பி.கே.கே-யின் சரணாகதி அரசியலும் குர்துக்களின் ஜனநாயக எழுச்சிக்கான கோரிக்கையும்! -ஐ.வி.மகாசேனன்-

சமகால சர்வதேச அரசியலின் பிரதான விவாதங்களில் குர்திஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய அமைப்புக்களில் ஒன்றான பி.கே.கே (PKK) என அழைக்கப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆயுதங்களை களைந்து நிராயுதபாணியாக்கம் செய்துள்ள காணொளியும் முதன்மையானதாக அமைகின்றது. குறிப்பாக துருக்கியில் ஏற்கனவே கடுமையாக முடக்கப்பட்டுள்ள குர்துக்களுக்கு இராணுவரீதியான தலைமையை வழங்கியிருந்த பி.கே.கேயின் நிராயுதபாணியாக்கம், ஒரு தளத்தில் குர்திஸ் விடுதலை போராட்டத்தை ஜனநாயகமயப்படுத்துவதாக வரவேற்புகள் காணப்படுகின்றது. இன்னொரு தளத்தில் ஏற்கனவே ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனத்தை மேலும் ஒடுக்குமுறைக்குள்ளாக்குவதற்கான வாய்ப்பை பி.கே.கேயின் நிராயுதபாணியாக்கம் வழங்க உள்ளது என்ற ஆதங்கங்களும் சர்வதேச அரசியல் வெளியில் காணப்படுகின்றது. இந்நிலையில் விடுதலைக்காக போராடும் தேசிய இனங்களிடையே ஏனைய தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்களை அறிந்து கொள்வது அவசியமாகின்றது. ஏற்றங்களிலிருந்து அனுபவத்தையும் இறக்கங்களிலிருந்து படிப்பினைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரையும்  குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் நிராயுதபாணியாக்கம் ஏற்படுத்த உள்ள அரசியல் தாக்கம் பற்றிய சர்வதேச அரசியல் செய்திகளை ஈழத்தமிழர்களின் புரிதலுக்கு வழங்குவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

துருக்கிக்கு எதிரான பல தசாப்த கால ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதை நிரூபிக்கும் வகையில் ஜூலை-11அன்று நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது பெரும் எண்ணிக்கையிலான குர்திஷ் போராளிகள் தங்கள் ஆயுதங்களை பகிரங்கமாக எரித்தனர். ஈராக்கின் வடக்கே குர்திஸ்தான் தன்னாட்சி பிராந்திய பகுதியில் உள்ள சுலைமானியாவிலிருந்து வடமேற்கே 60கி.மீ தொலைவில் உள்ள டுகான் நகரில் உள்ள ஜசானா குகையின் நுழைவாயிலில் இவ்நிராயுதபாணியாக்கம் நிகழ்வு இடம்பெற்றது. பத்திரிகையாளர்கள் வெளியிட்ட படங்களில், டஜன் கணக்கான பி.கே.கே கெரில்லாக்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் இராணுவ சீருடையில், துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளை ஏந்தி சம்பவ இடத்திற்கு வருவதைக் காட்டியது. துருக்கிய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பி.கே.கே தலைவர் அப்துல்லா ஓகலனின் பெரிய உருவப்படத்தின் முன் அவர்கள் மேடையில் நின்றனர். மற்ற படங்கள், போராளிகள் தங்கள் ஆயுதங்களையும் வெடிமருந்து பெல்ட்களையும் ஒரு பெரிய உலோகக் கொள்கலனில் வைத்து, அங்கு நெருப்பு மூட்டப்படுவதைக் காட்டியது. பி.கே.கே சார்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'இனிமேல் ஜனநாயக அரசியல் மற்றும் சட்டத்தின் மூலம் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான நமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தங்கள் விருப்பத்தைக் காட்ட, தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கள் ஆயுதங்களை அழிப்பதாக' போராளிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் அரசாங்க தகவல் தொடர்பு அலுவலகம் ஒரு அறிக்கையில், 'இந்த விழா குழுவின் பல தசாப்த கால வன்முறை பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உறுதியான மற்றும் வரவேற்கத்தக்க படியைக் குறிக்கிறது' எனக்கூறியுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அமைதி நடவடிக்கையில், நான்கு தசாப்தங்களாக 40,000க்கும் மேற்பட்ட மக்கள் மரணிக்கப்பட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் உறுதியான அறிகுறியாக பி.கே.கேயின் நிராயுதபாணியாக்க நிகழ்வு அமைந்தது. இந்த நடவடிக்கை வெற்றி பெற்றால், துருக்கியின் மிகக் கடுமையான உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வந்து, ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுக்கு அரசியல் வெற்றியை அளிக்கும். மறுமுனையில் குர்துக்களிற்கான வாய்ப்புக்கள் பற்றி எவ்வித உறுதிப்பாடான உடன்பாடுகளும் எட்டப்பட்டிருக்கவில்லை. ஆயுதக் குறைப்புக்கு ஈடாக போராளிகளுக்கு எந்தவொரு சலுகைகளையும் வழங்கும் யோசனையை துருக்கிய அதிகாரிகள் பகிரங்கமாக நிராகரித்து வருகின்றனர். இது போராளிகளுக்கு என்ன நடக்கும் என்ற கேள்விகளை எழுப்புகிறது. பி.கே.கேயின் ஆயுதக் களைவு நிகழ்வுக்கு பின்னர் துருக்கி அரசாங்க தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'பி.கே.கே இராணுவ கட்டமைப்புகளின் மீளமுடியாத ஆயுதக் குறைப்பு மற்றும் கலைப்பு, போராளிகளை ஒருங்கிணைப்பதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுடன் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளால் தொடரப்படும்' என்று கூறியது. எனினும் சட்டபூர்வ நடவடிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை. இந்த பின்னணியிலேயே இது ஒருவகையில் பி.கே.கேயின் சரணாகதி அரசியலாகவே சர்வதேச அரசியல் அவதானிகளால் விமர்சிக்கப்படுகின்றது. ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து போயுள்ளன. மேலும் துருக்கிய உளவுத்துறை அதிகாரிகளுக்கும் பி.கே.கே.யின் சிறையில் அடைக்கப்பட்ட தலைவரான அப்துல்லா ஓகலனுக்கும் இடையிலான நெருக்கமான சந்திப்புகளிலேயே இவ்சரணாகதி நிகழ்ந்துள்ளது.

