ஜனநாயக மறுசீரமைப்புக்கு வழிகோலுமா இஸ்ரேல் வசந்தம்! -சேனன்-
20ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து மேற்காசியாவின் அரசியலின் அமைதியின்மைக்கு காரணமான இஸ்ரேல் இன்று உள்நாட்டு போருக்கு ஏதுவான சூழலில் பயணிக்கின்றது. இஸ்ரேலின் அரசியல் ஸ்திரமற்ற சூழல் தீவிர வலதுசாரிகளின் கூட்டணி அரசியலை உருவாக்கியுள்ளது. இக்கூட்டணி இஸ்ரேலின் அரசியலை மேற்காசியாவின் ஜனநாயகம் பலவீனமான அரசியல் இயல்புக்குள் நகர்த்தி செல்கின்றது. குறிப்பாக அரசாங்கக் கொள்கைகளின் உச்ச நீதிமன்ற மேற்பார்வையை கட்டுப்படுத்தும் இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் புதிய சட்டம், ஆழமடைந்துவரும் சமூகப் பிளவுகள் மற்றும் சாத்தியமான ஜனநாயக பின்னடைவு குறித்து இஸ்ரேலியர்களிடையே எச்சரிக்கையை எழுப்பியுள்ளது. இவ்எச்சரிக்கை மக்களை இஸ்ரேல் வீதிகளில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு திரட்டியுள்ளது. அரசியல் அவதானிகள் 'இஸ்ரேலின் வசந்தம்' என அண்மைய இஸ்ரேலியர் போராட்டங்களை கோடிட்டு காட்டுகின்றனர். இக்கட்டுரை இஸ்ரேலிய அரசாங்கத்தின் நீதித்துறை திருத்தத்தின் போக்கினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பாராளுமன்றமான நெசெட், நாட்டின் நீதித்துறை அமைப்பின் திட்டமிடப்பட்ட மறுசீரமைப்பின் முதல் பகுதியை கடந்த ஜூலை-24அன்று நிறைவேற்றியுள்ளது. 'நியாயமான மசோதா' என்று இஸ்ரேலிய அரசாங்கத்தால் பெயரிடப்பட்டுள்ள புதிய நீதித்துறை மறுசீரமைப்பு, நியாயமற்றதாகக் கருதும் அரசாங்க முடிவுகளை இரத்து செய்யும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நீக்கி சட்டமாக்கியது. அரசாங்கக் கொள்கைகளை மதிப்பிடுவதற்கு இஸ்ரேலின் உச்ச நீதிமன்றம் பயன்படுத்திய 'நியாயக் கோட்பாட்டை' ஒழிக்கும் சட்டத்தை இஸ்ரேலின் பாராளுமன்றம் இயற்றியுள்ளது. நீதித்துறையில் நியாயக் கோட்பாடு பரவலாக ஜனநாயக நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறையாகும். கோட்பாடானது, கொடுக்கப்பட்ட அரசாங்கக் கொள்கை விவேகமானதா மற்றும் சரியானதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எடுத்துக்காட்டாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஷாஸ் கட்சித் தலைவர் ஆர்யே டெரியை நிதியமைச்சராக நியமித்தபோது, இலஞ்சம், மோசடி, அத்துமீறல் போன்ற முந்தைய குற்றச்சாட்டுகளின் காரணமாக, நியாயமான கோட்பாட்டின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் அவர் பதவியில் பணியாற்றத் தகுதியற்றவர் என்று தீர்மானித்தது. இப்போது இஸ்ரேலின் பாராளுமன்றம் இந்த வகையான நீதித்துறை மேற்பார்வையை சாத்தியமற்றதாக்கியுள்ளதால், டெரி ஒரு அமைச்சராகலாம் எவ்வித தடையும் காணப்படாது. இத்தகைய மறுசீரமைப்பு பகுதியே ஜூலை-24அன்று இஸ்ரேலிய சட்டமன்றத்தில் சட்டமாக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக நீதிபதிகள் நியமனம் தொடர்பான சட்டத்துறையின் ஆதிக்கம் என்பன தொடர்ச்சியாக இவ்வருட இறுதிக்குள் சட்டமாக்கப்படுவதே இஸ்ரேலிய நீதித்துறை மறுசீரமைப்பின் முழுவடிவமாக காணப்படுகின்றது.நீதித்துறையின் மறுசீரமைப்பு பற்றிய உரையாடல்களை வலதுசாரி கூட்டணி ஆரம்பித்த இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, அரசாங்கத்தின் சீர்திருத்தத் திட்டங்களை எதிர்த்து மக்களால் மாபெரும் வாராந்திரப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் குவிந்துள்ள நிலையில், போராட்டங்களின் அளவு அதிகரித்துள்ளது. பல இஸ்ரேலியர்களின் பார்வையில், அவர்களின் நீதித்துறை பலவீனமான அரசியல் அமைப்பில் அரசாங்க அதிகாரத்தின் மீதான உண்மையான சோதனைகளில் ஒன்றாகும். நீதித்துறையை தீவிரமாக மாற்றும் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் உந்துதலுக்கு எதிராக சமீபத்திய மாதங்களில் லட்சக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தெருக்களில் இறங்கினர்.
