பொருளாதார நெருக்கடிக்குள் மீண்டும் நகரும் இலங்கை? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை கடந்த ஆண்டு வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. குறிப்பாக, அத்தியாவசியமான இறக்குமதிகளுக்குக் கூட பணம் இல்லாமல் போனது. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியானது, ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிராக பல மாத போராட்டங்களுக்குப் பிறகு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகச் செய்தது. அரசியல் பொருளாதார நெருக்கடியின் விளைவாகவே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பாராளுமன்ற தெரிவின் மூலம் ஜனாதிபதியாகி இருந்தார். ஒப்பீட்டடிப்படையில் பொருளாதார நெருக்கடியில் மாற்றங்களை உணரக்கூடியதாக இருந்தாலும், சமீபத்திய இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நடிவடிக்கைகள் மற்றும் சர்வதேச அரசியல் போக்குகள் இலங்கை அரசு மீளவும் பொருளாதார நெருக்கடிக்கான சூழலுக்குள் நகர்கின்றதா எனும் சந்தேகங்களை உருவாக்குகின்றது. இக்கட்டுரை இலங்கை அரசின் நகர்வில் மீளவொரு பொருளாதார நெருக்கடிக்கான சூழலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் முதல் மதிப்பாய்வை நடத்துவதற்காக சர்வதேச நாணய நிதியக் குழு செப்டம்பர்-14 இலங்கைக்கு வந்திருந்தது. அவர்கள், இலங்கை அரச அதிகாரிகள், தனியார் துறை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பிற பங்குதாரர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இதனடிப்படையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன், செப்டெம்பர்-27அன்று கொழும்பில் செய்தயாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் இலங்கையின் குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியை பாராட்டியுள்ளதுடன், இலங்கையின் நெருக்கடிக்கான சூழலையும் முன்னெச்சரிக்கை செய்துள்ளனர். 'பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கை மக்கள் குறிப்பிடத்தக்க மீட்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கடினமான ஆனால் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான தற்காலிக அறிகுறிகளைக் காட்டுவதால் இந்த முயற்சிகள் பலனளிக்கின்றன.' எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நாணய நிதியித்தின இலங்கைக்கான மூத்த தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூயர், 'முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டு அடிப்படையில் 3.1மூ சுருங்குகிறது, மேலும் அதிக அதிர்வெண் பொருளாதார குறிகாட்டிகள் இன்னும் கலவையான சமிக்ஞையை அனுப்புவதால், வளர்ச்சி வேகம் குறைவாகவே உள்ளது. சமீப மாதங்களில் கையிருப்பு குவிப்பு குறைந்துள்ளது.' எனும் எச்சரிக்கையையும் பகிர்ந்துள்ளார்.
இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் பிரதான மீட்பாளரான சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கையை இலங்கை மக்கள் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். மீண்டுமொரு பொருளாதார நெருக்கடிக்கான இலங்கைச்சூழலை அடையாளம் கண்டு தம்மை தயார்ப்படுத்துவதும் அவசியமாகின்றது. இலங்கையின் பொருளாத நெருக்கடிக்கான சூழலை தெளிவாக அறிந்துகொள்ளல் அவசியமாகின்றது.
முதலாவது, இலங்கையில் மீளவும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கால இடைவெளியில் அதிகரிக்கப்பட்டு வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காலத்தில் எரிபொருட்களின் சடுதியான விலையேற்றமே பாரிய அரசியல் புரட்சிக்கும் வழிவகுத்தது. இந்த பின்னணியில் தற்போதைய அரசாங்கம் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கின்ற போதிலும், சடுதியான விலையேற்றத்துக்கு மாறாக நிதானமான விலையேற்றத்தால் சாதாரண மக்கள் விலைறே;றத்தை ஒருநாள் உரையாடலுடன் கடந்து செல்ல முற்படுகின்றனர். இறுதியாக அதிகரிக்கப்பட்ட பெற்றோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயுவின் பத்து சதவீதவிலையேற்றம் முழு பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். கடந்த வருடம் 100-200 சதவீதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம் மேலும் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்படக்கூடிய சாத்தியப்பாடு உரையாடல் தளத்தில் காணப்படுகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு முன்னதாக 13 சதவீதமாக இருந்த நாட்டின் வறுமை மட்டம் இன்று 25 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது அடுத்த வருடம் 28 சதவீதத்திற்கு உயரும் எனும் எதிர்பார்ப்பை உலக வங்கியின் புள்ளிவிபரங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றது. இப்பின்னணியில் விலையேற்றம் மீளவொரு நெருக்கடிக்கான நிதான போக்கினையே உணர்த்துகிறது.
