இலங்கையின் பௌத்தத்தின் மறுசீரமைப்பே ; இலங்கையின் மாற்றத்த்திற்கான அடிப்படை! -ஐ.வி.மகாசேனன்-

சிங்கள பௌத்த பேரினவாதம் நீண்டகாலமாக இலங்கையில் அரசியல் அணிதிரட்டலின் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை வரலாற்றின் முரண்களும் இயங்கியலும் பௌத்த பேரினவாத கருத்தியல் ஆதிக்கத்தித்திலும், பௌத்த பீடங்களின் எண்ணங்கங்;களின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கான நாடு என்றும் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் அல்லது மோசமானவர்கள் என்றும் இந்தக் கோட்பாடு வலியுறுத்துகிறது. பேரினவாதத்தின் இந்த நச்சு முத்திரை, பௌத்த பிக்குகள் உட்பட, பாகுபாடு, வெறுப்பு மற்றும் வன்முறையை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகிறது. பன்மைத்துவ அரசான இலங்கையின் தேசிய இனங்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். பௌத்தம் அமைதியான மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட மதம் என்று பலர் அடையாளப்படுத்துகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இலங்கை மற்றும் மியான்மர் போன்ற இடங்களில் யதார்த்தம் மிகவும் சிக்கலானது. இக்கட்டுரையும் இலங்கையில் பௌத்தத்தின் யதார்த்த இயல்பை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் வாரத்தில், இலங்கையின் நவகமுவவில் உள்ள பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் பல்லேகம சுமண தேரர் என்ற பிக்கு இரண்டு பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொள்வதாக கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர்கள் வீட்டுக்குச் சென்று தாக்கிய செய்தி சமூக வலைத்தளங்களில் முதன்மையான பேசுபொருளாகியது. குறிப்பாக, தேரருடைய தகாத நடாத்தை என்பதற்கு அப்பால் அதனை அறிந்து சென்று தாக்கிய அச்சமூகத்தின் நடத்தையே அதிக விமர்சனங்களை உருவாக்கி உள்ளது. தகாத நடத்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களை நிர்வாணமாக்குவதை காணொளியாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். இது அச்சமுகத்தின் வரலாற்றின் தொடர்ச்சியாகவே நோக்கப்படுகின்றது. மேலும், தமிழர்களுக்கெதிராக இனவாதம் கக்கிய பிக்குகளில் ஒருவராகவே பல்லேகம சுமண தேரர் காணப்படுகின்றார். இவரது நடத்தை இவரின் மறு முகத்தை பௌத்தத்தை பின்பற்றும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியிருக்கிறது அந்தக் காணொளி என்பதில் சந்தேகம் இல்லை. புத்தர் உலகியல் மாயைகளில் முற்றும் துறந்த பரிநிர்மாண நிலையை வலியுறுத்திய நிலையில், இலங்கையின் பௌத்தம் தனது வக்கிர மனநிலையின் வெளிப்பாடாக நிர்வாணத்தை இரசித்து வருகின்றது. இலங்கையின் பௌத்த வரலாற்றில், தன் சமூனத்தை நிர்வாணமாக்கி பலாத்காரமாக்கிய வன்ம வரலாற்றுக்கு நீதியில்லாத சூழலியே, ஈழத்தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தில் சிங்கள பௌத்த அரசு இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலாத்காரத்துக்கு நீதியை கோருகின்றோம் என்பதில் தெளிவு பெறவேண்டி உள்ளது.

1971ஆம் ஆண்டு கதிர்காம அழகுராணி பிரேமாவதி மனம்பேரியின் கொலை இலங்கை பௌத்தத்தின் நிர்வாணமாக்கல் வக்கிர மனநிலையின் உயரிய வெளிப்பாட்டை உணர்த்தும் நிகழ்வுகளில் முதன்மையானதாகும். 1971ஆம் ஆண்டு ஏப்ரல்-5ஆம் திகதி ஜாதிக விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் தெற்கில் உள்ள பல பொலிஸ் நிலையங்கள் மற்றும் அரசாங்க நிலையங்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. ஜே.வி.பி.யால் உருவாக்கப்பட்ட கிளர்ச்சியில் பிரேமாவதி மனம்பேரிக்கு தொடர்பு இருப்பதாக கூறி கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் விசாரணையில் தொடர்பு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்நிலையில் இலங்கை அரசின் இராணுவத்தினர் பிரேமாவதி மனம்பேரியை நிர்வாணமாக்கி கதிர்காமம் வீதிகளில் நடக்க வைத்து கெமுனு கண்காணிப்பின் லெப்டினன்ட் விஜேசூரிய மற்றும் ரத்நாயக்க ஆகிய இரு இராணுவ அதிகாரிகளும் துப்பாக்கியால் தோட்டாக்களை அவர் மீது வீசினர். மேலும், அவள் தரையில் தவழ்ந்து கொண்டிருந்தபோது, உயிருடனேயே ஒரு குழியில் புதைக்கப்பட்டாள். குற்றவாளிகள் உத்தரவிட்ட அதிகாரி கேணல் நுகவெல மற்றும் லெப்டினன்ட் விஜேசூரிய ஆகியோர் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு தண்டனையின்றி அனுபவிப்பதாக நம்பியிருந்தாலும், கதிர்காம அழகுராணியின் கொடூரமான கொலை தொடர்பாக நாடு முழுவதும் கூக்குரல் எழுந்தபோது நிலைமை மாறியது. எனினும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் பேரினவாதத்தின் நிர்வாணமாக்கல் வக்கிர மனநிலைக்கு அச்சுறுத்தலை வழங்கக்கூடியதாக அமையவில்லை என்பதையே பின்னைய நிகழ்வுகள் உறுதி செய்கின்றது. 

