இலங்கையின் வரலாறு முழுவதும் பாராளுமன்ற அரசியல் இனவாதத்தை தூண்டுகிறது! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் பாராளுமன்ற நியதிகளுக்குள் ஜனநாயகத்தின் அடிப்படையான தனிமனித சுயாட்சி மற்றும் சமத்துவம் பாரிய அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றது. குறிப்பாக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர முல்லைத்தீவு நீதிபதியின் செயற்பாட்டை அச்சுறுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். அவ்அச்சுறுத்தல் பாராளுமன்ற சிறப்புரிமை என்ற நியதிக்குள் எவ்வித நீதிப்பொறிமுறைகளுக்குள்ளும் உட்படுத்தப்படாது விலக்களிப்பு பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. அதுமட்டுமன்றி வடக்கு-கிழக்கு நீதிமன்றங்களை தாண்டி புறத்தே நீதித்துறைக்கான சவாலாக கூட எவ்வித கண்டனங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. இது இலங்கையின் பாராளுமன்றத்தினூடாக இனவாதம் பராமரிக்கப்படுவதனையே சுட்டிக்காட்டுவதாக அமைகின்றது. இக்கட்டுரை பாராளுமன்ற சிறப்புரிமை எனும் நியதிக்குள்ளால் இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனவாத அரசியல் பிரச்சாரங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை-07அன்று ஓய்வுபெற்ற அட்மிரலும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, 'முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி குருந்துமலை தளத்தில் இருந்து எங்களை நீக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்லியல் துறை தொடர்பான விசாரணை நடத்த அவருக்கு அதிகாரம் இல்லை. இலங்கை சிங்கள பௌத்த தேசம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். சில தமிழ் நீதிபதிகள் வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் பாரம்பரியத்தின் நலனுக்கு எதிராக செயற்படுகின்றனர். எமது பாரம்பரியத்தை எதிர்த்து சிங்கள மக்கள் ஒன்றுபட வேண்டும்' எனப்பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இது தொடர்பாக தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள், சரத்வீரசேகராவின் கருத்து நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அதேவேளை ஜூலை-11அன்று வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தார்கள். மேலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், 'பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்து நாட்டின் அடிப்படை கட்டமைப்பான நீதிமன்றத்தின் மீதான மிக மோசமான தாக்குதல்' என வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெறுப்பு பேச்சுக்கு எதிரான உலகளாவியரீதியில் சட்டங்கள் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் சட்டத்தினூடாக வெறுப்பு பேச்சுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், நடைமுறையில் அதன் செயலாக்க தன்மை அதிக விமர்சனத்திற்குரியதாகவே காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இலங்கையின் இனவன்முறையின் வீச்சை அதிகரிக்கக்கூடிய பிரச்சாரங்கள் பலவும் பாராளுமன்ற சிறப்புரிமை மூலம் விலக்களிக்கப்படும் மரபே பேணப்படுகின்றது. இலங்கையின் நீண்ட வரலாற்றை பகிரும் இனக்கலவரங்களின் பின்னால் பாராளுமன்றத்தில் உரையாடப்பட்ட இனவாத கருத்துக்கள் ஆழமான பிணைப்பை கொண்டுள்ளது. இந்த பின்னணியிலேயே சரத்வீரசேகராவின் தமிழ் நீதிபதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல் பேச்சை ஆழமாக அவதானிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
