ஈழத்தமிழரின் அரசியல் போராட்டங்கள் மீள்சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

சமகால இலங்கை அரசியலில் ஈழத்தமிழர்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற சூழலில் பேரினவாதக்கருத்தியல் பலம்பெற்றுள்ளது. பலவீனமான ஆளும் அரசாங்கமும் தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக இனவாத கருத்தியலை ஆதரிக்கும் அல்லது எதிர்க்காத நிலைமையிலேயே காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழ்த்தேசிய இனம் தனது இருப்பை பாதுகாத்து கொள்ள தாயகத்தில் பலமான எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன், புறத்தே தனக்கான ஆதரவை திரட்ட வேண்டியது மூலோபாய அரசியல் நெறியாக காணப்படுகின்றது. எனினும் தாயகத்தில் இடம்பெறும் தமிழ்த்தரப்பின் போராட்டங்கள் தொடர்பில் வலுவான எதிர்வினையான விமர்சனங்களே மீதமாகின்றது. விமர்சனம் என்பது ஒன்றை நிராகரிப்பது என்பதற்கு அப்பால் வலுவாக கட்டமைப்பதாக அமைய வேண்டும். எனினும் தமிழ் அரசியல் தரப்பு தொடர்ச்சியாக விமர்சனங்களை பகுப்பாய தயாரில்லாத நிலையினையையே வெளிப்படுத்தி வருகின்றது. இக்கட்டுரை மீளவும் தமிழரசியல் தரப்பின் போராட்ட நெறியினை கட்டமைப்பதற்கான வழிவகைகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புக்கள், இனவாத பிரச்சாரம் என சிங்கள பேரினவாதத்தின் எல்லைமீறிய செயற்பாடுகள் வடக்கு-கிழக்கில் சமகாலத்தில் அதிகரித்து வருகின்றது. அதன் உச்சமாகவே இலங்கையின் நீதித்துறையிலேயே தமிழினத்துக்கு பாதுகாப்பின்மையை உறுதிப்படுத்தும் வகையில் முல்லைத்தீவ மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதற்கான உள்ளக விசாரணையை மேற்கொண்டிருந்த தென்னிலங்கை, நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை என்றவாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எனினும் பாராளுமன்றத்தில் நீதிபதியை தமிழ் நீதிபதி என விழித்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரா ஆற்றிய இனவாத பிரச்சாரங்களும் அச்சுறுத்தல்களும் பாராளுமன்ற உரைகளாக எழுத்துபூர்வமாகவும் காணொளி வடிவிலும் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு பேரினவாத சூழமைவை மையப்படுத்தியே இந்திய புலனாய்வுத்துறையும் இலங்கையில் இனக்கலவரம் உருவாகுவதற்கான வாய்ப்பிருப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமது இருப்பை பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வலிமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன், புறத்தே வலுவான அரணையும் அமைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. 

