கூட்டுக்கான தேவையையே தேர்தல் முடிவுகளில் தமிழ் மக்கள் உறுதி செய்துள்ளார்கள்! -ஐ.வி.மகாசேனன்-

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்பார்வையில், தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றியின் ஊடாக தமிழ் தேசியத்தின் எழுச்சியையும் மாறாக நாடளாவிய ரீதியில் ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தியின் வீழ்ச்சியும் அடையாளப்படுத்தப்படுகின்றது. எனினும் உள்ளார்ந்த பார்வையில் இரண்டு போக்குகளும் முழுமை பெறவில்லை என்பதே நிதர்சனமானதாகும். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றி, தமிழ்த்தேசியத்தை அளவீடு செய்ய போதுமானதாக அமையவில்லை. தமிழ்ப்பரப்பில் அதிகூடிய ஆசனங்களை பெற்றுள்ள தமிழரசுக்கட்சி, கடந்த காலங்களில் தென்னிலங்கை கட்சிகளில் ஆதிக்கம் செலுத்திய பலரையும் இம்முறை தமது வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கியிருந்தது. மேலும் தேசிய மக்கள் சக்தி தமிழர் சபைகளில் முன்னிலையை பெறாத போதிலும், தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையை உள்ளூராட்சி சபைகளில் உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் ஈழத்தமிழர்களின் அரசியல் வெளிப்பாட்டை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னரான தமிழ...