இஸ்ரேல் வலதுசாரி அரசாங்கத்தின் நீதித்துறை மறுசீரமைப்பு, அதன் ஆதரவாளர்களின் பார்வையில், நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை அளிக்கிறது. ஆனால் இஸ்ரேலிய எதிர்ப்பு மற்றும் பல்வேறு மேற்கத்திய அரசாங்கங்கள் உட்பட ஆய்வாளர்கள் மற்றும் விமர்சகர்கள், இஸ்ரேலிய ஜனநாயகத்தில் இருக்கும் சில உண்மையான சோதனைகளில் ஒன்றிற்கு இது ஒரு பெரிய அடியாகவும், பெரும்பான்மையான எதேச்சதிகாரத்தின் ஒரு வடிவத்தை நோக்கிய கடுமையான படியாகவும் பார்க்கின்றனர். 'இஸ்ரேலிய வாக்காளர்கள் நிச்சயமாக பரிணாம மாற்றத்திற்கு தகுதியுடையவர்கள், ஆனால் நீதித்துறை சீர்திருத்தம் பற்றிய தற்போதைய கருத்துக்கள் அவற்றின் தாக்கங்களில் புரட்சிகரமானவை' என்று மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தில் மத்திய கிழக்கு திட்டத்தின் இயக்குனர் ஜான் பி. ஆல்டர்மேன் குறிப்பிட்டார். நீதித்துறை மறுசீரமைப்பினூடாக இஸ்ரேலிய ஜனநாயக அச்சுறுத்தலை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியது அவசியமாகின்றது.
ஒன்று, கட்டுப்பாடற்ற சட்டமன்றம் எந்த ஜனநாயகத்தையும் தடையற்ற நிர்வாகத்தை அச்சுறுத்துகிறது. இஸ்ரேல், எழுதப்படாத அரசியலமைப்பை கொண்ட நாடாகும். இஸ்ரேலின் சட்டமன்ற அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்போ, செனட்மோ, கூட்டாட்சி அமைப்பு மாதிரியோ மேலும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தில் வேறு எந்த சோதனைகளுமோ காணப்படுவதில்லை. உச்சநீதிமன்றத்தின் நியாயக் கோட்பாட்டின் பயன்பாடே இஸ்ரேலின் சட்டமன்ற எதேச்சதிகார இயல்பை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக இதுவரை நடைமுறையில் இருந்தது. அதன்விளைவாகவே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் விசாரணைகளை துணிவாக மேற்கொண்டிருந்தது. மேலும், வலதுசாரி அரசாங்க உருவாக்கத்தின் போது ஊழல் குற்றவாளியும் நெதன்யாகுவின் நெருங்கிய கூட்டாளியான ஆர்யே டெரிக்கு வழங்கப்பட இருந்த நிதி அமைச்சு பதவியை தடை செய்தது. எனினும் கடந்த ஜூலை-24ஆம் திகதி இயற்றப்பட்ட நீதித்துறை மறுசீரமைப்பின் ஒரு பகுதியான சட்டத்தின் மூலம், உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டைப் பெற சட்டமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் சட்டமன்றத்தின் எதேச்சதிகாரத்தை மட்டுப்படுத்தும் எந்த பொறிமுறையும் இஸ்ரேலில் இனி அடையாளங்காண முடியாது. வலதுசாரி கூட்டணி உறுப்பினர்கள் ஏற்கனவே முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பெண்கள், டுபுடீவுஞ மக்கள் மற்றும் மதச்சார்பற்ற மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் பல சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முன்மொழிந்துள்ளனர். உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இதுவரை முன்மொழிவுகளாக இருந்த பல சட்ட ஏற்பாடுகளும் இனி இலகுவாக சட்ட அந்தஸ்தை பெறக்கூடியதாக உள்ளது. இது சட்டமன்ற சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிடக் கூடியதாக அமையும்.
