அமெரிக்காவின் புதிய தூதுவருக்கான பரிந்துரையும் பொருளாதார நலனை முதன்மைப்படுத்திய அணுகுமுறையும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம், வல்லரசுகளின் போட்டிக்குள் பிரதான களத்தை உருவாக்கியுள்ளது. இலங்கை மீதான அமெரிக்காவின் வரி ஏற்ற இறக்கங்களும் அத்தகைய போட்டியின் விளைவினதாகவே அமைகின்றது. கடந்த காலங்களில் அமெரிக்கா ஜனநாயகம் மற்றும் அதன் கூறுகளான மனித உரிமைகள், நல்லாட்சி என்பவற்றினூடாகவே ஏனைய அரசுகளினை அச்சுறுத்தி தமது பக்கம் வளைத்து கொண்டது. எனினும் டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவத்தின் கீழ் நேரடியாக வரிவிதிப்பை முதன்மைப்படுத்தி செயற்படும் சூழ்நிலையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.   புவிசார் அரசியல் ரீதியாக, இந்தியப் பெருங்கடலின் மையத்தில் இலங்கையின் மூலோபாய இருப்பிடம், உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக அதை நிலைநிறுத்துகிறது. இது முக்கிய கடல் வழிகளை இணைக்கிறது. இதனால், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு இந்த நாடு மையமாக உள்ளது. அவை ஒவ்வொன்றும் பரந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் ஆர்வத்தைக் கொண்டுள்ளன. பொருளாதார உறவுகள், காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல முனைகளில் இலங்கையுடன் ஒத்துழைக்க அமெரிக்கா அதிகரித்த அர்ப்பணிப்பையும் காட்டியுள்ளது. தூதரக அதிகாரிகள் நியமத்திலும் இலங்கை மீதான அமெரிக்காவின் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இக்கட்டுரை இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயரின் அரசியல் வகிபாகத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்-இன் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இலங்கைக்காக புதிய அமெரிக்க தூதுவருக்கான நியமனத்தில் எரிக் மேயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செனட்டிற்கு பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க வெளியுறவு சேவையில் மூத்த நிபுணரான எரிக் மேயர், தற்போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தில் மூத்த பணியக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கலிபோர்னியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும், மூத்த வெளியுறவு சேவையில் நீண்டகாலமாகப் பணியாற்றியவருமான மேயர், தனது இராஜதந்திர வாழ்க்கையில் பல உயர்மட்ட வெளிநாட்டுப் பணிகளை வகித்துள்ளார். தற்போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது சமீபத்திய பதவிகளில் நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பிரதி தூதுவராக செயல்பட்டுள்ளார். முன்னதாக, வடக்கு மாசிடோனியாவில் துணைத் தலைவராகவும் பிரதித் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். கஜகஸ்தானின் அல்மாட்டியில் அமெரிக்க துணைத் தூதுவராக பணியாற்றிய காலத்தில், மத்திய ஆசிய முக்கிய பதவியில் பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான முயற்சிகளை அவர் நிர்வகித்தார். வாஷpங்டனில் உள்ள வெளியுறவுத்துறையில், மேயர் மூத்த ஆலோசகர் பதவிகளில் பணியாற்றியுள்ளார். அங்கு அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் பிராந்திய மூலோபாயத்தை வடிவமைப்பதற்கும் ஒருங்கிணைந்த கொள்கை செயல்படுத்தலை உறுதி செய்வதற்கும் பணிக்கப்பட்டார்.

