தேசிய இனப்பிரச்சினை தீர்வில் மோடியின் எதிர்பார்ப்பும் ஏமாற்றும் தமிழ்க் கட்சிகளும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்திய பிரதமரால் எடுத்துரைக்கப்படுவதுடன் முன்னேற்றகரமான மாற்றங்களுக்கான எதிர்பார்க்கைகள் ஈழத்தமிழரசியில் தரப்பிடம் காணப்பட்டது. எனினும் இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பில் தேசிய இனப்பிரச்சிளை தொடர்பில் இந்திய பிரமதரால் எடுத்துரைப்பு மாத்திரமே இடம்பெற்றுள்ளது. எடுத்துரைப்புகள் வினைத்திறனான தீர்வு நோக்கி இலங்கை அரசாங்கத்தை நகர்த்தக்கூடிய வகையிலானதாக பலமாக அமையவில்லை என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாடலாக காணப்படுகின்றது. இச்சூழலில், தமிழ் கட்சிகள் இந்திய பிரதமரின் எடுத்துரைப்பை வெகுவாக வரவேற்று கருத்துக்களை வழங்கியுள்ளமை தமிழ் கட்சிகளின் அரசியல் அறிவு தொடர்பிலேயே வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை இந்தியாவுக்கான இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் தமிழர்களுக்கான விளைவை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை-20அன்று இரண்டு நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான குழு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். குறித்த விஜயத்தில் இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் இந்தியப் பொருளாதார முதலாளிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாகி ஒரு வருடத்திற்கு பின்னரே பிராந்திய அரசாகிய இந்தியாவுக்கான முதலாவது விஜயம் சாத்தியமாகி இருந்தமையால், இவ்விஜயம் அரசியல்ரீதியாக பாரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. குறிப்பாக, தேசிய இனப்பிரச்சிளை தீர்வு தொடர்பில் இந்தியாவின் வரலாற்று வகிபாகத்தின் அடிப்படையில் 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய வாதப்பிரதிவாதங்கள் ஈழத்தமிழர்களின் அரசியலில் முதன்மைக்கூறாகியது. அதனை மையப்படுத்தி 13ஆம் திருத்தத்தின் நடைமுறையாக்கம் தொடர்பில் நேர் மற்றும் எதிரான விமர்சனங்களை முன்வைத்து தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதங்களும் அனுப்பியிருந்தார்கள். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும் தமிழ்க்கட்சிகளை அழைத்து 13ஆம் திருத்தத்தின் நடைமுறையாக்கத்தில் தனது இயலுமை தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார். இப்பின்னணியிலேயே ரணில் விக்கிரமசிங்காவின் இந்தியா விஜயம் ஈழத்தமிழர்களால் அவதானிக்கப்பட்டது. எனினும் ரணில் விக்கிரமசிங்க - நரேந்திர மோடி சந்திப்பு பொருளாதார ஒப்பந்தங்களையே முதன்மைப்படுத்தியுள்ளது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, இந்தியா-இலங்கைக்கு இடையிலான பொருளாதார உரையாடல்கள் ஒப்பந்தங்கள், ஆவணங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற ரணில்-மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், கால்நடை வளர்ப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கிழக்கு இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் இரு தரப்புக்கும் இடையே மெய்நிகர் கட்டணச் சேவைகள் தொடர்பான ஆவணங்களை இருதரப்பும் பரிமாறிக் கொண்டனர். இலங்கையில் இந்தியாவின் ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத்தை (ருPஐ) ஏற்றுக்கொள்வதற்கு வசதியாக, டுயமெய Pயல மற்றும் நுஊஐ சர்வதேசம் இடையே டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு தரப்பும் கடல், எரிபொருள் ஆற்றல் மற்றும் மக்களுடனான மக்கள் தொடர்பை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு ஆவணத்தை ஏற்றுக்கொண்டனர். மேலும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தையும், வட இலங்கையின் காங்கேசன்துறையையும் இணைக்கும் வகையில் பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கப்படுவதனையும்; இரு நாடுகளின் மின் கட்டங்களை இணைக்கும் பணியை வேகமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளமையையும்; இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நிலப் பாலம் மற்றும் பெட்ரோலிய குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை செய்வதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இரண்டாவது, தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான அரசியல் உரையாடலை தனது எதிர்பார்க்கையாக மாத்திரமே நரேந்திர மோடி