சர்வதேசத்தை இனப்பிரச்சினை தீர்வுவிடயத்தில் ஏமாற்ற முயலும் ரணில் அரசு! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய தலைவராக ஈழத்தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு தன்னை பிரச்சாரப்படுத்தும் அரசியல் நிகழ்ச்சி நிரலையே இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா முதன்மைப்படுத்தி வருகின்றார். குறிப்பாக இவ்வாண்டின் ஆரம்பத்தில் நடாத்தப்பட்ட நல்லிணக்கத்துக்கான சர்வகட்சி மாநாடாயினும் சரி, அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்புக்களும் அந்நிகழ்ச்சி நிரலின் ஓர் பகுதியாகவே கடந்த காலங்களில் அரசியல் ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதியின் பிரான்சிற்கான விஜயமும் ஜனாதிபதியின் சர்வதேச சமூகத்திற்கான பிராச்சார உள்ளடக்கங்களையே அதிகமாக கொண்டுள்ளது. ஜனாதிபதி கடந்த ஒரு வருடங்களில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அதிக பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ள போதிலும் நடைமுறையாக்கத்தில் இதுவரை எவ்வித முன்னேற்றங்களையும் அடையாளங்காண இயலாத நிலைமைகளே காணப்படுகின்றது. இந்நிலையில் இக்கட்டுரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்சிய பயணத்தில் முதன்மைப்படுத்தியுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டு இயலுமைகளை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச கோரிக்கை தொடர்ச்சியாக நிலுவையில் உள்ளமையையே ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், 'இலங்கையில், பொறுப்புக்கூறல் தொடர்பான சபையின் தீர்மானங்களின் அம்சங்களை அரசாங்கம் வருந்தத்தக்க வகையில் நிராகரித்த போதிலும், அது களத்தில் எங்களின் இருப்புடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளை நான் ஊக்குவிக்கிறேன்.' குறிப்பிட்டுள்ளார். மேலும், மனித உரிமைகளுக்கான துணை உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தனது வாய்மொழி அறிக்கையில், 'தேவையானது உண்மை, பரிகாரம், நினைவுச்சின்னம் போன்ற பல்வேறு கூறுகளை இணைக்கும் ஒரு ஒத்திசைவான திட்டமாகும்.' எனத்தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் இந்த கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தின் பதில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் போன்ற ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொறிமுறைகளுக்கு புதிய வடிவத்தினை கொடுப்பதாகும். அதனோர் பகுதியாகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் கடந்த வருட இறுதியில் வடக்கில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. மேலும், பகுதியளவில் வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மக்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன், காணாமல் போனோர் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் அடையாள இழப்பீடுகளை வழங்குவதில் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பங்கை அதிகரிப்பது மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிறுவுதல் புதிய அரசாங்கத்தில் பிரச்சார வடிவத்திலும் காணப்படுகின்றது. இப்பிரச்சாரத்தினையே ஜனாதிபதி பிரான்சிலும் முதன்மைப்படுத்தியிருந்தார். பிரான்ஸ் ஊடகமான 'குசயnஉந24'க்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாவின் யுத்தகால நடவடிக்கைகளுக்கு விசாரணை செய்வீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, 'எந்தக்குற்றச்சாட்டுக்களையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்க வேண்டும்' எனத்தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச விசாரணை என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்யுமா என்ற கேள்விக்கு, 'தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்' எனக்குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறல் பொறிமுறையினூடாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற கோரிக்கையையே முன்வைத்துவருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை முன்னெடுப்பதாக பிரச்சாரப்படுத்துவது சர்வதேசத்துடனான இணக்கத்துக்கான பதிலாகவே அமைகின்றது. இதனூடாக இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான சர்வதேசத்தின் தொடர் ஆதரவும் உறுதிப்படுத்தப்படுகின்றது. எனினும் ரணில் விக்கிரமசிங்கா பிரச்சாரப்படுத்தும் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் நடைமுறையாக்கங்களை அதன் சாத்தியப்பாடுகளை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, ரணில் விக்கிரமசிங்கா பொறுப்புக்கூறல் பொறிமுறையை அதிகம் வெறும் பிரச்சாரத்துடனேயே காலத்தை இழுத்தடிப்பு செய்வதனூடாக சர்வதேசத்துக்கு இணக்கமான பதில்களை வழங்கும் அதேவேளையில் தென்னிலங்கை விரும்பும் வகையில் செயலாற்றும் உத்தியையே கடந்தகாலங்களில் கையாண்டுள்ளர். 