துருக்கியின் மிகப்பெரிய இன சிறுபான்மையினரான குர்துகளின் மொழியையும் கலாச்சாரத்தையும் துருக்கி அரசு தொடர்ச்சியாக அடக்கி வருகிறது. 1980களில் துருக்கிக்கு எதிராக பி.கே.கே தனது கிளர்ச்சியைத் தொடங்கியது. ஒரு சுதந்திர குர்திஷ் அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. 1999ஆம் ஆண்டு தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாதத்திற்காக ஓகலன் தண்டனை பெற்ற பிறகு குர்திஷ் கொள்கையளவில் மாற்றத்தை இனங்காணக்கூடியதாகவும் இருந்தது. 2013ஆம் ஆண்டளவில், சுதந்திர அரசு குறித்த தனது நிலைப்பாட்டை ஒகலன் மாற்றிக்கொண்டார். மேலும் துருக்கியில் விரிவான குர்திஷ் உரிமைகள் மற்றும் அதிக பிராந்திய சுயாட்சிக்காக பரப்புரை செய்யத் தொடங்கினார். ஆயுதமேந்திய கிளர்ச்சியின் செயல்திறனை இனி நம்பவில்லை என்று கூறினார். ஆதன் தொடர்ச்சியாகவே 2025ஆம் ஆண்டு ஆயுதக்களைவும் அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பி.கே.கே-ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதுகின்றன. எர்டோகனின் கீழ், துருக்கிய அரசாங்கம் குர்திஷ் மொழி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது மற்றும் வரையறுக்கப்பட்ட குர்திஷ் மொழி கல்விக்கு அனுமதித்துள்ளது. எனினும் சமீபத்திய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட டஜன் கணக்கான குர்திஷ் மேயர்களை அரசாங்கம் பதவிகளில் இருந்து நீக்கி, அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட 'அறங்காவலர்களை' (Trustees) நியமித்துள்ளது. இந்த நடைமுறையை குர்திஷ் ஆதரவு அரசியல்வாதிகள் ஜனநாயக விரோதம் என்று அழைத்துள்ளனர். இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாகவே பி.கே.கே நிராயுதபாணியாக்கத்தை மேற்கொண்டு ஜனநாயக நடவடிக்கைகளூடாக குர்திஷ் சுயாட்சி போராட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இறங்கியுள்ளது.

