற்றும் நீண்ட கால தீர்வுகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.' எனக் குறிப்பிட்டிருந்தார். இது ரணிலின் நியமனம் தொடர்பான மேற்கு சார்ந்த சாதமான பதிலையே வெளிப்படுத்துகிறது.

இரண்டு, ரணிலின் நியமனம் மேற்கு சார்ந்து ஆரோக்கியமான எதிர்வினைவுகளை வெளிப்படுத்தியுள்ள போதிலும், பிராந்திய அரசான இந்தியாவிடமிருந்து எதிர்மறையான எதிர்விளைவுகளே ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் புவிசார் அரசியலில் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய அரசாக காணப்படுவதனால், இலங்கை மீது இந்திய தொடர்ச்சியாக நேரடி ஆதிக்கத்தை பேணுவதிலேயே அதிக விருப்பத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. எனினும் ரணில் விக்கிரமசிங்கா மேற்கத்திய சார்பு அரசியல் கலாசாரத்தை கொண்டவர் என்ற அடிப்படையில் இந்தியாவை தாண்டி மேற்குடன் நேரடியான உறவை பேணக்கூடியவர் என்ற பின்புலத்தில் ரணிலின் நியமனம் தொடர்பில் இந்தியா சலனப்பட்டுள்ளதையே இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளிலிருந்து உய்த்தறியக்கூடியதாக உள்ளது. குறிப்பாக கடந்த மே-14அன்று இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை, 'இலங்கை ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (டுவுவுநு) முன்னாள் போராளிகள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு மீண்டும் இலங்கையில் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.' எனும் செய்தியை பிரசுரித்துள்ளனர். இது பொதுஜன பெரமுனாவால் 2019-2020களில் ரணில் விக்கிரமசிங்க மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பலப்படுத்துவதாகவே அமைகிறது. இதனூடாக சிங்கள தேசியவாதிகளால் ரணில் நிராகரிக்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்க்கையுடன் குறித்த எச்சரிக்கை முன்வைக்கப்பட்டதா என்ற சந்தேகங்களும் அரசியல் ஆய்வுப்பரப்பில் காணப்படுகின்றது. 

மூன்று, இலங்கையின் அரசியல் கட்சிகள் யாவும் ஆளுங்கட்சியாயினும் சரி, எதிர்க்கட்சிகளாயிளும் சரி அரசியலமைப்புக்குள்ளே பயணிக்க முயலுகின்றனு. எனவே பிரதமர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுகையிலேயே தனது எண்ணங்களுக்குள் சுயாதீனமாக பயணிக்க முடியும்.  எனினும், சர்வதேச ஒத்துழைப்புக்களை உள்வாங்கக்கூடிய ஆற்றலுடைய ரணில் விக்கிரமசிங்காவால் இலங்கையின் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்று பயணிக்க முடியுமா என்ற சந்தேகங்கள் அதிகளவில் முன்வைக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் தனித்து ஒரு ஆசனத்தை கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கா தனது எண்ணங்களுக்கு ஏற்ப பயணிக்க விரும்பின் பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியின் சுயாதீன செயற்பாட்டை அறிவித்த பத்து கட்சிகளும் ரணிலுக்கு ஆதரவை வெளிப்படுத்திய போதிலும் அமைச்சுப்பதவியை ஏற்கப்போவதில்லை எனக்கூறியுள்ளமை அவர்கள் எதிராளிகளாக பாராளுமன்றத்தில் செயற்பட உள்ளமையையே உறுதி செய்கின்றது. எனவே ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்தினுள் மீளவும் பிரதமர் மாற்றப்பட்ட பொதுஜன பெரமுனாவை சார்ந்த உறுப்பினர்களே உள்வாங்கப்பட உள்ளார்கள். ஆயினும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்காவிற்கு கட்டுப்படக்கூடிய நிலைமைகளும் இல்லை என்பதே வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக கடந்த மே-17அன்று பிரதி சபாநாயகர் தெரிவில் ரணில் விக்கிரமசிங்க பெண் பிரதிநிதியை நிறுத்துமாறு பரிந்துரை செய்தார். எனினும் பொதுஜன பெரமுன அப்பரிந்துரையை நிராகரித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தியால் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளரையும் தோற்கடித்திருந்தனர். இது பிரமதர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு பாராளுமன்றத்தில் ஒத்துழைப்பின்மையையே உறுதி செய்கிறது.