2015இற்கு முன்னைர் ராஜபக்ஷாக்கள் அரசாங்கம் சர்வதேசத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறையை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தனர். அதன்விளைவாக சர்வதேச ஆதரவை இழந்து நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் ரணில்-மைத்திரி அரசாங்கம், சர்வதேசத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறை தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க ஒப்புக்கொண்ட போதுதான், மீளவும் இலங்கை அரசிற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. பாதுகாப்புப் படை வீரர்களை பரிசோதித்தல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்புப் படையில் இருந்து நீக்குவது மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கேள்விகளை ஆராய சர்வதேச பங்கேற்புடன் சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது போன்ற பல பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. எனினும் குறித்த நான்கரை ஆண்டு கால ஆட்சியின் சர்வதேசத்துக்கு இணக்கமான பதில்களை வழங்குவதனூடாக சர்வதேச ஒத்துழைப்புக்கான கால நீடிப்பை பெற்றுக்கொண்டேதயன்றி, நடைமுறையில் வினைத்திறனான பொறுப்புக்கூறல் செயற்பாட்டை சாத்தியப்படுத்தியிருக்க முடியவில்லை. 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ரணில்-மைத்திரி அரசாங்கம் ஏமாற்றிவிட்டதாக தமித்தேசியக்கூட்டமைப்பின் பிரச்சாரமும் அதனையே உறுதிசெய்கின்றது. ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் பொய்மையான கட்டமைப்பு, தொடர்ச்சியாக வந்த பொதுஜன பெரமுன அரசாங்கத்தின்; வடக்கு-கிழக்கு மீதான கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறையின் மீளெழுச்சியில் அடையாளப்படுத்தப்பட்டது.
இரண்டாவது, அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான நீண்டகால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதும், தேசிய இறையாண்மையை சிதைக்கும் சர்வதேச பொறிமுறைகளை எதிர்ப்பதுமே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அரசியலமைப்பு, ஜனநாயகம் எனும் அரசியல் சித்தாந்தங்கள் மேற்குலகத்தால் தமது அரசியல் செல்வாக்கை நவகாலனித்துவமாக தொடர முழுஉலகிலும் நிலைநிறுத்தப்பட்ட பொறிமுறைகளாகும். எனவே அரசியலமைப்பினூடாக ஒரு விடயத்தினை உறுதிப்படுத்துகையில் சர்வதேச சமூகம் ஏற்று ஆதரவளிக்கும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்காவும் சர்வதேசத்திற்கான இணக்கமான பதிலை வழங்குவதாக, பொறுப்புக்கூறல் பொறிமுறையின் உள்ளடக்கங்களை 19வது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக அரசியலமைப்புக்குள் உள்வாங்கியிருந்தது. எனினும் 20ஆம் திருத்தம் மீள சில உள்ளடக்கங்களை அரசியலமைப்பிலிருந்தே நீக்கியது. அத்துடன் இலங்கை அரசியலில் அரசியலமைப்புரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பல விடயங்களும் அரசாங்கங்கள் தங்கள் நலனுக்காக புறமொதுக்கி செல்லல் நீண்ட வரலாற்றை பகிர்கின்றது. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரத்தின் போது நடைமுறையிலிருந்த சோல்பரி யாப்பின் சிறுபான்மையோர் காப்பீட்டை மீறி பிரஜாவுரிமை சட்டங்கள் உருவாக்கம், தனிச்சிங்கள சட்டம் உருவாக்கம் முதல் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் 13ஆம் சீர்திருத்தத்தில் உள்வாங்கப்பட்ட மாகாணசபை திருத்தச்சட்டத்தின் மாகாண அதிகாரங்கள் முழுமையாக இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படாமை என இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளிலிலிருந்து இலங்கை அரசியலமைப்பு வேறுபட்டதாகவே காணப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் அரசியலமைப்புரீதியாக பொறுப்புக்கூறல் பொறிமுறையை உள்வாங்கும் செயற்பாடுகள் சர்வதேசத்துக்கான பதிலாக மாத்திரமே அமையுமன்றி தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையப்போவதில்லை.