இலங்கைக்கான முன்னைய தூதுவர்கள் பெரிதும் அரசியல் பின்புலத்தை முதன்மைப்படுத்தியவராகவே அமைந்துள்ளார்கள். தற்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தூதுவருக்கான பெயர் குறிப்பிட்ட போது, ஷதனது நியமனம் உறுதிப்படுத்தப்பட்டால் ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மற்றும் வலுவான சிவில் சமூகத்துக்கான ஆதரவு தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் பாதுகாப்பதற்கு தாம் குரல் கொடுப்பது என்றும், ஜனநாயகமே அமெரிக்காவின் வெளிவிவிவகார அணுகுமுறையின் மையம்' என்றார். இது இலங்கைக்கான அமெரிக்காவின் கடந்த கால அரசியல் அணுகுமுறையை வெளிப்படுத்தியது. எனினும் புதிய தூதுவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர் பொருளாதார நிபுணத்துவத்தையே முதன்மைப்படுத்தியுள்ளார். கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ள எரிக் மேயர், ஜார்ஜ்டவுனில் எம்.பி.ஏ பட்டம் பெற்றுள்ளார். இது தனியார் துறையில், குறிப்பாக விமானத் துறையின் அரசாங்க உறவுகள் மற்றும் பெருநிறுவன விற்பனையில் கரிசணை கொண்டதாகவே அமைகின்றது. இந்தப் பின்னணி அவருக்கு அதிகாரத்துவ சரளமாகவும் வணிக ரீதியாகவும் ஒரு அரிய கலவையை அளிக்கிறது. இந்த பண்புகளின் நிமித்தமே இலங்கைக்கு எரிக் மேயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது இலங்கைக்கான அமெரிக்காவின் அணுகுமுறையில் பொருளாதாரத்தை மையப்படுத்திய இராஜதந்திரத்தை உறுதி செய்வதாகவே அமைகின்றது.

ஏரிக் மேயரின் கடந்த கால பணி புவிசார் அரசியல் களங்களில், அவரின் தனித்துவமான இராஜீக பணியை உறுதி செய்கின்றது. பெரும்பாலும் அமெரிக்க கொள்கை மூலோபாய உறுதிப்பாட்டிற்கும் இராஜதந்திர நுணுக்கத்திற்கும் இடையில் ஒரு நுட்பமான சமநிலையை ஏற்படுத்த வேண்டிய நாடுகளான உணர்திறன் வாய்ந்த புவிசார் அரசியல் களத்திற்கே இராஜதந்திரியாக அனுப்பப்பட்டுள்ளார். வடக்கு மாசிடோனியா ரஷ;சியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் நேட்டோவில் சேருவதற்கான முயற்சியின் போது, மேயர் வடக்கு மாசிடோனியாவில் இராஜதந்திரியாக பணியாற்றினார். மத்திய ஆசியாவின் ஒரு சிறிய பகுதியான கஜகஸ்தானில் அவர் பணியாற்றினார். அங்கு சீன மற்றும் ரஷ;சிய செல்வாக்கு அதிகரித்து வந்த நேரத்தில் பிராந்தியத்தில் உள்ள ஒரே அமெரிக்க தூதரகத்தை வழிநடத்தினார். இதற்கிடையில், கம்போடியாவில் அவரது சுற்றுப்பயணம், பெரிய அளவிலான சீன முதலீட்டை வரவேற்கும் அதே வேளையில் சர்வாதிகாரத்தில் சறுக்கும் ஒரு நாட்டில் அவரை பணிக்கு அனுப்பியது.

இவ்வாறான அனுபவங்களின் தொடர்ச்சியாக எரிக் மேயர் இலங்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாயத்தின் மையத்தில் உள்ள இலங்கைத் தீவு, அமெரிக்காவின் உலகளாவிய மூலோபாயத்தில் அழுத்தப் புள்ளிகளும் ஒன்றாக சமீப காலத்தில் அதிகரித்து வருகின்றது. கடல்சார் பாதுகாப்பு, சீன துறைமுக முதலீடுகள் மற்றும் ஜனநாயக பின்னடைவு பற்றிய நெருக்கடிகள் இலங்கையை சூழ்ந்துள்ளது. இந்த பின்னணியிலேயே அமெரிக்காவின் பார்வை தெற்காசியாவின் மீது தீவிரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், மேயரின் பணியும் தெற்காசிய பிராந்தியத்திலிருந்து இலங்கைக்கு நகர்த்தப்படுகின்றது. இதுவொரு வகையில் தெற்காசிய பிராந்தியத்தின் புவிசார் அரசியல் பொருளாதாரத்தின் மையம் இலங்கை என்பதை உறுதி செய்வதாகவே அமைகின்றது. மேயரின் கடந்த கால பணிகளும் களங்களும் ஒருவகையில் ஜான் பெர்க்கின்ஸின் 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' எனும் புத்தக உள்ளடக்கத்தின் வெளிப்பாடுகளையே உறுதி செய்கின்றது. 2004இல் இந்தப் புத்தகம் வெளிவந்தபோது, அமெரிக்க அரசியல் தலைவர்களும், பெருநிறுவன முதலாளிகளும் கொந்தளித்தனர். சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்), உலக வங்கி போன்ற அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச நிதி அமைப்புகள் வளர்ந்துவரும் நாடுகளை எப்படி கடன் வலைக்குள் சிக்கச் செய்து நிரந்தரமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றன என்பதை அமெரிக்காவின் பொருளாதார அடியாளாக இருந்து வந்த ஜான் பெர்க்கின்ஸ் இந்தப் புத்தகத்தில் விரிவாக முன்வைத்துள்ளார். எரிக் மேயரின் பொருளாதார கலவை சார்ந்த நிபுணத்துவம் ஒருவகையில் அவரது கடந்த கால இராஜீக ஈடுபாடுகள் ஜான் பெர்க்கின்ஸின் இயல்பை இராஜதந்திரி என்ற போர்வையில் கொண்டிருக்கக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றது. இவ்வாறான அனுபவங்களினூடாகவே எரிக் மேயரின் இலங்கை வருகையையும் அவதானிக்க வேண்டி உள்ளது.