நான்கு, அரசியல் பொருளாதார பிரச்சினையின் பிரதான காரணிகள் இலங்கையின் ஆள்புலத்தினுள்ளே (Internal) காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை அதிகம் இறக்குமதியில் தங்கியிருப்பதும், இலங்கையில் தொழில் முதலீடுகளற்ற நிலையில் உள்ளூர் உற்பத்தியற்ற நிலைமையுமே இலங்கையின் பொருளாதார சுமைக்கு பிரதான காரணமாகும். இலங்கையில் தொழில் பாதுகாப்பற்ற நிலைமையே தொழில் முதலீடுகள் மந்தகதியாக்கிறது. இனங்களுக்கிடையிலான பிளவுகள் அதனை மையப்படுத்திய போர்களும், கலவரங்களும் இலங்கையில் தொழில் முதலீட்டை ஏற்படுத்துவதில் அச்சத்தை உருவாக்குகிறது. எனவே தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் பொருளாதார நெருக்கடியாக அவதானிக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெறுகையிலேயே இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளையும் சீர்படுத்த இயலும். மாறாக வெளிநாட்டு கடன்களை அல்லது உதவிகளை பெற்று பொருளாதார பிரச்சினையை சீர்செய்ய முயல்வது தற்கால தீர்வாகவே அமையக்கூடியதாகும். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் பிரதமர் நியமனத்துக்கு பின்னரான தனது விசேட உரையில், வெளிநாட்டு நட்பு நாடுகளின் சாத்தியமான உதவிகளை சுட்டிக்காட்டிய போதிலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களைப் பற்றியும் அதற்கு அடிப்படையான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் மௌனமாகவே இருந்தார். இது ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினையை தனித்து பொருளாதார பிரச்சினையாக நோக்கி தற்காலிக தீர்வுடன் நகர முனைவதையே வெளிப்படுத்தி நிற்கிறது.

எனவே, தற்போதைய தருணத்தில் ரணில்தான் சிறந்தவர்களென நம்புபவர்கள், ரணிலில் மேற்கத்தைய சார்பு தோற்றத்தினூடாகவே அந்நம்பிக்கையை கட்டியெழுப்புகின்றார்கள். அந்த பார்வையில் தவறில்லை. எனினும் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு மேற்கத்தைய சார்பு தோற்றம் மாத்திரம் போதுமானதாக கருத முடியாது என்பதே நிதர்சனமாகும். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னரான ஊடகவியலளர் சந்திப்பொன்றில், 'சர்ச்சில் 1939இல் அவருக்கு ஆதரவாக நான்கு உறுப்பினர்கள் மட்டுமே கொண்டிருந்தார். அவர் எப்படி பிரதமரானார்? நெருக்கடி காரணமாக. நானும் அவ்வாறே செய்துள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய வரலாற்றை மிக ஆழமாகவே அறிந்து வைத்துள்ள போதிலும், இலங்கையின் அரசியல் கலாசாரத்தை அந்தளவு அறிந்து கொள்ளவில்லையா என்ற சந்தேகங்கள் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஒத்துழைப்பை பெறக்கூடியவராகின்ற போதிலும் பிராந்திய அரசினதும், உள்ளக அரசியல் ஒத்துழைப்பையும் பெறத்தவறுவாராயின், வழக்கற்றுப்போயுள்ள மைனா கோ காமாவுக்கு பதிலாக ரணில் கோ காமா தோன்றுவதற்கு அதிக காலம் தேவைப்படாது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-