வெகுஜன போராட்டங்களும் அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புகளும்! -ஐ.வி.மகாசேனன்-
மக்கள் போராட்டங்களை சீராக மதிப்பீடு செய்வதன் மூலமே எதிர்கால அரசியல் இலக்குகளை திட்டமிட்டு பயணிக்கக்கூடியதாக அமைகின்றது. ஈழத்தமிழ் அரசியலில் மிக சமீபத்திய மக்களின் தன்னெழுச்சியான போராட்டமாக அமைவது அணையா விளக்கு போராட்டமாகும். செம்மணி மனிதப்புதைக்குழி விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டது. மக்கள் செயல் என்ற தன்னார்வ இளைஞர் கட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமுக பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ஜூன் 23-25ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போராட்டத்தின் இறுதி நாளான ஜூன்-25அன்று பெருந்திரளான மக்கள் தன்னார்வமாக கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசியல்வாதிகள் ஒருசிலருடன் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தவர்கள் தமது கோபங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இது அணையா விளக்கு போராட்டத்தின் பிரதான பேசுபொருளாகவும் மாறியிருந்தது. இக்கட்டுரை வெகுஜன போராட்டக்களங்களில் அரசியல்வாதிகள் மீதான மக்கள் எதிர்ப்பின் ஈழத்தமிழர் அரசியல் கலாசாரத்தை அடையாளங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூன்-25அன்று இறுதி நாளில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது சிறு குழப்பம் உருவாகியது. இருவரும் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் வெளியேறியபோது, போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருசிலர் தமது கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்களை வெளியேறுமாறு கூச்சலிட்டனர். குறிப்பாக உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக்கட்சி ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியிடம் ஆதரவு கோரியது தொடர்பில் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். பின்னர் தேசிய மக்கள் அரசாங்கத்தின் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்திருந்த போதும் சிறு குழப்பகரமான சூழல் உருவாகியது. மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் அணையா விளக்கில் மலரஞ்சலி செலுத்த வந்த போது, போராட்டாக்காரர்கள் ஒரு சிலர் அவர்களை உடனடியாக வெளியேறுமாறு கோரி எதிர்த்தனர். பதட்டங்கள் அதிகரித்ததால், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர். இவ்முரண்பாட்டு செய்திகளுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் வந்திருந்தார். போராட்டக்காரர்கள் ஒரு சிலரின் எதிர்ப்பை எதிர்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
வெகுஜன போராட்டங்கள் மற்றும் வெகுஜன நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவது ஈழத்தமிழரசியலில் நீண்டதொரு மரபாக காணப்படுகின்றது. குறிப்பாக 1976இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தினூடாக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து இளைஞர்களின் ஆயுதப் போராட்ட நகர்விற்கு உரமூட்டிய தமிழர் விடுதலைக்கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பின்னாளில் மாவட்ட சபைக்குள் முடங்கினார்கள். இது தமிழர் விடுதலைக்கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தமிழ் மக்களை சினங்கொள்ள வைத்தது. 1970களின் இறுதியில் மற்றும் 1980களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொள்ளும் வெகுஜன நிகழ்வுகளில் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் வாகனத்தை பொதுமக்கள் தாக்கிய வரலாறுகள் காணப்படுகின்றது. அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றிற்கு வருகை தந்திருந்த போது மாணவர்களின் எதிர்ப்பால் வெளியேறியிருந்தார். குறிப்பாக அமிர்தலிங்கத்தின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியினை மாணவர்கள் பறித்து பெரும் குழப்பகரமான சூழ்நிலையொன்று உருவாகியிருந்தது. இவ்எதிர்ப்புக்கள் தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நல்லூர் தொகுதியில் போட்டியிட்ட சிவசிதம்பரம் முழுநாட்டிலுமே அதிகப்படியான வாக்குகளால் வென்றவர் என்ற பெருமையை பெற்றார். எனினும் தொடர்ச்சியான தேர்தல்களில் 1989இல் யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் 1994ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார். இறுதியாக 2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னர் நியமன உறுப்பினராக பாராளுமன்றம் சென்றிருந்தார். அவ்வாறே 1977ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராயிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார். பின்னர் நியமன உறுப்பினராகவே பாராளுமன்றம் சென்றிருந்தார். இப்பின்னணியில் 1970களின் இறுதியில் மற்றும் 1980களில் வெகுஜன நிகழ்வுகளில் பொதுமக்கள் அரசியல்வாதிகள் மீது வெளிப்படுத்தியிருந்த கோபத்தை பின்னாளில் தேர்தல்களிலும் வெளிப்படுத்தி அவர்களை நிராகரித்திருந்தார்கள்.
அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் அணையா விளக்கு ஏற்பாட்டாளர் ஒருவர் எதிர்ப்பாளர்களிடம் 'உங்களுக்கு அவையள் பிழை செய்திருந்தால் வாக்குகளில் காட்டுங்கள்' எனத் தெரிவித்திருந்த விடயம் முக்கியமானதாகும். 2009களுக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியலை நெறிப்படுத்தும் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தை வெகுஜன நிகழ்வுகளில் பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். 2017ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடுமையான எதிர்த்திருந்தனர். இரா.சம்பந்தன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலிருந்து வெளியேற்றப்பட்டார். பல வெகுஜன நிகழ்வுகளிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரனுக்கு எதிரான கோசங்கள் 2010களுக்கு பின்னர் உயர்வாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்கெண்ணும் நிலையத்துக்கு வருகை தந்திருந்த சுமந்திரன் அங்கிருந்த கட்சி ஆதரவாளர்களால் வெளியேற்றப்பட்டிருந்தார். 2018ஆம் ஆண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டத்தின் இறுதி நாளில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்த போதும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே வருகை தந்திருந்திருந்தனர். அன்றைய காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எவரும் வருகை தந்திருக்கவில்லை. மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்தால் மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதெனக்கூறி மாணவப் பிரதிநிதிகளை வேறு இடத்திற்கு அழைத்திருந்தார்கள். இது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெகுஜன நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாத மக்கள் எதிர்ப்பையே உறுதி செய்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே அணையா விளக்கு போராட்டத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்பையும் அணுக வேண்டியுள்ளது.
2010களின் பின்னர் வெகுஜன நிகழ்வுகளில் தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் தமது நம்பிக்கையின்மை மற்றும் கோபத்தை வெளிப்படுத்துகின்ற போதிலும், அணையா விளக்கு ஏற்பாட்டாளர் சுட்டிக்காட்டியது போன்று தேர்தல்களில் இவ்கோபத்தையும் நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்த தவறுகின்றார்கள். 2017இல் முள்ளிவாய்க்காலில் வெளியேற்றப்பட்ட இரா.சம்பந்தன் 2020 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். 2010ஆம் ஆண்டு தொடக்கமே தமிழ் மக்களிடம் எதிர்ப்பை பெற்று வரும் ம.ஆ.சுமந்திரன் 2015ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் மக்கள் வாக்குகள் மூலம் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலேயே மக்கள் நிராகரித்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும். எனினும் 1980கள் மற்றும் 1990களில் வெகுஜன நிகழ்வுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்படும் நிகழ்வுகளே அரங்கேறியிருந்தது. இது மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒன்றுதிரட்டக்கூடிய உறுதியான நிறுவனக் கட்டமைப்பினாலேயே சாத்தியமாகியிருந்தது. 1980களுக்கு பின்னர் தமிழ் மக்களிடையே எழுச்சியுற்ற ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களினை வெகுஜன அபிப்பிராயங்களை ஒன்றுதிரட்டி சாத்தியப்படுத்தக்கூடிய களமாக இருந்தது. அத்தகையதொரு பொதுக்கட்டமைப்பு 2009களுக்கு பின்னர் தமிழ் மக்களிடம் வெற்றிடமாகவே அமைகின்றது. 1980களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் வெளியேற்றப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் அடுத்த தேர்தலிலேயே மக்களால் நிராகரிக்கப்படும் சூழமைவு காணப்பட்டது. 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்த போது அன்றைய மாணவர் ஒன்றியம், 'தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும்' என வீரவசனம் பேசியிருந்தார்கள். எனினும் அவ்ஒன்றிய காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தலிற்கே மக்களுக்கு சரியானதையும் நிராகரிக்க வேண்டியவர்களையும் வழிகாட்ட மாணவர் ஒன்றியம் தவறியிருந்தது. இவ்வாறாக மக்களின் எதிர்ப்பை ஒன்றுதிரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்புக்களின் பலவீனங்களினாலேயே வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படும் எதிர்ப்புக்களின் பிரதிபலிப்புகளை தேர்தல் முடிவுகளில் அவதானிக்க முடிவதில்லை. தேர்தல் நலன்களை மாத்திரம் மையப்படுத்தி இயங்கும் கட்சிகளும் வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படும் மக்கள் எதிர்ப்புக்களையும் புறந்தள்ளி போகும் நிலைமைகள் காணப்படுகின்றது.
