ஈழத்தமிழர் அரசியல் ஜெனிவாவை புரிந்துகொள்ள தவறியுள்ளதா! -ஐ.வி.மகாசேனன்-

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஈழத்தமிழரசியல் ஏதொவொரு வகையில் சர்வதேச பொறிமுறையை ஆதாரமாக கொண்டே இருப்பை தக்க வைத்துள்ளது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 'இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம்' தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம், சர்வதேச நாடுகளின் நலன்களின் இழுவையில் நகர்த்தப்பட்டு வருகின்றது. இரு வருடங்களுக்கு ஒருமுறை புதிய தீர்மானங்களும் இடையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் இதயத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த உறவால் கால நீடிப்பு என 12 ஆண்டுகள் கடந்து விட்டது. 13ஆம் ஆண்டில் 2025-செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் புதியதொரு தீர்மானத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது. ஈழத்தமிழர் அரசியல் தரப்பிலும் உள்நாட்டு பொறிமுறைகளில் அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன், தொடர்ச்சியாக சர்வதேச நீதிக்கான உரையாடலையே முன்னகர்த்தி வருகின்றனர். எனினும் இவ்உரையாடலின் செயற்றிறன் மற்றும் செயலாக்கத்துக்கான வழிவரைபடங்களில் தொடர்ச்சியாக விமர்சனப்பார்வையே காணப்படுகின்றது. இக்கட்டுரை ஐ.நா மனித உரிமைகள் (ஜெனிவா) களத்தை ஈழத்தமிழரசியல் எதிர்நோக்கும் அணுகுமுறையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவை ஆண்டுக்கு குறைந்தது மூன்று வழக்கமான அமர்வுகளை நடத்துகிறது. அவை பிப்ரவரி-மார்ச், ஜூன்-ஜூலை மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெறும். பணித் திட்டத்தைப் பொறுத்து அமர்வுகள் மூன்று, நான்கு அல்லது ஐந்து வாரங்கள் நீடிக்கும். இலங்கை விவகாரம் பிப்ரவரி-மார்ச் மற்றும் செப்டெம்பர்-அக்டோபர் அமர்வுகளிலேயே பொதுவாக முன்னிலைப்படுத்தப்படுகின்றது. ஈழத்தமிழ் அரசியல் நகர்வுகளும் குறித்த காலப்பகுதியிலேயே ஜெனிவா அரங்கிற்கு கூட்டு அறிக்கை, தனி அறிக்கை என எழுதி அனுப்புவது இடம்பெறும். இவ்அறிக்கைகள் சென்றடையும் காலப்பகுதிக்குள் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மான அறிக்கைகளின் பெரும்பகுதி பூரணப்படுத்தப்பட்டு இறுதி செய்யப்பட்ட நிலையிலேயே காணப்படும். இப்பின்னணியில் தமிழ் அரசியல் கட்சிகளின் அறிக்கை அரசியல் பெரும்பாலும் போலி அரசியலின் ஒரு பகுதியாகவே அமையக்கூடியதாகும். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி. குமரவடிவேல் குருபரன் ஜெனிவா களத்தை ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர் 'ஜெனிவா திருவிழாவாக' அணுகுவதாக விழிப்பார். இது எதார்த்தமான பார்வையாகும். ஜெனிவா களத்தை ஈழத்தமிழ் அரசியல் பருவ கால உற்சவமாகவே குறித்த காலத்தில் கொண்டாடி தீர்த்து விடுகின்றார்கள். அதன் தொடர்ச்சி பற்றிய எந்த கரிசணையும் காணப்படுவதில்லை. ஜெனிவா களத்தில் ஈழத்தமிழர்களும் ஒரு பகுதியினர் ஆகும். இதுவொரு வகையில் பருவகால அறுவடை அணுகுமுறையில் அவதானிக்கலாம். விவசாயம் போகங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். அறுவடை முடிந்தவுடன் விவசாயி தோட்டக்காணி அல்லது வயல் காணியை பொருட்படுத்தாமல் விட்டு, மீள பயிர்ச் செய்கை காலத்தில் மாத்திரம் காணியை கவனிப்பதில்லை. அறுவடைக்கு பின்னர் அடுத்த போகத்தில் பயிர் செய்வதற்கு காணியை வளப்படுத்தும் வேலைகளை விவசாயி மேற்கொள்கின்றார். அத்தகையதொரு அணுகுமுறை ஜெனிவா களத்தை பொறுத்து ஈழத்தமிழ் அரசியல் சிந்திப்பது அவசியமாகும். வெறுமனவே போகங்களில் மாத்திரமே ஜெனிவா களத்தை அணுகுவதாலேயே, ஜெனிவா களம் ஈழத்தமிழர் அரசியலை பொறுத்தவரை ஏற்ற இறக்கமாக அமைகின்றது.

