ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின் போனபார்டிச அரசியல் மரபை பேணுகிறரா? -ஐ.வி.மகாசேனன்-
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாறு இனமுரண்பாட்டு போக்கில், நீண்ட போரியல் வரலாற்றை பகிர்வதனால், இலங்கை அரசாங்கங்களின் எதேச்சதிகார போக்கிலான நடத்தைகள் பலவும் முரண்பாட்டு சூழலுக்குள் மறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அரசாங்கங்களின் செயற்பாடுகள், இலங்கை அரசாங்கங்களின் எதேச்சதிகார நிஜ வடிவத்தினை தோலுரித்து காட்டுவதாக அமைகின்றது. குறிப்பாக அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இந்நிலை விரைவாக அதிகரித்துள்ளது. அரசாங்கம், பொருளாதார மீட்சிக்கு அரசியல் ஸ்திரத்தன்மையை பேண வேண்டும் என்று கூறி, போராட்டங்களை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கான பலத்த ஆயுதம் ஏந்திய போலீஸ் மற்றும் இராணுவ வீரர்களை அது நிறுத்துகிறது. மேலும், மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு தடை போடும் வகையில் இறுக்கமான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இக்கட்டுரையும் 2023 செப்டம்பரில் வெளியிடப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு (Online Safety) மசோதாவினூடாக வெளிப்படுத்தப்படும் இலங்கை அரசாங்கத்தின் போக்கை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க-பொதுஜன பெரமுன அரசாங்கம் செப்டெம்பர்-19அன்று நிகழ்நிலை பாதுகாப்பு மசோதாவை வர்த்தமானியில் வெளியிட்டது. இது அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு மசோதா, நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்குள் கருத்து சுதந்திரத்தின் மீதான தடைகள் உள்வாங்கப்பட்டுள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவிற்கு இணையதளங்களைத் தடுப்பதற்கும், குறிப்பிட்ட நிகழ்நிலை இடங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்த இணைய சேவை வழங்குனர்களுக்கு(ISP) அறிவுறுத்துவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மசோதாவின் விதிகளுக்கு இணங்காததற்காக இணைய சேவை வழங்குனர்கள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஆணையம் அபராதம் விதிக்கலாம். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தேசிய பாதுகாப்பு, பொது அமைதி, உட்பட்ட சமூக அரசியல் விடயங்கள் தொடர்பான பதிவுகள் அல்லது விவாதம் தவறானது என ஆணைக்குழு கருதினால் மூன்று தொடக்கம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. ஆணைக்குழு கருதுவது என்பதில், குழப்பங்கள் ஏற்படாவிட்டாலும் கருதுகோளின் அடிப்படையிலேயே தண்டனைகள் உள்வாங்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவிற்கு உயர்நிலை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை அல்லது உத்தரவுகளை 24மணிநேரத்திற்குள் பின்பற்றத் தவறினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை வைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியிலேயே ஆணைக்குழுவினை சுற்றி பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் எதிர்க்கட்சிகளும் நிபுணர்களும் பொதுத்தளங்களில் முன்வைத்துவருகின்றனர். குறிப்பாக பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 'சமூக அவலங்களுக்கு எதிராக பிரசாரம் செய்வதற்கும் சமூக தளங்களை உருவாக்குவதற்கும் மக்களுக்கு உள்ள உரிமையை தடுப்பதே புதிய சட்டமூலத்தின் நோக்கமாகும்' என பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வாறே இலங்கை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, 'பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலங்கள் இலங்கையின் குடிமக்களின் பரந்த அளவிலான சாதாரண நடவடிக்கைகளின் மீது அதிகப்படியான நிறைவேற்று அதிகாரத்தை நிறுவனமயமாக்கும் முயற்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன' என கண்டித்துள்ளது. பொதுப்பார்வையில் காணப்படும் கருத்துகளுக்கு அப்பால் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தினை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவிடம் அதிகளவில் பகிரப்பட்டுள்ள அதிகாரம் ஜனநாயகத்திற்கான சவாலாக அமைகின்றது. குறிப்பாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள மசோதாவில் கருதுகோள்களின் அடிப்படையில் செயற்பட ஆணைக்குழுவினை அனுமதிப்பது, சாத்தியமான தவறான பயன்பாடு மற்றும் எதிர்ப்பை அடக்குதல் பற்றிய கவலைகளை எழுப்புகிறது. மேலும், ஆணைக்குழுவிற்கு எதிராக எவ்வித சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றைத் கூட தொடுக்க முடியாது எனும் ஏற்பாடுகள் ஆணைக்குழுவின் எதேச்சதிகார செயற்பாட்டிற்கே வழிகோலக்கூடியதாகும். ஆங்கில நாவலாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல் 1949ஆம் ஆண்டு, '1984' என்ற புத்தகத்தை எழுதினார். அதில் 'பெரிய அண்ணா' (Big Brother) எனும் மேலானவர் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதைப் பற்றி எழுதினார். அது தீர்க்கதரிசனமாக இருந்தது. இது ஒரு அறிவியல் புனைகதை ஆனால் இப்போது நிஜம். முன்மொழியப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு மசோதா பெரிய அண்ணா பார்ப்பதற்கு அப்பாற்பட்டது. வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு இல்லாத நாட்டில், இந்த அமைப்பு தீவிர நடவடிக்கைகளை எடுக்கக்கூடியதாகும். இலங்கையின் அண்மைக்கால வரலாறு, சமூகம் மற்றும் அரசியலில் அமைதியின்மை மற்றும் சமத்துவமின்மைக்கான அடக்குமுறை அணுகுமுறைகளால் ஏற்படும் பயங்கரமான வன்முறை மற்றும் சமூக மற்றும் பொருளாதார அழிவுகளால் குறிக்கப்படுகிறது. இந்த பின்னணியில், ஏற்கனவே நாட்டின் ஜனநாயகத்தின் அளவு சரித்திரத்தில் மிகக் குறைந்த நிலையில் இருக்கும் நேரத்தில், கருத்து வேறுபாடுகளை நசுக்குவதற்கும், சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அதிக ஆற்றலைக் கொண்ட ஆபத்தான சட்ட மசோதாவை முன்வைத்துள்ளமை ஜனநாயகத்தை சொல்லளவிலும் கொன்றொழிக்கும் செயற்பாடாகவே அமைகின்றது.
