காலிமுகத்திடல் போராட்டம் புரட்சிகரமான போராட்டமாக கொள்ள முடியுமா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பாக தீவு முழுவதும் மக்களிடம் அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தி காணப்படுகின்ற போதிலும், மக்கள் தங்கள் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த தவறியுள்ளார்கள். மக்களின்காலிமுகத்திடல் போராட்டம் புரட்சிகரமான போராட்டமாக கொள்ள முடியுமா? -ஐ.வி.மகாசேனன்- எதிர்வினைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் கொழும்பின் ஒருபகுதியினரும், பல்கலைக்கழக மற்றும் உயர்கற்கை மாணவர்களுமே போராட்ட களத்தில் களமிறங்கி உள்ளனர். காலிமுகத்திடலில் இடம்பெறும் கோதா கோ கம மற்றும் மைனா கோ கம போராட்டங்கள் அவ்வகையிலானதாகவே காணப்படுகின்றது. இப்போராட்டங்களை ஆதரிக்கும் தரப்பினர் காலிமுகத்திடல் போராட்டத்தை இலங்கையின் புதிய யுகத்திற்கான புரட்சியாக பிரச்சாரப்படுத்துகிறார்கள். எனினும் காலிமுகத்திடல் போராட்டம் புரட்சியின் இயல்புக்குள் பயணிக்கவில்லை என்ற வாதப்பிரதிவாதங்களும் பொதுவெளியில் உரையாடப்படுகிறது. இக்கட்டுரை காலிமுகத்திடல் போராட்டம் புரட்சிக்கான பரிணாமத்தில் பயணிக்கின்றதா என்ற தேடலை அடிப்படையாய் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31 அன்று, நுகேகொட ஜூபிலி சந்தியில் தொடங்கிய மக்கள் போராட்டம், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா தலைமையிலான அரசாங்கத்துக்கும் மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்கும் எதிராக பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தியது. இது வன்முறைக்கு நகர்த்தப்பட்டிருந்தமையும் அரசாங்கத்தின் இறுக்கமான நடடிக்கைகளும் ஏப்ரல்-03இல் திட்டமிடப்பட்ட காலிமுகத்திடல் பேரணியை ஏப்ரல்-09இல் 'கோதா கோ கம'வாக வடிவமைக்க காரணமாகியது. காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு 50நாட்களை அண்மித்து நகரும் கோதா கோ கம போராட்டமானது சாத்வீக போராட்டத்தின் முன்னேறிய தற்காலத்திற்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ள வடிவமாகும். 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டனில் உள்ள ஷூக்கொட்டி பூங்காவில் பொருளாதார வீழ்ச்சியால் விரக்தியடைந்த எதிர்ப்பாளர்களின் தளர்வான குழுவால் கட்டமைக்கப்பட்ட வால் ஸ்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தை(Occupy wall Street Movement) ஒத்த கட்டமைப்பாகவே காலிமுகத்திடல் கோதா கோ கம போராட்டமும் நெறிப்படுத்தப்பட்டு வருகிறது.
