தேசிய மக்கள் சக்தியின் சகோதரத்துவ நாடகமும் ஈழத்தமிழர்களின் நூற்றாண்டு கால ஏமாற்ற அனுபவமும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பதிவுகள் நீண்ட வரலாற்றை பகிருகின்றது. அவற்றை ஈழத்தமிழினம் சரியாக கட்டமைக்கவோ அல்லது மூலோபாயரீதியாக கையாளத் தவறியுள்ளனர். எனினும் காலத்துக்கு காலம் ஆட்சிப்பீடமேறியுள்ள தென்னிலங்கை தரப்பினர் இனப்படுகொலை சுவடுகளை மறைப்பதில் அரச இயந்திரமாக தந்திரோபாயமாக செயற்பட்டுள்ளனர். இப்பின்னனியிலேயே 2025ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை தமிழினப்படுகொலை நினைவு நாளில் 'சகோதரத்துவ தினம்' எனும் அறிவிப்புக்களும் அவதானிக்கப்படுகின்றது. இந்நிகழ்வை ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சோசலிச இளைஞர் ஒன்றியத்தினர் ஒழுங்கமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. இது ஒருவகையில் இடதுசாரி சொற்பதங்களுக்குள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூடி மறைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என்ற விமர்சனம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இக்கட்டுரை அரசறிவியலில் 'சகோதரத்துவம்' என்பதன் பொருத்தமான விளக்கத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

எளிமையான பொதுப் பார்வையில் சகோதரத்துவம் என்ற உரையாடல் ஒன்றிணைந்து வாழ்வதற்கான கூட்டான சூழலையே அடையாளப்படுத்துகின்றது. இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கெதிரான சிங்கள பேரினவாதத்தின் துரோக வரலாறு நூற்றாண்டை கடந்துள்ளது. இடதுசாரி பாரம்பரியமும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் அதிக நட்பை பாராட்டும் எழுத்தாளர் என்.சரவணன் அவர்களும் '99 வருட துரோகம்' எனும் பெருந்தொடரை கடந்த காலங்களில் இப்பத்திரிகையில் எழுதியுள்ளார். நூற்றாண்டு கால துரோகத்தில் ஏமாற்றங்கள் தொடங்கி இனப்படுகொலை வரை பல அவலங்கள் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. இத்தகைய கடந்த காலங்களுக்கு பரிகாரம் அல்லது பொறுப்புக்கூறலின்றி கூட்டாக வாழ்வது அல்லது சகோதரத்துவம் பாராட்டக்கூடிய இயல்பு நிலையை உருவாக்க முடியுமா என்பதிலேயே ஈழத்தமிழர்கள் தென்னிலங்கையிலிருந்து விலகி நிற்கின்றார்கள்.

'சகோதரத்துவம்' பற்றிய கடந்த கால சர்வதேச அரசியல் உரையாடல்களும் வெறுமனவே கடந்த காலத்தை கடந்து இயல்பாக்க நிலையில் கூடி வாழ்தல் பற்றி குறிப்பிடவில்லை. இலங்கையின் இடதுசாரிகள் பெயர்ப்பலகைக்குள் இயங்கும் வழக்கத்திலேயே சகோதரத்துவம் என்ற சொல்லாடலையும் முன்னிறுத்துகின்றார்கள். சகோதரத்துவம் என்ற கருத்தியல் சுதந்திரம் மற்றும் சமத்துவத்துடன் பிணைந்தே முழமை பெறுகின்றது. சகோதரத்துவம் என்பது, 'அனைவரும் ஒருவருக்கொருவர் கருணையுடனும் ஆதரவுடனும் இருக்க வேண்டும் என்பதே' அடிப்படையாக உள்ளது. இது ஒற்றுமை பற்றியது. ஒற்றுமை, 'அனைவரும் வாழ விரும்பும் பாதுகாப்பான, சுதந்திரமான மற்றும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதிலும் பராமரிப்பதிலும் அனைவரும் பங்காளிகளாக செயற்பவதிலேயே தங்கியுள்ளது.' சுதந்திரம், 'அதிகாரிகளிடமிருந்து ஒடுக்குமுறை அல்லது தேவையற்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் வாழ்வதற்கான ஜனநாயக சமூகத்தில் உள்ள உரிமையை குறிக்கிறது.' அவ்வாறே சமத்துவம், 'ஒருவரையொருவர் சமமாக நடத்துவது மட்டுமல்ல, ஒவ்வொரு நபரும் சட்டத்தின் கீழ் சமமாக பார்க்கப்படுவதும் ஆகும்.' இத்தகைய கருத்தியல் விளக்கங்களுடன் ஈழத்தமிழர்கள் வாழ்கின்றார்களா அதற்கான சூழமைவை சகோதரத்துவத்தை திணிக்கும் தென்னிலங்கை இளைஞர்களால் உருவாக்க முடிகின்றதா என்பதையும் சிந்து பார்க்க வேண்டியதாக உள்ளது. 