ஈழத்தமிழ் அரசியலை பொறுத்தவரை தாயகத்தில் வலிமையான எதிர்ப்பை உருவாக்குவதனூடாக மாத்திரமே புறத்தே வலுவான ஆதரவுத்தளத்தை அரணாக கட்டமைக்கக்கூடிய சூழல் வரலாற்றுரீதியாக காணப்படுகின்றது. 2009களுக்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு பலமான அரணாக காணப்பட்ட தமிழகம் இன்று ஒப்பீட்டளவில் ஆதரவுத்தளம் குறைந்துள்ளது. இதற்கு வலுவான காரணம் தாயகத்திலிருந்து ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு சரியாக 2009களுக்கு பிறகு கடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. குறிப்பாக தாயகத்தே பலமான எதிர்ப்போராட்டங்கள் நடைபெறுவதில்லை மற்றும் திரளான கருத்து வருவதில்லை என்பது தமிழக சிவில் தரப்பினரின் கருத்தாக காணப்படுகின்றது. மேலும், 2021ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தூபி உடைக்கப்பட்ட போது தாயகத்தில் திரண்ட வலுவான எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாகவே தமிழகம் மற்றும் கனடா போன்ற புற அரண்கள் வலுப்பெற்றது. மீள துபி நிர்மானிக்கப்படக்கூடிய சூழலுடன் போராட்டம் வெற்றி பெறக்கூடியதாகவும் அமைந்தது. அதேவேளை பிற்பட முன்னாள் யாழ்ப்பாண மாநாகரசபை முதலவர் மணிவன்னன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் மீதான கைதுகளின் போது தாயகத்துக்கு வெளியே இருந்து வந்த பாதுகாப்பு அரண்கள் தாயகம் வலுவான எதிர்ப்பினை கட்டமைக்கையில், இயல்பாக புறத்தே வலுவான அரண் உருவாக்கப்படும் என்பதனையே உறுதி செய்கின்றது. எனினும், விபத்தாக சில நிகழ்வுகள் தமிழரசியல் தரப்பில் வலுவான எதிர்ப்பிற்கான அடையாளமாக காணப்படுகின்ற போதிலும், நெறிப்படுத்தப்பட்ட அளவில் தமிழரசியல் தரப்பு வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்த திராணியற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. அதன் வெளிப்பாடாகவே மனிதச்சங்கிலி போராட்டம், பொதுமுடக்கம் என்றவகையில் தமிழரசியல் தரப்பினர் பாதுகாப்பு வலயத்துக்குள் நின்று கொண்டு போராட்டங்களை திட்டமிடுகின்றனர். இந்நிலையில் சமகாலத்தில் இடம்பெறும் தமிழரசியல் தரப்பின் போராட்டத்தின் அரசியல் செல்நெறியை நுணுக்கமாக விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகின்றது.

முதலாவது, தமிழரசியல் தரப்பின் இன்றைய போராட்டங்கள் தவிர்க்க முடியாதது. தமிழ் மக்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தார்ப்பரியத்தையும் அதுசார் விளைவுகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு போராட்டங்கள் தவிர்க்க இயலாத நிலையை பெறுகின்றது. குறிப்பாக போராட்டங்களூடாகவே அரசியல் சமுகமயமாக்கல் நிலையை பெறக்கூடியதாக அமைகின்றது. எனினும் தமிழரசியல் தரப்பின் போராட்டங்கள் அரசியல் சமுகமயமாக்கலை மேற்கொள்ளக்கூடிய திறனை கொண்டிருக்கவில்லை என்பதுவே எதிரான விமர்சனங்களுக்கு காரணமாகின்றது. மனிதச்சங்கிலி போராட்டம், பொது முடக்கம், கவனயீர்ப்பு பேரணி போன்ற போராட்டங்கள் அதிகம் பொதுமக்களுடன் தொடர்பினை