ஜெனிவா களத்தில் இலங்கை விவகாரம் பெரும்பாலும், இலங்கை விவகாரத்தை கையாளும் அமெரிக்க, பிரித்தானிய, கனடா போன்ற முக்கிய நாடுகளின் (Core Countries) நலன்களுக்குள் கையாளப்படுவதாகவே அமைகின்றது. மாறாக ஈழத்தமிழர் தங்கள் நலன்களை முக்கிய நாடுகளின் நலன்களுடன் பொருத்தும் வேலைகளை செய்யத் தவறியுள்ளார்கள். முக்கிய நாடுகளை பொறுத்தவரை தமது நலனுக்குள் இலங்கை அரசாங்கத்தை வளைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதற்கொரு கருவியாகவே 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரும் மனித உரிமை விவகாரங்களும் 2012ஆம் ஆண்டில் ஜெனிவா களத்தில் அணுகப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே 2018களிற்கு பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சார்ந்த மனித உரிமை விவகாரங்களும், 2022களுக்கு பின்னர் பொருளாதார பிரச்சினை சார்ந்த மனித உரிமை விவாகாரங்களும் ஜெனிவா களத்தில் இலங்கை விவகாரத்தில் பிரதான பேசுபொருளாக மாறியிருந்தது. எனினும் சமகாலத்தில் ஈழத்தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்ச்சியானதாகவே அமைந்திருந்தது. எனினும் அது ஜெனிவா அரங்கில் உரிய கவனத்தை பெறவில்லை. இம்மாற்றங்களின் பின்னணியில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பின் அணுகுமுறை பலவீனங்களும் காணப்படுகின்றமையை ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகின்றது.

முதலாவது, ஈழத்தமிழரசியல் கடந்த 12 ஆண்டுகளாக ஜெனிவா களத்தில் அடைபட்டுள்ள போதிலும், ஜெனிவா அரங்கை கையாளும் உத்தியை புரிந்து கொள்ள தவறியுள்ளார்கள். ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரச இயந்திரத்தால் தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பான செய்தியாக்கங்கள் யாவும் வடக்கு-கிழக்கு பிராந்திய பத்திரிகைகளுக்குள்ளும் உயர்ந்தபட்சம் இலங்கைத்தீவு முழுவதுமான ஒரு சில தமிழ்ப் பத்திரிகை செய்திகளாக சுருங்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. குறைந்தபட்சம் இலங்கையிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகைகள் கூட பெருமளவில் ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரச இயந்திரத்தின் ஒடுக்குமுறை செய்திகளை தவிர்த்துப்போகும் நிலைமைகளே காணப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் இலங்கை விவகாரத்தில் ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகள் சாதாரண பொதுப்பார்வையில் சர்வதேச சமுகத்திற்கு கொண்டு செல்லக்கூடிய உத்திகளை ஈழத்தமிழர்கள் வகுக்க தவறியுள்ளார்கள். குறைந்தபட்சம் தமிழகத்திற்கு கூட நகர்த்துவதில்லை. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்தை மையப்படுத்தியே சர்வதேச கவனக்குவிப்பை பெற்றிருந்தது. அதற்கு முன்னரே ஏறத்தாழ ஒரு மாதங்களுக்கு முன்னரே குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 19 என்புத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரச இயந்திரத்தின் ஒடுக்குமுறையை தொடர்ச்சியாக சர்வதேசத்துக்கு தெரிவிக்கக்கூடிய ஊடக வெளிச்சத்தை ஈழத்தமிழர்கள் பலப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. காசாவில் பலஸ்தீனியர்கள் உணவுக்காக முண்டியடிப்பதும், இஸ்ரேல் குண்டுமழையில் சிறுவர்கள் கொத்தாக மரணிப்பதும் அல்ஜசீரா போன்ற சர்வதேச ஊடக வெளிச்சத்தினாலேயே ஆகும். இத்தகைய ஊடக வெளிச்சத்தை ஈழத்தமிழர்கள் உருவாக்குவது அவசியமாகும்.

