இலங்கைத்தீவின் நீதிப்பொறிமுறையை மீறும் சிங்கள பௌத்தமும் ஈழத்தமிழரின் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியலை நெருக்கடி காலங்களில் பாதுகாக்கும் கருவியாக சிங்களம் பௌத்தம் இலங்கையில் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றது. அண்மையில் இலங்கையில் அதிகரித்துவரும் சிங்கள பௌத்த பிரச்சாரம் இலங்கை எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார நெருக்கடிசார் உரையாடலை நீர்த்துப்போகச்செய்துள்ளது. குறிப்பாக வடக்கில் பௌத்த மேலாதிக்கம் ஆக்கிரமிப்பு வடிவில் தங்குதடையின்றி பயணித்து வருகின்றது. இது இலங்கையின் நீதித்துறை செயற்பாட்டையும் சுயாதீனத்தன்மையையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனை களஆய்வு மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மேற்கொண்ட விஜயமும், சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் தலைவரான சரத் வீரசேகராவை எச்சரிக்கை செய்தமையும் தமிழ் அரசியல் பரப்பில் சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிரான நீதிமன்ற செயற்பாட்டின் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். இக்கட்டுரை இலங்கை அரசியலில் கடந்த காலங்களில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக நீதித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
குருந்தூர்மலை தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில், 12.06.2022இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் 19.07.2022அன்று கட்டளை பிறப்பித்திருந்தது. எனினும், நீதிமன்றம் இவ்வாறு கட்டளை வழங்கிய பிற்பாடும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த 23.02.2023அன்று குருந்தூர் மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். குறித்த விஜயத்தின்போது இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட்டது. நீதிமன்றக்கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் களவிஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக தொடர்ந்தும் மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி குருந்தூர்மலைக்கு ஜூலை-04அன்று களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் பௌத்த மதகுருமார்கள் சிங்கள மக்கள் என பலர் குருந்தூர் மலையில் பிரச்சனமாகி இருந்தனர். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி குறித்த வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத்வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்துத் தெரிவிக்க முற்பட்ட போது, அவரது கருத்தினை ஏற்க மறுத்த நீதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியாதெனவும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுவதாகவும், அங்கிருந்து சரத் வீரசேகரவினை விலகிச் செல்லுமாறும் எச்சரித்திருந்தார்.
இலங்கையின் நீதித்துறை சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாடுகளை கண்டிப்பதும், நீதித்துறையின் கண்டிப்புக்களை மீறிய சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாடுகள் தொடர்வதும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் நிலையான இயல்பான அனுபவங்களையே பகிர்கின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, கடந்த காலங்களில் இலங்கையில் இனக்கலவரங்கள் என்ற வடிவத்தில் இடம்பெற்ற தமிழனப்படுகொலைக்கு நியாயமான முறையிலான நீதிப்பொறிமுறையை இலங்கை நீதித்துறையால் உருவாக்க முடியவில்லை. சுதந்திர இலங்கையில் 1958, 1977, 1983, 2000, மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் பெருமளவில் அழிவுகளை ஏற்படுத்திய கலவரங்கள் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளால் தமிழ் மற்றும் முஸ்லீம் இனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கலவரங்கள் முழுமையாக சிங்கள பௌத்த பேரினவாத காடையர்களால் மேற்கொள்ளப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் இதுவரை எந்தவொரு தரப்பினரும் தண்டனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தது. குறிப்பாக 1983ஆம் ஆண்டு தமிழினப்படுகொலையில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலையில் காவலில் வைக்கப்பட்டிருந்த டெலோ தலைவர் நடராஜா தங்கத்துரையுடன், குட்டிமணி உட்பட 51 தமிழ்க் கைதிகள் சிங்கள கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். குட்டிமணி தனது இறுதி ஆசையாக தனது கண்கள் தமிழர்களின் விடுதலையை பார்க்க வேண்டுமென்ற கோரிக்கை விடுத்தமையால், கண்ணை தோண்டி உதைப்பந்தாட்டமாக புத்தர் சிலைக்கு முன்னால் விளையாடியமையும் அரங்கேற்றப்பட்டிருந்தது. சிறைச்சாலை தடுப்பு காவலிள் வைக்கப்பட்டோர் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் படுகொலைகள் செய்யப்பட்ட வரலாறு நீண்டது 2000ஆம் ஆண்டு பிந்துனுவெவை படுகொலையும் 25 தமிழ் கைதிகள் கிராமத்தவர்கள் இராணுவத்துடன் இணைந்து மேற்கொண்ட படுகொலையையே குறிக்கின்றது. இவ்வாறாக சிறைகளுக்குள் இடம்பெற்ற படுகொலைகளுக்கே இலங்கை நீதித்துறை ஆரோக்கியமான நீதி பரிபாலனத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இரண்டாவது, நீதிமன்றங்களை அவமதித்தவர்கள் பலரும் சிங்கள பௌத்த பேரினவாத முகத்தினால் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர். பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞாணசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவரை குற்றவாளியாக கண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம் 19 வருட சிறைத் தண்டனை விதித்து 2018 ஆகஸ்ட்-8அன்று தீர்ப்பளித்தது. எனினும் பல தரப்பில் இருந்தும் ஞானசார தேரரை பொது மண்ணிப்பின் கீழ் விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கையெழுத்திட்ட பொது மன்னிப்பு உத்தரவில் ஞானசார தேரர் 2019 மே-23அன்று பூரணமாக விடுவிக்கப்பட்டார். ஞானசார தேரர், 2016-ஜனவரி ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற தனக்கு சம்பந்தமே இல்லாத வழக்கொன்றில் ஆஜராகி நீதிமன்றின் கௌரவம், சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுத்தமை ஊடாக மன்றை அவமதித்தார். மேலும் இவ்வழக்கை வழிநடாத்திய அரச சிரேஷ்ட சட்டவாதியை அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டி அவமானப்படுத்தினார். நீதிமன்றின் கட்டளைக்கு செவிசாய்க்காது, நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு சவால் விடுத்தார். ஆயினும் சிங்கள பௌத்த பேரினவாத முகத்தினால் ஓராண்டுக்குள் பூரண விடுதலையை பெற்றார். எனினும் விசாரணைகளுக்கே உட்படுத்தாத தமிழ் அரசியல் கைதிகள் தமது வாழ்வை முழுமையாக சிறைக்குள் அனுபவிக்கும் முரணான நீதிப்பரிபாலனத்தையே இலங்கையின் நீதித்துறை கொண்டுள்ளது.