இரண்டு, இஸ்ரேலிய நீதித்துறை மறுசீரமைப்பு பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் உயரளவிலான அடக்குமுறையை அனுமதிக்கும் சூழலை உருவாக்கக்கூடியதாகும். தற்போதைய இஸ்ரேலிய தீவிர வலதுசாரி அரசாங்கம் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையை வியத்தகு முறையில் மாற்றக்கூடும். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை முழுமையாக இணைக்க வேண்டும் என்று ஆளும் கூட்டணியைச் சேர்ந்த சிலர் அழைப்பு விடுத்துள்ளனர். இஸ்ரேலின் பாலஸ்தீனிய குடிமக்களின் உரிமைகளை ஆதரிப்பதில் உச்ச நீதிமன்றம் சில சமயங்களில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. மறுசீரமைப்பு அதனை முழுமையாக தவிர்ப்பதாக அமைய உள்ளது. இஸ்ரேலின் நீதி அமைச்சர் யாரிவ் லெவின் நீதித்துறை மறுசீரமைப்பை நியாயப்படுத்துகையில', 'கலிலியில் உள்ள யூத சமூகங்களில் அரேபியர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குகிறார்கள். இதனால் யூதர்கள் இந்த நகரங்களை விட்டு வெளியேறுகிறார்கள். ஏனெனில் அவர்கள் அரேபியர்களுடன் வாழத் தயாராக இல்லை. உச்சநீதிமன்றத்தில் இதைப் புரிந்துகொள்ளும் நீதிபதிகள் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.' எனத்தெரிவித்துள்ளார். நெதன்யாகுவும் அவரது கூட்டாளிகளும், இஸ்ரேலிய அரசின் கொள்கைகள் இனவெறி கொண்டது என்பதையும், அதைத்தான் தாங்கள் பின்பற்றுகிறார்கள் என்று அடிக்கடி வெளிப்படையாகக் கூறுகிறார்கள். 'நீதிபதிகளைக் கட்டுப்படுத்துவது சில சூழல்களில் யூத மேலாதிக்கத்தைப் பாதுகாக்க அல்லது மேலும் அதிகரிக்க உதவும்' என லெவின் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். அத்துடன் பிரபல இஸ்ரேலிய அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான பராக் ராவிட் நீதித்துறை மறுசீரமைப்பின் ஆபத்து பற்றி குறிப்பிடுகையில், 'அரபு அரசியல்வாதிகள் இஸ்ரேலிய தேர்தல்களில் போட்டியிட முடியாத வகையில் சட்டங்களை இயற்றுவதற்காக உச்ச நீதிமன்றத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் விரும்புகிறது என்று பலர் நம்புகிறார்கள். அரேபியர்கள் போட்டியிடவில்லை என்றால், இஸ்ரேலின் 20சதவீத அரேபிய வாக்காளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படாவிட்டால், அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் வாக்களிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சியால் இன்னொரு தேர்தலில் வெற்றிபெற முடியாது.' எனத்தெரிவித்துள்ளார். இது அரேபியர்களை மாத்திரமின்றி இஸ்ரேலிய ஜனநாயக தேர்தலுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.