வால் ஸ்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம், வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட சதவீத செல்வந்தர்கள் சட்டமன்ற செயல்முறையை கட்டுப்படுத்த தேர்தல்களை விலைக்கு வாங்கி தமது ஜனநாயகத்தை சிதைத்ததாக குற்றம் சாட்டியது. போராட்டக்காரர்கள், 'நாங்கள் 99 சதவிகிதத்தினர்' என போராட்டத்தின் மைய கோஷமாக வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதுடன், 600க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்களிலிருந்து போராட்டக்காரர்கள் வந்து இணைந்தனர். ஒரே இரவில், இயக்கம் பொருளாதார சமத்துவமின்மையைச் சுற்றி ஒரு புதிய உரையாடலை உருவாக்கியது. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ஆக்கிரமிப்பை ஆதரிப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டியது. எனினும் வால் ஸ்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் எந்த ஒரு மையப்படுத்தப்பட்ட குழுவாலும் உருவாக்கப்படவில்லை அல்லது அது முறையான இயக்கத்தின் அமைப்பைப் பெற்றிருக்கவில்லை. இது ஒரு திறந்த மூல, கிடைமட்ட கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது. மேலும், பேராட்டக்காரர்கள் கூடாரங்கள், நூலகங்கள் என ஒரு குழப்பமான, வண்ணமயமான மற்றும் உற்சாகமான ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஒரு வருடங்களுக்கு மேலதிகமாக இடம்பெற்ற இப்போராட்டம், மக்களின் விருப்பத்தைப் பின்பற்றும் ஒரு புதிய ஜனநாயக மாதிரி இலக்காக அரசியல் பரப்பில் நோக்கப்பட்டது. இயக்கத்தின் முதல் நாட்கள் அதிக செய்திகளைப் பெறவில்லை என்றாலும், அது விரைவில் ஊடக வெறித்தனமாக மாறியது. சில ஊடகப்பரப்பில் அரபு வசந்தத்தின் முக்கியத்துவத்துடன் புரட்சிகரமானதாக ஒப்பிட்டு உரையாடப்பட்டது. எனினும் வால் ஸ்ரீட் ஆக்கிரமிப்பின் பத்தாண்டு நிறைவில் கட்டுரை எழுதியுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் இணை நிறுவனர் ஆசிரியர் மைக்கேல் லெவிடின், 'அதன் பின்னரான பத்தாண்டுகளில், செல்வ இடைவெளி மேலும் விரிவடைந்துள்ளது. விதிகள் மாறவில்லை. எங்கள் அமைப்பு உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மோசடியாகவே உள்ளது. ஆயினும்கூட, வோல் ஸ்ரீட் ஆக்கிரமிப்பின் பத்தாவது ஆண்டு நிறைவில், இந்த இயக்கம் நமது அரசியல் மற்றும் கலாச்சார நிலப்பரப்பில் நீடித்த, காணக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. இது ஒரு தலைமுறைக்கு பொருளாதார உரிமைகள், முற்போக்கான அரசியல் மற்றும் செயல்பாட்டினை மறுவரையறை செய்த எதிர்ப்பின் சகாப்தத்தைத் தூண்டியது' எனக்குறிப்பிட்டுள்ளார். இப்பின்னணியில், ஒரு தலைமுறையின் போராட்டம் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தாத வரலாறாக காணப்படுவது எவ்விதத்தில் புரட்சியாக அமையும் என்ற வாதப்பிரதிவாதங்கள் சர்வதேச அரசியலில் வால் ஸ்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் தொடர்பான சச்சரவுகளில் நிலைபெறுகிறது.
வால் ஸ்ரீட் ஆக்கிரமிப்பு மாதிரியை பின்பற்றி கட்டமைக்கப்ட்டுள்ள காலிமுகத்திடல் கோதா கோ கம போராட்டமும் வால் ஸ்ரீட் ஆக்கிரமிப்பு மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கனை ஒத்த விமர்சனங்களை சமகாலத்தில் எதிர்கொள்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல்-11அன்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவின் ஆதரவாளர்கள் காலிமுகத்திடலில் வன்முறையை கட்டவிழ்த்து கலவரமாக்கியதை தொடர்ந்தும் காலிமுகத்திடல் கோராட்டம் நீடிப்பதும், போராட்டத்தின் விளைவாக மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததும் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு புரட்சி வடிவம் கொடுக்கப்பட்டு உரையாடும் போக்கு காலிமுகத்திடல் போராட்ட ஆதரவு தரப்பிடம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் புரட்சிக்கான வடிவத்தை காலிமுகத்திடல் போராட்டம் கொண்டுள்ளதா என்பதை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியுள்ளது.
