போர்களில் ட்ரம்பின் ஈடுபாடும் விளைவுகளும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சவால் செய்துள்ளதா! -ஐ.வி.மகாசேனன்-

உலக ஒழுங்கு பற்றிய சக்கரவுகள் தொடர்ச்சியான பிரதான விவாதமாக காணப்படுகிறது. அமெரிக்காவின் ஒற்றைமைய அரசியல் மீதான சந்தேகங்கள் நீண்டகாலமாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 2008ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடிகளும் அதன் பின்னரான விளைவுகளும் பொருளாதார ரீதியான பல துருவ ஒழுங்கை எதிர்வு கூறியது. அதேவேளை கொரோனாவுக்கு பின்னரான அரசியலில் சர்வதேச நிறுவனங்களில் சீனாவின் மேலாதிக்கமும் அமெரிக்காவின் சரிவும் சர்வதேச அரசியலில் அவதானிக்கப்பட்டது. இப்பின்னணியில் இருதுருவ உலக ஒழுங்குக்கான எதிர்பார்ப்பு விவாத மையத்தை பெற்றது. எனினும் சீனாவின் எழுச்சி பொருளதார ரீதியான மென் அதிகாரமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. உலக ஒழுங்கு பிரதானமாக மென் அதிகாரத்தால் தீர்மானிக்கப்படுவதால், அமெரிக்காவின் மேலாதிக்கம் தொடர்ச்சியாக முதன்மைப்படுத்தப்பட்டது. இப்பின்னணியிலேயே இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்காவின் தலையிடும், பின்வாங்கலும் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களின் செய்திகளும் அமெரிக்காவின் மென் அதிகார மேலாதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. இக்கட்டுரை அமெரிக்காவின் மேலாதிக்கம் சவாலுக்கு உட்டபடுத்தப்பட்டுள்ள சூழலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை மீண்டும் கட்டியெழுப்புதல் (Make America Great Again) என்ற தேர்தல் கோசத்துடன் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா தேர்தலில் வெற்றி பெறுகையில், கடந்த கால அனுபவங்களின் பின்னணியில் அமெரிக்கா தொடர்பில் பல சர்வதேச அரசியல் அவதானிகளும் ஆழ்ந்த கவனத்தை குவித்திருந்தார்கள். அதனை நியாயப்படுத்தும் வகையிலேயே ட்ரம்பின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் அமைந்து வருகின்றது. வரிவிதிப்பு கொள்கைகள் மற்றும் உக்ரைனிலிருந்து பின்வாங்கல் போன்றன சில உதாரணங்களாகும். அதேவேளை அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்த உலகில் இடம்பெறும் போர்களில் தன்னை மத்தியஸ்தராகவும் சமாதானத்தின் தூதுவராகவும் ட்ரம்ப் அடையாளப்படுத்த முயல்கின்றார். இந்த பின்னணியிலேயே அமைதிக்கான நோபல் பரிசுக்கு தான் பொருத்தமானவர் என்ற கருத்துக்களையும் ட்ரம்ப் தெரிவித்து வருகின்றார். ரஷ;சியா-உக்ரைன் போர், இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் இஸ்ரேல்-உக்ரைன் போர் ஆகியவற்றில் அமெரிக்காவின் தலையீடு சமாதான நடவடிக்கைகளுக்கானது என்பதாகவே ட்ரம்பின் பிரச்சாரமும் அமைந்திருந்தது. இம்மூன்று போரிலும் அமெரிக்காவின் அணுகுமுறைறைகள் வேறுபட்டிருந்தது. அதன் விளைவுளும் அமெரிக்காவின் மேலான்மையை சவால் செய்வதாகவும் சந்தேகத்திற்குள்ளும் தள்ளியது.