தனது உரையில் பகிர்ந்துள்ளார். பதின்மூன்றாவது திருத்தத்தை இலங்கை அமுல்படுத்த வேண்டும் எனவும், அதில் தமிழ் மக்களுக்கு 'மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை' இலங்கை அரசாங்கம் உறுதி செய்யும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இருதரப்பு சந்திப்புக்கு பின்னரான அறிக்கையிடலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 'இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் பேசினோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உள்ளடக்கிய அணுகுமுறையை முன்வைத்தார். தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறோம். சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்திற்கான மீள்கட்டுமான நடவடிக்கையை இலங்கை முன்னெடுக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இலங்கை தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்' என தனது கருத்துக்களை வழங்கினார். அத்துடன் தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பிலும் முறையான ஒப்பந்தம் ஏதுமின்றி, மீனவர்கள் பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததாகவும், இந்த விவகாரத்தை 'மனிதாபிமான கண்ணோட்டத்தில்' பார்க்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். மாறாக இலங்கை ஜனாதிபதியின் அறிக்கையிடலில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான எவ்வித நம்பிக்கை வாக்குறுதிகள் கூட வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் இடையிலான சந்திப்பு இருநாட்டு பொருளாதார நலன்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அளித்திராத போதிலும், தமிழ்க்கட்சிகள் இந்திய பிரதமரின் எதிர்பார்ப்பை வரவேற்று புலகாங்கிதப்படுவது தமிழரசியலின் முதிர்ச்சியற்ற தன்மையையும் கடந்தகால அனுபவமின்மைகளையுமே வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஒன்று, இந்தியப் பிரதமரின் கருத்துத் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன், 'இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் மகாண சபைத் தேர்தல்களை நடாத்துதல் ஆகியவற்றை இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. 13வது திருத்தம் ஒருபுறமிருக்க ஒற்றையாட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வே தமிழ் மக்களின் அபிலாஷையாக காணப்படும் நிலையில் அதனையும் மோடி தனியாக வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்' எனத் தெரிவித்தார். அவ்வாறே தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய முன்வைக்கும் கோரிக்கையையும், இந்திய-இலங்கை நிலப் பிணைப்பு தொடர்பான இந்திய பிரதமரின் அறிவிப்பை முதன்மையாக வரவேற்று உள்ளனர். அதேவேளை இந்தியா தனது நலன்களையே அதிகம் முதன்மைப்படுத்துவதாக எதிர்ப்புவாதங்களை முன்வைக்கும் தமிழத்தேசிய மக்கள் முன்னணியினரும் இந்திய பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதுடன் சுருங்குவது தமிழரசியலின் போக்கை கடினமாக்குவதாகவே அவதானிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், '13வது திருத்தத்தை மாத்திரம் வலியுறுத்தி வந்த இந்தியா, தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு இப்போது சொல்லியிருக்கின்றது. 13வது திருத்தத்தை கண்மூடி ஆதரிக்கும் தமிழ்த் தரப்புக்கள் இந்தியா தற்போது குறிப்பிட்டுள்ள தமிழரின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் சமஷ்டி தீர்வை இனியாவது வலியுறுத்த வேண்டும். இந்தியாவுடனான நில ரீதியான தொடர்பை நாம் வரவேற்கின்றோம்.' எனத் தெரிவித்துள்ளார். இப்பின்னணியில் இந்திய பிரதமரின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான வினைத்திறனான செயல்வடிவமற்ற உரையை தேசிய இனப்பிரச்சினை தீர்வின் ஒரு நகர்வு போன்ற தோற்றப்பாட்டில் வரவேற்பது தமிழரசியல் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றும் தொடர்ச்சியாகவே அமைகின்றது. குறிப்பாக இப்பட்டியலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் தற்போது வெளிப்படையாக இணைந்துள்ளனர். கடந்த காலங்களில் இந்தியாவின் போலித்தன்மையை வரவேற்போரை துரோகிகளாக உருவாக்கி வந்துள்ளது. தற்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் இந்தியாவின் வினைத்திறனான செயல்வடிவமற்ற உரையை வெற்று உரையை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை சந்தேகத்திற்குரியதாக்குகிறது.