சகோதரத்துவத்தின் மையமான ஒற்றுமையை உருவாக்குவதற்கு, அனைவரும் ஒருவருக்கொருவர் கருணையுடனும் ஆதரவுடனும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. சமகாலத்தில் காணமலாக்கப்பட்டோரின் உறவினரின் போராட்டங்கள் 3000 நாட்களை கடந்துள்ளது. அதேவேளையில் வடக்கில் நிலத்தை தோண்டுகையில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறுகின்றன. ஜூலை-24 வரையிலான செய்திகளின் பிரகாரம் 88 மனித என்புத்தொகுதிகள் யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை கடந்த காலங்களை மறப்போம் என்ற ஒற்றை வரிக்குள் நகர்த்தி விட முடியாது. காணமலாக்கப்பட்டோர் என்றோ ஒருநாள் கிடைக்கப்பெறுவார்கள் என்ற ஏக்கத்துடனேயே உறவினர்கள் உள்ளார்கள். எனினும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிடையே பதட்டத்தை உருவாக்கியுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான 'The Hindu' பத்திரிகையின் அண்மைய செய்தியாக்கத்தில் யாழ்ப்பாண நகரத்திற்கு அருகில் வசிக்கும் 75 வயதான ஆறுமுகசாமி என்பவர் தனது வேதனையை பதிவு செய்துள்ளார். 1996ஆம் ஆண்டு தனது 21 வயது சகோதரர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டதிலிருந்து, பொன்னம்பலம் ஆறுமுகசாமி தனது நேரத்தையும் சக்தியையும் அவரைக் தேடுவதில் செலவிட்டார். 'காணாமல் போன உறவினரைத் தேடும் நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சகோதரர் அல்லது மகன் அல்லது மகளுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் மிகுந்த வேதனையை அனுபவித்து வருகிறோம்' எனத்தெரிவித்திருந்தார். இவ்வாறான பின்னணியில் மண்ணின் கீழ் விகாரமாக புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் பற்றிய செய்திகள் அமைதியை இழக்கச் செய்கின்றன. காணாமல் போனவர்களின் இருப்பிடம் தெரியவில்லை என்றாலும், தங்கள் அன்புக்குரியவர் எங்காவது உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையை சிதைக்கும் அபாயத்தில் குடும்பங்கள் சிக்கித் தவிக்கின்றனர். இத்தவிப்புக்கு சகோதரத்துவம் பேசி வருபவர்கள் எத்தகைய கருணையை ஆதரவை வெளிப்படுத்துகின்றார்கள். தென்னிலங்கையின் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பிடமிருந்து செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பிலோ காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலோ எத்தகைய சாதகமான உரையாடல்களையும் இனங்காண முடியவில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சோசலிச இளைஞர் ஒன்றியத்தினரின் சகோதரத்துவ நிகழ்வுகளின் திகதியும் தமிழினப்படுகொலையின் உக்கிரமான பதிவுகளில் ஒன்றாகிய கறுப்பு ஜூலை தினத்திலேயே திட்டமிடப்பட்டது. எனினும் மறுபக்கத்தில் நான்கு தசாப்தங்கள் கடந்தும் கறுப்பு ஜூலை வன்முறைக்கான பொறுப்புக்கூறலற்ற நிலைமைகளே காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி நான்கு தசாப்தங்களுக்கு முற்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை சிந்தனைகள் இன்று வரை மாற்றமின்றி காணப்படும் ஓர் சூழலிலேயே ஆளும் அரசாங்கம் சகோதரத்துவ தின அழைப்பை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியுள்ளது. 