முதலாவது, இனக்கலவரங்களின் கடந்த கால அனுபவங்களில் இனக்கலவரங்களிற்கு தூபம் போடுவதாகவும், சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைகளை ஆதரிக்கும் வகையிலேயே தென்னிலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களிள் உரைகள் அமையப்பெற்றுள்ளது. குறிப்பாக 1977ஆம் ஆண்டு கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, 'நீங்கள் தனிநாடு கோருகிறீர்கள். திருகோணமலை உங்கள் தனிநாட்டின் தலைநகர் என்கிறீர்கள். நீங்கள், வன்முறை வழியை நாம் வேண்டவில்லை. ஆனால் தேவையேற்படின், நேரம் வரும்போது வன்முறையைப் பயன்படுத்துவோம் என்கிறீர்கள். இதைக் கேட்டு மற்ற இலங்கையர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்கள் எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவார்கள்? நீங்கள் சண்டையிட விரும்பினால், இங்கு சண்டை நடக்கட்டும். நீங்கள் சமாதானத்தை விரும்பினால், இங்கு சமாதானம் இருக்கட்டும். இப்படித்தான் அவர்கள் பதில் சொல்வார்கள். இதை நான் சொல்லவில்லை, இலங்கை மக்கள் இதனைச் சொல்கிறார்கள்' என கலவரத்தை நியாயப்படுத்தும் கருத்தை வெளியிட்டிருந்தார். இப்பாராளுமன்ற உரை 'போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்' என்று பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறே பின்னாளில் அதே அரசாங்க காலப்பகுதியில் 1983 கறுப்பு ஜூலை தமிழினப்படுகொலைக்கு முதல் மாதங்களில் திருகோணமலையில் இலங்கை இராணுவ ஆதரவுடன் சிங்கள பேரினவாத காடையர்களால் இனவெறி வேட்டை நிகழ்த்தப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை-08(1983)அன்று அன்றைய எதிர்க்கட்சி தவைர் அமிர்தலிங்கம் ஆற்றிய உரைக்கு பதிலளித்த அன்றைய கைத்தொழில் அமைச்சர் சிறில் மெத்தியு, 'யாழ்ப்பாணத்தில் 20,000 சிங்களவர்கள் இருந்தார்கள் இப்போது ஒருவரும் இல்லை. முன்னர் பல்கலைக்கழகத்தில் 400 சிங்கள மாணவர்கள் இருந்தார்கள் இப்போது அவர்கள் ஒருவரும் இல்லை. முன்னர் யாழ்ப்பானத்தில் பல பேக்கரிகள் இருந்தன இப்போது ஒன்றும் இல்லை. யாழ்ப்பாணத்தின் நிலைமையை திருகோணமலையிலும் கொண்டுவரப் பார்க்கிறீர்கள். திருகோணமலையில் சிங்களவர்களைப் பாதுகாக்க வேண்டும்.' என திருகோணமலையில் தமிழர்கள் மீது நிகழ்ந்த இனவெறி தாக்குதலை ஆதரித்து கருத்துரைத்தார். இந்தப்பலமான ஆதரவே கறுப்பு ஜூலை தமிழினப்படுகொலைக்கு சிங்கள காடையர்களுக்கு பலமான உந்துதலை வழங்கியது எனலாம். இவ்வாறே இலங்கையில் இடம்பெற்ற கலவரங்கள் போர்வையிலான 1956 தொடக்கம் 2018 வரையிலான அனைத்து தமிழினப்படுகொலையிலும் தென்னிலங்கை பாராளுமன்ற உரைகள் வலுவான ஆதரவை அளித்து வந்துள்ளது.
இரண்டாவது, சரத்வீரசேகரவின் பாராளுமன்ற உரையானது உடனடியான இனக்கலவரத்துக்கான ஏற்பாட்டை வெளித்தாத போதும், தென்னிலங்கைக்கு இனவாத இருப்பு தேவைப்பாடு உணர்த்தப்படுகிறது. இன-மத விரோதத்தைத் தூண்டுவது இலங்கையின் அரசியல் உயரடுக்கின் சில பகுதிகளுக்கு உயிர்வாழ்வதற்கான வழிமுறையாக மாறியுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், விடுதலைப்புலிகள் மீதான வெற்றி அரசாங்கத்தால் மகிமைப்படுத்தப்பட்டபோது, ஏனைய அனைத்து தேசிய இனங்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் எதிரான பகைமை புதிய வீரியத்துடன் வளர்க்கப்பட்டது. அதன் வெளிப்பாடே 2014ஆம் ஆண்டு அளுத்கம கலவரம் மற்றும் 2018ஆம் ஆண்டு கண்டி கலவரங்களில் முதன்மைப்படுத்தப்பட்டது. சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான சிங்கள பேரினவாதம் பாரபட்சமின்ற தமது விரோத செயல்களை தொடர்ச்சியாகவே நிலைப்படுத்தி வருகின்றனர். இன-மத குரோதத்தைத் தவிர வேறெதையும் சுற்றி தனது தொகுதியை அணிதிரட்ட இலங்கை அரசாங்கங்களின் இயலாமை, இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியலின் பாரம்பரியமாகவே அமைகின்றது. அதனை சுட்டிக்காட்டுவதாகவே சரத்வீரசேகராவின் கருத்தும், தென்னிலங்கத்தின் மௌனமும் காணப்படுகின்றது. தமிழ் நீதிபதியை விளித்து சரத்வீரசேகராவின் எச்சரிக்கை அமைந்துள்ள போதிலும், நீதித்துறையின் சுயாதீனத்துக்கு எதிரான கருத்தாகவே அமைகின்றது. எனினும் தென்னிலங்கை நீதிமன்ற கட்டமைப்பு தமது எதிர்ப்பினை வலுவாக வெளிப்படுத்தமையானது நீதித்துறையும் சரத்வீரசேகராவின் இனவாத கருத்தியலுக்கூடான ஆதரவிலேயே பயணிக்கின்றதா என்ற சந்தேகங்களையே பொதுத்தளத்தில் வலுப்படுத்துகின்றது.
