சீனாவிற்கான பதிலீட்டு நகர்வை இந்தியாவின் பொருளாதார வழித்தடம் கட்டமைக்குமா? -சேனன்-

சர்வதேச அரசியல் ஒரு நிலைமாறுகால சூழலுக்குள் பயணிக்கிறது. வல்லாதிக்கத்தை மையப்படுத்தி அரசுகளுக்கு இடையிலான போட்டியில் புதிய மூலோபாயங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் சர்வதேச அரசியல் களத்தை நிரப்பீடு செய்கின்றது. நாடுகளின் கூட்டாண்மைகள், மாநாடுகள் அதிக எதிர்பார்ப்புக்களையும் உருவாக்கி வருகின்றது. குறிப்பாக செப்டெம்பர் இரண்டாம் வாரத்தில் இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற ஜி-20 மாநாடும் முடிவுகளும் சர்வதேச அரசியலில் புதிய உரையாடல்களை ஆரம்பித்துள்ளது. பிரதானமாக இந்தியாவை மையப்படுத்தி இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கட்டுரையும் இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா மெகா பொருளாதார வழித்தடத்தை தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி செப்டெம்பர்-09அன்று அறிவித்தார். இந்த திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (The India Middle East Europe Economic Corridor - IMEC) என்பது இரண்டு கண்டங்களில் பரவியுள்ள ஒரு நாடுகடந்த புகையிரத மற்றும் கப்பல் பாதை ஆகும். இது ஆசியா, அரேபிய வளைகுடா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே மேம்பட்ட இணைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் தளமாகவே திட்டத்தின் பங்காளி தலைவர்களால் பிரச்சாரப்படுத்தப்படுகின்றது. புதிய பொருளாதார வழித்தடம் பற்றிய அறிவிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 'இன்று நாம் அனைவரும் ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று கூட்டாண்மையை அடைந்துள்ளோம். வரும் காலங்களில், இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கிய ஊடகமாக இது இருக்கும். இந்த வழித்தடம் முழு உலகத்தின் இணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு புதிய திசையை வழங்கும்' எனத் தெரிவித்திருந்தார். 

புதிய பொருளாதார வழித்தடமாக பன்னாட்டு புகையிரத மற்றும் துறைமுக ஒப்பந்தத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் மகிழ்ச்சியடைந்தனர். பைடன் இதை 'மிகப் பெரிய விடயம்' என்று பாராட்டியிருந்தார். நரேந்திர மோடி அதை 'கனவுகளின் கலங்கரை விளக்கம்' என்று அழைத்தார். மற்றும் லேயன் அதை 'கண்டங்களுக்கும் நாகரிகங்களுக்கும் இடையிலான பாலம்' என்று கனவுடன் விவரித்தார். இவ்வாறான பங்காளர்களின் உரைகளைக்கடந்து இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதனூடாகவே அதன் இயலுமைகளையும் அறியக்கூடியதாக அமையும்.

முதலாவது, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் சீனா எதிர் அமெரிக்க களமாகவே முதன்மைப்படுத்தப்படுகின்றது. தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ரஷ்சியா மற்றும் ஐரோப்பாவுடன் சீனாவை இணைக்கும் உலகளாவிய உள்கட்டமைப்பு கட்டுமான திட்டமான சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சிக்கு (BRI) அமெரிக்க எதிர்ப்பாகவும் இந்தியாவை மையப்படுத்திய பொருளாதார வழித்தடம் பலரால் பார்க்கப்படுகிறது. இந்தியா தொடர்ந்து சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியினை எதிர்க்கிறது. இந்தியா அதில் இணைய மறுத்த நிலையில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் வழியாக செல்கிறது. இது சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியை இந்திய எதிர்க்க பலமான காரணமாக அமைகின்றது. மேலும், ஜி-07 நாடாக முதலில் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியில் 2019இல் இணைந்த இத்தாலி தனது வெளியேற்றத்தை அறிவித்துள்ளதுடன், இந்திய பொருளாதார வழித்தடத்தில் இணைந்துள்ளது. The Guardian  அறிக்கையின்படி, இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியிலிருந்து விலகப் போவதாக வெளியிட்ட அறிவிப்பில், '2019 இல் எடுக்கப்பட்ட பட்டி மற்றும் சாலை முன்முயற்சி முடிவை ஒரு கொடூரமான முடிவு' என்று அழைத்தார்.