இரண்டாவது, நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மசோதாவில் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை வரையறுப்பதில் காணப்படும் தெளிவின்மை எதேச்சதிகார ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய கட்டமைப்பை உருவாக்க வழிகோலுவதாகவே அமைகின்றது. தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை வரையறுப்பதில் மசோதா தெளிவுபடுத்தவில்லை என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இது முறையான மற்றும் தீங்கு விளைவிக்காத பொருட்களின் தணிக்கைக்கு வழிவகுக்கும். நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவுக்கு எது தவறு, எது சரி என்பதைத் தீர்மானிக்கும் முழுமையான அதிகாரத்தை நிகழ்நிலை பாதுகாப்பு மசோதா வழங்க முயல்கிறது. வதந்திகள், பொய்கள், சூழ்ச்சிகள், ஊழல்கள் மற்றும் நெப்போட்டிச அரசியல் இயல்புகளை கொண்டமைந்த இந்நாட்டில், இதுபோன்ற ஒரு மசோதாவை அமுல்படுத்துவது பேரழிவுக்கான செய்முறையாகும். தி சண்டே மார்னிங் (The Sunday Morning) ஆங்கில நாளிதழுக்கு கருத்துரைத்துள்ள ஊடகப் பகுப்பாய்வாளர் நாலக குணவர்தன, உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவிற்கும் ஜார்ஜ் ஆர்வெல்லின் '1984' புணைகதை நாவலில் உள்ள 'சத்திய அமைச்சுக்கும்' (Ministry of Truth) இடையே ஒரு சமாந்தர பகுப்பாய்வை அடையாளப்படுத்தியுள்ளார். '1984' புணைகதை நாவலில், கற்பனையான சர்வாதிகார அரசான ஓசியானியாவின் அரசாங்கம் சந்தேகத்திற்குரிய வகையில் பெயரிடப்பட்ட உண்மை அமைச்சகத்தைக் கொண்டுள்ளது. அதன் உண்மையான நோக்கம் பிரச்சாரம் மற்றும் திருத்தல்வாத வரலாறு ஆகும். அவ்வாறே இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மசோதாவும், 22 மில்லியன் இலங்கையர்களுக்கு எது உண்மை எது பொய் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும், நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவை அமைக்க முன்மொழிகிறது.
மூன்றாவது, இலங்கையில் கருத்துச்சுதந்திரம் என்பது தமிழ்ப்பரப்பில் நீண்டகாலமாகவே முடக்கப்பட்டள்ள நிலையில், தற்போது முழு இலங்கைத்தீவு மீதும் கருத்து சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலை நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மசோதா ஏற்படுத்துகின்றது. வெளிப்படையான பேச்சு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு இன்றியமையாத கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்க இந்த மசோதா போதுமான பாதுகாப்புகளை வழங்காது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், முன்மொழியப்பட்ட சட்ட மசோதாவின் சில உட்பிரிவுகள் கருத்து வேறுபாடுக்கான அடிப்படை உரிமையை நசுக்க வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தமிழ்ப்பரப்பில் முகநூல் கணக்கு பதிவுகளை கொண்டே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் பல இடம்பெற்றுள்ளது. இக்கருத்து சுதந்திரத்தின் மீதான தடையை தென்னிலங்கை அசண்டையீனமாக கடந்து சென்றதன் பலனாகவே, தற்போது அரசாங்கம் தனது அரசியல் இருப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள தென்னிலங்கையின் மீது கருத்து சுதந்திரத்திற்கான தடையை நிறுவனமயப்படுத்த முயலுகின்றது. இது இலங்கை அரசாங்கங்களின் வரலாற்றின் நீட்சியே ஆகும்.