2014ஆம் ஆண்டு இலங்கையில் முஸ்லீம்கள் மீது திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை அரச ஆதரவுடன் பேரினவாத தரப்பினரால் உயர்வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக பொதுபல சேனா அமைப்பு பிரதான முஸ்லீம் எதிர்ப்பு நிறுவனமாக செயற்பட்டது. இந்நிலையில், சிங்கள பௌத்த கடும்போக்காளர்களான பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை எதிர்க்கும் ஜாதிக பல சேனாவின் தலைவர் வடரேக விஜித தேரர் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் வைத்து கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட பௌத்த தலைவர் மற்றும் கடும்போக்குவாதிகளை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், வடரேக விஜித தேரர் கடத்தப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். விஜித தேரர் புகார் அளித்தபோது, பொலிசார் அவரை சுய வன்முறை குற்றச்சாட்டில் 12 நாட்கள் சிறையில் தள்ளியது. இது கடுமையான பௌத்தர்களை விமர்சிக்கத் துணிந்த மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்தது. மேலும் விஜித தேரர் நீண்ட நாட்கள் உயிர் அச்சுறுத்தலுக்காக மறைந்தே வாழ்ந்திருந்தார். இலங்கைத்தீவில் தனக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாக உரையாடிய விஜித தேரர், 'இன நல்லிணக்கத்திற்காக பேசுபவர்கள் பயந்து ஒளிந்து கொள்ள வேண்டும் என்றால் பௌத்தத்திற்கு என்ன அர்த்தம்? இந்த சட்டவிரோத குண்டர்களை சுதந்திரமாக ஓட அரசாங்கம் அனுமதிப்பதன் மூலம் எனது நாட்டிற்கு என்ன அர்த்தம்?' என வினாவினார்.

இவ்வாறானதொரு நிர்வானமாக்கல் மனநிலையின் பிரதிபலிப்பிலேயே, 2009ஆம் ஆண்டு இறுதிப்போரில் வெளிச்சத்துக்கு வராத பேரினவாத அரசின் இராணுவத்தின் பெண்கள் மீதான பலாத்காரமும், வெளிஉலகத்துக்கு சனல்-04 காணொளி மூலம் வெளிப்படுத்தப்பட்ட இசைப்பிரியாவின் கொலையும் அமைகின்றது. இறுதிக்கட்ட போரின் போது, நந்திக்கடல் பகுதியில் படையினர் இசைப்பிரியாவை கைது செய்ததை காணொளி காட்சிகள் காட்டுகின்றன. இலங்கை இராணுவத்தினரால் கைத்தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட காணொளி காட்சிகள், அவளை ஒரு பள்ளத்தில் இருந்து இழுத்து, அரை நிர்வாணமாக அழைத்துச் செல்வதைக் காட்டுகிறது. சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தின் வெளிப்படையான அறிகுறிகளைக் கொண்ட அவரது சடலத்தின் புகைப்படங்கள் 2010இல் கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கை இராணுவம் ஆரம்பத்தில் தனது கொலையைப் பற்றி பெருமிதத்தில், இசைப்பிரியாவின் பெயரை உத்தியோகபூர்வ இராணுவ இணையத்தளத்தில் ஏனைய விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் காட்சிப்படுத்தியது. அக்குறிப்பில் இசைப்பிரியா, மே-18, 2009அன்று 53வது பிரிவு துருப்புக்களால் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறியது. 53வது பிரிவின் தலைவர் இப்போது இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆவார். எனினும் இதுவரை குற்றத்திற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