முதலாவது, இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் இழுவைக்குள்ளும்; சீன-மாக்சிச மரபுடைய ஆட்சியாளர்களுக்குமிடையில் என்ற கலவைக்குள்ளேயே காணப்படுகின்றது. இலங்கைத்தீவு இன்னும் பொருளாதார சரிவின்  நெருக்கடியிலிருந்து மீண்டு, அதன் ஜனநாயக அடையாளத்துடன் போராடிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மேயரின் வருகையும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ராஜபக்ச சகாப்தம் தொழில்நுட்ப ரீதியாக முடிந்திருக்கலாம். ஆனால் அதன் மரபு பெரியதாகவே தெரிகிறது. ஆதன் தாக்கத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவின் கணிசமாக வாக்கு அதிகரிப்பிலும் அவதானிக்கக்கூடியதாக அமைந்தது. அத்துடன் ஹம்பாந்தோட்டா துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் போன்ற சீன உள்கட்டமைப்புத் திட்டங்கள் முதலீட்டையும் சந்தேகத்தையும் தொடர்ந்து ஈர்க்கின்றன. மேற்கத்தேய எதிர்ப்பு உணர்வு அவ்வப்போது எரிகிறது. பெரும்பாலும் அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் தவறான தகவல்களால் தூண்டப்படுகிறது. இவ்வாறான குழப்பகரமான அரசியல் சூழலுக்குள்ளேயே மேயரின் வருகையும் காணப்படுகின்றது. வட மாசிடோனியா மேற்கத்திய நிறுவனங்களுடன் இணக்கமாக இருந்த ஒரு முக்கிய காலகட்டத்திலும், சிவில் உரிமைகள் அரிக்கப்பட்டு ஊடகங்கள் அமைதியாக இருந்தபோது கம்போடியாவிலும் மேயர் இராஜதந்திரியாக செயற்பட்டுள்ளார். அவர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. என்றாலும் அவரது இருப்பு நாடுகள் கொந்தளிப்பான காலத்தில் அமெரிக்காவின் நலனுடன் ஒருங்கிணைந்த வகையில் வழிநடத்தக்கூடிய இராஜதந்திரியாக நிரூபணமாகியுள்ளது. இந்த பின்னணியிலேயே மேயர் அமைதியையும் நடைமுறைவாதத்தையும் கொண்டு வருவார் என்று அமெரிக்க வெளியுறவு நம்பலாம்.

