ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் இயலாமையும் சிவில் சமுகத்தின் எழுச்சிக்கான அவசியப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் ஈழத்தமிழர்களின் இருப்பானது தினசரி ஏதொவொரு நெருக்கடிக்கு உள்ளாகும் செய்திகளே சமீபத்திய செய்தி நாளேடுகளை நிரப்பீடு செய்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே ஆக்கிரமிப்புக்கள் மற்றும் இனவாத பிரச்சாரங்களால் இனவன்முறைக்கான தூபமிடப்படுவதாக புலனாய்வுத்தகவல்கள் வெளியாகி ஈழத்தமிழர்களிடையே அச்சத்தை உருவாக்கியிருந்தது. தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கான உயிர் அச்சுறுத்தலும், நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையும் ஈழத்தமிழர்களின் இருப்பையே கேள்விக்குட்படுத்தும் உரையாடல்களை பொதுவெளியில் உருவாக்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறையின் மீதான நிறைவேற்றுத்துறையின் ஆதிக்கம் வரலாற்றில் பல பதிவுகளை பகிர்கின்றது. எனினும் இனப்பாரபட்ச உரையாடல்கள் பெருமளவில் பொதுவெளியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இந்நிலையிலேயே முல்லைத்தீவு நீதிபதிக்கான அச்சுறுத்தல் இலங்கையின் சமீபத்திய பேரினவாதத்தின் ஆதிக்கத்தையே வெளிப்படுத்துகின்றது. எனினும் பேரினவாதத்தின் ஆதிக்க மனோநிலைக்கு எதிரான தமிழ் அரசியல் தரப்பின் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களை பாதுகாக்கும் வியூகத்தை கொண்டுள்ளதா என்பதில் பொதுமக்களிடையே விசனங்கள் காணப்படுகின்றது. இப்பின்னணியிலேயே, ஈழத்தமிழர்களை சமகால நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்கும் திறனை தமிழரசியல் தரப்பு கொண்டுள்ளதா என்பதை தேடுவதாகவே இக்கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர்-28அன்று Tamil Guardian இணையத்தளத்தில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜா மரண அச்சுறுத்தல் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக தனது பதவிகளை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்ற செய்தி பிரசுரிக்கப்பட்டது. நீதிபதிக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தம் முக்கியமாக சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை தொல்லியல் தள வழக்குகளில் அவரது ஈடுபாட்டிலிருந்து உருவாகின்றன. குருந்தூர்மலை விகாரை விவகாரம் தொடர்பான அவரது சமீபத்திய தீர்ப்பைத் தொடர்ந்து, முந்தைய உத்தரவுக்கு இணங்கத் தவறியதற்காக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை நீதிமன்ற அவமதிப்புக்கு உட்படுத்தினார். இந்த வழக்குகளில் தனது தீர்ப்பை மாற்றுமாறு அரசாங்கத்தில் உள்ள பல்வேறு நபர்கள் தமக்கு பெரும் அழுத்தத்தை பிரயோகித்ததாக நீதிபதி சரவணராஜா வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சட்டமா அதிபர் கடுமையான அழுத்தத்தை பிரயோகித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பாராளுமன்ற விவாதங்கள் மற்றும் ஏனைய பொது மேடைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர விடுத்த அச்சுறுத்தல்கள் குறித்து அவர் குறிப்பாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல் சூழலிலும், நீதிபதிக்கான பாதுகாப்பு கணிசமாக குறைக்கப்பட்டு, அவர் இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்துள்ளார். இவ்இடைவிடாத அழுத்தங்கள் செப்டம்பர்-23அன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய வழிவகுத்ததுடன், தனது சொந்த மற்றும் தனது குடும்பத்தின் பாதுகாப்புக்கு பயந்து, நாட்டை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்வுகள் வடக்கு-கிழக்கில் நீதித்துறை சுதந்திரம் மற்றும் தமிழ் மக்களின் பாதுகாப்பு பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளன.