பௌத்த தர்மபோதனை இலக்கியமான தம்மபதத்தில் VV 131-132இல், சில இளம் குழந்தைகள் பாம்பை குச்சிகளால் காயப்படுத்துவதை புத்தர் கண்டபோது, புத்தர் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 'ஒருவரின் சொந்த மகிழ்ச்சியை நாடி, இன்பம் தேடும் பிற உயிர்களை தடியால் துன்புறுத்துபவர், இனிமேல் மகிழ்ச்சியை அனுபவிக்க மாட்டார். தன் மகிழ்ச்சியை நாடி, பிற இன்பம் தேடும் உயிர்களுக்குத் தடியால் தீங்கு செய்யாதவன், இனிமேல் மகிழ்ச்சியை அனுபவிப்பான்.' எனத்தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதனையில், வன்முறை செயல் நிராகரிக்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஒருவரின் சொந்த மகிழ்ச்சியைப் பெறுவதற்கான வழிமுறையாக நியாயப்படுத்த முடியாது என்பதும் உறுதியாக விளக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கையின் நீடித்த வன்முறைகளும், வக்கிர மனநிலைக்கான பாதுகாப்பும் பௌத்தத்தின் பெயரிலேயே அரங்கேற்றப்படுவது, இலங்கையின் பௌத்தம் தம்ம போதனை பௌத்த இயல்புகளிலிருந்து வேறுபட்ட புதிய பரிமானம் என்தையே யதார்த்த நிலைகள் உறுதி செய்கின்றது. ஆலிவர் மெக்டெர்னன் எனும் அறிஞர் தனது கடவுளின் பெயரில் வன்முறையில் (2003) எனும் நூலில், உலகெங்கிலும் உள்ள மோதல்களை மோசமாக்குவதில் மதத்தின் சக்தியின் கவனத்தை விளக்கியுள்ளார். மதப் பயிற்சியாளர்கள் தங்கள் அடிப்படை மத நம்பிக்கைகள் மற்றும் உரை நியதிகளுக்கு எதிராக வன்முறையை உருவாக்குவதன் மூலம் மதத்தை தவறாகப் பயன்படுத்தும் நிகழ்வுகளை அது சுட்டிக்காட்டுகின்றது. அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, வன்முறையை நிலைநிறுத்துவதற்கு மத அடையாளங்கள், நிறுவனங்கள் மற்றும் கோட்பாடுகள் கையாளப்படுகின்றன. இலங்கையின் பௌத்தத்தின் யதார்த்தமும் அவ் ஒழுங்கிலேயே பயணிக்கின்றது.

இலங்கையின் பௌத்தத்தின் யதார்த்தமான நிலை மகாவம்ச உருவாக்கத்தின் பின்னணியிலிருந்து பேணப்படுகின்றது. சிங்கத்தின் வழித்தோன்றலாகவும், சகோதரங்களின் சேர்க்கையினாதாகவும் முழுமையாக வன்முறையினதும், நாகரீகங்கள் தவிர்க்கப்பட்ட விம்பங்களிலேயே இலங்கையின் பௌத்தம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. துட்டகைமுனு-எல்லாளன் போர் முதல் இன்றைய தேசிய இனங்கள் மீதான வன்முறைகள் வரை இலங்கையின் பௌத்தத்தின் பெயரிலேயே நியாயப்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் விஞ்ஞானியும் முன்னாள் இலங்கை இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக, இலங்கை பௌத்த பேரினவாத குழுவின் அரசியலை 'குங்குமப்பூ பாசிசம்' என்று விழித்துள்ளார். மேலும், 'போர்க்குணமிக்க பௌத்தத்தின் எழுச்சி ஆச்சரியப்படுவதற்கில்லை. சிங்கள பௌத்தத்தில் பல வருடங்களாக வெறித்தனமான திரிபு உள்ளது' என்றும், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க 1959இல் பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலங்கையின் அமைதி இலங்கையின் அரசியலை வடிவமைக்கும் இலங்கையின் பௌத்தத்தின் மறுசீரமைப்பிலேயே தங்கியுள்ளது. தம்மபதத்தின் V.174இல் குறிப்பிட்டுள்ள, 'குருடுதான் உலகம். தெளிவாகப் பார்ப்பவர்கள் குறைவு' எனும் நிலையிலேயே இலங்கையின் பௌத்தம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்த மதத்தின் வரலாற்றில், அசல் நிறுவனரின் இலட்சியங்களை நீண்ட காலமாகவே வக்கிரமாக வைத்திருக்கிறார்கள். இலங்கை பௌத்த மக்கள் மகாவம்ச சிந்தனையில் மூழ்கிக் கிடப்பதிலிருந்து வெளியே வந்து, தேரவாத பௌத்தத்தின் போதனையில் சமூகத்தை கட்டமைக்க முனைகையிலேயே, இலங்கையில் அடிப்படையான மாற்றத்தை எதிர்பார்க்கக்கூடியதாக அமையும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-