கிழக்கு மீதான பேரினவாத ஆதிக்கமும் ஈழத்தமிழர் அரசியல் இருப்பும்! -ஐ.வி.மகாசேனன்-
தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை தினசரி புதிய பரிமாணங்களுக்குள் நகர்ந்து செல்கின்றது. 'அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம்' என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஒக்டோபர்-25அன்று தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு, பிரச்சாரம், அச்சுறுத்தல் என சிங்கள பேரினவாதிகள் தமிழர் நிலங்கள், தமிழர்கள், தமிழ் அரச அதிகாரிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீது பேரினவாத நடவடிக்கைகளை தினசரி அதிகரித்து வருகின்றனர். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம் முழுமையாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு வீச்சுப்பெறுகின்ற போதிலும், கிழக்கில் முதன்மையான தாக்கத்தை செலுத்துவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் கிழக்கில் தமிழர்களின் அரசியல் தலைமைகளில் சாணக்கியனை தவிர, வேறு அரசியல் தலைமைகள் தமிழர்களின் விடயங்களை முன்னிலைப்படுத்தும் செயற்பாட்டை அவதானிக்க முடியவில்லை. சாணக்கியனிடமும் முதிர்ச்சியான அரசியல் அனுபவமின்மை வினைத்திறனான செயற்பாட்டை நகர்த்துவதாக அமையவில்லை. குறிப்பாக கடந்த வாரங்களில் தமிழ் அரசியல் தரப்பின் போராட்ட முறையின் பலவீனங்கள் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பில் இப்பகுதியில் உரையாடப்பட்டது. இக்கட்டுரை கிழக்கில் அதிகரிக்கப்படும் பேரினவாத செயற்பாட்டை அடையாளப்படுத்துவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 'திருகோணமலை மாவட்டத்தை பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற நீண்ட காலத் திட்டம் இப்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.' எனும் விசனத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது கூறியிருந்தார். இவ்விசனத்துக்கான வினைத்திறனான செயலாற்றுகையை தமிழ் அரசியல் தரப்பினர் மேற்கொள்கொள்கின்றார்களா என்பதில் வலுவான சந்தேகங்களே காணப்படுகின்றது. மேலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கான நெருக்கடி நீண்ட கால வரலாற்றையும், பலமுனை நெருக்கடி அனுபவங்களையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சுதந்திர இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதன முதலாவது இனப்படுகொலையான 1956ஆம் ஆண்டு கல்லோயா படுகொலை கிழக்கு மகாணத்திலேயே பதிவாகிறது. மேலும், திட்டமிடப்பட்ட நில அபகரிப்பு, சிங்கள குடியேற்ற நிறுவல்களும் கிழக்கிலே கல்லோயா திட்டத்திலேயே ஆரம்பிக்கப்படுகின்றது. இவ்வரலாறே பின்னாளில் வடக்கிற்குள் விஷ்தரிக்கப்பட்டு, இன்று வடக்கு-கிழக்கு முழுமையாக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் இனப்படுகொலைகளூடாகவும் வன்முறைகளூடாகவும் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போது, மத்தியில் சிங்கள பேரினவாத ஆதரவு அரசாங்கம் ஆட்சியதிகாரத்தை கொண்டிருப்பதனால் துரிதகதியில் பௌத்த ஆக்கிரமிப்பை கிழக்கு மாகாணம் எதிர்கொள்கின்றது. அதேவேளை கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவில் மாகாண அதிகாரத்தை பெற்ற முஸ்லீம் அரசியல் தரப்பால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தார்கள் என்பதும் யதார்த்தமானதாகும். அத்துடன் சிங்கள பேரினவாத அரச ஆதரவுடன் கிழக்கில் தமிழ் மக்களின் இனவிகிதத்தை குறைப்பதில் கடந்த காலங்களில் முஸ்லீம் அரசியல் தரப்பு இணைந்து செயற்பட்டிருந்தது. பல சந்தர்ப்பங்களில் முஸ்லீம் அரசியல்வாதிகள் பகிரங்க மேடைகளில் அரசுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராக கிழக்கில் மேற்கொண்ட செயற்பாடுகளை பிரச்சாரம் செய்துள்ளனர். 2018ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு வெடிப்பு சிங்கள-முஸ்லீம் உறவில் ஏற்படுத்திய விரிசலே கிழக்கில் பௌத்த ஆக்கிரமிப்பை முதன்மைப்படுத்த ஏதுவாகியது.