மூன்றாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஒருவருட காலப்பகுதியில் பல வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் மறுகணமே அதனை நிராகரிப்பதாவும் தவிர்த்து செல்வதுமாகவே தனது இருப்பை நகர்த்தி செல்கின்றார். குறிப்பாக கடந்த வருட இறுதியில் இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்னர் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறி 'நல்லிணக்கத்துக்கான சர்வகட்சி மாநாடு' என்ற பெயரில் இலங்கையின் அனைத்து கட்சிகளையும் ஒன்றாக அழைத்து மாநாட்டை நிகழ்த்தினார். தொடர்ச்சியாக தமிழ்க்கட்சிகளுடனான பேச்சுக்கு அழைப்பு விடுத்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையும் நடாத்தியிருந்தார். எனினும் தீர்வுக்கான எவ்வித முன்னாயர்த்தமுமின்ற பேச்சுவார்ததை இடைநிறுத்தப்பட்டது. மீள கடந்த மே மாதம் மீளவும் தமிழ்க்கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கான அழைப்பும் பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது. எனினும் நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதியினால் இலங்கை அரச திணைக்களங்கள் வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளும் நில ஆக்கிரமிப்புக்களையோ அல்லது பௌத்தமயமாக்கலையோ தடுத்து நிறுத்த இயலாத நிலையிலேயே காணப்படுகின்றார். ஜூன் முன்னரைப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்காவின் தமிழ்ப்பௌத்த கூற்றும் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான கருத்தும் சமுக வலைத்தளங்களில் அதிக பகிர்வை பெற்றிருந்தது. எனினும் தென்னிலங்கையில் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பை தொடர்ந்து ஜனாதிபதி குருந்தூர் மலைச்சூழலில் தமிழ் மக்களின் காணிகளை பகிருமாறு தெரிவித்த தனது கருத்திலிருந்து பின்வாங்கி எவரையும் அச்சூழலை வழங்கப்போவதில்லையென தெரிவித்திருந்தார். ரணில் விக்கிரமசிங்கா கடந்த ஒருவருடமாகவும் தனது ஜனாதிபதி பதவியை இவ்வாறே பாதுகாத்து வருகின்றார். இதில் ரணில் விக்கிரமசிங்காவிற்கான பாராளுமன்ற ஆதரவு தளத்தையும் அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது. ரணில்-மைத்திரி அரசாங்க காலப்பகுதியில் தனது ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 ஆசனங்களை வைத்திருந்தும் நிலையான பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்க முடியவில்லை. இந்நிலையில், ஒரு பாராளுமன்ற ஆசனத்துடன் இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வை உருவாக்கும் வல்லமை ரணில் விக்கிரமசிங்காவிடம் காணப்படுகின்றதா என்பதை யதார்த்தபூர்வமாக சிந்திக்க வேண்டும்.