ஒன்று, புரட்சியானது ஒரு பகுதிக்குள் சுருங்குவதாக காணப்படாது. அது பரந்த அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு மக்களுக்கு அரசியலறிவு ஊட்டுவதனால் உருவாக்கப்படுகிறது. லெனின் புரட்சிக்கான நிபந்தனையை வரையறுக்கையில், 'அரசியல் கிளர்ச்சியின் அவசியமான விரிவாக்கத்திற்கான அடிப்படை நிபந்தனையானது விரிவான அரசியல் வெளிப்பாட்டின் அமைப்பாகும்.' என்கின்றார். எனினும், காலிமுகத்திடல் போராட்ட இயக்கம் போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கு பதிலாக குறுகிவிட்டது. மார்ச்-31இடம்பெற்ற வன்முறை தொடர்ந்து அரசாங்கம் ஊரடங்கு சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தை பிறப்பித்த போதிலும், ஏப்ரல்-03அன்று அரசாங்கத்திற்கு எதிராக தென்னிலங்கை முழுவதும் பேரணிகளும் போராட்டங்களும் அரச இயந்திரத்தின் தடைகளை மீறி இடம்பெற்றது. இவ்நாடு தழுவிய அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரத்தை மறுசீரமைப்பதற்கு பதிலாக, காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மிகவும் குறுகிய புவியியல் பகுதியான காலிமுகத்திடல் கடற்கரை மீது கவனம் செலுத்தியுள்ளனர். இது போராட்டத்தின் வலிமையையே குறைவடைய செய்துள்ளது. இதுதொடர்பில் கருத்துரைத்துள்ள சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் மோதல் தீர்வுத் துறையின் தலைவர் கலாநிதி. எஸ்.ஐ.கீதபொன்சலன், 'ஆக்கிரமிப்பு காலிமுகத்திடல் இயக்கம் எலிட்டிஸ்ட் பொழுதுபோக்காக மாறுகிறது. அதை உயர்தர நுழைவுச் செயலாக மாற்றுவதற்கு நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் உள்ளன. ஆபத்து என்னவென்றால், அது மற்றொரு வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கமாக மாறக்கூடும், இது உடனடி பரவசத்திற்குப் பிறகு சிதறியது.' எனக்குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு, லெனினின் கூற்றுப்படி, 'உறுதியான சூழ்நிலையின் உறுதியான பகுப்பாய்வு' என்பது அரசியலின் இருதயம். ஒரு புதிய சூழ்நிலை அல்லது மார்க்சிய சொற்களில் ஒரு புதிய சங்கமம் உள்ளது. மூலோபாய ரீதியாக சிந்திக்கும் எந்தவொரு கட்சியும் அல்லது அமைப்பும் அந்த உண்மையைப் புரிந்துகொண்டு அதை மாற்றுவதற்கு மாற்றியமைக்க வேண்டும். எனினும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் உறுதியான சூழல்களை கையாளும் திறன் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகிறது. மே-09 கலவரம் மற்றும் பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்காவிற்கு மாற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மீள் அமைவு பொத்தானை அழுத்தியுள்ளார். கலவரத்தின் பின்னான ஜனாதிபதியின் விசேட உரையில் 19ஆம் சீர்திருத்தத்தை மீள கொண்டுவருவதாக வாக்குறுதியளித்தமையும் அதனையே உறுதி செய்கின்றது. இப்பின்னணியில் போராட்டக்காரர்களும் தங்களை மீள் அமைவு செய்ய வேண்டும். எனினும், காலிமுகத்திடல் போராட்டம் மறுகட்டமைக்கப்பட்ட இலக்குக்கு எதிராக பழைய யுக்திகளுடன் போராடுவதையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மகிந்த ராஜபக்ஷாவின் இராஜினாமாவுடன் அரசியல் ரீதியாக வெற்றி பெற்ற மே-09 அன்று மத்தியப் பகலில் ஒரு பெரிய மூலோபாயப் போரில் வெற்றி பெற்றது. மே-09 நண்பகல் வெற்றிக்குப் பின்னர் மூலோபாயத் தவறு தொடங்கியது. அதுவே கலவரத்தில் பேர் உயிரிழப்பை ஏற்படுத்தியது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அந்த வன்முறையைச் செய்தது என்பதல்ல, ஆனால் நிகழ்நேர சமூக ஊடகங்களும் வெகுஜன ஊடகங்களும் அதற்குக் கிடைத்தாலும் அதைக் கண்டிக்கவில்லை. மேலும், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வருகைக்கு பின்னர், காலிமுகத்திடல் போராட்ட களத்துக்கு அளிக்கப்பட்ட அரச பாதுகாப்பானது, காலிமுகத்திடல் போராட்டத்தின் வலுவை மேலும் மலினப்படுத்தி வருகிறதென்பதே நிதர்சனமாகும்.