இரண்டாவது, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை எடுப்புப் பொதியின் இலங்கையின் இரண்டாவது தவணையானது தாமதமாகக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. சர்வதேச நாணய நிதியம், அதன் முதல் மதிப்பாய்வில் இலங்கையுடன் பணியாளர் அளவிலான உடன்படிக்கையை எட்டவில்லை. 'பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள நிலையில், வரி மற்றும் வருவாய் சேகரிப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளதாக' சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மேலும், 'பற்றாக்குறை அத்தியாவசிய பொது சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் திறனை பலவீனப்படுத்தலாம்; மற்றும் கடன் நிலைத்தன்மைக்கான பாதையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது' என எச்சரித்துள்ளது. இதனை மறுசீரமைப்பதனூடாகவே உடன்டிக்கையை தொடரக்கூடிய சூழல் காணப்படுகின்றது. பீட்டர் ப்ரூயர், 'கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் கூ330 மில்லியன் இரண்டாவது தவணையானது சர்வதேச நாணய நிதிய ஊழியர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டிய பின்னரே வெளியிடப்படும் நிலையான காலக்கெடு எதுவும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார். இந்த தாமதமானது இலங்கை வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதை மெதுவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பற்றாக்குறையின் விளைவு தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்தையே அடையாளப்படுத்துகின்றது.
மூன்றாவது, சர்வதேச ரீதியாக இலங்கை பொருளாதாரம் தொடர்ச்சியாக பலவீனமான குறிகாட்டிகளையே வெளிப்படுத்தி வருகின்றது. உலக வங்கியின் சமீபத்திய தெற்காசிய மேம்பாட்டுப் புதுப்பிப்பான வேகமான தூய்மையான வளர்ச்சியை நோக்கி, இலங்கையைத் தவிர தெற்காசிய நாடுகளின் உற்பத்தி வளர்ச்சி வரும் ஆண்டுகளில் உலகின் மற்ற பகுதிகளை விட வலுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் வளர்ச்சியானது உலகின் மற்ற பகுதிகளை விட வலுவாக இருப்பினும், இலங்கை ஒரு தலைமுறைக்குள் அதிக வருமானம் பெறும் நிலையை அடையும் அளவுக்கு வலுவாக இல்லை என்று அறிக்கை கூறுகிறது. 6 சதவீதத்திற்கும் குறைவாக, சமீபத்திய அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் நாடுகளில் பலவீனமான வளர்ச்சியுடன் கூடியதாக காணப்படுகின்றது. சமீபகால நிலுவைத் தொகை நெருக்கடிகளின் பின்விளைவுகளால் இலங்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அதிக இறக்குமதி செலவுகள் மற்றும் நிதிப் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், மீதமுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் தொடர்புடைய உள்ளீடு பற்றாக்குறையால் செயல்பாடு தொடர்ந்து தடைபட்டுள்ளது. அதே நேரத்தில் கடுமையான இறக்குமதி சுருக்கங்களுக்கு மத்தியில் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் மேம்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையுடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பிராந்தியத்தில் பொருளாதாரரீதியாக பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
நான்காவது, இலங்கையின் புவிசார் அரசியலை மையப்படுத்தி எழுந்துள்ள சீன-இந்திய போட்டிக்குள் இலங்கை ஆரோக்கியமான நிலையான மூலோபாயத்தை நெறிப்படுத்த இயலாது உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் திருப்பிச் செலுத்துவதை நிறுத்திய பின்னர், அதன் வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துவதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கு ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பத்திரதாரர்கள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இலங்கை பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. எனினும் இந்திய-சீனா மூலோபாயப்போட்டி உடன்பாடு எட்டுவதில் குழப்பகரமானதாகவே அமைகின்றது. குறிப்பாக இலங்கையின் கடந்த வருட வரலாறுகாணாத அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியாவின் பங்களிப்பு கனதியானது. இலங்கையின் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் இந்தியாவுக்கான இலங்கைத்தூதுவர் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவின் பங்களிப்பை உயர்வாக பாராட்டியிருந்தனர். எனினும் மறுமுனையில் சீனாவுடன் கொண்டுள்ள ஈடுபாட்டினால் இந்திய உறவில் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. செப்டெம்மர் மாதம் சீனாவின் ஆய்வுக்கப்பலான ஷியான்-06 இலங்கை வருவது தொடர்பான அறிவிப்பால் இந்திய-இலங்கை உறவில் குழப்பகரமான சூழல் காணப்பட்டது. அதேவேளை சீனா இலங்கை அரசியல் பொருளாதாரத்தில் தவிர்க்க இயலாத காரணியாக மாறியுள்ளது. இலங்கையுடனான சீனாவின் எக்சிம் வங்கியுடனான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு பகிர்வதனூடாகவே, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கட்ட நிதி பெறக்கூடியதாக அமையும். சர்வதேச நாணய நிதியம் அனைத்து கடன் ஒப்பந்தங்களையும் பார்த்து இலக்குகளை அடைவதற்கு அவற்றின் போதுமான தன்மையை தீர்மானிக்கும். இந்த சூழலிலேயே தடுக்கப்பட்ட சீனாவின் ஆய்வுக்கப்பலான ஷியான்-06க்கு நவம்பர் மாத இறுதிக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியா உறவில் பூசலை ஏற்படுத்தக்கூடியதாகும். 23வது இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் அமைப்பின் அமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் உரையில் இலங்கை-சீன உறவின் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது. சீனாவின் இலங்கையுடனான உறவு தொடர்பில், இலங்கையில் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் ஆபத்து என்றவாறு சீனாவின் பெயரைக்குறிப்பிடாது எச்சரிக்கை விட்டிருந்தார். செய்தியாளர் சந்திப்பில் ஜெய்சங்கர், 'மறைந்த நிகழ்ச்சி நிரல்களாக இருந்தாலும் சரி, நடைமுறைப்படுதத முடியாத திட்டங்களாக இருந்தாலும் சரி, தாங்க முடியாத கடனாக இருந்தாலும் சரி, ஆபத்துகள் எங்கே இருக்கின்றன என்பதனை நாம் சமமாக தெளிவாக இருக்க வேண்டும். அனுபவ பரிமாற்றம், சிறந்த நடைமுறைகளைப்பகிர்தல், அதிக மற்றும் ஆழமான ஒத்துழைப்பு ஆகியவை தீர்வுகளின் ஒரு பகுதியாகும்' எனக்குறிப்பிட்டிருந்தார்.