நான்காவது, நிகழ்நிலை பாதுகாப்பு மசோதா நிறைவேற்று அதிகாரங்களை விரிவுபடுத்துவதை ஆதரிக்கிறது. 1994ஆம் ஆண்டிலிருந்து இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான தேர்தல் விஞ்ஞாபன உள்ளடக்கமாக நிறைவேற்றுத்துறை ஒழிப்பு கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து கட்சிகளதும் பிரச்சாரமாக காணப்படுகின்றது. எனினும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின் நிறைவேற்றுத்துறையின் அதிகார வேட்கை ஆட்சியாளர்களை தொடர்ச்சியாக அதனை பலப்படுத்துவதற்கான முன்னகர்வுகளை மேற்கொள்ளவே வழியேற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையை உருவாக்கிய ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிற்கு பிற்பட நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் ஆட்சியாளராக காணப்படுகின்றார். ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது முதல் தேர்தல்களை இழுத்தடிப்பு செய்து தனது அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதென முழுமையாக ரணில் விக்கிரமசிங்கா நிறைவேற்றுத்துறையின் அதிகார இயங்குநிலைக்குள்ளேயே செயற்படுகின்றார். கடந்த காலங்களில் குறிப்பாக 2015ஆம் ஆண்டு 19வது அரசியலமைப்பு சீர்திருத்தினூடாக ஆணைக்குழு மீதான அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் பராப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்கா, ஜனாதிபதியாக தற்போது நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு மீதான அதிகாரத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க முயலுகின்றார். இது நிறைவேற்று அதிகாரத்தை மேலும் ஒருமுகப்படுத்துவதாக காணப்படுகின்றது.
எனவே, தாராள தோற்றத்தை வெளிப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் நடத்தைகள் இலங்கையில் ஆழமாக வேரூன்றிய போனபார்டிச (Bonapartism) மரபுக்குள் சுழல்;வதையே நிகழ்நிலை பாதுகாப்பு மசோதா முன்மொழிவு வெளிப்படுத்துகின்றது. ரணில் விக்கிரமசிங்காவின தாராள தோற்றத்தின் போலித்தன்மைகள் கடந்த காலங்களில் இப்பதிவுகளிலேயே அதிக உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமகால நிகழ்நிலை பாதுகாப்பு மசோதா ரணில் விக்கிரமசிங்காவின் போனபார்டிச அரசியல் இயல்புக்கான சான்றாக அமைகின்றது. பின்காலனிய அரசியல் சமூகங்களில் எழுச்சி பெற்ற ஒர் அரச கட்டமைப்பாக பொனப்பாட்டிசம் அமைகின்றது. இது பற்றிய நவீன அதிக புரிதலை பாகிஸ்தானில் பிறந்து பிரித்தானியாவில் அரசியல் - சமூகவியல் மற்றும் மானிடவியலில் புலமை கொண்ட ஹம்சா அலவி (Hamza Alavi) என்பவர் முன்வைத்துள்ளார். ஒப்பீட்டடிப்படையில் சுய அதிகாரம் கொண்ட அரசுகளாகவும் எந்த வர்க்கத்தினதும் கருவியாக சொல்ல முடியாத அரசாகவும் அலவி விபரிக்கின்றார். இச்சிந்தனையின் ஆரம்பம், ஜெனரல் நெப்போலியன் போனபார்டேயின் ஆட்சியியல் தொடர்ச்சியாக அமைகின்றது. பிரான்சிய புரட்சியின் குழப்பமான திகிலுக்கு நடுவில், ஒரு மனிதன் தனது அடங்காத விருப்பத்தைத் திணிக்கவும், எந்தக் குழப்பத்தையும் மிஞ்சும் வகையில் ஒழுங்கைக் கொண்டுவரவும் முயன்றான். ஜெனரல் நெப்போலியன் போனபார்டே பிரான்ஸின் வெற்றுப் பலகையை தனக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடிந்தது. அவரது முழுமையான இராணுவ மேதை பல அற்புதமான வெற்றிகளுக்கு வழிவகுத்தது. பிரெஞ்சுக்காரர்கள் வெற்றியின் மகிமையில் மூழ்கி, தலைமைத்துவத்திற்காக இளம் ஜெனரலைப் பார்க்கத் தொடங்கினர். ஒரு புத்திசாலித்தனமான ஆட்சியில், போனபார்டே ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவினார். அது ஜனநாயகத்தின் மாயையால் மெல்லியதாக மறைக்கப்பட்டது. இலங்கையிலும் இனமுரண்பாட்டு குழப்பத்துக்குள் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தங்கள் சுய அதிகாரம் எண்ணங்களுக்குள் வலுவான போனபார்டிச அரசை கட்டமைத்துள்ளனர். 'வாளால் ஆட்சி' என்பது போனபார்டிசத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக கார்ல் மார்க்ஸ் அடையாளப்படுத்துகின்றார். இலங்கையிலும் அடக்குமுறை எனும் வாளால் ஆட்சி அரசாங்கங்களின் பகுதியாகவே இருந்து வந்துள்ளது. இதுவரை தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கிற்குள் காட்சியாக அமைந்தது. தற்போது தெற்கிலும் புலப்பட ஆரம்பித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்காவின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமும் ஓர் வாளே ஆகும்.
Comments
Post a Comment