இரண்டாவது, ஜெனிவா அரசியல் பெரும்பாலும் அறிக்கைகளால் நிரப்பீடு செய்யப்படுவதாகும். ஐ.நா மனித உரிமை அலுவலகத்தின் சிறப்பு கண்காணிப்பாளர்களின் அறிக்கை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரால் வாசிக்கப்படும் அறிக்கைகள் திரட்டப்பட்ட அறிக்கைகளின் கூட்டு விளைவான நிபுணர்கள் குழுவால் உருவாக்கப்படும் அறிக்கைகளாகவே அமைகின்றது. எனவே, இலங்கை விவகாரத்தில் ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் கூடிய கவனத்தைப் பெற வேண்டுமாயின் அது தொடர்பாக பாதிக்கப்பட்ட சமுகத்திலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தொடர்ச்சியாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும். எனினும் ஈழத்தமிழ் அரசியலில் அத்தகைய தொடர்ச்சியான செயற்பாடுகள் காணப்படுவதில்லை. இக்குறைபாடு முழுமையான ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களையும் சாருகின்றது. இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் சட்டத்தரணிகளால் நிரப்பப்பட்டதாகவே அமைகின்றது. இப்பின்னணியில் தமிழ் அரசியலை 'அப்புக்காத்தர் அரசியல்' என விமர்சிக்கும் மரபும் காணப்படுகின்றது. எனினும் இவ்சட்டத்தரணிகளுக்கு சர்வதேச நிறுவனங்கள் சார்ந்த போதிய அறிவின்மையையே ஜெனிவா தொடர்பான அணுகுமுறைகள் வெளிப்படுத்துகின்றது. ஐ.நா மனித உரிமை பேரவையில் நீண்ட காலமாக ஈழத்தமிழர் விவகாரத்தை கையாளும் செயற்பாட்டளார் ஒருவர் பல சந்தர்ப்பங்களிலும் பல பொது சந்திப்புக்களிலும், 'ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக போதிய அறிக்கைகள் தாயகத்திலிருந்து கிடைக்கப்பெறுவதில்லை' என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனினும் தாயக அரசியல் செயற்பாட்டாளர்கள் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய முயலவில்லை. தென்னிலங்கையிலிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் கணிசமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகையிலேயே இலங்கை விவகாரத்தில் ஈழத்தமிழர் விவகாரம் மலினப்படுத்தப்பட்டது.

மூன்றாவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவை சர்வதேச நாடுகளின் கூட்டுச்சங்கமாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பாக 2012ஆம் ஆண்டு 30/1 தீர்மானம் முதல் இறுதியாக 2022ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானம் வரை மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளினாலேயே சமர்ப்பிக்கப்பட்டு, ஜெனிவா அரங்கில் உறுப்பு நாடுகளிடையே பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்று நிறைவேற்றப்பட்டுகின்றது. 2022ஆம் ஆண்டு 51/1 தீர்மானம் இங்கிலாந்து, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டது. 47 நாடுகளில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மன் உட்பட 20 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்ததுடன்; சீனா, கியூபா மற்றும் பாகிஸ்தான் உட்பட 07 நாடுகள் நிராகரித்திருந்தது. மேலும் இந்தியா உட்பட 20 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்த்திருந்தது. 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்த நிலையில், 2022இல் இலங்கைக்கு ஆதரவாக 07 நாடுகளே காணப்படுகின்றது. இதுவொரு வகையில் சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான சூழலையே வெளிப்படுத்துகின்றது. இதனை ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக திரட்ட வேண்டிய பாரிய பொறுப்பு ஈழத்தமிழ் அரசியல் தரப்பிடம் காணப்படுகின்றது. ஆயினும் இதில் ஆரோக்கியமான செயற்பாடுகளை இதுவரை கண்டறிய முடியவில்லை. குறைந்தபட்சம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்துள்ள நாடுகளிற்கு நன்றி கூறி உறவைப்பேணுமோர் உத்தியைக்கூட ஈழத்தமிழரசியலில் இதுவரை கண்டறிய முடியவில்லை. இப்பின்னணியில் அந்நாடுகளின் நலனில் ஈழத்தமிழர் நலன் ஒருங்கிணைக்கப்படவில்லை. இது ஐ.நா தீர்மானம் வெறுமனவே சர்வதேச அரசுகள் இலங்கை அரசாங்கத்தின் மீதான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இலங்கை அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதற்கான உத்தியாக மாத்திரமே அமைகின்றது.