மூன்று, இஸ்ரேலியர்களின் ஜனநாயக பாதுகாப்பு போராட்டம் ஜனநாயக மறுசீரமைப்பின் தேவைப்பாட்டை வலியுறுத்துவதாக அமைகின்றது. இஸ்ரேலின் அரசியல் ஸ்திரமற்ற சூழலில் உருவாக்கப்பட்டுள்ள ஆளும் கூட்டணி தீவிர வலதுசாரி கட்டமைப்பு என்ற ரீதியில், இஸ்ரேலின் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் ஜனநாயக வழியிலேயே நிறுவப்பட்டுள்ளது. நீதித்துறை மறுசீரமைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களின் ஜனநாயகம் பற்றிய கோரிக்கைகளுக்கு கருத்துரைத்த நெதன்யாகு, 'ஜனநாயகத்திற்கு உண்மையான அச்சுறுத்தல், 120 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தில், இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் வலதுசாரியான நெதன்யாகுவின் மத மற்றும் தேசியவாதக் கட்சிகளின் கூட்டணிக்கு நான்கு இடங்கள் பெரும்பான்மையை கடந்த நவம்பர் வழங்கிய வாக்காளர்களின் விருப்பத்தை முறியடிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் முயற்சியாகும்' என்று கூறினார். ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான மொர்டெகாய் கிரெம்னிட்ஸர், 'இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் பழமைவாதமாக கருதப்படும் தனது கூட்டணியை கட்டமைக்க தீவிர வலதுசாரி மதக் கட்சிகளின் கட்சிகளை நெதன்யாகு நம்பியதன் விளைவாக இந்த பிணைப்பு ஏற்பட்டது. முதல் முறையாக, அவர் தனது கூட்டணியில் உள்ளவர்களை உண்மையில் சமரசத்திற்கு தயாராக இல்லாத அரசியல்வாதிகளை சந்தித்துள்ளார். ஒரு பணியை நிறைவேற்ற கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றும், அந்த பணிக்கு உச்ச நீதிமன்றம் தடையாக இருப்பதாகவும் நினைக்கும் நபர்கள் இவர்கள். நான் அவருக்கு ஒரு வழியைக் காணவில்லை.' எனத் தெரிவித்துள்ளார்.
எனவே, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசாங்க உருவாக்கமும், அதன் நீதித்துறை மறுசீரமைப்பும் உலகின் ஜனநாயகத்தின் போலிகளை வெளிப்படுத்தியுள்ளது. ஜனநாயக மறுசீரமைப்புக்கான தேவையை வலியுறுத்துகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அரபு வசந்த எதிர்ப்புகள் அரபு உலகத்தை உலுக்கியது. இன்று இஸ்ரேலில் உள்ள எதிர்ப்பாளர்கள், தீவிர வலதுசாரி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தற்போதைய நிலையை மாற்றவும் நாட்டின் தன்மையை மறுவடிவமைக்கவும் முயற்சிக்கும் ஒரு தீவிரவாத மற்றும் அடிப்படைவாத அரசாங்கத்தை எதிர்க்க அணிதிரண்டு வருகின்றனர். அணிதிரள வேண்டியது ஜனநாயகத்திற்கான தேவையாக அமைகின்றது. ஜான் பி. ஆல்டர்மேன், '1948இல் இஸ்ரேல் ஸ்தாபனத்திற்குப் பிறகு, 1967 அரபு-இஸ்ரேலியப் போருக்குப் பிறகு எல்லைகளில் ஏற்பட்ட வியத்தகு மாற்றத்தைத் தொடர்ந்து, இன்றைய இஸ்ரேலின் தீவிர வலதுசாரி ஆட்சியை நாட்டின் வரலாற்றில் மூன்றாம் தருணம் என்றும், இஸ்ரேலிய தேசத்திற்கு இந்த தருணம் மிகவும் ஆழமானது' என விழித்துள்ளார். இந்த தருணத்தை இஸ்ரேல் மடைமாற்றுவது உலகின் ஜனநாயக மறுசீரமைப்புக்கு ஓர் வலுவான முன்னுதாரணமாக அமையக்கூடியது என்பதுவே சர்வதேச அரசியல் நிபுணர்களின் எதிர்பார்க்கையாக அமைகிறது.
Comments
Post a Comment