1983 ஜூலை 25-27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டனர். இதில் தமிழினத்தின் விடுதலைக்காக போராடிய குட்டிமணி மற்றும் தங்கதுரை போன்றோரும் உள்ளனர். குட்டிமணியின் நீதிமன்ற விசாரணையில் மரணதண்டனைத் தீர்ப்பின்போது தன்னை தூக்கிலிட்டதும், தனது கண்களை தானமாக வழங்கவேண்டும் என குட்டிமணி தெரிவித்திருந்தார். அந்தக்கண்களில் தமது இலட்சியக் கனவின் அடைவை காணமுடியும் என நம்பியிருந்தார். எனினும் கறுப்பு ஜூலை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையில் குட்டிமணியின் கண்களை தோன்டி எடுத்து புத்தர் சிலைக்கு முன்னால் விளையாடியதாக வரலாற்று பதிவுகள் உண்டு. உலகிற்கு அமைதியை கருத்துரைத்த புத்தரை முன்னிறுத்தி 1983இல் நிகழ்ந்த கறுப்பு ஜூலை வன்முறையின் தொடராகவே 2025இலும் தையிட்டி தனியார் காணி நிலங்களினை ஆக்கிரமித்து புத்த விகாரை நிறுவல் தொடர்கின்றது. 1983இற்கும் சரி, 2025இற்கும் சரி எவ்வித பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கையும் தீர்வுகளுமற்றே தேசிய மக்கள் சக்தியின் சகோதரத்துவம் கோரப்படுகின்றது.

சகோதரத்துவ தினம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன், 'கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு எதிரான செயற்பாடாக சகோதரத்துவ தின புகையிரத பயணம் இருக்காது. மாறாக குறித்த கலவரத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதற்கான அழுத்தத்தை அது அராசாங்கத்திற்கு ஏற்படுத்தும்' எனத் தெரிவித்திருந்தார். இது ஒரு வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்க உறுப்பினர்கள் இதுவரை தம்மை ஆளும் தரப்பாக உணராத சூழலையே வெளிப்படுத்துகின்றது. இது தொடர்பில் இறுதியாக நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருந்தார். அரசாங்க உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுப்பதனூடாக தான் ஒரு விடயத்தை நிறைவேற்ற முடியுமாயின், இலங்கை சர்வதிகார அல்லது மன்னராட்சியில் காணப்படுவதாக அமைய வேண்டும். அல்லது வடக்கு-கிழக்கு தமிழ் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு அரசாங்க செயற்பாட்டில் எவ்வித அதிகாரமுமற்ற சூழ்நிலையே விபரிக்கப்படுகின்றது. அரசாங்க உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுப்பதனூடாக தான் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமாயின், தமிழ் தரப்பில் உள்ள தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் நிலை பரிதாபகரமானதாகவே அமைகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாநகர சபை உறுப்பினர் கபிலனின் கருத்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சிங்கள இனவாத அரசாங்கமாகவே விபரிக்கின்றது. ஆளும் தரப்பு சிங்கள இனவாதத்தை கொண்டிருக்கையில் தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் சகோதரத்துவத்தை பாராட்டி அமைதியான வாழ்வை பெற முடியும் என்பது தமிழ் மக்களிடம் குவிந்துள்ள கேள்வியாக அமைகின்றது.