முழுமையான சர்வாதிகாரிகள் அல்லது குறைபாடுள்ள ஜனநாயகங்களின் தலைவராக இருக்கும் வலிமையானவர்களாயினும் இன மோதல்களை அரிதாகவே தீர்க்கிறார்கள் என்பதை சர்வதேச அனுபவங்களில் அடையாளங் காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் பெரும்பாலும் அவற்றை முடக்குகிறார்கள் அல்லது அடக்குகிறார்கள். மூல காரணங்களைத் தவிர்த்து விடுகிறார்கள். மேலும் தீர்க்கப்படாத மோதலை அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை இறுக்க ஒரு சாக்காகப் பயன்படுத்துகிறார்கள். இதன் விளைவாக ஒத்திவைக்கப்பட்ட உறுதியற்ற தன்மை மட்டுமே உருவாக்கப்படுகின்றது. அரிதாகவே அமைதி சாத்தியப்படுகின்றது. இவ்அனுபவத்திற்கு 'எர்டோகனின் போர் வீட்டிலும் சிரியாவிலும் ஒரு வலிமையான மனிதனின் போராட்டம்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் கோனுல் டோல் இலங்கையில் ஈழத்தமிழர் விவகாரத்தை முன்னுதாரணமாக்கின்றார். 'குர்துகளுடன் எர்டோகனின் சமாதான செயல்முறையை நம்ப வேண்டாம்' என்ற தலைப்பில் Foreign Policy சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில், ஈழத்தமிழர்களின் படிப்பினையிலிருந்து குர்துக்கள் ஏர்டோகனின் சமாதான செயல்முறையை நம்ப வேண்டாம் என்ற எச்சரிக்கையை வழங்குகின்றார். '1980களில் இருந்து, நாட்டின் சிங்கள பெரும்பான்மையினரின் ஆழமாக வேரூன்றிய பாகுபாட்டிற்கு, குறிப்பாக மொழி மற்றும் மதத்தை அடக்குவதற்கு பதிலளிக்கும் விதமாக விடுதலைப்புலிகள் தமிழ் தாயகத்திற்காகப் போராடியது. இந்த கொடூரமான மோதல் 80,000க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது. மே 2009இல், அரசாங்கம் வெற்றியை அறிவித்தது. தமிழ் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது.  துப்பாக்கிகள் அமைதியாகிவிட்டாலும், அடக்குமுறை தொடர்ந்தது. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அப்போதைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விமர்சகர்களான தமிழ் மற்றும் சிங்களவர்கள் இருவருக்கும் எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் நடந்தன. ராஜபக்‌ச இந்த வெற்றியை அதிகாரத்தை பலப்படுத்தவும், தனது சிங்கள-பௌத்த தேசியவாத பிம்பத்தை உயர்த்தவும், ஜனநாயகத்தை அரிக்கவும் பயன்படுத்தினார். இன மோதலுக்கு அதிகாரப் பகிர்வு போன்ற நீடித்த அரசியல் தீர்வுக்கு எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், இராணுவம் முறையான நடைமுறைகள் அல்லது மேல்முறையீடு செய்வதற்கான வழிகள் இல்லாமல் நிலத்தைக் கைப்பற்றியது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கில், பாதுகாப்புப் படைகள் அமைதியான போராட்டங்களை வழக்கமாக ஒடுக்கியது. 16 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையின் மிருகத்தனமான உள்நாட்டுப் போரில் தப்பிப்பிழைத்த தமிழர்கள் இன்னும் அச்சத்திலும் அதிகாரமின்மையிலும் வாழ்கின்றனர். துருக்கியின் குர்துகள் நாட்டின் வலிமையான தலைவருடன் 'சமாதான செயல்முறை' என்று அழைக்கும் ஒரு முயற்சியில் ஈடுபடும்போது இதேபோன்ற விதி அவர்களுக்கும் காத்திருக்கலாம்' என்ற எச்சரிக்கையை குறிப்பிடுகின்றார். குறிப்பாக எர்டோகன் ஒகலனுடனான பேச்சுவார்த்தைகளை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக சித்தரிக்கிறார். அதேநேரத்தில் குர்திஷ் ஆதரவு தலைவர்கள் அவற்றை ஜனநாயக கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு பாதையாகக் கருதுகின்றனர். இந்த துண்டிப்பு இலங்கையை பிரதிபலிக்கிறது. அங்கு ராஜபக்சா சமாதானம் என்று அழைக்கப்படுவதை அதிகாரத்தை பலப்படுத்த பயன்படுத்தினார். அதைப் பகிர்ந்து கொள்ளவில்லை. எர்டோகன் ஒகலனுடனான பேச்சுவார்த்தைகளை குர்திஷ் பிரச்சினையைத் தீர்க்க அல்ல. மாறாக அதிகாரத்தின் மீதான தனது பிடியை இறுக்கமாக்கப் பயன்படுத்துகிறார். பி.கே.கேயின் ஆயுதக் களைவு ஏர்டோகனின் அதிகாரப் பிடியை இறுக்கமாக்குவது தொடர்பில் இப்பத்தி எழுத்தாளரின் 'குர்திஷ் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதா!' (தினக்குரல் ஜூன்-06) எனும் கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது.

எனினும் பி.கே.கே செயற்பாட்டாளர்களிடம் நிராயுதபாணியாக்கம் புதிய போராட்ட வடிவத்திற்காக ஆரம்பமாக கருதும் எண்ணங்கள் காணப்படுகின்றது. முதலாவது ஆயுதக்களைவு இடம்பெற்ற ஈராக்கின் தன்னாட்சி குர்திஷ் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஜஸ்னா குகையின் வரலாற்று முக்கியத்துவத்தை முன்னிறுத்தி தேசிய உணர்வையும் நம்பிக்கையையும் கட்டமைக்க பி.கே.கே செயற்பாட்டாளர்கள் முனைகின்றார்கள்.