எனினும், அரச ஆதரவுடைய சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பையும், முஸ்லீம் அரசியல் தரப்பின் நெருக்கடிகளையும் சமதளத்தில் மதிப்பிட முடியாது. எனினும் கிழக்கு மாகண தமிழர்களிள் நெருக்கடி பற்றிய புரிதலுக்கு இரண்டையும் அவதானிக்க வேண்டி உள்ளது. இரண்டுக்கும் தீர்வுகளை தேட வேண்டியது அவசியமாகின்றது.
முதலாவது, சமகால உடனடி பிரச்சினையாக அதிகரித்து வரும் பௌத்த பேரினவாத செயற்பாடுகளாகும். கிழக்கின் நிலஅபகரிப்பு வரலாறு கல்லோயா, அல்லை, மற்றும் குடியேற்றத்திட்டங்களுடன் ஆரம்பமாகின்றது. 1949, ஆகஸ்ட்-28அன்று இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாயக்க கல்லோயா குடியேற்றத்திட்ட ஆக்கிரமிப்பை உத்தியோகபூர்வமாக கிழக்கில் ஆரம்பித்து வைத்தார். 1956-1958 காலப்பகுதிகளில் தமிழர்கள் கொல்லப்பட்டும் விரட்டப்பட்டும் கல்லோயா முற்றிலும் தனிச் சிங்களக் குடியேற்றமாக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாகவே கிழக்கில் சிங்கள மக்கள் செறிவாக கொண்டு அம்பாறை மாவட்டமும் உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சிhகவே இன்றும் சிங்கள பேரினவாதிகள் அரச பாதுகாப்புடன், கிழக்கில் தமிழ்-முஸ்லீம் மக்களின் விவசாய காணிகள் மீது ஆக்கிரமிப்பு போரை நிகழ்த்துகின்றார்கள். மூதூர் கங்குவேலி குளத்தை ஆக்கிரமித்து அந்தக் குளத்தை நம்பி விவசாயம் செய்கின்ற தமிழ்-முஸ்லிம் மக்களுடைய விவசாய செய்கையைக் குழப்பும் நோக்கில் குளத்தில் காணப்பட்ட நீரை வெளியேற்றி குளத்துக்குள்ளேயே வேற்று இனத்தவர்கள் வருகை தந்து விவசாயம் செய்து வருகின்றனர். அதுமட்மட்டுமன்றி குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 30இற்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதில் 23 இடங்களில் தற்போது வேலைகள் இடம்பெற்று வருகின்றமையை செய்திகள் உறுதி செய்கின்றன. அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் நேரடியாக தலையிட்டு தடை விதித்த போதிலும், அரச பாதுகாப்புப் பிரிவின் அனுசரணையுடனேயே நிர்மாண வேலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. தற்போதைய பௌத்த ஆக்கிரமிப்பு கிழக்கின் சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ் மற்றும் முஸ்லீம் ஆகிய இனங்களுமே எதிர்கொண்டு வருகின்றனர்.
இரண்டு, கிழக்கிலங்கையின் நிர்வாக கட்டமைப்பிலும் அரச தலையீட்டுடன் சிங்கள-பௌத்த பேரினவாத ஆதரவு நிலைப்பாடுகளே குவிந்து காணப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க-பொதுஜன பெரமுன அரசாங்கம் அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானை நியமித்ததனூடாக வெளித்தோற்றத்தில் கிழக்கில் தமிழ் ஆளுநரை நியமித்துள்ளதாக காட்சிப்படுத்தியுள்ளது. எனினும் நடைமுறையில் பேரினவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய நிர்வாகப்பலத்தை ஆளுநர் கொண்டிருக்கவில்லை என்பதையே அண்மைய பேரினவாத செயல்கள் உறுதி செய்கின்றது. பௌத்த விகாரைகள் நிர்மாணத்தை ஆளுநர் தடை செய்துள்ள போதிலும் அமைச்சரின் அனுமதியுடன் அரச பாதுகாப்புடன் பௌத்த விகாரை நிர்மானிப்பு வேலைகள் கிழக்கில் தொடர்கின்றது. மேலும், கிழக்கிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் பங்குபற்றிய தமிழ்ப்பெண்களை கொடூரமாக தாக்கிய அரச காவல்துறை இனவாத பௌத்த பிக்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நிலை காணப்பட்டது. சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களின் விவசாய நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பில் காவல்துறைiயிடம் முறைப்பாடு தெரிவிக்கையில் நீர்ப்பாசன அதிகாரிகளை நோக்கி கை நீட்டுவாகவும், நீர்ப்பாசன அதிகாரிகள் பொலிஸாரை நோக்கி கை நீட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் நெருக்கடியை அதிகரிக்கும் நிர்வாக கட்டமைப்பாக கிழக்கின் நிர்வாக கட்டமைப்பின் செயற்பாடும் அமைகின்றது. பேரினவாதத்துக்கு எதிராக துணிச்சலாக செயற்பட திராணியற்று பேரினவாதத்துக்கு இயைந்து போவதாகவே கிழக்கின் நிர்வாக கட்டமைப்பின் செயற்பாடு அமைகின்றது.