நான்காவது, ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை பற்றிய உரையாடல்களில் அதிகம் தென்னாபிரிக்காவினை முதன்மைப்படுத்துவதுண்டு. கடந்த காலங்களில் பிரதமராக இருந்த காலப்பகுதியில் தென்னாபிரிக்க மாதிரியில் மறப்போம் மன்னிப்போம் என்ற அறைகூவலை கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுத்திருந்தார். தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை தென்னாபிரிக்க மாதிரியில் உருவாக்குவதாக தெரிவித்து வருகின்றார். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் குழு, இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தினை முன்னெடுப்பது குறித்து தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் மோதலுக்கு பின்னரான காலப்பகுதி என்பதில் இலங்கையும் தென்னாபிரிக்காவும் மாறுப்பட்ட அனுபவங்களை பகிருகின்றமை ஆழமான கவணத்திற்குரியதாகும். தென்னாபிரிக்காவில் ஒடுக்கப்பட்ட சமூகமே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாக மாறியுள்ளார்கள். அதன் பின்னணியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவரே ஆட்சியதிகாரத்தில் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கமோ உண்மை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளோ வடிவமைக்கப்பட்டிருந்தது. எனினும் இலங்கையில் ஒடுக்கப்பட்ட சமூகம் ஆயுத வடிவிலான இனவழிப்புக்கு பின்னரும் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை எதிர்கொண்டு வருகின்றது. கடந்தகாலத்தின் தொடர்ச்சியே இலங்கையில் காணப்படுகின்றது. இவ்வாறான அனுபவத்தில் கடந்த காலத்தை எவ்வாறு கையாள்வது என்பதற்கு இலங்கைக்கு தென்னாபிரிக்கா மாதிரி பொருத்தமற்றதாகும்.
ஐந்தாவது, தமது சமூகத்தின் மனிதப்படுகொலைகளுக்கே உரிய நீதியை வழங்காத இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் சமூகம் எவ்வாறு நீதியை எதிர்பார்ப்பது என்பதுவும் முரணான சந்தேகமாகவே காணப்படுகின்றது. சர்வதேசத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கான நீதியை கோரிவரும் நிலையில், 1970களில் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது அன்றைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரமும் சமகாலத்தில் பேசுபொருளாகியுள்ளது. இலங்கையில் ஐந்து முன்னணி சிவில் சமூக அமைப்புகளால் இலங்கையில் இடம்பெற்ற பாரிய புதைகுழிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான கடந்தகால விசாரணைகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிவில் சமூக ஆர்வலர் பிரிட்டோ பெர்னாண்டோ, நீண்டகாலமாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தொடர்பில் கரிசணையை வெளிப்படுத்தி வருகின்றார். அவர் மனித புதைகுழிகள் பற்றி குறிப்பிடுகையில், 'மூன்று தசாப்தங்கள் மற்றும் இருபது தடவைகள் தோண்டியெடுக்கப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு சில உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான உடல்கள் தீவு முழுவதும் ஆழமற்ற புதைகுழிகளில் கிடப்பதை நாம் அனைவரும் அறிவோம், எனவே இந்த மோசமான முன்னேற்ற விகிதத்தை துரதிர்ஷ்டம் என்று விவரிக்க முடியாது - இது தெளிவான அரசியல் விருப்பமின்மை.' எனத்தெரிவித்துள்ளார். இவ்அனுபவத்தில் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கும் ஆட்சியாளர் சமூகத்தின் தென்னாபிரிக்க மாதிரியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஜே.வி.பி கிளர்ச்சியின் படுகொலைக்கே பயனுடையதாகும்.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு பற்றிய உரையாடலின் இறுதி வடிவமும் உரையாடலிலேயே காணப்படக்கூடியதாகும். மாறாக நடைமுறையாக்கத்துக்கான எவ்வித முன்னேற்பாடுகளையும் கொண்டிருப்பதில்லை. சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை தொடரும் நோக்குடன் சர்வதேசத்துக்கான இணக்கமான பதிலை வழங்கும் உத்தியை ரணில் விக்கிரமசிங்கா நேர்த்தியாக கையாண்டு வருகின்றார். கடந்த காலங்களில் இலங்கையின் ஆட்சிப்பங்காளராக வந்த சந்தர்ப்பங்களில் அவ்வாறானதொரு உத்தியினூடாகவே இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச நெருக்கடிகளை நீர்த்துப்போக செய்ததுதடன், தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை பூச்சாண்டியாகவே இழுத்தடிப்பு செய்திருந்தார். அதனையே சமகால நிகழ்ச்சி நிரலிலும் முதன்மைப்படுத்துகின்றமையையே அவரது உரையிலும் செயலிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
Comments
Post a Comment