இரண்டாவது,  இந்தியாவை மையப்படுத்தியதாக அமெரிக்கா ஆதரவுடையதாக இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் உரையாடப்பட்டாலும், இத்திட்டத்தின் பிரதான நலனை பகிர்வதாக அமெரிக்காவே காணப்படுகின்றது. Foreign Policy  இதழின் தலைமை ஆசிரியர் ரவி அகர்வால் பிபிசியிடம் கருத்து தெரிவிக்கையில், 'புகையிரதம் மற்றும் கப்பல் வலையமைப்புக்கள் மூலம் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை வலுப்படுத்த தொடங்கப்பட்ட திட்டம், பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் அதே வேளையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையையும் கூறுகிறது' எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பனிப்போர் கூட்டாளிகள் மற்றும் ஒற்றைமைய அரசியலின் பிரதான களம் என்பவற்றை தொடர்ச்சியாக தனது நலனுக்குள் பேணிடவே இந்தியாவை மையப்படுத்திய மேற்காசிய மற்றும் ஐரோப்பா பொருளாதார வழித்தடம் கட்டமைக்கப்பட்டுள்ளமையே புலப்படுகின்றது. திட்டத்தின் ஒரு பகுதியாக குறிப்பாக ஆதரவு அரசாச இருப்பதன் மூலம் அமெரிக்கா பொருளாதார ரீதியாகப் பயனடையாது. ஆனால் வளர்ந்து வரும் சீன விஸ்தரிப்புவாதத்தில் ஒரு தடையை போடுவதனூடாக அமெரிக்கா தனது இராஜதந்திர இருப்பைக் குறிக்கிறது. மேற்காசியா புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகும், அங்கு பல தசாப்தங்களாக அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது, ஆனால் இது இப்போது பல காரணிகளால் சவால் செய்யப்படுகிறது. அதன் 70மூ எண்ணெய் தேவைகளுக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் சீனா, மேற்கு ஆசியாவில் தனது கவனத்தை மேம்படுத்துகிறது. அமெரிக்காவின் வளைகுடா அரபு நட்பு நாடுகளின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகவும், பிராந்தியத்தில் ஒரு பெரிய முதலீட்டாளராகவும் சீனா உருவெடுத்துள்ளது மட்டுமல்லாமல், அமைதியை ஏற்படுத்துபவராக ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க விருப்பம் காட்டியுள்ளது. இது ஈரான் சவூதியின் நல்லிணக்க ஒப்பந்தத்தில் தெளிவாகத் தெரிகிறது. இந்த சவாலுக்கு அமெரிக்காவின் பதில், பிராந்தியத்தில் அதன் நட்பு நாடுகளுக்கு இடையே நெருக்கமான உறவுகளை உருவாக்குவதும், அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதும் ஆகும். இந்த பின்னணியிலேயே சீனாவுடன் போட்டியிடும் பொருளாதார ஈடுபாடு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புதிய விதிகளை எழுதுவதற்கு இந்தியாவை ஒரு பெரிய நிலையான பங்காளியாக அமெரிக்கா கொண்டு வருகின்றது. அமெரிக்காவின் பந்தயத்தை எடுக்க இந்தியா தயாராக இருப்பதையே புதிய பொருளாதார வழித்தடம் திட்டத்தின் அறிவிப்பு வெளிப்படுத்தி உள்ளது.

மூன்றாவது, இந்தியா மற்றும் அமெரிக்கா முறையே தமது தென்னாசிய மற்றும் மேற்காசிய அரசுகளின் முக்கியத்துவத்தை மலினப்படுத்துவதற்கான வாய்ப்பாக புதிய பொருளாதார வழித்தட முயற்சிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.  துருக்கி ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் தரைமார்க்க பாதையாக வரலாற்றில் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை பகிருகின்றது. இப்புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை கொண்டே துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் நேட்டோ அணிக்குள் இருந்து கொண்டு ரஷ;சிய மற்றும் சீனாவுடன் நட்பு பாராட்டும் வெளியுறவுக்கொள்கைளை கட்டமைத்திருந்தார். இது அமெரிக்காவிற்கு பெரு நெருக்கடியாக அமைந்தது. இந்த பின்னணயிலேயே ஆசிய-ஐரோப்பாவை இணைக்கும் புதிய பொருளாதார வழித்தடத்தில் அமெரிக்கா துருக்கியை தவிர்த்து இஸ்ரேலிய துறைமுகமான ஹைஃபா கிரீஸில் உள்ள பைரேயஸ் துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கப்பட்டு இறுதியில் ஐரோப்பாவுடன் இணைக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பின்னணியில் எர்டோகன் இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கு தலைமை தாங்கினார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 'துருக்கி இல்லாமல் வழித்தடம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம். நாங்கள் ஒரு முக்கியமான உற்பத்தி மற்றும் வர்த்தக மையம். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி போக்குவரத்துக்கு மிகவும் வசதியான பாதை துருக்கி வழியாக செல்ல வேண்டும்.' எனத்தெரிவித்துள்ளார். மேலும், துருக்கிய சிந்தனைக்குழுவொன்றிற்கு தலைமை தாங்கும் முன்னாள் இராணுவ அதிகாரியான கலாநிதி. குரேய் அல்பர் துருக்கியை புறக்கணித்து மேற்கொள்ளப்படும் கிழக்கு-மேற்கு இணைப்பு திட்டங்கள் கடந்த காலத்தில் நிறைவேற்றப்படவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். இவ்வாறே இந்தியா தனது எதிரியின் வரலாற்று முக்கியத்துவத்தை நீக்கும் வகையில் திட்டத்தை வடிவமைத்துள்ளது. மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் தரைவழி இணைப்பு மீதான பாகிஸ்தானின் வீட்டோவை சிதைத்து கிழக்கு-மேற்கை இணைப்பதாக புதிய பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