நான்காவது, சர்வதேச தளத்தில் புலம்பெயர் சமூகம் பலமான சக்தியாக வளர்ந்துள்ளது. எனினும் அப்பலமான சக்தியை தமிழ்த்தேசியத்தின் பின்னணியில் கூட்டாக திரட்ட தவறுகின்றார்கள். தனியன்களாகவே சர்வதேச நாடுகளை பயன்படுத்தும் செயற்பாடுகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்களின் சனத்தொகை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் ஈழத்தமிழ் வாக்களர்களினை இலக்கு வைத்து புலம்பெயர் தேச அரசியல் செயற்பாட்டில் ஈழத்தமிழ் விவகாரம் முன்னிலைக்கு வருகின்றது. தாயகமும் புலம்பெயரும் தனி ஆவர்த்தன பயணம் நிலையான தீர்வை வழங்கப் போவதில்லை. ஈழத்தமிழர் துயரங்களை பயன்படுத்தி ஒரு சிலர் நன்மை அடையவே இது வழிகோலும். புலம்பெயர் ஈழத்தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தாயக பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கூட்டுச்செயற்பாடு அவசியமாகின்றது. அவ்வாறே சிவில் தரப்பில் குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் சர்வதேச ரீதியாக வியாபித்துள்ள ஈழத்தமிழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் கூட்டுச் செயற்பாட்டை திட்டமிட வேண்டும். இத்தகைய கூட்டுச்செயற்பாடுகளூடாகவே சர்வதேச நாடுகளிடம் ஈழத்தமிழர்களின் கூட்டுக்கோரிக்கையை உறுதியாக முன்வைக்க முடியும். அவ்வாறே ஏனைய சக்திகள் தமது நலன்களுக்கு தனித்தனியே ஈழத்தமிழர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்திவிட்டு செல்வதையும் தடுக்க முடியும்.

எனவே, ஜெனிவா களம் என்பதே தற்போது ஈழத்தமிழர்களிடம் உள்ள சர்வதேச தளமாகும். அதனை திசை மாற்ற இடமளிப்பதனூடாகவோ அல்லது அசண்டையாக மறுதலித்து செல்வதோ ஈழத்தமிழர்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் செயலாகவே அமையக்கூடியதாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் காலம் இழுத்தடிப்பை மையப்படுத்தி, ஜெனிவா களத்தை பயனற்ற களமாக விமர்சித்து உதறித் தள்ளும் போக்கும் ஈழத்தமிழரசியலில் வளர்ந்து வருகின்றது. இது ஒருவகையில் ஈழத்தமிழரசியல் தமது பலவீனத்தை மறைக்கும் போக்காவே அமைகின்றது. ஜெனிவாவை ஈழத்தமிழர் அரசியல் அணுகும் முறைமை ஒரு வகையில், ஆசைப்பட்ட திராட்சைப் பழத்தைப் பறிக்க முயன்று முடியாமல்போனதால், 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்!' என்று கூறி, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நரியின் பஞ்ச தந்திர கதை போன்றதாகவே அமைகின்றது. அதில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். 51/1 தீர்மானத்தின் ஒரு விரிவான அறிக்கை செப்டெம்பர் கூட்டத்தொடரில் (செப்டெம்பர் 8 – ஒக்டோபர் 3) ஐ.நா மனித உரிமை அலுவலகத்தால் வாசிக்கப்பட்டு, புதிய தீர்மானத்திற்கான ஏற்பர்டுகள் காணப்படுகின்றது. குறித்த போகத்தில் மாத்திரம் அதனை சிந்திக்காது முன்கூட்டியே அதற்குரிய களத்தை செப்பனிட்டு உருவாக்குவதற்கு முன்னறிவித்தலை வழங்குவதாகதே இப்பத்தியின் உருவாக்கமும் அமைகின்றது. 

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-