அணையா விளக்கு போராட்டத்தில் வருகை தந்த போது போராட்டக்காரர்களின் ஒரு சிலரின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட தமிழரசுக்கட்சியின் பிரமுகர்களும் அரசாங்க உறுப்பினர்களும் அதனை மக்களின் எதிர்ப்பு மற்றும் கோபங்களிலிருந்து திசைமாற்றும் செய்திகளையே வழங்கி இருந்தார்கள். தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் வெளியேற்றம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் ஆரம்பம் தமிழரசுகட்சியின் உட்பூசலாகவே அமைந்திருந்தது. எனினும் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை வெளியே செல்லுமாறு எழுப்பப்ட்ட கோசத்திற்குரியவர்களை முழுமைய தமிழரசுக்கட்சியின் உட்பூசலின் எதிர்த்தரப்பினராக சுருக்கி விட முடியாது. கணொளியில் இயல்பான மக்களின் கோபங்களும் வெளிப்படுத்தப்பட்டது. எனினும் தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் தம்மை நியாயப்படுத்த முழுமையாகவே எதிர்ப்பினை திசைதிருப்பும் வகையில் செய்தி வழங்கி இருந்தார்கள். இதனை தொடரும் வகையிலேயே அரசாங்க உறுப்பினர்களின் செய்திகளும் அமைந்திருந்தது. அமைச்சர் மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் வருகையை போராட்டக்களம் அணுகிய விதத்தில் சில குறைபாடுகள் காணப்படவே செய்கின்றது. குறிப்பாக இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியைக் கோரும் போராட்ட களத்திற்கு ஆதரவு நல்கி வருகை தரும்போது அதனை போராட்ட ஏற்பாட்டாளர்கள் தந்திரமாக அணுகியிருக்க வேண்டும். போராட்டக்காரர்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அரசாங்கத்தின் இரட்டை நிலையை தோலுரிக்கக்கூடிய வகையிலும் அல்லது இனப்படுகொலையை அரசாங்க உறுப்பினர்கள் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளதக்க வகையில் களத்தை அணுகியிருக்க வேண்டும். எனினும் போராட்டக்களம் குழப்பகரமான மாறியதன் பின்னணியில் மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான அரசாங்கத்தின் கடந்த கால செய்திகளே காணப்படுகின்றது. அரசாங்க உறுப்பினர்களை வெளியேறுமாறு எழுப்பப்பட்ட கோசத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த கால செய்திகளே கூறப்பட்டது. எனினும் போராட்டக்களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் வெகுஜன போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் மதுபோதையிலிருந்ததாகவும் அவர்களே தமக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்கள். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் அணையா விளக்கு போராட்டத்தை திசைதிருப்பி குழப்பவே சென்றிருந்தார்கள் என்ற நுண்ணிய அரசியலையே வெளிப்படுத்துகின்றது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் மக்கள் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்ட செய்தியின் பின்னரும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் போராட்ட களத்திற்கு வருகை தந்திருந்தமையும் அமைகின்றது. இதன் நுண்ணிய அரசியலை கையாளும் உத்தியை அணையா விளக்கு போராட்டம் திட்டமிட தவறியுள்ளது. எதிர்காலங்களில் இதனையும் அணுகும் விதத்திலேயே ஈழத்தமிழர்கள் போராட்டங்கள் திட்டமிடப்பட வேண்டி உள்ளது.
எனவே, வெகுஜன நிகழ்வுகளில் தமிழ் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவது ஈழத்தமிழ் அரசியல் கலாசாரத்தின் பொதுப்பண்பாகவே காணப்படுகின்றது. எனினும் முன்னைய காலங்களில் வெகுஜனங்களின் எதிர்ப்பை திரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்பு ஈழத்தமிழர்களிடம் காணப்பட்டமையால், வெகுஜன நிகழ்வுகளின் எதிர்ப்பு தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தது. இது அரசியல்வாதிகளுக்கான எச்சரிக்கையாக அமைந்திருந்தது. எனினும் 2009களுக்கு பின்னர் தமிழ் மக்களினை திரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்பு இன்மையால் அல்லது உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்புக்களின் பலவீனங்களால் வெகுஜன நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மீது வெளிப்படுத்தப்படும் எதிர்ப்புக்கள் தேர்தல்களில் பிரதிபலிக்கப்பட முடிவதில்லை. ஆதலால் வெகுஜன நிகழ்வுகளில் ஏற்படும் எதிர்ப்புக்களை அரசியல்வாதிகள் உதாசீனம் செய்பவர்களாகவே உள்ளனர். இதனூடாக வெகுஜன போராட்டங்களையும் மலினப்படுத்தும் செயற்பாடுகளையே அரசியல்வாதிகள் செய்யும் நிலைமைகளையே சமகாலத்தில் அவதானிக்க்கூடியதாக உள்ளது. வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படுத்தும் நம்பிக்கையீனமான அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புக்களை தொடர்ச்சியாகவும் அதேவேளை தேர்தல்களில் பிரதிபலிப்பதனூடாக மாத்திரமே வெகுஜன போராட்டங்களை பாதுகாப்பதுடன் அரசியல்வாதிகளின் தான்தோன்றித் தனங்களையும் கட்டுப்படுத்த முடியும்.
Comments
Post a Comment