கொண்டதாக அமைகின்றது. இலங்கையின் சமகால பேரினவாத தரப்பின் இனவாத செயற்பாடுகளின் பாதிப்புக்கள் பொதுமக்களுக்கே ஆனதாயினும், பொதுமக்கள் அரசியலிலிருந்து பெருமளவிற்கு விலகி இருக்கும் போது அதுசார் தாக்கங்களை புரிந்து கொள்ளாதவர்களாக காணப்படுகின்றனர். மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் இடம்பெறும் சிங்கள ஆக்கிரமிப்பின் தாக்கம் தொடர்பில் வடக்கில் உள்ள சாதாரண மக்களின் பார்வையும், யாழ்ப்பாணம் தையிட்டியில் இடம்பெற்ற விகாரை நிர்மாணம் தொடர்பில் கிழக்கில் சாதாரண மக்களின் பார்வையும் வெறுமனவே செய்தியாக செல்லும் நிலைமைகளே காணப்படுகின்றது. இவ்வாறான நிலைமைகளே வடக்குக்குள் அல்லது கிழக்குக்குள் மாவட்டங்களுக்கிடையையே இடம்பெறும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கள், இனவாத பிரச்சாரங்களிலும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் எதிர்விளைவுகளாக காணப்படுகின்றது. பேரினவாத செயற்பாடுகளை செய்தியாகவும் அறியாதவர்களாயுமே பல சாதாரண மக்கள் உள்ளனர். இவ்வாறான சூழலில் மக்களுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய போராட்டங்களே மக்களிடம் பிரச்சினைகளையும், அதன் விளைவுகள் தொடர்பான உரையாடல்களையும் அதிகரிக்க பயனுடையதாக அமையும். எனினும் தமிழரசியல் தரப்பால் முன்னெடுக்கப்படும் மக்கள்மயப்படுத்தக்கூடிய போராட்டங்கள் சரியான கட்டமைக்கப்படுவதில்லை. மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மக்களிடம் சென்று உரையாடுவதில்லை. பொதுமுடக்கத்தை அறிவித்துள்ள ஏழு தமிழ்க்கட்சிகளுமே உள்ளூராட்சி சபை வேட்பாளர்களையும், முன்னாள் பிரதிநிதிகளை கொண்டுள்ளது. எனினும் அவர்கள் பொதுமுடக்கம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்கிறார்களா என்பது கேள்விக்குரியதாகவே அமைகின்றது. மேலும், அவர்களிடம் அதுதொடர்பான விழிப்புணர்வும் அதிக சந்தேகத்திற்குரியதாகவே அமைகின்றது. பொதுப்பிரச்சினைகளை மக்கள்மயப்படுத்தும் போராட்டங்கள் அதிக பிரச்சார பொறிமுறைகளுடன் கட்டமைக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. கட்சித்தலைவர்களின் ஊடக செய்தி அறிக்கைகளுடன் மட்டுப்படுவதே போராட்டங்கள் தொடர்பான எதிரான விமர்சனங்களுக்கு காரணமாகின்றது.

இரண்டாவது, போராட்டங்களின் மைய இலக்கினை சரியாக வரையறுத்து நகர்த்தி செல்லுதல் வேண்டும். எனினும் தமிழ் அரசியல் தரப்பின் போராட்டங்களின் மைய இலக்கு என்ன? போராட்டங்கள் யாருக்கு எதிரானது என்பது தொடர்பில் அதிக குழப்பங்களே காணப்படுகின்றது. குறிப்பாக நடந்து முடிந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தின் காட்சிகள் பலவும், தமிழ்க் கட்சி சங்கிலி போராட்டமாகவே வெளிப்படுத்தியிருந்தது. சாதாரண மக்களின் பங்குபற்றல் போதியளவில் காணப்படவில்லை. அடையாள போராட்டமாக ஒரு மணிநேரமே போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்ட போதிலும், போராட்டத்தில் மக்களின் பங்குபற்றல் காணப்படவில்லை. கட்சிகளின் பிரசன்னமே