முதலாவது, ரஷ;சியா-உக்ரைன் போரில் அமெரிக்காவின் முன்னைய ஜனாதிபதி பைடன் அரசாங்கம் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. பெருமளவு ஆயுத தொழில்நுட்ப உதவிகளையும் பொருளாதார ஆதரவையும் அமெரிக்க வழங்கி இருந்தது. அமெரிக்காவின் வரவு-செலவுத்திட்ட அறிக்கையிலேயே உக்ரைனுக்கான ஆதரவையும் உள்ளடக்கியிருந்தது. ஒருவiகையில் உக்ரைனின் போரை அமெரிக்காவே நிகழ்த்தியிருந்தது. தேர்தல் பிரச்சார காலத்திலேயே ட்ரம்ப் உக்ரைனுக்கான ஆதரவை கடுமையாக எதிர்த்திருந்தார். ஜனாதிபதியாக வெற்றி பெற்ற பின்னர் உக்ரைனுக்கான அமெரிக்க ஆதரவு தளத்தை பின்வாங்கியிருந்தார். ரஷ;சியா ஜனாதிபதியுடன் உரையாடுவதனூடாக சமாதான பேச்சுவார்த்தையை முன்னகர்த்த முடியுமென்பதனை முன்னிலைப்படுத்தினார். உக்ரைன் ஆரம்பத்தில் புடினுடனான பேச்சுவார்த்தையை மறுத்திருந்தது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு வருகை தந்திருந்த போதும் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ட்ரம்ப்-ஜெலன்ஸ்கி உரையாடல் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னாளில் உக்ரைன் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்டு ரஷ;சியா மற்றும் உக்ரைன் உயர்மட்ட அதிகாரிகளிடையே சமாதான பேச்சுவார்த்தைகள் அமெரிக்க தலையீட்டில் இடம்பெற்றது. ட்ரம்பும் புடினுடன் சமாதானத்திற்கான உரையாடலை முன்னெடுத்திருந்தார். எனினும் ரஷ;சியா-உக்ரைன் போரில் நிலையான சமாதானத்தை உருவாக்க முடியவில்லை. புடினது நடவடிக்கைகளை இடையிடையே ட்ரம்ப் கண்டிக்கின்ற போதிலும், ரஷ;சியாவிற்கு எதிராகவோ அல்லது உக்ரைனுக்கு ஆதரவாகவோ அமெரிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முன்வராத நிலைமைகளிலேயே காணப்படுகின்றது.

இரண்டாவது, இந்திய-பாகிஸ்தான் போரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீடும் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் ஈடுபாடும் சர்ச்சைக்குரிய விவாதமாகவே காணப்படுகின்றது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் ஏப்ரல்-22அன்று இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ;மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தாக்குதலால் தூண்டப்பட்டது. இதில் 26 பொதுமக்கள், கிட்டத்தட்ட அனைவரும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதக் குழுக்களை இந்தியா குற்றம் சாட்டியது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதத்தில், பாகிஸ்தான் நிலப்பரப்பிற்குள் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதலை நிகழ்த்தியது. இது இரு நாடுகளுக்குமிடையிலான போர் அறிவிப்பையும் தூண்டியது. மே-7 அன்று, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ;மீரில் உள்ள பல இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அடுத்த மூன்று நாட்களில், இரு நாடுகளும் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை பரிமாறி, ஒருவருக்கொருவர் விமானத் தளங்களைத் தாக்கின. இப்போர் இரு அணுவாயுத நாடுகளுக்கிடையிலான போராக உலகப் போருக்கான அச்சத்தையும் போரியல் நிபுணர்களிடையே உருவாக்கியது. மே-10அன்று ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா இராணுவ தளபதிகள் உரையாடி போர் நிறுத்த இணக்கத்தை இரு நாடுகளும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ட்ரம்ப் தானே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக பிரகடனப்படுத்தினார். எனினும் இந்திய இவ்செய்தியை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது. அண்மையில் ஜி-07 மாநாட்டிற்கு இந்திய பிரதமர் கனடா சென்றிருந்த வேளையிலும் டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி அழைப்பில் குறித்த செய்தியை மறுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டிருந்தது. இதுவும் அமெரிக்காவின் மேலான்மை போலியாக கட்டமைக்கப்படுகிறதா எனும் எண்ணங்களையே பொதுவெளியில் உருவாக்கியது.