இரண்டாவது, இலங்கையின் அரசியல் தொடர்ச்சியாக இரு தேச பண்புகளுடனேயே இயங்கி வருகின்றது. இலங்கைக்கான வெளியுறவுத் தொடர்புகள் தென்னிலங்கைக்கு சமாந்தரமாக வடக்கு-கிழக்கையும் தனியொரு நிகழ்ச்சி நிரலுக்குள் அணுகும் இயல்புகள் காணப்படுகின்றது. வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் வடக்கு-கிழக்கிற்கான விஜயங்களில் மனித உரிமை விவகாரங்கள் முதன்மையான உரையாடலை பெற்று வருகின்றது. எனினும் அண்மையில் அதில் சடுதியான மாற்றங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளளது. குறிப்பாக வடக்கு-கிழக்கை மையப்படுத்தி நகரும் இந்திய-சீன இராஜீக போட்டியில் சமகாலங்களில் பொருளாதார கரிசணைகளே அதிகரித்து வருகின்றது. மனித உரிமை விவகாரம் பின்வரிசைக்கு நகர்ந்துள்ளது. இவ்வாறான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் வலுவான மனித உரிமை கண்காணிப்புக்கு மேயர் அழுத்தம் கொடுப்பாரா? இராணுவத்தில் சீர்திருத்தங்களை அவர் அமைதியாக ஊக்குவிப்பாரா, அல்லது பொருளாதார நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பாரா? அல்லது அவர் ஒரு பரிவர்த்தனை இராஜதந்திரத்தை பின்பற்றுவாரா? இராணுவ அணுகல் அல்லது சர்வதேச மன்றங்களில் வாக்குகள் போன்ற மூலோபாய சீரமைப்புகளுக்கு ஈடாக வர்த்தகம் மற்றும் உதவியை வழங்குவாரா? என்ற கேள்விகள் பரவலாக காணப்படுகின்றது. மேயரின் கடந்த கால அனுபவங்களில் ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் உரத்த அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பில்லை. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள மேயர் நீண்ட காலமாக இப்பிராந்தியத்தில் சிறப்பு உதவியாளராகவும் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார். எனினும் பிராந்தியத்தின் மோதல் விவகாரங்களில் பாரியளவில் பகிரங்க நிலையை வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆனால் அவரது நிகழ்ச்சி நிரல் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் தெளிவான பொருளாதார இயங்கு நிலைக்கு முதன்மையான பங்களிப்பு காணப்படும். பிராந்திய அளவில் இராஜதந்திரியாகவும் அத்தகைய பணியையே முதன்மைப்படுத்தியிருந்தார். குறிப்பாக கடந்த ஏப்ரலிலும் கனிமங்கள் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இராஜதந்திர நடவடிக்கைகள் நடந்துள்ளன. இதில் மத்திய மற்றும் தெற்காசிய விவகார பணியகத்தின் மூத்த அதிகாரியான எரிக் மேயர் தலைமையில், முதலீட்டு மன்றத்தில் முக்கியமான கனிமத் துறையில் அமெரிக்க நலன்களை மேம்படுத்துவதற்காக முதல் குழு சென்றது. கிழக்கை மையப்படுத்திய அமெரிக்க முதலீடுகளை புனரமைக்கக்கூடிய வாய்ப்புகள் மேயர் காலத்தில் காணப்படலாம்.

எனவே, இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயரின் கடந்த கால வெளிப்பாடுகள், இலங்கை தொடர்பான அமெரிக்க அணுகுமுறையின் மாற்றத்தை உறுதி செய்கின்றது. ஜனநாயகம், மனித உரிமை என்ற போலி விம்பங்களை களைந்து நேரடியாக பொருளாதார நலனை முன்னிறுத்தி செயற்பட முயல்வதனையே உறுதி செய்கின்றது. இதுவொரு வகையில் ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிக் கோரிக்கைக்காக சர்வதேச நாடுகளின் ஆதரவுக் கோரிக்கையை பலவீனப்படுத்தக்கூடிய நிலைமைகளையே வெளிப்படுத்துகின்றது. ஈழத்தமிழர்கள் யதார்த்த அரசியல் வெளியை புரிந்து கொண்டு தங்கள் அணுகுமுறையை சீர்செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. பெருமைவாதங்களை கடந்து நனவிற்குள் பயணிக்க வேண்டும். சர்வதேசம் என்பது 2000இற்கும் மேற்பட்ட தேசங்களை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ள களமாக காணப்படுவதில்லை. வெறுமனவே 196 அரசுகளையே ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்எதார்த்தத்தை ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமது இலக்கினை அடைந்து கொள்ள, சர்வதேச அணுகலை வெற்றி கொள்ள, விடுதலைக்கு போராடும் தேசிய இனம் சர்வதேச அரசுகளின் நலனுக்குள்ளாலேயே பயணிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. உலக ஒழுங்கு ஜனநாயகம், மனித உரிமை போன்ற போலிப் பிரச்சாரங்களை களைந்து, நேரடியாக பொருளாதார நலனை முன்னிறுத்தி பயணிக்க ஆரம்பித்துள்ளது. அவ்ஒழுங்கிற்குள்ளேயே ஈழத்தமிழர்களும் தமது நலனை ஈடேற்றிக்கொள்ளக்கூடிய வழிமுறைகளை சிந்திக்க வேண்டி உள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-