மூன்று, கட்டமைக்கப்படாத இயக்கத்தால் நீளும் போராட்டத்தை சீரான புரட்சியாக ஒழுங்கமைக்க இயலுமா என்பது பரவலான கேள்வியாக காணப்படுகிறது. வால் ஸ்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் தொடர்பான சச்சரவுகளில் கட்டமைக்கப்படாமையும் அது இலக்கை அடைய முடியாமைக்கு காரணமாக விமர்சிக்கப்படுகின்றது. வால் ஸ்ரீட் ஆக்கிரமிப்பு அதன் நோக்கம் எப்போதும் தெளிவற்றதாக இருந்தது. இது தலைவரற்றது. அமைப்பானது வருபவர்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டுமென்றே திறந்திருந்தது. இதனால் குழுவின் இறுதி நிலைப்பாடு பற்றி பல்வேறு உள் சண்டைகள் தோன்றியது. நியுயோர்க் டைம்ஸில் வால் ஸ்ரீட் ஆக்கிரமிப்பின் ஓராண்டு நிறைவில் எழுதப்பட்ட கட்டுரையில் கட்டுரையாசிரியர் தன் பார்வைக்கு எட்டியதாக ஒரு முரண்பாட்டை குறிப்பிட்டார். அதாவது, 'கூகுள் ஸ்ரீ யூத பில்லியனர்கள்' என்று எழுதப்பட்ட பலகையுடன் ஒரு எதிர்ப்பாளர் காணப்பட, மற்றொரு போராட்டக்காரர் ஓடிவந்து சுவரொட்டியைக் கிழித்தார். செய்திகள் மிகவும் கலவையாக மாறிவிட்டன எனக்குறிப்பிட்டுள்ளார். கட்டமைக்கப்படாத தற்காலிக ஆர்ப்பாட்டங்களை ஒரு நீண்ட கால மற்றும் ஐக்கிய அரசியல் இயக்கமாகத் தக்கவைக்க முடியுமா என்பதிலும், நீண்டகால மாற்றத்தை கொண்டு வர முடியுமா என்பதிலும் சந்தேகங்கள் காணப்படுமோர் சூழலில் அதனை புரட்சியாக வர்ணிப்பது மிகைப்படுத்தப்பட்டது என்பதையே உறுதி செய்கிறது.
எனவே, காலிமுகத்திடல் போராட்டம் புரட்சி தேவைக்கான சூழலில் உருவாக்கப்பட்ட போதிலும், புரட்சிக்குரிய திறனை வெளிப்படுத்த தவறியுள்ளது என்பதையே நிகழ்வுகளும் போக்குகளும் உறுதி செய்கின்றது. இலங்கையின் அரசியல் கலாசாரமும் புரட்சிக்கான சூழமைவை கட்டமைக்கவும் வரவேற்கவும் தவறுவதாகவே வரலாறு தோறும் பயணித்து வருகிறது. புரட்சிகர யதார்த்த அரசியல், அதாவது புரட்சி மற்றும் யதார்த்த அரசியலின் இணைவு, இது லெனினை ஒரு சிறந்த புரட்சியாளராக மாற்றியது. ஏனெனில் அவர் ஒரு சிறந்த யதார்த்தவாதியாக இருந்ததார். இது இலங்கை மக்களிடம் அல்லது இலங்கை இடதுசாரிகளில் நிரந்தரமாக இல்லாத நிலை இருந்து வருகிறது. இத்தொடர்ச்சி தன்மையே காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடமும் ஆபத்தான முறையில் உள்ளது.
Comments
Post a Comment