மூன்றாவது, இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்காவின் ஈடுபாடும் அமெரிக்காவின் பின்வாங்கலுமே அமெரிக்காவின் மேலான்மையை கேள்விக்குட்படுத்தும் உடனடி காரணியாக அமைகின்றது. ஈரானின் அணுச்செறிவு கட்டுப்படுத்தல் தொடர்பான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைக்கான திகதியிடப்பட்ட நிலையில், ஈரான் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஈரானும் பதிலுக்கு ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்ட நிலையில் போர் நீளும் அபாயத்தை எட்டடியது. இஸ்ரேல் அமெரிக்காவின் நேரடி ஈடுபாட்டையும் அழைத்தது. அமெரிக்க முன்னர் உடனடியாக வர மறுத்த நிலையில், ஜூன்-21அன்று ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போருக்குப் பத்து நாட்களுக்குப் பிறகு, ட்ரம்ப் தலையிடுவதற்கான ஆபத்தான முடிவை எடுத்தார். இத்தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்களை முற்றாக அழித்து விட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த போதிலும், அமெரிக்க புலனாய்வுத் துறையே ஈரான் தமது அணுசக்தியை மீள கட்டமைக்கக்கூடிய சூழல் இருப்பதையே உறுதி செய்துள்ளார்கள். அத்துடன் அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, கட்டாரில் உள்ள ஒரு அமெரிக்கத் தளத்தின் மீது ஈரானிய பதிலடித் தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. எனினும் இது அமெரிக்க நீண்ட காலம் தக்க வைத்திருந்த வன்அதிகார மேலாதிக்கத்தை கேள்விக்குட்படுத்தும் நிகழ்வாகவே அமைந்திருந்தது. மேலும், ஈரானின் அமெரிக்க தளம் மீதான பதில் தாக்குதல் அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பிற்கு வழிகோலியது. அமெரிக்க இராணுவ தளம் மீதான ஈரானின் தாக்குதலை தொடர்ந்து ட்ரம்ப் வெளியிட்ட போர் நிறுத்த அறிவிப்பை ஆரம்பத்தில் ஈரான் நிபந்தனையுடன் மறுத்திருந்தது. இஸ்ரேல் மீது இறுதி நேர அதிரடி தாக்குதலை மேற்கொண்ட பின்னரே ஜூன்-24 அன்று  ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தத்தை இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ள போதிலும் அது நிலையற்றது என்பதையே தொடர்ச்சியான எல்லையோர தாக்குதல்கள் உறுதி செய்கின்றது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டு இரு வார காலப்பகுதிக்குள், அது உடைந்து வருவதாகத் தெரிகிறது. மத்திய கிழக்கு இறுதியாக அமைதியாகிவிட்டதாக அனைவரும் நினைத்தபோது, ​​இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனான் மீது குண்டுகளை வீசத் தொடங்கின. இது போருக்கான முன்னாயர்த்தங்களாகவே அமைகின்றது. அமெரிக்காவின் நெருங்கிய ஆதரவை பெற்றுவரும் இஸ்ரேலும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்திலான போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையையே இது உறுதி செய்கின்றது. இச்சந்தரப்பத்தில் டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியில் ஊடகவியலாளரின் இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கடுமையான வார்த்தைகளில் கண்டித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உலக நாடுகளின் போர்களில் அமெரிக்கா கையாண்டுள்ள அணுகுமுறைகளும் அதன் விளைவுகளும் வன்அதிகார ரீதியில் அமெரிக்க தக்கவைத்துள்ள மேலாதிக்க விம்பத்தையும் சிதைப்பதாகவே அமைகின்றது. அதன் உச்சமான பகுதியாகவே ஈரான் அமெரிக்க இராணுவ தளங்கள் மீதான பதில் தாக்குதலும், அமெரிக்காவின் உடனடியான பின்வாங்கலையும் சர்வதேச அரசியல் அவதானிகள் விபரிக்கின்றனர். ஏற்கனவே 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் பின்னர் பொருளாதார ரீதியாக உலகம் பல்துரவ பொருளாதார சக்திகளை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் டொலர் அரசியலே அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தை பாதுகாத்தது. எனினும் அண்மைய நாட்களில் பிரிக்ஸ் நாடுகள் தமக்கிடையிலான சர்வதேச வர்த்தகத்தில் டொலரை தவிர்ப்பது தொடர்பான உரையாடல் டொலரை பலவீனப்படுத்தும் செயலாகவே அமைகின்றது. இந்நிலையில் மிஞ்சியிருந்த அமெரிக்காவின் மென்அதிகார மேலாதிக்கமும் போரின் மத்தியஸ்தம் என்ற பெயரில் அமெரிக்க சிதைத்து வருகின்றமையையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒற்றை மைய உலக ஒழுங்கில் மேற்காசியாவில் ஈராக் மீதான தாக்குதலை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவின் மேலான்மை ஈரானின் பதிலடி மூலம் முடிவு காண ஆரம்பிக்கிறதா என்பதே சர்வதேச அரசியல் அவதானிகளின் அண்மைக்கால மைய விவாதமாக அமைகின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-