காணப்பட்டது. கட்சிகளை பொறுத்தவரையும் கட்சிகளின் உயர் மட்டத்தினரே கலந்து கொண்டிருந்தனர். உள்ளூராட்சி சபை வேட்பாளர்களின் எண்ணிக்கை கூட பூரணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அத்துடன் ஊடக செய்திவீச்சும் வடக்கிற்குள் இயங்கும் தமிழ் செய்தித்தாள்களுடனும் இணைய செய்தித்தளங்களுடனும் மட்டுப்படுத்தப்பட்டிருந்து. போதியளவு தென்னிலங்கைக்கு எச்சரிக்கை விடக்கூடிய அளவிற்கு கூட போராட்டத்தின் உள்ளடக்கம் காணப்பட்டிருக்கவில்லை. நீதித்துறையே பலவீனப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திடம் நீதி கோருவது பயனற்றது. மாறாக வெளித்தரப்பின் ஆதரவை திரட்டுவதற்கான போராட்டமாயின் வடக்கிற்குள் முடக்கப்பட்ட செய்தி வீச்சுக்களை கொண்ட போராட்டங்கள் சர்வதேச ஆதரவைiயும் திரட்டக்கூடியதில்லை. இன்று உலகமயமாக்கல் தொழில்நுட்ப புரட்சி காலத்தில் வெளிஉலகுடன் தொடர்பற்ற வகையில் தமிழ் மக்கள் தமது உரிமைப்போராட்டங்களை நகர்த்தி செல்வது பயனற்றதாகும். சர்வதேச ஊடகங்களுக்கு தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்துவதே சர்வதேச ஆதரவு அரணை பலப்படுத்த ஏதுவானதாகும். தமிழ் அரசியல் கட்சிகளின் சங்கிலிப் போராட்டத்தில் 'அரோகரா' என்பதனை அர்த்தம் புரியாது குரல் எழுப்பியது போலவே, போராட்டங்களையும் அதன் உள்ளார்ந்த பொருளின்றி நடாத்தி செல்வதே மக்களிடமிருந்து போராட்டங்களும் அரசியல் கட்சிகளும் தூரமாய்ப்போக காரணமாகின்றது.

மூன்றாவது, தமிழ்க்கட்சிகள் அரசியல் போராட்டம் நடாத்துவதற்கு கூடிக்கதைப்பது போன்று போராட்டத்தின் விளைவுகளையும் சுயமதிப்பீட்டிற்கு உட்படுத்த வேண்டும். போராட்டத்தின் விளைவுகளை சுயமதிப்பீட்டிற்கு உட்படுத்தி இருப்பின் தமிழ் கட்சிகள் பொதுமுடக்க அறிவிப்பிலும் செயற்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்திருப்பார்கள். நீண்டகாலமாகவே அரசியல் கட்சிகளின் பொதுமுடக்கம் தொடர்பில் பொதுமக்களிடையே வெறுப்புனர்வே காணப்படுகின்றது. பொதுமுடக்கத்திற்கு அரசாங்கம் கூட இதுவரைகாலமும் சரியான பதிலளித்தது இல்லை. வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்படும் இவ்வகையான போராட்டங்கள் தொடர்பில் ஆளும் தரப்பு பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பெரும்பாலும் வடக்கு-கிழக்கின் பொதுமுடக்கங்கள் தினசரி வேலை செய்பவர்களுக்கு ஒருநாள் விடுமுறையாகவே அமைகின்றது. தமிழ்க்கட்சிகள் கட்சி மட்டத்திலும், சிவில் சமுகத்தரப்பினர், புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் மட்டங்களிலும் போராட்டங்களின் விளைவுகள் பலம் பலவீனங்கள் மாற்றங்கள் தொடர்பில் கலந்தாலோசித்து பகுப்பாய்வு செய்வதே எதிர்காலத்தை திட்டமிட ஏதுவாக அமையும். மாறாக தொடர்ச்சியாக மூடிய அறைக்குள் கட்சித்தலைவர்கள் கூடி போராட்டங்களை அறிவித்துவிட்டு கலைந்து செல்வார்களாயின் தொடர்ச்சியாக போராட்டங்கள் தமிழ் மக்களின் பலவீனத்தை ஆளுந்தரப்புக்கு புலப்படுத்துவாதகவே அமையும்.