நான்காவது, ஜி-20 மாநட்டின் விளிம்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் செயற்றிறன் கடந்த கால அனுபவங்களினடிப்படையில் நம்பிக்கையீனத்தை உருவாக்குவதாகவே அமைகின்றது. சீனா தனது பட்டி மற்றும் சாலை முன்முயற்சியை தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பயனுள்ள மாற்று திட்டங்களை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் அதன் அடுத்த நகர்வுகள் பலதும் விமர்சனத்திற்குரியதாகவே காணப்படுகின்றது. சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சிக்கு பதிலீடாக 2021ஆம் ஆண்டு ஜி-07 மாநாட்டில் Build Back Better World  (B3W) எனும் கட்டமைப்பு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை பிரதானப்படுத்தி இருந்தது. எனினும் இதுவரையில் B3W-இல் ஆரோக்கியமான முன்னேற்றம் எதனையும் அவதானிக்கக்கூடியதாக இல்லை. அவ்வாறே ஆகஸ்ட் 2022இல் ஜி-07 உச்சிமாநாட்டில் பட்டி மற்றும் சாலை முன்முயற்சிக்கு பதிலீடாக மற்றொரு முயற்சியாக உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீட்டிற்கான கூட்டாண்மை (PGII) என்பது ஆரம்பிக்கப்பட்டது. வளரும் நாடுகளில் இணைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான ஒரு உள்கட்டமைப்பு முயற்சியாகும். அக்கூட்டாண்மையின்  ஒரு பகுதியாகவே புதிய இந்திய-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு வருடத்திற்குப் பிறகு கையெழுத்தாகியுள்ளது. மேலும், கிரிஃபித் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவு நிபுணர் பேராசிரியர் இயன் ஹால், 'பட்டி மற்றும் சாலை முன்முயற்சி திட்டங்களுக்கு மாற்றாக வழங்குவதைத் தவிர, உள்கட்டமைப்பின் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை.' என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் இத்திட்டத்திள் உறுதியான நிலையைப் பெற குறைந்தது 10 ஆண்டுகள் தேவைப்படலாம். அதுவரை உறுதியானதொரு அரசாங்கம் இந்தியாவில் தொடருமா அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படினும் இத்திட்டம் தொடருமா என்பது தென்னாசியாவின் அரசியல் கலாசாரத்துக்குள் நின்று அவதானிக்கையிலும் நம்பிக்கையீனங்களே முடிவாகின்றது.

எனவே, சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சிக்கு பதிலீடாக அமெரிக்க ஆதரவில் இந்தியாவை மையப்படுத்தி கட்டமைக்கபட்டுள்ள இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மைய இலக்கை பூர்த்தி செய்யுமா என்பதில் சந்தேகங்களே மிதமாகின்றது. இத்தாலி என்ற ஒரு தேசத்தின் விலகல் ஒரு தசாப்தமாக கட்டமைத்துள்ள சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியை எளிதில் வீழ்த்தி விடப்போவதில்லை என்பதுவே சர்வதேதச அரசியல் ஆய்வாளர்களின் எண்ணங்களாகவும் காணப்படுகின்றது. உலகளாவிய நாகரீகத்தின் எதிர்காலத்தை வரைபடமாக்குதல் என்ற கருப்பொருளில் அமையப்பெற்ற Connectography எனும் நூலின் ஆசிரியர் பராக் கன்னா, 'நெருக்கடிகள் இருந்தபோதிலும், சீனர்கள் அதிர்ச்சியூட்டும் தொகையை அடைந்துள்ளனர். IMEC ஒரு போட்டியாக கூட நெருங்கவில்லை. மிதமான தொகுதி நடைபாதையாக இருக்க முடியும். இது BRI அளவில் ஆட்டத்தை மாற்றியமைக்கும் திறன் (Game Changer) அல்ல' என்று தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-