ஐந்தாவது, மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் அதிர்வுகள் உலக அரசியலில் கனதியான தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்படுத்தக்கூடியதாகும். இவ் உலக அரசியல் தாக்கத்தின் விளைவுகளை இலங்கையாலும் தவிர்க்க முடியாததாகும். குடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதா நெருக்கடிக்கு பின்னாலுள்ள உடனடிக்காரணங்களாக உலக ஒழுங்கில் நெருக்கடியை உருவாக்கிய கோவிட் பெருந்தொற்று முடக்கமும், ரஷ்சியா-உக்ரைன் போர் ஏற்படுத்திய பொருளாதார மந்த நிலைமைகளுமே அமைகின்றது. இவ்வாறான பின்னணியில் மேற்காசியாவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறுகிய கால முடிவினை பெறக்கூடியதில்லை என்பதே போரியல் நிபுணர்களது கருத்தாக அமைகின்றது. அவ்வாறே இப்போர் ஏற்படுத்த உள்ள பொருளாதார தாக்கமும் மீள உலகின் முதன்மையான வல்லரசு சக்திகளையே பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் அபாயத்தை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பலவீனமான உலகப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் குறித்த சந்தேகங்கள் வளர்ந்து வரும் நிலையில், இந்த வாரம் மொராக்கோ நகரமான மராகேச்சில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களை இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையிலான போர் உலுக்கியிருந்தது. கிறிஸ்டாலினா ஜோர்ஜவா தலைமையிலான அமைப்பு, எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் தடைபட்டால், பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக, மோதலின் பரிணாமத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத், பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயத்தை தெளிவாக சுட்டிக்காட்டினார். 'இது ஒரு பரந்த மோதலாக மாறி, அது எண்ணெய் விலையை உயர்த்தினால், அது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று அவர் ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனவே, இலங்கையின் சமகால போக்கு அதிகமாக இலங்கை மீளவொரு நெருக்கடிமிக்க பொருளாதார சூழலுக்குள் பயணிப்பதையே அடையாளப்படுத்தி நிற்கின்றது. கடந்த வருடத்தை போன்று புரட்சி அல்லது வரிசை முறை சமகாலத்தில் காணப்படவில்லை என்பது இலங்கை பொருளாதாரத்தில் பலம் பெறுகின்றது என்பதற்கான வெளிப்பாடாக கருத இயலாது. மாறாக மக்கள் தொடர்ச்சியான போராட்டத்திற்க்குள் பயணிக்க இயலாத சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். நாளாந்த வாழ்க்கையை நகர்த்தி செல்வதற்கே பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையில், போராட இயலாதவர்களாக மக்கள் காணப்படுகின்றார்கள் என்பதுவே யதார்த்தமானதாகும். இவ்வாறானதொரு சூழலில் மீளவும் நெருக்கடிக்கான வாய்ப்புக்கள் புலப்படுவது மக்கள் மீதே சுமை அதிகரிக்கப்படுகின்றது. தவிர்க்க முடியாததாயினும் மக்கள் முன்கூட்டியே இலங்கையின் போக்கை புரிந்து கொள்வது, திடப்படுத்திக்கொள்ளக்கூடிய அல்லது இலங்கை அரசாங்கங்கள் எதிர்பார்க்கும் மக்கள் வாழப்பழகிக்கொள்ளக் கூடிய சூழலை உருவாக்க ஏதுவாக அமையும்.
Comments
Post a Comment