இனப்பாரபட்சத்துடனான நீதிபதிக்கான உயிர் அச்சுறுத்தல் தமிழ் மக்களிடையே உளவியல்ரீதியாகவும் அதிக பாதுகாப்பற்ற எண்ணங்களை உருவாக்கி உள்ளது. இந்நெருக்கடி காலங்களில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவதாக அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கும் அரசியல் தரப்பிடமே குவிக்கப்படுகின்றது. எனினும் தமிழ் அரசியல் தரப்புக்கள், நீதிபதிக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகளுக்கு ஆற்றியுள்ள எதிர்வினைகள் அதிக விவாதங்களை உருவாக்கி உள்ளது.
முதலாவது, தமிழ் அரசியல் தரப்பின் செயற்பாடுகள் காலந்தாழ்ந்தாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நீதிபதி மீதான வசைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் இப்பகுதியிலேயே கடந்த காலங்களில் உரையாடப்பட்டிருந்தது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர ஜூலை மாத பாராளுமன்ற உரையில், 'குருந்தூர்மலையின் தொல்பொருள் பௌத்த பாரம்பரியத்தை கேள்வி கேட்க இந்த தமிழ் நீதிபதிகளுக்கு உரிமை இல்லை. எங்களை வெளியேறச் சொல்லும் உரிமையும் அவருக்கு இல்லை. இலங்கை ஒரு சிங்கள பௌத்த தேசம் என்பதை தமிழ் நீதிபதிகள் மனதில் கொள்ள வேண்டும்' எனக்கூறியிருந்தார். தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாத பாராளுமன்ற உரையில், 'முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவ்வாறானவரால் எவ்வாறு சரியான முறையில் செயற்பட முடியும்' எனக்கேள்வி எழுப்பியுள்ளார். சரத் வீரசேகராவின் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிரான வசைபாடல்கள் அச்சுறுத்தல்கள் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி பகிரங்க உரையாடலை பெற்ற போதிலும், தமிழ் அரசியல் தரப்பில் காத்திரமான எதிர்வினைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. தமிழ் அரசியல் தரப்பு, பாராளுமன்ற கண்டன உரைகளுடனேயே தமது உச்சபட்ச எதிர்வினைகளை ஆற்றியிருந்தார்கள். அரச இயந்திரத்தின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாது தமிழ் மக்களின் உரிமையை தனது நீதிச்செயற்பாடுகளுக்கு உட்பட்ட வகையில் பாதுகாக்க செயற்பட்ட நீதிபதிக்கான அச்சுறுத்தல் காலப்பகுதியில் நீதிபதிக்கான நம்பிக்கையையோ, பாதுகாப்பையோ வழங்க தமிழ் அரசியல் தரப்பு திராணியற்றவர்களாக இருந்துள்ளார்கள் என்பதே யதார்த்தமானதாகும்.
இரண்டாவது, தமிழ் அரசியல் தரப்பின் போராட்ட வடிவங்களும் காலத்துக்கு பொருத்தமற்றதாக பொதுவெளியில் அதிக வாதங்களை உருவாக்கி உள்ளது. நீதிபதி மீதான அச்சுறுத்தலால் நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறிய பின்னராவது மக்கள் போராட்டத்தை ஒழுங்கு செய்ய முனைந்த தமிழ் அரசியல் கட்சிகளின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். எனினும் இனப்பாரபட்ச ரீதியாக சிங்கள பேரினவாத அரச இயந்திரத்தினூடாக நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அடையாள போராட்டம் பொருத்தமானதா எனும் கேள்விகள், தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல் தரப்பு மீதான அவநம்பிக்கைகளையே உருவாக்கி உள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளின் அளவும் ஒற்றுமையும் முக்கியமானதாகும். இதன் விளைவாக, எதிர்க்கட்சிகளின் பலம் மற்றும் ஒற்றுமையை