மூன்றாவது, கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தரப்பினர் தமது உயர் பாதுகாப்பு நம்பிக்கையாக நீதிமன்றத்தை நாடி தீர்ப்புக்களை சாதகமாக பெற்று போதிலும், நீதிமன்ற தீர்ப்புக்களை நிராகரித்து தங்கள் எண்ணங்களுக்குள்ளேயே பயணிப்பதை சிங்கள பௌத்த பேரினவாதம் இயல்பாக கொண்டுள்ளது. இக்கட்டுரையின் உருவாக்கத்துக்கான தூண்டுதலாக அமைந்த குருந்தூர் விவகாரத்தில் கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் பிறப்பித்த நீதிமன்ற கட்டளையை நிராகரித்தே அரச இயந்திரமான பொலிஸ் பாதுகாப்புடன், அரச இயந்திரமான தொல்லியல் திணைக்கள ஆதரவுடன், அரச இயந்திரமான இராணுவம் விகாரை கட்டத்தை பூரணப்படுத்தியுள்ளார்கள். இன்று சரத்வீரசேகரவை எச்சரித்ததமையை நம்பிக்கையாக சமிக்ஞையாக கருதும் தமிழ் தரப்பினர் கடந்த ஆண்டு ஜூலை பிறப்பிக்கப்பட்ட கட்டளையையும் நம்பிக்கையின் வெளிப்பாடாகவே அவதானித்தார்கள். எனினும் செயற்பாடு எதிரான வடிவத்திலேயே காணப்படுகின்றது. இவ்வாறே கடந்த 2019ஆம் ஆண்டு முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் சிங்கள பௌத்த பேரினவாத தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடும் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்ததாகவே காணப்பட்டது. முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலானது பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு புராதன சைவ கோவில் வளாகத்தில், குறிப்பிட்ட ஒரு பகுதியினை யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு பௌத்த துறவி கைப்பற்ற முயற்சித்து அங்கே நிலைகொள்ள எத்தனித்தார். குறித்த பௌத்த துறவி கொழும்பில் காலமான நிலையில் அவரது பூதவுடலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த விடயம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, துறவியின் பூதவுடலை நீராவியடி பிள்ளையார் தேவஸ்தான பூமியில் தகனம் செய்வதற்கான தடை உத்தரவினை முல்லைத்தீவு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்காக அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த போலீசார் நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்தனர்.
எனவே வரலாறுதோறும் இலங்கை நீதித்துறையின் பேரினவாதத்துக்கு எதிரான தீர்ப்புக்கள் வெறுமனவே வெற்றுப்பிரச்சாரமாகவே கடந்துள்ளது. செயற்பாட்டில் நீதியினை வலியுறுத்த தவறியுள்ளது. நீதியினை நடைமுறைப்படுத்த வேண்டிய அரச இயந்திரங்கள் நீதித்துறையின் தீர்ப்பினை தாண்டி சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியலுக்கே அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வந்துள்ளன. இலங்கையின் உயரிய சட்டமாகிய அரசியலமைப்பு சட்டம் சிங்கள பௌத்தத்தை பேண வலியுறுத்தியுள்ள நிலையில் அச்சட்டத்திற்குள் இயங்கும் அரச இயந்திரங்களிடம் நடுநிலைமையான செயற்பாட்டை எதிர்பார்க்க இயலாது என்பதே யதார்த்த பூர்வமானதாகும். இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறையானது ஈழத்தமிழர்களுக்கு பிரச்சாரரீதியிலான நீதியை வழங்குமேயன்றி செயற்பாட்டுரீதியிலான நீதியை வழங்காது என்பதனையே வரலாறுகள் தெளிவாக பதிவு செய்கின்றது.
Comments
Post a Comment