நான்காவது, அரசியல் கட்சிகள் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக சமகாலத்தில் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற இராஜினாமா பற்றி பெருமளவில் சமுக வலைத்தளங்களில் உரையாடப்படுகின்றது. எனினும் இலங்கை பாராளுமன்றம் தமிழ் அரசியல் பரப்பில் வெகுமதியான களமாகும். இராஜினாமா செய்வதனூடாக அக்களத்தை இழக்காது, அக்களத்தை போராட்டக்களமாக மாற்றுதல் வேண்டும். பாராளுமன்ற சிறப்புரிமை என்பதனை பயன்படுத்தி சரத் வீரசேகரா போன்ற பேரினவாதிகள் இனவாத பிரச்சாரத்தை மேற்கொள்கையில் தமிழ் அரசியல் தரப்பினர் பேச்சுப்போட்டிக்கான மேடையாக மாத்திரமும் அதனை பயன்படுத்துகின்றனர். சர்வதேச சனநாயக அரசியல் ஒழுங்கில் பாராளுமன்றத்திற்கு உயர்வான மதிப்பு காணப்படுகின்றது. சர்வதேச பொது அரங்குகளிலும் உயர்வான பிரதிநிதித்துவம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. எனினும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகையில் தமது பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படுத்தும் அளவிற்கு தமிழர் நலன்சார்ந்து பயன்படுத்துவதில்லை. இவ்வாறான சூழலிலேயே தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற இராஜினாமா பற்றிய கருத்துக்களும் வலுப்பெறுகின்றது. வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்கள் பாராளுமன்ற சபைக்குள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத பிரச்சாரங்களை முன்னிறுத்தி சபையை முடக்கி போராட்டத்தை நடாத்துவார்களாயின் தமிழ் மக்களுக்கு தமது அரசியல் பிரநிதிகள் மீது நம்பிக்கை உருவாகுவதுடன், போராட்டங்கள் மீதும் நம்பிக்கை ஏற்படக்கூடியதாக அமையும். பாராளுமன்றத்தை போராட்டக்களமாக மாற்றி வினைத்திறனான போராட்டங்களை ஒழுங்குபடுத்த தமிழ்க்கட்சிகள் திரளாக முன்வராத வரையில், தமிழ்க்கட்சிகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு அவநம்பிக்கைகளே மீதமாகும். 

எனவே, தமிழ்த்தரப்பின் சமகால அரசியல் நிர்ப்பந்தம் போராட்டத்துக்கானதேயாகும். போராடத்தவறின் அரச ஆதரவுடன் தமிழ் இனத்தின் இருப்பு முற்றாக அழிக்கப்படக்கூடிய சூழலையே பேரினவாத பிரச்சாரங்களும் செயற்பாடுகளும் உணர்த்தி நிற்கின்றது. எனினும் தமிழ்த்தரப்பு 21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற வகையில் போராட்டத்தில் முதிர்ச்சியான வினைத்திறனை பயன்படுத்துவது அவசியமாகும். அரச இயந்திரத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பாதுகாப்பு பொது மக்களின் அணிதிரட்டலுடனான எழுச்சியால் ஏற்படும், சர்வதேச பாதுகாப்பு அரணாலேயே சாத்தியமாகும். 1973ஆம் ஆண்டு யோம்கிப்பூர் போர் பாலஸ்தீனத்தை பெருமளவில் முடக்கியது. பலஸ்தீனம் ஆதரவற்ற சூழலில் இஸ்ரேலால் மெல்ல மெல்ல ஒடுக்கப்பட்டது. அச்சூழலில் 1987ஆம் ஆண்டில் ஏற்பட்ட 'இன்டிபாடா'(Intifada) என அழைக்கப்பட்ட மக்கள் சுதந்திர பேரணியின் எழுச்சியே 1993ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை பேச்சுவார்த்தை மேடைக்கு அழைக்க காரணமாகியது. இஸ்ரேல் மற்றும் மேற்குலகால் பயங்கரவாதியாக புணையப்பட்ட பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசீர் அரபாத் உடன்  ஒரே மேடையில் கைகுலுக்கி தீர்வு தொடர்பாக பேச நிர்ப்பந்திக்கப்பட்டது. மக்கள் எழுச்சி போராட்டங்களே சர்வதேச அரணை உருவாக்கவும், ஆளுந்தரப்பை வடக்கு-கிழக்கின் போராட்டங்கள் மீது கவனம் செலுத்தவும் வழியேற்படுத்தும்.




Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-