அதிகரிப்பதன் மூலம் சர்வதேச சமூகம் ஜனநாயகத்தை வளர்ப்பதற்கு ஆதரவளிக்க முடியும். அந்த அடிப்படையில் ஒக்டோபர்-04அன்று இடம்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் இணைந்து கொண்டமை வரவேற்கத்தக்கதாகும். எனினும் தமிழ் மக்களின் இருப்பே நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சூழலில் அடையாள போராட்டங்களுடன் மட்டுப்படுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்துவது தமிழினத்தின் பலவீனத்தை பொதுவெளிக்கு கொண்டு வருவதாகவே அமைகின்றது. இது பேரினவாத சக்திகள் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையை பயன்படுத்த வழிகோலுவதாகவே அமையக்கூடியதாகும். நீதிபதிக்கான நீதியை கோரி முல்லைத்தீவு சட்டத்தரணிகள் காலவரையறை இன்றி நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்துள்ளமை போன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த கால வரலாறுகளிலிருந்து பாடங்களை கற்பதனூடாக காத்திரமான போராட்ட வியூகங்களை தேர்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
மூன்றாவது, தமிழ் அரசியல்வாதிகளின் முரணான உரையாடல்கள் தமிழ் மக்களிடையே அவநம்பிக்கைகளையே உருவாக்குகின்றது. மேய்ப்பானற்ற மந்தைகள் என்ற உணர்வுக்குள் தமிழ் மக்கள் அரச அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தமது கடமைகளை நகர்த்தி செல்வதே வடக்கு-கிழக்கின் அரச உத்தியோகத்தர்களின் யதார்த்தமானதாக காணப்படுகின்றது. விதிவிலக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறை தலைவர் கலாநிதி குருபரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா போன்ற ஒருசிலரே அரச இயந்திரத்தின் அச்சுறுத்தலை பகிரங்கப்படுத்தக்கூடிய வகையிலே செயற்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான ஆதரவை பாதுகாப்பை கொடுப்பதன் மூலமே தமிழ் மக்களிடையே நம்பிக்கை உருவாக்கப்பட்டு இவர்களைப் போலவே பல அரச உத்தியோகத்தர்களும் அரசின் ஒடுக்குமுறையை புறக்கணித்து தமிழ்த்தேசத்துக்கான நீதியான செயற்பாடுகளை துணிந்து மேற்கொள்ள முன்வருவார்கள். எனினும் பாராளுமன்ற உறுப்பினர்; க.வி.விக்னேஸ்வரனின், நீதிபதியின் பதவி விலகல் தொடர்பான கருத்தும் செயற்பாடும் தமிழ் மக்களை குழப்புவதாக அமையப்பெற்றுள்ளது. சிங்கள தரப்பின் வசைபாடலுக்கு ஆதரவளிப்பதாக அமையப்பெற்றுள்ளது. முன்னாள் நீதியரசராக இலங்கையின் நீதித்துறை மீது நிறைவேற்றுத்துறையின் கட்டுப்பாடுகளை அழுத்தங்களை அறிந்திருந்தும், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதியாக இலங்கையில் சமகாலத்தில் அதிகரித்துவரும் இனவிரோத பிரச்சாரங்களை அறிந்திருந்தும், முல்லைத்தீவு நீதிபதியின் மொழிப்புலமையில் சந்தேகத்தை வெளிப்படுத்தி அரச ஒடுக்குமுறைக்கு ஆதரவான உரையாடலை முன்வைத்துள்ளமை தமிழ் மக்களிடையே அவநம்பிக்கையை உருவாக்கும் செயலாகவே அமைகின்றது. அதேவேளை தனது கருத்திற்கு எவ்வித மறுப்பையும் அல்லது விளக்கத்தையும் வழங்காது நீதிபதிக்கான நீதி கோரிய அரசியல் கட்சிகளின் மனித சங்கிலி போராட்டத்திலும் விக்னேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார். விக்னேஸ்வரின் இவ்இரட்டை வேடம் தமிழ் மக்களிடையே அதிக விசனங்களை உருவாக்கி உள்ளது.