மூன்றாவது, முஸ்லிம் மக்களின் அத்துமீறல்கள் சமகாலத்தில் பேரினவாதத்தின் தலையீடுகளால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படுகின்ற போதிலும், இந்நெருக்கடி கிழக்கு மக்களை பொறுத்தவரை தவிர்க்க முடியாததாக காணப்படுகின்றது. எழுபதுகள் வரையில், 'தமிழ்ப் பேசும் மக்கள்' குழுமமாக முஸ்லீம் மக்கள் செயற்பட்டு, பின்னர் இலங்கை முஸ்லிம்கள் என்ற தனித்துவ இனக்குழுமமாக தங்களைக் கருதி இயங்க ஆரம்பித்திருந்தனர். பேரினவாதத்தினால் தாங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றனர் என்ற யதார்த்தப் புறநிலைமை, பாதிக்கப்படும் சிறுபான்மையினர் என்ற வரையறையின் கீழ் ஒன்றாக அவர்களைக் கட்டிப்போட்டிருந்தது. எனினும், இரண்டு இனப் பிரிவுகளின் தலைவர்களின் தூர நோக்கற்ற, பொறுப்பற்ற, சுயநலன் கொண்ட செயற்போக்கும், பௌத்த-சிங்கள ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரமும், பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனங்களான தமிழர்களையும் முஸ்லிம்களையும் இன்றைய மோதல் நிலைக்கு உருவாக்கியுள்ளது. பல ஆய்வுகளில் நிபுணர்கள் முஸ்லீம் மக்களிள் குடிப்பெயர்வு காலத்தால் மிகவும் பிந்தையது என அடையாளப்படுத்துகின்ற போதிலும், ஈழத்தமிழர்கள் முஸ்லீம் சமுகத்தின் உரிமைகள் கிடைப்பதை தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி வருகின்றனர். இறுதியாக அமைந்த கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்ற போதிலும், முஸ்லீம் கட்சியை சேர்ந்தவரை முதல் பருவத்தில் முதல்வராக்கியது. எனினும் இரண்டாம் பருவத்தில் சிங்கள கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை உறுதிப்படுத்தி முஸ்லீம் முதல்வர் தமிழர்களை ஏமாற்றி இருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே தவறான அரசியல் வழிகாட்டல்களுக்குள் கிழக்கில் முஸ்லீம் மக்களின் அத்துமீறல்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலக இயங்குநிலைக்கும் பெருந்தடையாக முஸ்லீம் அரசியல் தரப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நான்காவது, கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் போதிய வினைத்திறனுடன் செயலாற்ற தயாராக காணப்படவில்லை. பிள்ளையான், வியாழேந்திரன், கருணா போன்ற அரசியல்வாதிகள் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் முஸ்லிம்களால் ஏற்படும் நெருக்கடிகளை முதன்மைப்படுத்துகின்றார்கள். எனினும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்களாய், பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை மற்றும் ஆக்கிமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக வலிமையாகக் குரல் எழுப்பும் திராணியற்றவர்களாக காணப்படுகிறார்கள். மறுபுறம், சாணக்கியன் போன்றோர் பௌத்த-சிங்களப் பேரினவாதக் கொடூரங்கள், அடக்குமுறைகள், ஆக்கிரமிப்புகள், அத்துமீறல்களுக்கு எதிராகக் கொதித்தெழுகின்றனர். எனினும், கிழக்கில் முஸ்லீம்களால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு அரணாக செயற்பட தயாரில்லை. முஸ்லிம்களை பாதிக்கப்பட்ட மற்றொரு சக சிறுபான்மையினராகக் கருதி அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற பொதுவான கருத்தியலில் செயல்படுகிறார்கள். எனினும் முஸ்லீம்களுடனான அரவணைப்பினூடாகவும் தமிழ் மக்கள் நலனை உரையாட சக்தியற்றவர்களாக உள்ளனர். அதேவேளை சிங்கள-பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் வினைத்திறனாக செயலாற்ற தயாரில்லை. கடந்த 75 ஆண்டுகளாக கிழக்கு அரச ஆதரவுடனேயே ஆக்கிரமிக்கப்பட்டு முழுமையாக தமிழர்களின் இனவிகிதமும் சிதைக்கப்பட்டுள்ளது. 1965ஆம் ஆண்டு இலங்கையின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மு.திருச்செல்வம் கொண்டிருந்தும், இலங்கை அரசின் கிழக்கு மீதான ஆக்கிரமிப்பை தடுக்க முடியவில்லை. இவ்வாறான வரலாற்று பின்புலத்தை கொண்டிருந்தும், கிழக்கு மீதான பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பை பாராளுமன்றத்தில் உரையாற்றுவதுடன் தமிழரசியல் தலைமைகள் மட்டுப்படுத்துவது அவர்களது வினைத்திறனற்ற நிலைமையையே அடையாளங்காட்டுகின்றது.