ஜஸ்னா குகை 1923ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் காலனித்துவ தாக்குதல்களின் போது குர்துக்களின் புகலிடமாகவும் கட்டளைத் தளமாகவும் செயல்பட்டுள்ளது. அதே ஆண்டு, பத்திரிகையாளர் அஹ்மத் குவாஜாவால் நிறுவப்பட்ட முதல் புரட்சிகர குர்திஷ் செய்தித்தாளான  'Bangî Haq' (சத்தியத்தின் அழைப்பு) இரகசிய அச்சிடும் தளமாக ஜஸ்னா குகை மாறியது. இந்தச் செயல் காலனித்துவ எதிர்ப்பு, அரசியல் போராட்டம் மற்றும் நிலத்தடி பத்திரிகை ஆகியவற்றை ஒன்றாக இணைத்தது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும், இங்கு நிராயுதபாணியாக்குவது என்பது சரணடைதல் அல்ல. இது ஒரு அரசியல் அறிக்கை, காலத்தின் அடுக்குகளில் எதிரொலிக்கிறது என்ற செய்தியை பி.கே.கேயினர் வழங்குகின்றார்கள். இது கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் ஒரு கோட்டை வரைகிறது. நினைவகத்தை ஒரு உத்தியாக அழைக்கிறது. ஜஸ்னாவைத் தேர்ந்தெடுப்பதில், போராளிகள் மக்களுக்கு, 'புரட்சிகள் வடிவம் மாறலாம், ஆனால் அவற்றின் வேர்கள் ஆழமாக ஓடுகின்றன' என்பதனை நினைவூட்டுகிறார்கள். ஒரு காலத்தில் பேரரசு மௌனத்தைத் தேடிய இடத்தில், குர்திஷ் குரல்கள் உண்மையை அச்சிடுகின்றன. இப்போது ஆயுதங்கள் கீழே போடப்பட்ட இடத்தில், புதிய போராட்டங்கள் எழக்கூடும் என்ற செய்தியை வழங்குகின்றார்கள். இது பி.கே.கே கட்டியெழுப்ப நினைக்கும் மக்கள்மயப்படுத்தப்பட்ட அரசியல் எழுச்சியில் மக்களை சோர்வடையாது திரட்டுவதற்கு அவசியமாகின்றது. எனினும் இக்குறியீட்டு அரசியல் மாத்திரம் போதுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

எனவே, குர்துக்களின் ஆயுதக்களைவு குர்துக்களின் விடுதலைப் போராட்டத்தின் கடுமையான வீழ்ச்சியை அடையாளப்படுத்துவதாகவே அமைகின்றது. ஏற்கனவே ஜனநாயக அரசியலில் முடக்கப்படும் தேசிய இனத்திடம் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதும் அதனூடான தேசிய விடுதலையை அடைவதும் பெரும் சவாலான விடயமாகவே சர்வதேச அரசியல் அவதானிகளால் குர்துக்கள் விடயத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றது. தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் ஆயுத முனை அரசியலின் மீதான நம்பிக்கை, 2001ஆம் ஆண்டு இரட்டைக்கோபுர தாக்குதலும் அதன் விளைவான பயங்கரவாத பெயர்ப்பலகைக்கு பின்னர் கணிசமாக வீழ்ச்சியடையவே ஆரம்பித்தது. போராட்டக்குழுக்கள் பயங்கரவாதத்தின் பெயரால் முடக்கப்படுவது இயல்பாகியது. சிரியாவில் HTS போன்ற குழுக்கள் பயங்கரவாத பெயர்ப்பலகையிலிருந்து மீட்சி பெற்று சர்வதேச அங்கிகாரத்துக்கான வாய்ப்பை பெற்றுள்ள போதும், பெருமளவிலான முடிவுகள் எதிரானதாகவே அமைகின்றது. இந்தப்பின்னணியில் ஜனநாயக பொறிமுறைகளுக்கூடாக மக்கள் திரட்சியிலான போராட்ட உத்திகளை விடுதலைக்காக போராடும் தேசிய இனங்கள் பரிட்சிக்க வேண்டியது தவிர்க்க முடியாத உலக ஒழுங்கின் எதார்த்தமாகவே அமைகின்றது. எனினும் சரணாகதி அரசியல் மக்களிடையே ஜனநாயக திரட்சிக்கானதும் எழுச்சிக்கானதுமான நம்பிக்கையை வழங்குமா என்பதிலேயே பி.கே.கேயின் அணுகுமுறை எதிரான விமர்சனத்தை உருவாக்குகிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-