தமிழ் அரசியல் கட்சிகளின் அசமந்தமான நடத்தைகள் அவர்களின் இயலுமையையே வெளிப்படுத்துவதாக அமைகின்றது. தமிழ் மக்கள் நீண்ட காலமாக தமது சுயநிர்ணய உரிமைக்கு போராடும் இனமாகவும், 2009களில் பாரிய இன அழிப்பை சந்தித்துள்ள இனமாகவும் பாரிய துன்பங்களுக்குள் பல அவநம்பிக்கைகளுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களிடையே மீள நம்பிக்கையை கட்டமைப்பதிலும், தமிழ் மக்களை திரட்சியாக்கி ஓரணியில் தேசிய விடுதலைப்போராட்டங்களுக்குள்ளும் உள்வாங்கும் பொறுப்பு அரசியல் பிரதிநிதிகளிடமே காணப்படுகின்றது. இதுதொடர்பில் இப்பகுதியிலும் பொதுவெளியிலும் பல உரையாடல்களை தமிழ் அரசியல் ஆய்வாளர்களாலும் புலமையாளர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற ஆசனத்தை அலங்கரிப்பவர்களாக தேர்தல் அரசியலுக்குள் மட்டுப்படுத்தப்பட்டவர்களாகவே காணப்படுகின்றார்கள். தேசிய அரசியலை முற்றாக நிராகரிக்கும் நிலையே காணப்படுகின்றது. தமிழ் மக்களிடம் நிறைந்துள்ள அவநம்பிக்கைகளை களைந்து தமிழ் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கி தமிழ் மக்களின் திரட்சியை உருவாக்க தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முன்னுதாரணமான வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கடந்த காலங்களில் தமிழ் அரசியல் பரப்பிலேயே நிறைவான அனுபவங்கள் காணப்படுகின்றது. செல்வநாயகம், அமிர்தலிங்கம், E.M.V. நாகநாகன், வி.தர்மலிங்கம் மற்றும் வன்னியசிங்கம் போன்றவர்கள் அறப்போராட்டங்களில் மக்களுக்கு தலைமை தாங்கி முன்னிலைப்படுத்திய வரலாறுகள் உண்டு. 1961 பெப்ரவரி-20இல் பழைய பூங்காவில் யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்ற சத்தியாகிரகத்தை காண திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை கலைக்க பொலிஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். நாகநாதனின் தலையில் பொலிஸ்காரர் மழைபோல் தடியால் தாக்கிய போது, நாகநாதன் உடைந்த தடியடித் துண்டுகளை நினைவுப் பொருளாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல இருந்தார். மேலும் பொலிஸ் வாகனத்தின் சில்லுகளுக்கு முன்பாக சென்று படுத்தார். இச்சம்பவம் தமிழர்களிடையே நாகநாதனுக்கு ஒரு பிரபலமான பிம்பத்தை உருவாக்கியது. அதன்பிறகு அவர் 'இரும்பு மனிதன்' என்று புகழப்பட்டார். இவ்வாறான பிம்பங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும் விதைத்தது. இந்நம்பிக்கைகளுக்கு பின்னாலேயே பல அணிதிரட்டல்களும் உருவானது. எனினும் இன்று இவ்வாறான நம்பிக்கையை கொடுக்கக்கூடிய வகையிலான செயற்பாட்டை எந்தவொரு அரசியல் பிரதிநிகளும் தொடர தயாரில்லாத நிலையிலேயே அடையாளப்போராட்டங்களுக்குள் தேர்தல் அரசியலை மையப்படுத்திய அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றார்கள்.
எனவே, தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிக்குள் பாதுகாப்பற்ற சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளமையையே சமகால நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றது. அரசியல் பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கு சரியான பாதுகாப்பு அரணை வழங்க தவறுகையில், தமிழ் சிவில் சமூகங்கள் வலுவான கட்டமைப்பினூடாக பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டி உள்ளார்கள். போதுமான எதிர்ப்பாளர்கள் இருந்தால், அதிகாரத்தில் இருப்பவர்களின் கொள்கைகள் செயல்படாமல் போகலாம். 1990இல் இங்கிலாந்து அரசாங்கம் பிளாட்-ரேட் வாக்கெடுப்பு வரியை அறிமுகப்படுத்தியபோது, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் மற்றும் வரி செலுத்த மறுத்தனர். மறுத்த அனைவருக்கும் வழக்குத் தொடர முடியாது என்பது தெளிவாகியது. குழப்பம் அச்சுறுத்தியது. மேலும் அரசாங்கம் வரியை இரத்து செய்தது. இலங்கை அரசாங்கத்தின் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ் மக்களின் திரட்சியே வலுவான பாதுகாப்பான அரணாகும்.
Comments
Post a Comment