ஐந்தாவது, கிழக்குக்கான நெருக்கடி ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் இருப்பின் ஆபத்தையே அடையாளப்படுத்துகின்றது. தமிழர்களின் தாயகக்கோட்பாடாக வடக்கும் கிழக்கும் இறுகிய பிணைப்பை பலப்படுத்த வேண்டும். ஒரு பிராந்தியம் மற்றைய பிராந்தியத்தின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது என்பது நிதர்சனமாகும். இதனை மையப்படுத்தியே தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகம் தமிழர் தாயகக்கோட்பாட்டில் ஆக்கிரமிப்பால் சிதைந்து கொண்டிருந்த கிழக்கை மையப்படுத்திய அரசியலை முன்னெடுத்திருந்தார். குறிப்பாக திருகோணமலையை தமிழர் தாயத்தின் தலைநகரமாக முதன்மைப்படுத்தியதுடன், திருமலை தீர்மானத்தையும் முன்மொழிந்திருந்தார். எனினும் பின்னைய அரசியல் தலைமைகள் செல்வநாயகத்தின் பயணத்தை தொடர்ந்திருக்கவில்லை. சிங்கள அரசுடன் இயைந்து பயணிக்கும் கிழக்கு அரசியல் பிரதிநிதிகள் சிலர் தமது வாக்கு அரசியலிற்காக பிரதேசவாதத்தினை முதன்மைப்படுத்துகின்றனர். இது தமிழ்த்தேசியத்துக்கு ஆபத்தானது. இதனை களைய வேண்டிய தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் தரப்பினர் திராணியற்று காணப்படுகின்றார்கள். தமிழ் மக்களின் முதன்மையான அரசியல் கட்சியான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை கிழக்கு மாகாணத்திலலேயே காணப்படுகின்ற போதிலும், அவர் கிழக்கு மகாணத்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குமே எவ்வித பயனுமற்ற பிரதிநிதியாகவே காணப்படுகின்றார்.
எனவே, கிழக்கு மீதான பேரினவாதத்தின் ஆதிக்கமானது தமிழ்த்தேசிய இருப்பையே சிதைப்பதாக அமைகின்றது. வடக்கு-கிழக்கு இணைவது தொடர்பான அரசியல் கோரிக்கைகளை கடந்து, தற்போது மக்களிடையே பலமான இணைப்பை உருவாக்குவதே தமிழர் இருப்பை பாதுகாக்கக்கூடிய மூலோபாய முன்முயற்சியாக அமைகின்றது. வடக்கு தொடர்பான கரிசணையை கிழக்கிலும், கிழக்கு தொடர்பான கரிசணையை வடக்கிலும் கட்டியமைப்பதனூடாகவே வடக்கு-கிழக்கு தாயகக்கோட்பாட்டை பாதுகாப்பதுடன் சிங்கள-பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பையும் கிழக்கு மீதான நெருக்கடிகளை தவிர்க்க முடியும். இப்பின்னணியில் அண்மைக்காலத்தில் சிவபூமி அறக்கட்டளையினூடாக கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் கிழக்கை மையப்படுத்தி கட்டமைக்கும் சமூகப்பணிகள் காலத்திற்கு தேவையானதாகும். இவ்வாறான பிணைப்புக்கள் வலுப்படுவதே ஈழத்தமிழர்களின் இருப்பை பாதுகாக்கக்கூடியதாகும்.
Comments
Post a Comment