இரண்டு, தமிழரசியல் கட்சிகள் தமது இயலாமையின் வெளிப்பாடாகவே, இந்திய பிரதமரின் வெற்று உரையை கணிசமாக தமிழர்களின் அரசியல் தீர்வின் நகர்வாக வரவேற்றுள்ளார்களா என்ற கோணங்களில் சிந்தனைகளை அதிகரிக்கின்றது. குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் தலைவர் அரசு இயந்திரம் எனும் பெருங்கருவியோடு இந்தியாவை கையாள்கையில், ஒடுக்கப்படும் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் இந்தியாவை கையாள முற்படாது கடிதங்களுடன் தொடர்புகளை சுருக்கியதன் வெளிப்பாடாகவே நடைமுறை விளைவுகள் நோக்கப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவுக்கான நேரடி விஜயமும் இந்திய பிரதமருடனான சந்திப்பும் இலங்கை-இந்திய அரசின் நலன்களை மையப்படுத்திய பொருளாதார விடயங்கள் இருதரப்பு ஒப்பந்தங்களாக உருவளித்திருக்கின்றது. அதேவேளை, கடிதங்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட உறவை பேணிய ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையை இந்திய அரசாங்கம் தனது எதிர்பார்க்கையாகவும், தமிழகத்தின் கோரிக்கையை மனிதாபிமான கண்ணோட்ட பார்வையாகவும் இந்திய பிரதமரின் உரையுடன் சுருங்கும் நிலை காணப்படுகின்றது. 

மூன்று, இந்தியா, 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடாக 13ஆம் திருத்தத்தினூடாக மாகாண சபை முறைமையைஇலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக வழங்கியது. அதன் பிற்பாடு, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் 13ஆம் திருத்தம் நடைமுறையாக்கம் தொடர்பிலும் இந்திய அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கங்களிற்கு பல இடித்துரைப்புக்களையும், எடுத்துரைப்புக்களையும் வழங்கியுள்ளது. எனினும் நடைமுறையில் இந்திய அரச தலையீட்டுடன் இந்திய அரசு ஒப்பந்தத்தினூடாக மேற்கொள்ளப்பட்டதொரு விடயத்தினையே இலங்கை அரசாங்கங்கள் 35 வருடங்களுக்கு மேலாக இழுத்தடிப்பு செய்து வருகின்றது. சமகாலத்திலும் இலங்கையின் ஜனாதிபதி இந்திய விஜயத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பில் '13 மைனஸ்' பற்றியே உரையாடியிருந்தார். இந்தியாவில் ரணில் விக்கிரமசிங்கா இரு தரப்பு சந்திப்பின் பின்னரான ஊடக அறிவிப்பில், 'நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான தனது பிரேரணையை மோடியுடன் கலந்துரையாடியதாகவும், மோடி தனது பாராட்டுக்களையும் வரவேற்பையும் தெரிவித்தாக' குறிப்பிட்டுள்ளார். எனவே ரணில் விக்கிரமசிங்காவின் உரையின்படி '13 மைனஸை' இந்திய பிரதமர் ஏற்றுள்ளதாகவே அமைகின்றது. எனவே வெற்று உரைகளில் எவ்வித முன்னேற்றகரமான நகர்வுகளையும் எதிர்பார்க்க இயலாது. 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி இலங்கை இனப்பிரச்சினை தீர்வாக கூட்டு சமஷ்டியை வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் ஈழத்தமிழர்களின் அபிலாசை மீளவொரு தடவை ஏமற்றப்பட்டுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். இவ்ஏமாற்றத்தை ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் வெகுவாக பாராட்டுவது, அவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தையே கேள்விக்குட்படுத்துகிறது. இந்தியாவின் முக்கியமான தேசிய பத்திரிகைகளில் ஒன்றான 'தி இந்து' இலங்கை ஜனாதிபதியின் பயணம் குறித்து எழுதியுள்ள 'இன்னமும் பூரணமாகவில்லை' (Still Incomplete) என்ற தலைப்பிலான ஆசிரியர் தலையங்கத்தில், இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் தமிழர் பிரச்னையால் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை வலியுறுத்தும் அதேவேளை, ரணில்-மோடி சந்திப்பு அதனை முழுமைப்படுத்தியிருக்கவில்லை என்பதையே வெளிப்படுத்தியுள்ளது. இது நரேந்திர மோடியின் எதிர்பார்க்கைக்கு பின்னாலுள்ள நம்பிக்கையீனத்தை கோடிட்டு காட்டுகின்றது. இப்பின்னணியில் தமிழரசியல் கட்சிகளின் வரவேற்பு உரையாடல்கள் அறிவீலித்தனத்தின் ஒரு பகுதியாகவே அமைகின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-