கிறிஸ்தவ தத்துவவியல் சகோதரத்துவத்திற்கு சரியான விளக்கத்தை அளிக்கின்றது. இது வெறுமனவே உயிரியல் கூற்றின் அடிப்படையில் ஏற்படும் உறவையே சகோதரத்துவம் என வரையறை செய்வதை மறுக்கிறது. குறிப்பாக பைபிளில் 'காயீன் தனது சகோதரனைக் கொன்றது, சகோதரத்துவம் இரத்தத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல' என்பதைக் குறிக்கிறது. உயிரியல் சகோதரத்துவம் இல்லை. அதாவது நாம் ஒருவருக்கொருவர் பொறுப்பை ஒப்புக்கொள்ளாவிட்டால் சகோதரத்துவம் இல்லை என்பதை காயின் - ஆபேல் கதை விளக்குகிறது. சகோதரத்துவம் ஒரு இயற்கையான முன்மாதிரியைக் கொண்டிருந்தாலும், சகோதரத்துவம் ஒரு பொதுவான தந்தையை முன்னிறுத்துகிறது. இது நம்மை ஒருவருக்கொருவர் பாதுகாவலர்களாக ஆக்குகிறது. கர்த்தராகிய கடவுள், 'காயீன், உங்கள் சகோதரன் ஆபேல் எங்கே?' என்று வெளிப்படையாகக் கேட்டபோது, 'நான் என் சகோதரனின் பாதுகாவலனா?' காயின் பதிலளித்தார். காயீன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரே, அதாவது, தனது செயல்களுக்குப் பொறுப்பேற்ற பிறகுதான் சகோதரர் என்ற பட்டத்தைப் பெற்றார். இங்கு பொறுப்பேற்பு மற்றும் பாதுகாவல் சகோதரத்துவத்தின் பணி என்பதை உறுதி செய்கின்றது. கறுப்பு ஜூலையில் புகையிரத பயணம் மேற்கொண்டு சகோதரத்துவ பெயர்ப்பலகையிட்ட தேசிய மக்கள் சக்தி அணியினரிடம் குறைந்தபட்சம் பொறுப்பேற்கும் இயல்பை கொண்டுள்ளார்களா என்ற விசனம் எழுகின்றது. கடந்த நூற்றாண்டு காலமாக நிகழ்த்தப்பட்டு வரும் ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு நடப்பு அரசாங்கமாக பொறுப்பேற்க தயாரில்லாத நிலையிலேயே அரசாங்க தரப்பினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஒப்புவிக்கின்றார்கள்.

எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தென்னிலங்கை அரசின் கடந்த கால இயல்பின் தொடர்ச்சியாகவே ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளை மூடி மறைக்கும் செயலை மேற்கொள்ளும் தரப்பாகவே காணப்படுகின்றார்கள். அதனை ஒரு சில தமிழர்களும் தம்மை கற்றோராக அடையாளப்படுத்துவரும் மேற்கொள்வதே ஈனச்செயலாக அமைகின்றது. 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை தமிழினப்படுகொலைக்கான நீதியைக் கோருவதை இனவதமாக சித்தரிக்கும் நிலைமையில் இருப்பது அவர்களின் எண்ணங்களின் மலினத் தன்மையையே விபரிக்கின்றது. நாளை அவர்கள் வீட்டில் புகுந்து யாரேனும் வன்முறைகளை நிகழ்த்துவார்களாயின், இன்று பிறருக்கு கூறும் உபதேசங்களை தமக்கு தெரிவித்து மறந்து மன்னித்து செல்வார்களா என்பதை அவர்கள் தமக்குள் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழினம் நல்லிணக்கத்துக்கோ அதன் வழி சகோதரத்துக்கோ என்றும் பின்னின்றதில்லை. இடதுசாரி பாரம்பரியமும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் அதிக நட்பை பாராட்டும் எழுத்தாளர் என்.சரவணன் அவர்களும் '99 வருட துரோகம்' எனும் பெருந்தொடரின் பதிவுகளும் அதற்கு சான்றாகின்றது. 1919இல் சேர்.பொன்.அருணாச்சலம் இலங்கை தேசிய காங்கிரஸில் இணைந்து தலைமை ஏற்றமை முதல் 1950-1960களில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் இணக்க அரசியல், செல்வநாயகத்தின் பண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா ஒப்பந்தம் உள்ளடங்கலாக 2015இல் இரா.சம்பந்தனின் ஏக்கிய இராச்சிய வரைபில் பௌத்தத்திற்கான முன்னுரிமை ஏற்பு வரை ஈழத்தமிழர்களிடமிருந்து நல்லிணக்கத்திற்கான சமிக்ஞைகளும் சகோதரத்துவத்திற்கான இணக்கங்களுக்கும் பல சான்றுகள் காணப்படுகின்றது. எனினும் தென்னிலங்கையிலிருந்து ஏமாற்றம் மற்றும் துரோகம் எனும் எதிர் விளைவுகளையே ஈழத்தமிழர்கள் நூற்றாண்டுளாய் பெற்று வருகின்றார்கள் என்பதே நிதர்சனமானதாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-