மூன்றாவது, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் நல்லிணக்கத்துக்கான அறைகூவலின் போலித்தன்மையை வெளிப்படுத்துவதாகவே சரத்வீரசேகராவின் கருத்து அமையப்பெற்றுள்ளது. சரத்வீரசேகர இலங்கை ஆளும் அரசாங்க தரப்பின் பாராளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்றார். அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் வெளிப்படையாகவே பேரினவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலான கருத்தை பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். மறுதளத்தில் தற்போதைய அரசாங்கம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு சர்வதேசத்திடம் கடன்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கையின் நல்லிணக்க பிரச்சாரத்தை சர்வதேச அரங்கில் முதன்மைப்படுத்தி வருகின்றது. எனினும் சர்வதேச அரங்கில் நல்லிணக்கத்தை முதன்மையான பிரச்சாரமாக மேற்கொள்ளும் இலங்கையின் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கா அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகராவின் பேரினவாத வெறுப்பு பேச்சுக்கு எதிராக எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. அதேவேளை சபாநாயகரும் சரத்வீரசேகரவின் கருத்தை கண்டித்து அதனை ஹன்சாட்டிலிருந்து நீக்குவதற்கான எவ்வித நடவடிக்கைகளுக்கும் முன்வரவில்லை. தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரே, 'முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' எனத்தெரிவித்துள்ள போதிலும் முறையான விளைவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
எனவே, இலங்கையின் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கருவி என்ற அடிப்படையை துறந்து சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மையமாகவே கட்டமைக்கப்பட்டு வருகின்றது. ஜனநாயகத்தின் மையமான மக்களாட்சி கோட்பாடு கேள்விக்குட்படுத்தப்பட்டு, பெரும்பான்மையாட்சியாக சிங்கள பேரினவாதத்தின் பாதுகாப்பிற்கான ஆட்சியே பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஆல்பர்ட் காமுஸ் எனும் அரசறிவியலாளர் முன்வைக்கும், 'ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் சட்டம் அல்ல, சிறுபான்மையினரின் பாதுகாப்பு' என்பது இலங்கையில் பொருத்தமற்ற கருத்தியலாகவே காணப்படுகின்றது. மாறாக ஜார்ஜ் ஆர்வெல் எனும் அரசறிவியலாளர் முன்வைக்கும், 'மக்கள் இரவில் தங்கள் படுக்கைகளில் நிம்மதியாக தூங்குகிறார்கள், ஏனென்றால் முரட்டுத்தனமான மனிதர்கள் தங்கள் சார்பாக வன்முறையை செய்ய தயாராக இருக்கிறார்கள்' எனும் கருத்தையே இலங்கையின் பாராளுமன்றம் பாரம்பரியமாக பேணி வருகின்றது. இலங்கையில் பாராளுமன்ற நியதியின் சட்ட விலக்கினூடாக, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக பேரினவாதம் மற்றும் அதுசார் வன்முறைகள் மாறிவிட்டது என்பதற்கான வெளிப்படையின் சமீபத்திய நிகழ்வாகவே சரத்வீரசேகராவின் கருத்தும் தென்னிலங்கையின் மௌனமும் காணப்படுகின்றது.
Comments
Post a Comment